மலேசிய தேர்தல் : மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றியது
யொங்கை சிங்கப்பூரில் சந்திக்கின்றார் ட்ரம்ப் ?
இலங்கைப் பெண் உட்பட 4 பெண்கள் குற்றச்சாட்டு : பதவி விலகினார் நியூயோர்க் சட்டமா அதிபர்!!!
சிரிய தலைநகரின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
மூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்தது வடகொரியா
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
அணுசக்தி ஒப்பந்தத்தின் முறிவால் இந்தியாவுக்கு பாதிப்பு ?
"கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" : கர்ச்சிக்கும் ட்ரம்ப்
அமெரிக்க - வடகொரியா ஜனாதிபதிகள் சந்திப்புக்கான திகதி அறிவிப்பு
மலேசிய தேர்தல் : மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றியது
10/05/2018 மலேசியாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 92 வயதுடைய முன்னாள் பிரமதர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இந்நிலையில், முன்னாள் பிரமதர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி 115 ஆசனங்களைப்பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நன்றி வீரகேசரி
யொங்கை சிங்கப்பூரில் சந்திக்கின்றார் ட்ரம்ப் ?
08/05/2018 அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பும் வட கொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னும் சிங்கப்பூரில் விரைவில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வட கொரியத் தலைவர் யொங் தென்கொரிய தலைவர் மூன் ஜோ இன்னை சந்தத்ததுடன் கொரியாவை அணுவாயுதம் அற்ற நாடாக மாற்றுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இச் சந்திப்பின் போது யொங் தாம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் தென்கொரிய தூதரகக் குழுவிடம் தெரிவித்தார்.
இந் நிலையில் ட்ரம் மற்றும் யொங் நேரில் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்புக்கான திகதி, இடம் என்பன இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம் எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதி கனடாவில் நடைபெற்றவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதுடன் ஜூன் மாதம் 09 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டிலும் கலந்து கொண்டு வட கொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னுடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தென்கொரிய செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி
இலங்கைப் பெண் உட்பட 4 பெண்கள் குற்றச்சாட்டு : பதவி விலகினார் நியூயோர்க் சட்டமா அதிபர்!!!
09/05/2018 அமெரிக்க நியூயோர்க் பிராந்திய சட்டமா அதிபர் எரிக் ஸ்னெய்டர்மான் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண்ணொருவர் உட்பட 4 பெண்கள் அவருக்கு எதிராக தாக்குதல் குற்றச்சாட்டை முன்வைத்ததையடுத்து பதவி விலகியுள்ளார்.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளரும் நடிகையும் செயற்பாட்டாளருமான தான்யா செல்வரட்ணம், அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான மிசெல்லி மான்னிங் பாரிஷ் மற்றும் எரிக் ஸ்னெய்டர்மானின் முன்னாள் காதலி ஒருவர், முன்னணி சட்டத்தரணியொருவர் ஆகியோரே மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ள 4 பெண்களுமாவர்.
அவர்களில் இருவர் எரிக்கின் முன்னாள் காதலிகள் என நியூயோர்க்கர் சஞ்சிகை தெரிவிக்கிறது.
தான்யா மேற்படி குற்றச்சாட்டு தொடர் பில் தெரிவிக்கையில்,
எரிக் தன்னைப் பின் தொடர்ந்து தனது தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்கப் போவதாக எச்சரித்திருந்ததாகவும் தான் அவருடனான உறவை முறித்துக் கொள்ளும் பட்சத்தில் தன்னைக் கொல்லப் போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும் கூறினார்.
எரிக் தன்னை "பழுப்பு நிற அடிமை" என அழைத்ததாகவும் சில சமயங்களில் அவர் தன்னை "எஜமானர்" என அழைக்க தனக்கு வற்புறுத்தியதாகவும் தான் அவ்வாறு அழைக்கும் வரை அவர் தன்னை அடித்ததாகவும் தான்யா தெரிவித்தார்.
