படைப்பிலக்கியத்துறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் " தாங்கள் எழுத்தாளரானதே
ஒரு விபத்து " என்றுதான் சொல்லிவருகிறார்கள். முதலில் வாசகர்களாக இருந்து, பின்னர் தாமும் எழுதிப்பார்ப்போம்
என்று முனைந்தவர்கள், தமது படைப்புகளுக்கு கிட்டும் வாசகர் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும்
தொடர்ந்து எழுதி பிரகாசிக்கிறார்கள்.

இந்தப்பின்னணியில்தான், அவுஸ்திரேலியா மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் அவர்கள், இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கி சுமார் இருபது வருட காலத்துள் கவிதை தவிர்ந்த இலக்கியத்தின் இதர துறைகளிலும் தன்னை தக்கவைத்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
பின்னர், வாழும் சுவடுகள் தமிழ்நாடு
காலச்சுவடு பதிப்பகத்தினால் இரண்டாம் பதிப்பும் வெளியானது.


இதன் இரண்டாம் பதிப்பினை இலங்கையில்
டொமினிக்ஜீவா அவர்களின் மல்லிகைப்பந்தல் வெளியிட்டது.
தமிழ்ச்சிறுகதைகள், நாவல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி படமாக்கி இயக்கியிருக்கும்
( அமரர்) 'முள்ளும் மலரும்' மகேந்திரனின் கவனத்தையும் இந்த வண்ணாத்திக்குளம் ஈர்த்ததனால்,
அவரும் இதற்கு திரைக்கதை வசனம் எழுதி படமாக்குவதற்கு முயற்சித்தார். கதையின் பின்னணி
இலங்கை என்பதனால், எங்கள் தேசத்தின் அரசியல் நெருக்கடி சூழ்நிலைகளினால் அந்த முயற்சி
கைவிடப்பட்டது.
நடேசன் சிறுகதைகளும், நாவல்களும், அரசியல் மற்றும் இலக்கியம் சார்ந்த ( நூல்
விமர்சனங்கள்) கட்டுரைகளும், பயண இலக்கியங்களும்
தொடர்ந்து எழுதிவருகிறார்.
இதுவரையில், வாழும் சுவடுகள் ( இரண்டு
பதிப்புகள்) - வண்ணாத்திக்குளம்
( இரண்டு பதிப்புகள்) - உனையே மயல்கொண்டு
- அசோகனின் வைத்தியசாலை - கானல் தேசம் (நாவல்)
- நைல்நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்) மலேசியன் ஏர்லைன் 370 - எக்ஸைல் ( சுயவரலாறு)
ஆகியனவற்றை வரவாக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான நடேசனின் எக்ஸைல் நூலை இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்
விமல் சாமிநாதன் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இவ்வாறு இரண்டு தசாப்த காலத்துள் நடேசன் எழுதிய நூல்கள் குறித்து, ஜெயமோகன்,
எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கிரிதரன், சுமதி ரூபன், டீ.பி.
எஸ். ஜெயராஜ்,... உட்பட பலர் தங்கள் வாசிப்பு அனுபவத்தை மதிப்பீடாக ஏற்கனவே எழுதியுள்ளனர்.
நடேசனின் நூல்கள், அவுஸ்திரேலியாவில்
சில மாநில நகரங்களிலும் இலங்கையிலும் கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளன.
இந்தப்பின்னணியில், அண்மையில் மெல்பனில்
நடேசன் எழுதிய அனைத்து நூல்களுடன் சமீபத்தில் வெளியான கானல் தேசம் மற்றும் எக்ஸைல்
ஆகிய நூல்கள் அறிமுகத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட்டன.
அறிமுகத்திற்கும் - விமர்சனத்திற்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த
இரண்டு வகையான மதிப்பீடுகளும்தான் வாசகர்களுக்கும் படைப்பாளிக்கும் மத்தியில் உறவை
பாலமாக உருவாக்குகின்றன.
வாசகரிடம் பரவலாக சென்றடையாத ஒரு நூலை அரங்கேற்றும்போது அதனைப்படித்தவர் விமர்சன
ரீதியாக அணுகும்போது, வாசிப்பு அனுபவத்தின்
ருசிபேதம் வாசகரை மயக்கமடையச்செய்யலாம்.
புதிய நூலை அறிமுகப்படுத்துவதற்கும் ஏற்கனவே வெளியான நூலை விமர்சிப்பதற்கும்
இடையே பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன.
இதனையும் கவனத்தில்கொண்டு அண்மையில் மெல்பனில் வேர்மன்ட் தெற்கு கல்வி நிலையத்தில் நடந்த நடேசனின் நூல்கள் பற்றிய
மதிப்பீட்டு அரங்கில் பின்வருவோர் தத்தம் கருத்துக்களை
முன்வைத்தனர்.
புதிய நூல்களான கானல் தேசம் (நாவல்) எக்ஸைல் சுயவரலாறு ஆகியனவற்றை மருத்துவர் நரேந்திரன், கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் ஆகியோர் அறிமுகப்படுத்திப்பேசினர்.
