நித்தகைக்குளம் உடைப்பு ; ஒரு குடும்பத்தைக் காணவில்லை ; நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும் சேதம்
வலையிறவு பாலத்தினூடான போக்குவரத்து பாதிப்பு
”இராணுவத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை”
நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது : இலங்கையில் மனம் திறந்தார் நிஸாம்தீன்
இலங்கை சர்வதேசரீதியில் அவப்பெயரை சந்திக்கவேண்டிய நிலையேற்படலாம்- அமெரிக்கா எச்சரிக்கை
' வேண்டாம் நீங்கள் தந்த தேசமான்ய விருது'
18 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு ; மன்னாரில் தொடர்கிறது மனித எலும்புக்கூடுகள் அகழ்வு
மட்டு. மாவட்டத்தில் 6 நலன்புரி முகாம்களில் 499 குடும்பங்கள் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் 1104 குடும்பங்கள் பாதிப்பு
பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது !
வெளியானது வர்த்தமானி- ஐனவரி ஐந்து தேர்தல்
அரசியல் நெருக்கடி மேலும் மோசமடையலாம்- அமெரிக்கா
இறுதி நாட்களில் நடந்தது என்ன- ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு நீண்ட விளக்கம்
தேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவு- செயலிழக்கின்றது சுயாதீன தேர்தல் ஆணையகம் ?
எந்த விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயார்- கருஜெயசூரிய அதிரடி அறிவிப்பு
நித்தகைக்குளம் உடைப்பு ; ஒரு குடும்பத்தைக் காணவில்லை ; நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும் சேதம்
08/11/2018 தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், ஆண்டான்குளத்தை அடுத்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்துள்ளது.

பல வருடங்கள் பயன்பாடின்றி காணப்பட்ட குறித்த குளம் கடந்த சில மாதங்களுக்கு முனபதாகவே மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் அறிய வருகையில்.
நித்தகைக்குளம் மற்றும் அதனோடு இணைந்த வயல் நிலங்கள் கடந்த கால அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் பயன்பாடின்றி காணப்பட்டுவந்துள்ளது.
அத்துடன் மீள் குடியமர்த்தப்பட்ட பிற்பாடு இந்த குளம் மற்றும் அதனோடு சேர்ந்த பகுதிகளை வன இலாகா திணைக்களத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்துள்ளனர். இந் நிலையில் அந்த பகுதி விவசாய மக்கள் குறித்த குளத்தினையும், 2100 க்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களையும் விடுவித்துத் தரும்படி அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளிடம் கோரியிருந்தனர். இதன் விளைவாக குளம் மற்றும் 1000 ஏக்கர் வயல் நிலங்களையும் வன இலாகாவினர் விடுவித்திருந்தனர்.
மேலும் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பயன்பாடின்றி காணப்பட்ட இந்த குளத்தின் மறுசீரமைப்பு வேலைகள் இவ்வருட முற் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.
இதற்காக வடமாகாண விவசாய அமைச்சின் ஊடாக உரூபாய் 15மில்லியன் ஒதுக்கப்பட்டு, முல்லைத்தீவு நீர்பாசன திணைக்களத்தினர் குளத்தின் மறு சீரமைப்பு வேலைகளை முன்னெடுத்திருந்தனர்.
மேலும் குறித்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக குளக்கட்டை சுற்றி காணப்பட்ட காடுகள் அகற்றப்பட்டதுடன், கலிங்கி, துருசு, முறிவடைந்த நிலையில் காணப்பட்ட கட்டின் பகுதி என்பன மறு சீரமைப்புச் செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக வேலைகள் அனைத்தும் முடிவுற்றிருந்தன.
இந் நிலையில் தற்போது பெய்துவரும் பலத்த பருவப்பெயர்ச்சி மழையின் காரணமாக குளத்தில் பாரியளவு நீர் தேங்கியிருந்தது. அத்துடன் 2018.11.07 நேற்றைய தினம் மாலை குளத்தில் 9.5அடி நீ்ர் குளத்தில் காணப்பட்டதாகவும், இரவு பெய்த கன மழையுடன் நீர் மட்டம் 15அடிக்கு மேல் அதிகரித்ததால் குளத்தின் கட்டு உடைப்பெடுத்திருக்கலாம் எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி
வலையிறவு பாலத்தினூடான போக்குவரத்து பாதிப்பு
08/11/2018 மட்டக்களப்பு நகரையும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான வலையிறவு பாலம் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் அவ் வீதியினூடாக போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவ் வீதியூடாக போக்குவரத்தை மேற்கொள்ளும் பொது மக்களும் வாகன சாரதிகளும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
”இராணுவத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை”
08/11/2018 இராணுவத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆயுதத்தால் பேச முயற்சித்தவர்களுக்கும், இராணுவத்துக்குமே பிரச்சினைகள் இருந்தன என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஒழுங்கமைப்பில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புடவைகள் வழங்கும் நிகழ்வும், யாழ்.மாவட்ட இராணுவ தளபதிக்கு கௌரவ பட்டம் வழங்கும் நிகழ்வு நேற்று பலாலியில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

30 வருடங்கள் துரதிஷ்டவசமாக இராணுவம் ஆயுதங்களை தாங்கி போராடவேண்டிய நிலை உருவானது. ஆனால் ஆயுதத்தால் பேச முனைந்தவர்களுடனேயே இராணுவம் போராட்டம் நடத்தியது. அது தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. போர் காலத்திலும், போருக்கு பின்னரும் தமிழ் மக்களுடன் இராணுவத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
போர் காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்களை சந்தித்தார்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும். 30 வருடகால போரில் பல அழிவுகள் இடம்பெற்றதும் தெரியும். அவற்றை 9 வருடங்களில் மீட்டெடுக்க முடியாது.