அதேசமயம் மிசெலி மான்னிங் பாரிஷ் கூறுகையில்,
தான் எரிக்குடன் சம்பந்தப் பட்டிருந்த நான்கு வாரங்களுக்குப் பின்னர் தாம் இருவரும் முழுமையாக ஆடை அணிந்த நிலையில் படுக்கைக்குத் தயாரான போது திடீரென எரிக் தனது முகத்தில் முழுப் பலத்தைப் பிரயோகித்து அடித்ததாகவும் பின்னர் அவர் தன்னைக் கீழே தள்ளி மூச்சுத் திணறச் செய்ததாகவும் தெரிவித்தார்.
"இது பாலியல் ரீதியான விளையாட்டொன்று தவறாக இடம்பெற்ற ஒன்றல்ல. இந்தத் தாக்குதல் எனது ஒப்புதலின்றி இடம்பெற்றது.உத்தியோகத்தர் ஒருவரை இவ்வாறு அடிப்பது பெரும் குற்றம்" என்று அவர் மேலும் கூறினார்.
எரிக்கிற்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்த அவரது முன்னாள் காதலி தெரிவிக்கையில்,
எரிக் தன் மீது உடலியல் ரீதியான வன்முறைகளை திரும்பத் திரும்ப மேற்கொண்டதாகக் கூறினார்.
அதேசமயம் நான்காவது பெண்ணான முன்னணி சட்டத்தரணி கூறுகையில்,
எரிக்கின் பாலியல் ரீதியான அணுகுமுறைகளுக்கு தான் மறுப்பைத் தெரிவித்ததையடுத்து அவர் தன்னை பலத்தைப் பிரயோகித்து அடித்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் எரிக் ஸ்னெய்டர்மான் தனக்கு எதிரான மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கடுமையாகப் போராடப்போவதாக பட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனிப்பட்ட ரீதியான ஒப்புதலுடன் கூடிய பாலியல் நடவடிக்கையில் மட்டுமே தான் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்த அவர் "நான் யாரையும் பாலியல் ரீதியில் தாக்கவில்லை. அத்துடன் நான் பரஸ்பர ஒப்புதலற்ற பாலியல் நடத்தையில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை"எனக் கூறி னார்.
"அந்தக் குற்றச்சாட்டுகளானது எனது தொழில் ரீதியான நடத்தை மற்றும் அலுவலக செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவையாக இல்லாத நிலையில் அவர்கள் நெருக்கடியான தருணமொன்றில் நான் எனது அலுவலக பணியை வழிநடத்துவதை திறம்பட தடுத்துள்ளனர்" என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு சட்டமா அதிபராக தெரிவுசெய்யப்பட்டிருந்த எரிக், இந்த வருடம் மீளவும் மேற்படி பதவி நிலைக்கு மீளப் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். எரிக்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களையடுத்து அவரைப் பதவி விலகுவதற்கு நியூயோர்க் ஆளுநர் அன்ட்றூ குவோமா அழைப்பு விடுத்திருந்தார்.
"நியூயோர்க்கின் உயர்மட்ட சட்ட அதிகாரி உட்பட எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்லர். அதனால் எரிக் ஸ்னெய்டர்மான் சட்டமா அதிபராக சேவையைத் தொடருவது சாத்தியம் என நான் நம்பவில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையை மேற்கொள்ள ஒரு விசாரணையாளரை தான் கோரவுள்ளதாக அன்ட்றூ குவோமா கூறினார்.