வண்ணாத்திக்குளம் - உனையே மயல்கொண்டு - அசோகனின் வைத்தியசாலை ஆகிய நாவல்களை முறையே எழுத்தாளர்
ஆவூரான் சந்திரன், வாசகிகள் கலாதேவி பாலசண்முகன், சாந்தி சிவக்குமார் ஆகியோரும், நைல்நதிக் கரையோரம் (பயண இலக்கியம்) வாழும் சுவடுகள் (தொழில் சார் அனுபவங்கள்) முதலானவற்றை எழுத்தாளர் சண்முகம் சபேசன், வாசகி விஜி இராமச்சந்திரன் ஆகியோரும் விமர்சித்துப்பேசினர்.
இந்நிகழ்ச்சிக்கு
சிட்னியிலிருந்து வருகை தந்திருந்த இலக்கிய ஆர்வலர் திரு. செல்வராஜா தலைமை
தாங்கினார். திரு. முருகபூபதி பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினார்.
வண்ணாத்திக்குளம்
நாவல் இலங்கையின் வடமத்திய பிரதேசத்தில் (
மதவாச்சியா - பதவியா) காடும் காடு சார்ந்த பின்தங்கிய பகுதியில் வாழும் தமிழ் -
சிங்கள ஆண் - பெண் காதல் உறவை
சித்திரிக்கிறது. உனையே மயல்கொண்டு நாவல் இலங்கை
யில் 1983 கலவரத்தின் பின்னணியில் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணின் பாலியல் சார்ந்த
அகச்சிக்கல்களையும் அதனால் அவள் கணவனது மனப்பிரழ்வையும் சித்திரிக்கிறது. அசோகனின்
வைத்தியசாலை முற்று முழுவதும் அவுஸ்திரேலியாவில் மெல்பனை பின்புலமாகக்கொண்டு
எழுதப்பட்ட முழுமையான புகலிட இலக்கிய வரவு.
புதிய நாவல் கானல்தேசம், இலங்கையில் நீடித்த போரில் சம்பந்தப்பட்ட
இயக்கங்கள், இலங்கை - வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவு தொடர்பான பின்னணியில்
காதலையும் காமத்தையும் பாதிக்கப்பட்ட மக்களின் கனவுகளையும் பேசுகிறது.
நைல்
நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்) எகிப்தின் பிரமீட்களையும் பூத உடல்களை
பதப்படுத்திய அக்கால மம்மிகளைப்பற்றியும் மத்திய கிழக்கின் முன்னைய அரசுகள்
பற்றியும் பயணிகளுக்கு வழிகாட்டும் தகவல் களஞ்சியமாகி யிருக்கிறது.
வாழும்
சுவடுகள் , விலங்கு மருத்துவத்தின் மகத்துவம் பற்றியும்
ஜீவகாருண்யத்தையும் பற்றிய சுவாரசியமான கதைகளைச் சொல்கிறது.
புதிய நூல் எக்ஸைல், நடேசன் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலப்பகுதியில்
தனது துணைவியார் மருத்துவர் சியாமளாவுடனும் ஆயுதம் ஏந்திய இயக்கங்களுடனும்
இணைந்து போரினால் பாதிக்கப்பட்டு தாயகத்திலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு
மேற்கொண்ட மருத்துவ உதவிகளைப்பற்றியும் அந்தப்பணியில் கிட்டிய அனுபவங்களையும் அங்கதச்சுவையுடன் பேசுகிறது.
மெல்பனில் நடந்த
நிகழ்வில் உரையாற்றியவர்கள், நடேசனின் பன்முக அனுபவங்களை சிலாகித்துப்பேசினர்.
ஆரம்ப வகுப்பிலிருந்து உயர்தர வகுப்புக்குச்செல்லும் மாணவனின் கல்வி வளர்ச்சியின்
படிமுறையை இனம்காண்பிப்பதுபோன்று எதிர்பாராமல் படைப்பிலக்கியவாதியான நடேசனின்
இரண்டு தசாப்த கால எழுத்தூழியத்தை மதிப்பீடு செய்யும் வகையில் இந்த அரங்கு
இடம்பெற்றது.
நிகழ்ச்சியின்
இறுதியில் நடேசன் தனது ஏற்புரையில், தனது வாழ்வின் அனுபவங்களையே ஏனைய
எழுத்தாளர்கள் போன்று சித்திரிக்க முயன்றிருப்பதாகவும், வாசகர்களின் கணிப்புகளை
கவனிப்பதன் ஊடாக தன்னை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளவும் முடியும் எனத்
தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின்
வெண்பனிக்கால பருவகாலத்தில் இதமாக நடந்த இந்த இலக்கிய ஒன்றுகூடல் பலதரப்பட்ட
வாசிப்பு அனுபவங்களையும் சங்கமிக்கச்செய்தது.
No comments:
Post a Comment