ஆனால் இராணுவத்தால் முடிந்தளவு மீட்டுக் கொடுப்பதற்கு இராணுவம் முயற்சிக்கும். அந்த முயற்சியில் 100 வீதம் இராணுவம் முயற்சிக்கும். குறிப்பாக இராணுவம் வீடுகளை அமைத்துக் கொடுக்கிறது, மலசல கூடங்களை அமைத்துக் கொடுக்கிறது,
வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்கும் மேலாக இராணுவத்தின் வசம் உள்ள காணிகளில் கூட அந்த காணிகளுக்கு சொந்தமான மக்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தென்னை மரங்களையும், பனை மரங்களையும் இராணுவம் நாட்டியிருக்கின்றது.
இதேபோல் கரையோர வள பாதுகாப்பு மற்றும் வனவள பாதுகாப்பு போன்றவற்றிலும் இராணுவம் தொடர்ச்சியாக அக்கறை காட்டி வருகின்றது. யாழ்.மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழும் நாளை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்றார். நன்றி வீரகேசரி
நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது : இலங்கையில் மனம் திறந்தார் நிஸாம்தீன்
08/11/2018 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னர், குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டு அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் நான் விடுவிக்கப்பட்டுள்ளேன். எனக்கு நிகழ்ந்த அநீதிக்கு நான் மாணவர் வீசாவில் இருந்ததுடன், ஆசிய பிரஜையாக இருந்தமையே காரணமாகும் என அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பிரஜை கமர் நிஸாம்தீன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கைப் பிரஜையான கமர் நிஸாம்தீன் கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
நேற்று புதன்கிழமை ஷங்-ரி-லா ஹோட்டலில் அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
எனக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் தொடர்புள்ளதாகக் குறிப்பிட்டு அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட எனக்கு செப்டெம்பர் 28 ஆம் திகதி பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர் விசாரணைகளின் மூலம் நான் எவ்வித குற்றமும் இழைக்கவில்லை என்ற விடயம் நிரூபிக்கப்பட்டு, கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் விடுவிக்கப்பட்டேன்.
குற்றச்சாட்டுக்கு அடிப்படையாக அமைந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து என்னுடைய கையெழுத்து அல்ல என கையெழுத்து தொடர்பிலான விசேட நிபுணர்கள் இருவரால் நிரூபிக்கப்பட்டது. அத்தோடு குற்றச்சாட்டுடன் தொடர்புடைய குறிப்புப் புத்தகம் என்னுடைய அறையில் அல்லாது வேறொரு அறையில் இருந்து கிடைக்கப்பெற்றமை நான் குற்றமற்றவன் என நிரூபனமாவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
இலங்கை சர்வதேசரீதியில் அவப்பெயரை சந்திக்கவேண்டிய நிலையேற்படலாம்- அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர்நவுவட் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர் வை காண்பதற்காக இலங்கை ஜனாதிபதியை பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையில் நிலவும் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமாவது நல்லாட்சி ஸ்திரதன்மை பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
' வேண்டாம் நீங்கள் தந்த தேசமான்ய விருது'
07/11/2018 ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக கவலை தெரிவித்திருக்கும் ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப்போவதாக அறிவித்திருக்கிறார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் கலாநிதி நேசையா ஜனாதிபதி சிறிசேனவுக்கு பகிரங்கக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார்.
1959 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை சிவில் சேவையில் பல்வேறு உயர்பதவி நிலைகளில் பணியாற்றிய அவர் தனது கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது ;
" விசுவாசமான ஒரு இலங்கையன் என்ற வகையிலும் தகுதியானவன் என்று என்னைக் கண்டு 2017 மார்ச்சில் தங்களால் தரப்பட்ட தேசமான்ய விருதைப் பெருமையுடன் பெற்றுக்கொண்டவன் என்ற முறையிலும் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.எமது மகத்தான தேசத்துக்கு நான் செய்திருக்கக்கூடிய சேவைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த அங்கீகாரமாக எனக்கு அளிக்கப்பட்ட தேசமான்ய விருதைக் கொண்டாடுவதற்கு அன்று மூன்று கண்டங்களில் இருந்து எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் நாட்டுக்கு வந்திருந்தார்கள்.
" உங்களை முன்கூட்டியே நான் பெரிதாக தெரிந்தவன் அல்ல.ஆனால், நீங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் நானும் பெருமகிழ்ச்சி அடைந்தோம். அந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கடந்த சில நாட்களாக எமது 70 வருடகால பழமைவாய்ந்த ஜனநாயகத்தை அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள் இல்லாமல் செய்துவிட்டன.
"நீங்கள் எனக்குத் தந்த தேசமான்ய பதக்கத்தையும் சான்றிதழையும் கவலையுடன் திருப்பித்தருவதை விட வேறு வழி எனக்கு ஒரு விசுவாசமான , தேசப்பற்றுடைய இலங்கையன் என்ற வகையில் தெரியவில்லை. நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன்.நாடு திரும்பியதும் பதக்கத்தையும் சான்றிதழையும் உங்கள் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகளைச் செய்வேன்.
" எனது இந்த முடிவு எளிதாகவோ அல்லது அவசரமாகவோ எடுக்கப்பட்ட ஒன்றல்ல.60 வருடங்களுக்கு முன்னர் இலங்கை சிவில் சேவையில் முதலில் இணைந்துகொண்ட நாளில் இருந்து நான் வரித்துக்கொண்ட கோட்பாடுகளின் பிரகாரமே செயற்பட்டுவந்திருக்கின்றேன். அது எனக்குச் சுமையாக இருந்தாலும் பெருமையுடன் ஏற்றுக்கொண்ட சுமை.எனது நீண்டகால சிவில் சேவையில் எனது விழுமியங்களை விட்டுக்கொடுப்பதற்கு மறுத்த காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்களின் கீழும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கங்களின் கீழும் நான் அடிக்கடி தொல்லைகளுக்குள்ளாக்கப்பட்டிருந்தேன்.
" நீங்கள் தந்த தேசமான்ய விருதில் பெருமைப்பட இனிமேலும் எனக்கு எதுவுமில்லை என்பதால் நான் இதுவரை மதித்துவைத்திருந்த பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்புவதைத் தவிர எனக்கு வேறு தெரிவு இருக்கவில்லை". நன்றி வீரகேசரி
18 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு ; மன்னாரில் தொடர்கிறது மனித எலும்புக்கூடுகள் அகழ்வு
07/11/2018 மன்னாரில் இது வரையான அகழ்வு பணிகளின் போது கிடைக்கப் பெற்ற மனித எலும்புக்கூடுகளில் 18 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடயது எனவும் பெண்கள் தொடர்பான விபரங்கள் முழு பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 102 ஆவது நாளாக இன்று தொடர்சியாக இடம்பெற்று வருகின்றது .
தெடர்ச்சியாக மழை பெய்கின்ற போதும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றது.
மன்னார் நீதிவான் ரி.சரவணராஜா மேற்ப்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் அகழ்வு அகழ்வ பணி இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்று புதன்கிழமை மனித புதை குழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சட்ட வைத்திய அதிகாரி அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தினத்துடன் 102 வது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வுபணிகள் இடம் பெறுவதாகவும் இதுவரை 232 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 224 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக மனித எலும்புக்கூகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்சியக இடம் பெற்று வருகின்றன.

மேலும் இது வரையான அகழ்வு பணிகளின் போது கிடைக்கப் பெற்ற மனித எலும்புக்கூடுகளில் 18 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடயது என்பதுடன் பெண்கள் தொடர்பான விபரங்கள் முழு பரிசோதனையின் பின்னரே தெரியவரும்.
கடந்த வாரத்தில் சந்தேகத்திற்கு உரிய விதமாக சில தடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் மோதிரம் போன்ற ஒரு தடையப் பொருளும் மாபிளை ஒத்த ஒரு தடையப் பொருளும் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதே வகையில் குறித்த மனித புதை குழியில் இருந்து கிடைக்கப் பெற்ற முக்கிய தடைய பொருளான மெலிபன் பக்கற் தொடர்பான அறிக்கையானது நீதி மன்றத்துக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. தனக்கு அவ் அறிக்கை தொடர்பான விபரங்கள் தெரியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
மட்டு. மாவட்டத்தில் 6 நலன்புரி முகாம்களில் 499 குடும்பங்கள் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு
07/11/2018 மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 6 நலன்புரி முகாம்களில் 499 குடும்பங்களைச் சேர்ந்த 1106 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான சமைத்த உணவுகளை அந்த அந்தப் பிரதேச செயலாளர்கள் வழங்குவதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை மாவட்ட மட்ட அவசரகால அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதில், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நீர்ப்பாசனத் திணைக்களங்கள், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, திணைக்களம், கல்வித் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
வாநிலை அவதான நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் படி 5ஆம் திகதி முதல் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக காலநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த 3 நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவியது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 5 நலனோம்பு முகாம்களும் வாழைச்சேனையில் ஒரு முகாமும் அமைக்கப்பட்டுளளன.
இவற்றில் 499 குடும்பங்களைச் சேரந்த 1106 நபர்கள் இவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான சமைத்த உணவுகளை அந்த அந்தப் பிரதேச செயலாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சுற்று நிருப அடிப்படையில் 3 நாட்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் வழங்கப்பட்ட பின்னர் அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
திருகோணமலை மாவட்டத்தில் 1104 குடும்பங்கள் பாதிப்பு
07/11/2018 தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமங்களைச் சேர்ந்த 1104 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவை வழங்கவும் அழிவு பதிவுகளை மேற்கொள்ளவும் திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் ஏற்பாடுகளை செய்துவருகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக பருவ மழை கடுமையாக தொடர்ந்து பெய்து வருகின்ற காரணத்தினால் கிண்ணியா, சேருவில, மூதூர், வெருகல், பட்டணமும் சூழலும் பிரதேசங்களைச் சேர்ந்த 997 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் கிண்ணியாவில் 17, வீடுகளும் மூதூர் நகரப்பகுதியில் தலா ஒரு வீடுமாக 19, வீடுகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
விவசாய நிலங்களைக் கொண்ட இறால்குழி, பெரியவெளி, மணற்சேனை, மல்லிகைத்தீவு, மேன்காமம் ஆகிய கிராமங்களில் கடுமையான வெள்ளம் காரணமாக மக்கள் இடம் பெயர வேண்டிய அவல நிலை தோன்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை சேருவில, மூதூர், கிண்ணியா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 107 குடும்பங்கள் வெள்ளம் மற்றும் வீடு அழிவு காரணமாக இடம் பெயர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் அடைக்கலம் தேடி சென்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கும் அழிவுற்ற வீடு மற்றும் விபரங்கள் தொடர்பில் அழிவு பதிவுகளை மேற்கொள்ள அனர்த்த முகாமைத்துவப்பிரிவு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார். இதுவரை திருகோணமலை பிரதேசத்தில் வெள்ள அனர்தம் காரணமாக இடைத்தங்கல் முகாங்கள் அமைக்கப்படவில்லையெனவும் அவ்வதிகாரி தெரிவித்தார். நன்றி வீரகேசரி
பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது !
வெளியானது வர்த்தமானி- ஐனவரி ஐந்து தேர்தல்
அரசியல் நெருக்கடி மேலும் மோசமடையலாம்- அமெரிக்கா
இறுதி நாட்களில் நடந்தது என்ன- ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு நீண்ட விளக்கம்
தேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவு- செயலிழக்கின்றது சுயாதீன தேர்தல் ஆணையகம் ?
எந்த விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயார்- கருஜெயசூரிய அதிரடி அறிவிப்பு
09/11/2018 பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.
ஜனாதிபதி சிறிசேன கையெழுத்திட்டுள்ள வர்த்தமானி பத்திரிகை தற்போது அரச அச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று 9-11-2018 நள்ளிரவு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வெளியானது வர்த்தமானி- ஐனவரி ஐந்து தேர்தல்
09/11/2018 நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்த ஜனாதிபதியின் பிரகடனம் அடங்கிய விசேட வர்த்தமானி இன்றிரவு வெளியாகியுள்ளது.

இலங்கையின் அரசமைப்பினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2019 ஜனவரி ஐந்தாம் திகதி புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறும் இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நவம்பர் 19 ம் திகதியில் ஆரம்பமாகி 26 ம் திகதி வரை நடைபெறும் எனவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வு 17 அமர்வு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
அரசியல் நெருக்கடி மேலும் மோசமடையலாம்- அமெரிக்கா
10/11/2018 இலங்கை நிலவரம குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற செய்தி குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ள இராஜாங்க திணைக்களம் இதன் காரணமாக தற்போதைய அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என தெரிவித்துள்ளது.

இலங்கை குறித்த அர்ப்பணிப்புள்ள சகா என்ற அடிப்படையில் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு ஜனநாயக ஸ்தாபனங்களும் ஜனநாயக நடைமுறைகளும் மதிக்கப்படவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம் என இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
இறுதி நாட்களில் நடந்தது என்ன- ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு நீண்ட விளக்கம்
11/11/2018 முதல் 150 மில்லியன் வரை விலைபேசப்பட்டது.ஒரு சந்தர்ப்பத்தில் இது 500 மில்லியனாக காணப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிற்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
14 ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டியிருந்தால் பெரும் குழப்பமும் களேபரமும் இடம்பெற்றிருக்கும் இரு கட்சிகளிற்கும் இடையிலான முறுகல் நிலை காரணமாக உயிரிழப்புகள் கூட ஏற்பட்டிருக்கலாம் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியொருவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நியமித்த பிரதமரை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுத்தமையே பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான இரண்டாவது காரணம் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
ஒழுக்கமான நெறிமுறை சார்ந்த கலாச்சார சமூகத்தினை ஏற்படுத்துவதற்காக மக்களின் ஆதிபத்தியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் உயர்ந்த அமைப்பில் கடந்த வாரம் பாரளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட பெறுமதி 100 மில்லியன் முதல் 150 மில்லியன் வரை விலைபேசப்பட்டது.ஒரு சந்தர்ப்பத்தில் இது 500 மில்லியனாக காணப்பட்டது.
1947 பின்னர் இலங்கையில் ஊழல் காரணமாக எந்த பாராளுமன்றமும் கலைக்கப்படவில்லை.
2015ற்கு பின்னர் இடம்பெற்ற மத்திய வங்கி கொள்ளை,அதன் பின்னர் இடம்பெற்ற பல ஊழல் நடவடிக்கைகள்,மகிந்த ராஜபக்ச பிரதமரான பின்னர் பெரும்பான்மையை நிருப்பிப்பதற்கான முயற்சிகள் காரணமாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை ஆகியன துரதிஸ்டவசமான நடவடிக்கைகளாகும்.
மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வணிக ரீதியில் மதிப்பீடு செய்யப்படுவது எவ்வளவு துயரகரமான விடயம் என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான முக்கிய காரணம் இதுவாகும்
இரண்டாவது முன்னாள் சபாநாயகரின் விசித்திரமான செயற்பாடுகளாகும்.நான் இது குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்.அவர் என்னுடைய சிறந்த நண்பர்.
1947 முதல் எங்கள் பாராளுமன்ற சபாநாயகர்கள் நடுநிலைழையுடன் பக்கச்சார்பின்றி செயற்பட்டுள்ளனர்.

எனினும் இவரின் செயற்பாடுகள் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை புறக்கணிக்கும் விதத்தில் அமைந்திருந்தன.
ஜனாதிபதியொருவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நியமித்த பிரதமரை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுத்தமையே பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான இரண்டாவது காரணம் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் விசேட உரையின் முழு விபரம் பின்வருமாறு,
மும் மணிகளின் ஆசிகள், இறைவன் துணை, வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரே, ஏனைய மதத் தலைவர்களே, பெற்றோர்களே, பிள்ளைகளே, நண்பர்களே, தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் இது நான் உங்கள் முன் உரையாற்றும் மூன்றாவது முறையாகும். முதலாவதாக கௌரவ மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் அமர்த்தியதை அடுத்து நான் எனது கருத்துக்களை முன்வைத்தேன்.
அதேபோன்று நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது இரண்டாவது தடவையாக அரசியல் நிலைமைகளை உங்களுக்கு தெளிவுபடுத்தினேன். இன்று மூன்றாவது முறையாக உங்கள் முன் உரையாற்றுகின்றேன். இதன் முக்கியத்துவம் யாதெனில் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைத்ததன் பின்னர் உங்கள் முன் உரையாற்றுவதாகும்.
குறிப்பாக மிகச் சுருக்கமாகவேனும் பாராளுமன்றத்தைக் கலைத்ததற்கான காரணங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
நமது நாட்டில் பாராளுமன்ற சம்பிரதாயம் அதாவது இலங்கை பாராளுமன்றம், இலங்கை தேசிய அரச பேரவை காலம் முடிவடைந்ததன் பின்னர் 1947 இல் முதலாவது பாராளுமன்றம் ஆரம்பமானது. அன்று முதல் இன்று வரை பொதுத் தேர்தல்களுக்கமைய அரசாங்கங்கள் மாற்றப்பட்டு புதிய அரசாங்கங்கள் பதவியேற்று இந்த நாட்டின் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. குறிப்பாக தற்போதைய பாராளுமன்றத்தின் நிலைமை கடந்த வாரமளவில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒழுக்கத்தன்மையின் அடிப்படையிலும் நன்னடத்தைமிக்க சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புமிக்க நாட்டின் உன்னத ஸ்தானமும் மக்களின் இறையாண்மையை வெளிப்படுத்தும் மிக உயரிய ஸ்தானமுமாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரையிலும் சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாவாகவும் விலைபோகும் நிலைமை ஏற்பட்டது.
நம் நாட்டின் பாராளுமன்றத்தினுள் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் மற்றும் மாற்றங்கள் பற்றிய அனுபவத்தை நாம் பெற்றிருக்கின்றோம். 1964 ஆம் ஆண்டு லேக்ஹவுஸ் சட்டத்தை எதிர்க்கும் வகையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மாற்றம் இச்சமயம் எனது ஞாபகத்திற்கு வருகின்றது. அதன் மூலம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவதற்கும் வழிவகுத்தது. ஆயினும் 47 முதல் இதுவரையிலான காலப்பகுதியில் கலைக்கப்பட்ட பாராளுமன்றங்கள் ஊழல் காரணமாக கலைக்கப்பட்டதாக அறிவதற்கில்லை. 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி கொள்ளை அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அவற்றுடன் தொடர்பான விடயங்கள் மற்றும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியதை அடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அரசியல் நிலைமை சூடுபிடித்த பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் அவர்களாலேயே நிர்ணயிக்கப்பட்டது. அது மிகவும் வருந்தத்தக்கதோர் நிலைமையாகும்.
உங்களது மதிப்பிற்குரிய வாக்குகளைப் பெற்று இந்த பாராளுமன்றத்திற்கு வந்திருக்கும் பிரதிநிதிகள் தமது வணிக பெறுமதியை அல்லது ஒரு விலையை நிர்ணயிப்பது எந்தளவிற்கு அரசியல் ரீதியில் மோசமான துரதிஷ்டமான நிலையாகும் என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் இதுவே பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பாராளுமன்றத்தைக் கலைக்க நேர்ந்த இரண்டாவது காரணி முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அதிசயமான செயற்பாடாகும். அவரின் செயற்பாட்டையிட்டு நான் மிகவும் வருந்துகின்றேன். அவர் எனது மிகவும் நெருங்கிய நண்பராவார்.
நம் நாட்டு பாராளுமன்ற சம்பிரதாயத்தினுள் நியமிக்கப்பட்ட சபாநாயகர்கள் அவர்களது நடுநிலைத் தன்மையையும் பக்கச்சார்பின்மையையும் மிக சிறந்த முறையில் வெளிப்படுத்தி வந்தார்கள். அந்த நிலைமை 1947 முதல் இதுவரை இருந்து வந்தது. பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை, பாராளுமன்றத்தின் சம்பிரதாயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது ஜனாதிபதிக்குரிய விஷேட அதிகாரங்களுக்கமைய பிரதமரை நியமித்ததை ஏற்றுக்கொள்ளாத தன்மையை ஏற்படுத்தி சபாநாயகரினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் அவரது நடத்தையும் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான இரண்டாவது காரணமாக அமைந்ததென்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.
இங்கே அரசியல் ரீதியான ஒரு நிலைமையினை கவனத்தில் கொள்ளும் வகையில் உங்களது ஞாபகத்திற்கு இவ்விடயத்தையும் கொண்டுவர விரும்புகிறேன்.
கடந்த 2015 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் பின்னர் அதற்கு மறுநாள் ஜனாதிபதியாக நான் பதிவியேற்ற மறுகணமே ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அமர்த்தினேன். அதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களில் 225 பேரில் 162 உறுப்பினர்களின் பலம் இருந்த டி.மு.ஜயரத்னவை நீக்கிவிட்டே 41 உறுப்பினர்கள் மாத்திரம் இருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் அமர்த்தினேன்.
இந்த நிகழ்வு உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன். அச்சமயம் இன்று பலரும் பேசுகின்ற பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பற்றி எவரும் பேசவில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். பெரும்பாலும் ஜனாதிபதியினால் நம்பிக்கை வைக்கத்தக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை வெல்லத்தக்க ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அரசியலமைப்பில் காணப்படுகின்ற உடன்படிக்கைகளுக்கு அமைய நியமிப்பதே சம்பிரதாயமாகும். அவ்வாறு நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கான நிலையியற் கட்டளை, அரசியலமைப்பின் சட்ட திட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும். இருப்பினும் ஒரு பிரதம மந்திரியை நியமித்து அவர் பாராளுமன்றத்திற்கு செல்லும் முதல் தினத்திலேயே அவர் மீதான நம்பிக்கை இருக்கின்றதா என்பதை பற்றிய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு எமது பாராளுமன்ற சம்பிரதாயத்தில் ஒருபோதும் நடந்ததில்லை.
நிலையியற் கட்டளைகளுக்கு கீழும் அவ்வாறு நடப்பதில்லை. இருப்பினும் பாராளுமன்றத்தின் அச் சம்பிரதாயத்தை மீறி கௌரவ கரு ஜயசூரிய இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார்.
அவரது முதலாவது அறிக்கையில் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்று அவருக்கான உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் பாராளுமன்றத்தில் பெற்றுத்தருவதாக அறிவித்தார். அதாவது பாராளுமன்றத்தில் பிரதமருக்குரிய ஆசனம், பாராளுமன்றத்தில் பிரதமருக்கான அலுவலகம் ஆகியன பெற்றுத்தரப்படும் என முதலாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அதற்கு சில தினங்களின் பின்னர் வெளியிட்ட இரண்டாவது அறிக்கை முதலாவது அறிக்கையை விட முற்றிலும் வேறுபட்டவொரு அறிக்கையாக அமைந்தது. அதன்மூலம் அவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு ஏற்படும் நிலைமையைப் பற்றி நான் மிகுந்த கவனத்தை செலுத்தினேன். அத்தோடு இரு தரப்பையும் சார்ந்த உறுப்பினர்களும் அறிக்கைகளை வெளியிட்டார்கள். ஊடகங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் பட்சத்தில் ஒரு பாரிய மோதல் ஏற்படும் எனவும் சில சமயம் சிலர் மரணிக்க நேரிடும் எனவும் சிலர் தெரிவித்தார்கள். அதை அவ்வாறு நடக்க விட்டிருப்பின் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டி அதனைக் கலைக்காது அந்த மோதலை உங்களதும் எனதும் அன்புக்குரிய இந்த தாய் நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் மோதல்கள் ஏற்பட்டு நாட்டில் சாதாரண சிவில் மக்களுக்கிடையிலான மோதலாக பாரதூரமான நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்தேன்.
ஆகையால் இதற்கான சிறந்த தீர்வாக 225 பேருக்கிடையிலான மோதல் நாடு தழுவிய ரீதியிலான பாரிய மோதலாக மாறி இயல்பு நிலை சீர்குலைவதற்கு வழிவகுப்பதற்கு பதிலாக எனது பொறுப்புக்கும் கடமைக்கும் ஏற்ப ஜனநாயகத்தை மிக உயர்வாக மதித்து சுதந்திரமான நியாயமான தேர்தலொன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நாட்டின் வாக்குரிமை பெற்றிருக்கும் 150 இலட்ச வாக்காளர்களிடம் அவ்வதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதும் அதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்ட ஊழல்மிக்க தன்மையையும் சபாநாயகரின் செயற்பாட்டினால் ஏற்பட்ட முரண்பாடான நிலைமையின் உருவாக்கமுமாகிய அனைத்தையும் கருத்திற் கொண்டு உருவாகிய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளக்கூடிய மிகவும் சிறந்த ஜனநாயக ரீதியிலான நியாயமான தீர்வாக அப்பொறுப்பினை பொதுமக்களிடம் கையளிப்பதன் மூலம் ஜனநாயகத்தின் உயரிய நோக்கங்களை அடையும் வகையிலேயே நான் பாராளுமன்றத்தைக் கலைத்து பொது தேர்தலை நடத்த தீர்மானித்தேன். அதன்மூலம் இப்போது ஏற்பட்டிருக்கின்ற இப்பிரச்சினைக்கு தெளிவான நிலையான தீர்வு பொதுத்தேர்தல் மூலம் கிடைக்கப்பெறும் என்பதை இங்கு கூறவேண்டும்.
இதன்போது பொதுத் தேர்தலை நடத்தும் முழுமையான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே இருக்கின்றது. ஆதலால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாம் எமது முழுமையான தேவையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். தேர்தல் சட்டதிட்டங்களைப் பாதுகாத்து நாட்டில் தேர்தல் ஆணைக்குழுவினால் ஜனநாயக ரீதியிலான நியாயமான நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு நாம் அனைவரும் நமது உயரிய ஒத்துழைப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பொலிஸ் உள்ளிட்ட முப்படையினருக்கும் பெற்றுக் கொடுப்போம் என்ற வேண்டுகோளை மிகுந்த கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் உங்களுக்கு விடுக்க விரும்புகின்றேன்.
நாம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்போம். அதேபோன்று ஊழல் மிக்கவர்களை அகற்றி அரச நிர்வாகத்திற்காக தூய்மையான பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது மதிப்புக்குரிய உங்களது பொறுப்பாகும். குறிப்பாக ஜனநாயக அடிப்படையில் மக்களின் கருத்துக்கு தலை வணங்கி பொதுத் தேர்தலை நடத்துவது அனைவராலும் பாராட்டப்படும் ஒரு முடிவாகும் என்றே நான் கருதுகின்றேன்.
நாட்டின் முக்கிய பிரச்சினைகள், வாழ்க்கைச் செலவு, சுபீட்சமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், உள்நாட்டு உற்பத்திகளை கட்டியெழுப்புதல், தூய்மையான வெளிநாட்டு முதலீடுகளை ஊழலின்றி பெற்றுக் கொள்ளுதல், ஒழுக்கமும் நன்னடத்தையும்மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல், ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல் ஆகிய அனைத்திற்கும் இத்தேர்தலை நடத்தி உங்களது தீர்மானத்திற்கு அமைய ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதே ஆகும். ஆகையால் எமது அன்புக்குரிய தாய் நாட்டை புதிய பாதையில் நாம் கொண்டு செல்வோம். இன்று இந்த நாட்டில் வாழ்பவர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் புதிய தொழிநுட்ப உலகில் ஒழுக்கமிக்க நமது பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், கலாசாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் அறிவை முதன்மைப்படுத்திய ஒரு சமூகத்தையும் அறிவும் ஆற்றலுமிக்க அனுபவமிக்க அரச நிர்வாகிகளையும் தேர்ந்தெடுப்பதற்கு உங்களுக்கு மிகச் சிறந்ததோர் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
ஆகையால் தேர்தலை நடத்தும் வகையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தலுக்கமைய தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானங்களுக்கும் நாம் எமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்போம். இத்தருணத்தில் தேர்தல் சட்டதிட்டங்கள் தொடர்பில் எமது முன்னைய அனுபவங்களையும் தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவதற்கு ஏதுவாக அமையும் காரணங்களைப் பற்றியும் இங்கு நான் சுருக்கமாக ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
குறிப்பாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்காகவும் ஆபேட்சகர்களின் தேர்தல் செயற்பாடுகளுக்காகவும் அரச உடைமைகளை துஷ்பிரயோகம் செய்வதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுதல், அரச வாகனங்களை உபயோகப்படுத்துவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுதல், கடந்த அரசாங்கத்திலும் தற்போதைய காபந்து அரசாங்கத்தில் செயலாற்றும் தற்போதைய நிலைமையிலும் அந்தந்த அமைச்சுகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்காக வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். தற்போதைய அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் கீழ் காபந்து அரசாங்கம் என்ற வகையில் வேட்புமனு தாக்கல் பற்றிய அறிவித்தலிலிருந்து பாராளுமன்றம் கூடும் வரையிலான காலப்பகுதியில் அமைச்சரவை, பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட காபந்து சபைக்கே அதிகாரம் இருக்கின்றது.