இந்நிலையில் எரிக் ஸ்னெய்டர்மான் முன்னாள் மனைவியான ஜெனிபர் கன்னிங் ஹாம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"எனக்கு எரிக்கை ஒரு கணவராக, தந்தையாக, நண்பராக சுமார் 35 வருட காலமாகத் தெரி யும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை என்னால் நம்ப முடியாதுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
சிரிய தலைநகரின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
09/05/2018 சிரியாவின் தலைநகரிற்கு அருகில் உள்ள இராணுவநிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் எவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் ஏவிய இரு ஏவுகணைகளை சிரியாவின் எவுகணை பாதுகாப்பு பொறிமுறை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சனா செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன் போது இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த தாக்குதலில் அரச படையினர் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட பகுதியில் பாரிய சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரிய இராணுவ அதிகாரியொருவர் சிரிய இராணுவ நிலைகளே இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சிரிய இராணுவத்தின் ஆயுத களஞ்சியமே இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் ஈரானிய படையினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி வீரகேசரி
மூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்தது வடகொரியா
10/05/2018 வடகொரியா மூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வடகொரிய தலைவர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தைகளிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வடகொரிய சென்றுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ மூன்று அற்புதமான அமெரிக்கர்களுடன் நாடு திரும்புகின்றார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் நாடு திரும்பும்போது நான் அவர்களை வரவேற்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பிரஜைகளையே வடகொரியா விடுதலை செய்துள்ளது. நன்றி வீரகேசரி
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
10/05/2018 இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை எவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரமடையலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கோலான் குன்றிலுள்ள இஸ்ரேலிய தளங்களை நோக்கி ஈரானிய படையினர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.சிரியாவிலிருந்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஈரான் 20 எவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இவற்றில் பலவற்றை நடுவானில் அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து சிரியாவில் உள்ள ஈரானிய தளங்கள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்ட பின்னரே இஸ்ரேல் விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

சிரியாவில் இரவு முழுவதும் விமான எதிர்ப்பு பொறிமுறைகள பயன்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக சுயாதீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவிற்குள் உள்ள ஈரானிய இராணுவதளங்களை இலக்கு வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
அணுசக்தி ஒப்பந்தத்தின் முறிவால் இந்தியாவுக்கு பாதிப்பு ?
10/05/2018 ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதால் இந்தியாவில் பெற்றோல், டீசல் என்பவற்றின் விலை உயர்வதுடன் அந் நாட்டுக்கு பண வீக்கம் ஏற்படும் அபாயமும் தோன்றியுள்ளது.

இந்தியா அதிகளவான கச்சா எண்ணெய்யை ஈராக், சவுதி அரேபிய மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிடமிருந்தே இறக்குமதி செய்கின்றது.
இந் நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஈரான் நட்டுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இதனால் இந்தியாவில் பெற்றோல், டீசல் போன்றவற்றின் விலை அதிகரிப்பதுடன் பணவீக்கமும் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.
எனினும் ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பதைத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப் போவதாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
10/05/2018 "ஈரான் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று அறிவித்ததோடு ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.
இருப்பினும் இதை சற்றும் பொருட்படுத்தாத ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி,
"ஈரான் யுரேனியம் செறிவூட்டலை எந்த வரம்பும் இன்றி தொடரும், ஆனால் தற்போது அதை செய்வதை தவிர்க்கிறோம்" என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் ஈரான் அணு ஆயுத சோதனையை தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
பதிலளித்த ட்ரம்ப்,

“ஈரான் அணு ஆயுத சோதனையை தொடங்கக்கூடாது என நான் அந்நாட்டுக்கு அறிவுறுத்துவேன். அறிவுறுத்தியும் அவர்கள் அணு ஆயுத சோதனையை தொடரும் பட்சத்தில் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். நன்றி வீரகேசரி
அமெரிக்க - வடகொரியா ஜனாதிபதிகள் சந்திப்புக்கான திகதி அறிவிப்பு
11/05/2018 வடகொரிய ஜனாதிபதியை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம்
திகதி சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
தெரிவித்துள்ளார்.
வடகொரியவினால் விடுதலை செய்யப்பட்ட மூன்று அமெரிக்க பிரஜைகளை வரவேற்ற பின்னர் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
வடகொரிய ஜனாதிபதியுடனான உச்சி மாநாடு பெரும் வெற்றியை அளிக்கும் எனவும் டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அர்த்தபூர்வமான எதனையாவது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பினை உலக சமாதானத்திற்கான முக்கிய தருணமாக மாற்றுவதற்கு நாங்கள் இருவரும் முயற்சி செய்வோம் என டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வடகொரியவினால் விடுதலை செய்யப்பட்ட மூன்று அமெரிக்க பிரஜைகளை வரவேற்ற பின்னர் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
வடகொரிய ஜனாதிபதியுடனான உச்சி மாநாடு பெரும் வெற்றியை அளிக்கும் எனவும் டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அர்த்தபூர்வமான எதனையாவது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பினை உலக சமாதானத்திற்கான முக்கிய தருணமாக மாற்றுவதற்கு நாங்கள் இருவரும் முயற்சி செய்வோம் என டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment