

வழமை போல் மங்கள விளக்கேற்றல், அகவணக்கம் ஆகியவற்றினைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா நாட்டு தேசிய கீதம், கல்லூரிக் கீதங்கள் இசைக்கப்பட்டன. கல்லூரிக் கீதத்தினை
செல்வி.சாம்பிகா ஈஸ்வரநாதன் அவர்கள் இசைத்திருந்தார். பழைய மாணவர்கள் சங்கத்தின் நடப்பாண்டுத்
தலைவர் திரு.ஸ்ரீ ஸ்ரீகுமார் அவர்கள் வரவேற்புரை வழங்கியிருந்தார். அத்துடன் சிறப்பு
விருந்தினராகக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும்,
யாழ் பல்கலைக் கழக முன்னாள் விரிவுரையாளருமான திரு.மாரிமுத்து சின்னத்தம்பி அவர்கள்
கலந்து சிறப்பித்தமை கலை நேரம் நிகழ்ச்சிக்கு மேலும் பெருமை சேர்த்திருந்தது.


கனடாவில் இருந்து வருகை தந்த வீணை இசைக் கலைஞர் செல்வி.பிரியா ரட்ணகுமார் அவர்களின் வீணை இசை மழை நிகழ்ச்சி ஆரம்பமானது. கர்நாடக இசைப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், திரையிசைப் பாடல்கள் என அனைத்து ரகப் பாடல்களை அழகாக இசைத்திருந்தார். ஆரம்பமே அதி அற்புதமாக இருந்தது எனலாம். ஒவ்வொரு பாடல் பற்றியும் விபரங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் தேவைக்கு ஏற்ப வழங்கியிருந்தார். மண்டபத்தில் இருந்த அனைத்து இசை ரசிகர்களின் நாடி பிடித்து அதற்கேற்றார் போல் பாடல்களை மீட்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பாடலிலும் அவரது விரல்கள் வீணையை மீட்ட விதம் ஒவ்வொன்றும் பார்த்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருந்தது. எந்த வகையான பாடல்களையும் வீணை இசை மூலம் கொண்டு வரலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் பாடல்களைத் தெரிவு செய்திருந்தார். செல்வி.பிரியாவின் வீணை இசைக்கு பக்க வாத்திய இசைக் கலைஞர்கள் தமது இசையை வழங்கி வீணை நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டியிருந்தார்கள். மெல்பேணில் மிருதங்க இசையில் அரங்கேற்றம் செய்த இளம் கலைஞர்களான செல்வன்.செந்தூரன் யோகரட்ணம் தபேலா, செல்வன்.சதீபன் இளங்குமரன் மிருதங்கம் வாசித்திருந்தார்கள். ஒக்ரோபட் இசையில் கனுஷ் முகுந்தாஸ், கீ போர்ட் இசையில் வளரும் இசைக் கலைஞர்கள் கீர்த்திகன் சீவராசா, கிருசிகன் சீவராசா ஆகிய சகோதர்கள் நன்கு வழங்கியிருந்தார்கள்.
செல்வி.பிரியா ரட்ணகுமார் அவர்கள் ஒவ்வொரு கலைஞனையும் தன்பால் இணைத்து அனைத்து பாடல்களுக்கும் ஆதரவு கொடுத்து ஊக்குவித்து மேடையில் ஒருங்கிணைத்த விதம் முதிர்ச்சி பெற்றதொரு இசைக் கலைஞராகப் பரிணமித்தார் என்பதை மனமகிழ்ச்சியோடு கூறவேண்டும்.

இடைவேளையினைத் தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பமானது.
தமிழ் நாட்டில் பெருமைக்குரிய பரத நாட்டியக் கலைஞர் மதுரை ஆர்.முரளிதரன் அவர்களின்
மகள் செல்வி.காவியா முரளிதரன் அவர்கள், மெல்பேண் நடன ஆசிரியை ஸ்ரீமதி மீனா இளங்குமரன்
அவர்களது மகள் பரத நாட்டியத்தில் அரங்கேற்றம் நிறைவு செய்த செல்வி.ருக்ஷிகா இளங்குமரன்
ஆகிய இருவரும் பரத நாட்டியத்தில் தனி நடனம் மற்றும் இணைந்த நடனம் என பரதக்கலையின் அனைத்து
நவரசங்களையும் ஒருக்கிணைத்து ஆடியிருந்தார்கள்.
தற்காலத்தில் நடன அமைப்புக்கள் யாவும் காலத்திற்கு ஏற்றார்
போல் அமைந்து வருவதைப் பார்த்திருக்கின்றேன். அந்த வகையில் இரண்டு சம்பவங்களை மேடையிலே
கொடுத்து அந்த இரண்டு சம்பவங்களையும் பரத நடனக் கலை மூலம் எவ்வாறு கொண்டு வரலாம். அந்த
இரண்டு சம்பவங்களையும் சிறப்பான முறையில் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் நடனக் கலை மூலம்
வெளிப்படுத்தியிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் சற்று வித்தியாசமாக ஒரு புதிய முயற்சியோ
தெரியவில்லை. ஆனால் அனைவரையும் கவர்ந்த ஒரு விடயமாக அமைந்த ஒரு நடனம் என்று தான் கூறவேண்டும்.

புலம் பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் இசை மற்றும் நடனம் மீது
கொண்டுள்ள ஆர்வத்தினால் தாங்கள் கற்றுக் கொண்ட கலைகளை, இசைகளை வளர்ப்பதில் எந்தவித்திலும்
குறைவில்லாமல் ஆற்றி வருகின்றார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி பறைசாற்றி நிற்கின்றது.
சுளிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மெல்பேண் பழைய மாணவர்களது முயற்சிக்கு ஒரு மாபெரும்
வெற்றி. மொத்தத்தில் ஒரு இனிய பல்சுவைக் கதம்ப மாலை நிகழ்ச்சி எனக்குக் கிடைந்த ஒரு
பெரும் வாய்ப்பு.
தமிழ் வாழ்க. வளர்க நம் தாய் மொழி.
நவரத்தினம் அல்லமதேவன்.
மெல்பேண். அவுஸ்திரேலியா.
-->
No comments:
Post a Comment