ஆகையால் அந்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை தவிர்ந்த வேறு எவருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய எவருக்கும் அரச வாகனங்கள் மற்றும் அரச பொது உடைமைகளை தேர்தல் பிரசார பணிகளுக்காக உபயோகப்படுத்துவது சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்ற இத்தருணத்தில் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அவர்கள் வசமிருக்கும் அரச வாகனங்கள், வளங்கள், ஆகிய அனைத்தையும் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்களிடம் கையளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன். அவற்றைக் கையளிப்பதில் தாமதம் ஏற்படுமாயின் பொலிஸார் மூலம் சட்ட ரீதியாக அவ்வாகனங்களை மீளப் பெறுவதற்கும் அவ்வாறு சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் எவராக எந்தக் கட்சியை சார்ந்தவர்களாக இருப்பினும் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
எனவே அரச வாகனங்களை உபயோகப்படுத்துதல், அரச பொது உடைமைகளை உபயோகப்படுத்துதல் ஆகியன இத்தருணத்தில் முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவ்வாறான உபயோகம் சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதையும் உங்களுக்கு நான் மிகுந்த தயவுடன் ஞாபகப்படுத்துகின்றேன். ஆதலால் இத் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு நான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் நாம் எமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்போம். தேர்தல் காலப்பகுதியில் மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளாது அமைதியாகவும் மிகுந்த புரிந்துணர்வுடனும் செயற்படுவதன் மூலம் அமைதியான ஜனநாயக வழியிலான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், நாட்டு மக்களாகிய அனைவரும் ஏற்க வேண்டிய மிகப் பரந்த பொறுப்பாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நான் இங்கே ஞாபகப்படுத்திய இந்த விடயங்களுடன் உன்னதமான எமது இந்த தாய் நாட்டை முன்னெடுத்து செல்வதற்கும் சுபீட்சமிக்க பொருளாதாரத்தையும் நவோதமிக்க உயரிய தேசத்தையும் உலகில் சிரேஷ்ட உன்னதமான அரச நிர்வாகத்தைக் கொண்ட ஒழுக்கமும் அமைதியும் நற்பண்புமிக்க சுதேசத்துவத்தை முதன்மைப்படுத்திய பெறுமானங்கள் உள்ளிட்ட எமது கலாசாரத்தையும் நாட்டுப் பற்றையும் முதன்மையாகக் கொண்ட அரச நிர்வாகத்திற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நான் மிகுந்த தயவுடனும் கௌரவத்துடனும் கேட்டு நிற்கின்றேன் என்றார். நன்றி வீரகேசரி
தேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவு- செயலிழக்கின்றது சுயாதீன தேர்தல் ஆணையகம் ?
11/11/2018 தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்பீசி பெரேரா என்பவரிடம் கையளித்துள்ளார்.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும் நளின் அபயசேகரவும் இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
எனினும் சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் இந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
மகிந்த தேசப்பிரிய நளின் அபயசேகரவை ஆணைகுழுவிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டார், பேராசியா இரட்ண ஜீவன் கூல் குறிப்பிட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக பதவி விலக தீர்மானித்துள்ளார் என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.
இந்த பதவிவிலகல் காரணமாக தேர்தல் ஆணையகம் செயழிலந்து போகும் என தெரிவித்துள்ள கொழும்பு டெலிகிராவ் இதன் காரணமாக இலங்கையின் தேர்தல் நடைமுறைகள் ஆணையாளர் நாயகமே அனைத்தையும் தீர்மானிக்கு பழைய முறைக்கு திரும்பலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை செயலிழக்கச்செய்து விட்டு பழைய முறைக்கு திரும்புவதற்கான சதி முயற்சி இடம்பெறுகின்றதா என கொழும்பு டெலிகிராவ் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜனாதிபதி சிறிசேன 19 வது திருத்தத்தை அப்பட்டமாக மீறி பாராளுமன்றத்தை கலைத்துள்ள பின்னணியில் இது இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள கொழும்பு டெலிகிராவ் சுதந்திரமான நீதியான தேர்தல்களிற்கான மக்களின் ஒரேயொரு நம்பிக்கையாக சுயாதீன தேர்தல் ஆணையகம் மாத்திரமே காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளது.
பழைய முறைக்கு திரும்புவதற்கான மகிந்த தேசப்பிரியவின் முயற்சிகள் அவர் சிறிசேனவின் நிகழ்ச்சி நிரலிற்கு மறைமுக ஒத்துழைப்பை வழங்குகின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
அவரின் இந்த நடவடிக்கை சர்ச்சையை தவிர்க்க மகிந்த தேசப்பிரிய முயல்கின்றாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
எந்த விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயார்- கருஜெயசூரிய அதிரடி அறிவிப்பு
11/11/2018 ஜனாதிபதியை எதிர்த்து பாரளுமன்றத்தின் உரிமைகளையும் அரசமைப்பின் ஆதிபத்தியத்தையும் மக்களின் இறைமையையும் காப்பற்ற முயன்றமைக்காக எந்த விளைவுகளையும் தயக்கமின்றி நான் எதிர்கொள்ள தயார் என முன்னாள் அமைச்சர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பலகட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக தெரிவித்துள்ளனர்.பாராளுமன்றம் ஜனாதிபதியின் நடவடிக்கையின் சட்டபூர்வதன்மை குறித்து தீர்மானிப்பதை, ஜனாதிபதி தடுத்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை சட்டபூர்வமானதா என்பதை உச்சநீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும்.
பாரளுமன்றத்தின் பாதுகாவலன் என்ற அடிப்படையில் நான் கடந்த இரண்டுவாரகாலமாக ஜனாதிபதி பாராளுமன்றத்தின் உரிமைகளை பறித்ததையும் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்களை முடக்கியதையும் நான் பார்த்துள்ளேன்.
இலங்கையின் இறைமையின் இயந்திரமான பாராளுமன்றம் குறித்து ஜனாதிபதி வெளிப்படுத்திய வேண்டுமென்ற அலட்சியம்காரணமாக இலங்கையின் சாதாரண பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் இதேபோன்று துஸ்பிரயோகத்திற்குள்ளாக கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் அரசமைப்பை பாதுகாப்போம் என சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அனைத்து அரச பணியாளர்களையும் அந்த சத்தியப்பிரமாணம் குறித்து சிந்திக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.நாங்கள் ஏன் அரசமைப்பு என்ற ஆவணத்திற்கு கட்டுப்படவேண்டும் , ஏன் தனியொரு மனிதரிற்கோ அதிகாரத்திலுள்ளவர்களிற்கோ கட்டுப்படக்கூடாது என எங்களை நாங்களே கேள்வி கேட்க வேண்டும். எங்களது தலையாய கடமை என்பது அரசமைப்பிற்கேயுரியது.
நாட்டின் அனைத்து அரசபணியாளர்களையும் எங்கள் தாய்மண்ணின் அதிஉயர் சட்டத்திற்கான தங்கள் கடப்பாடுகளை நினைத்துப்பார்க்குமாறும் பொதுச்சேவை பொலிஸ்சேவை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்குமாறும். நான் கேட்டுக்கொள்கின்றேன்.
அரச ஊழியர்களை அவர்களிற்கு கிடைக்கும் சட்டவிரோதமான உத்தரவுகளை நடைமுறைப்படுத்த மறுக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
அரசமைப்பின் கீழ் கடப்பாடுகள் வழங்கப்பட்டுள்ள அனைத்து பிரஜையும் நாடு குறித்தே முதலில் சிந்திக்கவேண்டும் கட்சி அல்லது தனிப்பட்ட தொடர்புகள் குறித்து சிந்திக்க கூடாது.
எமதுநாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நாங்கள் அனைவரும் தேசப்பற்றுடனும் சுதந்திரமாகவும செயற்படவேண்டும்.
நவம்பர் 14 ம் திகதி பாராளுமன்றம் கூடவிருந்தவேளை ஜனாதிபதி உரையாற்றுவதை நான் தடுக்கமுயன்றேன் என போலியான வெளிவிவகார அமைச்சரும் நன்கு மதிக்கப்பட்ட அரசியல்வாதியுமானவர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை குறித்து அறிந்து நான் கவலையடைந்தேன்.இவ்வாறான அனுமானத்தை முன்வைத்துள்ள அமைச்சர் இதன் காரணமாகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
நான் குறிப்பிட்ட அமைச்சர் தனது சகாக்களின் நடவடிக்கைள் குறித்து நேர்மையான நம்பத்தகுந்த காரணங்களை முன்வைத்திருந்தால் அது சர்வதேச சமூகத்தின் மத்தியில் எங்கள் நாடு அவமானப்படுவதை குறைத்திருக்கும் என நான் கருதுகின்றேன்.
அவரது கட்டுக்கதையை அடிப்படையாக வைத்து அவரது சகாக்கள் பலர் என்னை சிறைக்கு அனுப்பபோவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சபாநாயகரினதும் பாராளுமன்றத்தினதும் செயற்பாடுகள் எப்போதும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைவாக காணப்படாது. 1641இல் பொதுச்சபையின் சபாநாயகர் தனது உறுப்பினர்கள் முதலாம் சார்ல்ஸ் மன்னனால் கைதுசெய்யப்படுவதிலிருந்து அவர்களை பாதுகாத்தது முதல் பாராளுமன்றத்தின் இந்த சுதந்திரம் காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் சட்டபூர்வதன்மை குறித்த வாக்கெடுப்பை நடத்துமாறு பாராளுமன்றத்தின் 124 உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.
116 உறுப்பினர்கள் என்னை சந்தித்து வேண்டுகோள் லிடுத்தனர், ஏனைய 8 உறுப்பினர்கள் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு இந்த அழைப்பை விடுத்தனர்.
பாராளுமன்றத்தின் சபாநாயகர்கள் முன்னர் நடந்துகொண்டது போல நானும் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை ஏற்று வாக்கெடுப்பை நடத்த அனுமதிப்பேன் என தெரிவித்தேன்
அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிறுத்துமாறு எந்த உறுப்பினரும் கேட்டுக்கொள்ளவில்லை நானும் அதனை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன்.

முன்னாள் படையதிகாரி என்ற அடிப்படையில் நான் எப்போதும் நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராகயிருக்கின்றேன். ஜனாதிபதியை எதிர்த்து பாரளுமன்றத்தின் உரிமைகளையும் அரசமைப்பின் ஆதிபத்தியத்தையும் மக்களின் இறைமையையும் காப்பாற்ற முடிந்தமை எனக்கு கிடைத்த சிறப்புரிமையாகும்.
இந்த நடவடிக்கைகளிற்காக எந்த விளைவுகளையும் தயக்கமின்றி நான் எதிர்கொள்ள தயார் என கருஜெயசூரிய தெரிவித்துள்ளார் நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment