அமெரிக்காவில் சாதனை புரியும் யாழ் மாணவன்.!
கின்னஸ் சாதனை செய்த இலங்கையின் கிறிஸ்மஸ் மரம்
வவுனியாவில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதி
நத்தார் தினத்திலிருந்து அனைத்து சேவைகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இடம்பெறும்
கொழும்பிலிருந்து வாரணாசிக்கு நேரடி விமானச் சேவை : மோடி அறிவிப்பு
இலங்கையை வந்தடைந்தார் மலேசிய பிரதமர்
அமெரிக்காவில் சாதனை புரியும் யாழ் மாணவன்.!
14/12/2017 அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில் தற்பொழுது வசித்துவரும்
யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் நிர்மலா, செல்லையா
ஞான சேகரனின் மகன் மகிஷன் ஞானசேகரன் சமூகநல செயற்பாடுகளில்
மிக ஆர்வம் கொண்டவர். இலங்கையில் பிறந்து அமெரிக்காவில்
வசித்துவரும் மகிஷன் ஞானசேகரன் தமிழ் மொழியில் சரளமாகப்
பேசக்கூடியவர். ஸ்பானிஷ் மொழியையும் ஆர்வமாக கற்று வருகின்றார்.


இத்தகுதியை மகிஷன் அடைவதற்குக் காரணம் நடுநிலை கல்வி நாட்களில்
இருந்தே இவர் தொடர்ந்து காட்டிய சமூகநல அக்கறை கொண்ட பல செயல்களும்
பணிகளுமாகும். இவையாவும் படிப்படியாக இவரை உயர்த்தி வந்துள்ளது.
பத்து வயதில் வானியல் வல்லுநராகப் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட
மகிஷனின் நோக்கம் பிற்காலத்தில் ஒரு கோளையோ, விண்கற்களையோ
கண்டுபிடிக்க வேண்டும் என்று துவங்கியது. நூலகம் ஒன்று நடத்திய
வாசிப்பு போட்டியில் பங்குபற்றி, மூன்று மாத காலத்தினுள் நூலகத்தின்
1,000 புத்தகங்களைப் படித்தமைக்காக நகர ஆட்சியாளரிடம் இருந்து
பரிசும், சிறந்த கவிதை ஒப்புவித்தமைக்காக தங்கப்பதக்கமும்
மற்றும் மூன்று “உச்சரிப்புத் தேனீ” (Spelling Bee) போட்டிகளில்
பரிசுகள் என்று கல்விக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு பல
போட்டிகளில் வெற்றிகளை தனதாக்கிக் கொண்டார்.
சிறு வயதிலிருந்து தனக்கு உதவிய பொது நூலகம் பொருளாதாரப்
பற்றாக்குறையால் நிதியின்றி மூடப்பட்ட பொழுது அது ‘மனித
குலத்திற்கு எதிரான குற்றம்’ என மிகவும் இளவயதிலேயே தனது கருத்தைத்
தயக்கமின்றிப் பதிவு செய்தவர் மகிஷன். நன்றி வீரகேசரி
கின்னஸ் சாதனை செய்த இலங்கையின் கிறிஸ்மஸ் மரம்
13/12/2017 காலிமுகத் திடலில் கடந்த கிறிஸ்மஸ் தினத்தை
முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை
படைத்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உத்தியோகபூர்வமாக இந்த மரம்
இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அர்ஜுன ரணதுங்க சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இந்த கிறிஸ்மஸ் மரம் திறந்துவைக்கப்பட்டது.
காலிமுகத் திடலில் நடைபெற்ற மூன்று நாள் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு
நிர்மாணிக்கப்பட்ட இந்த மரத்தின் உயரம் 72.1 மீற்றர் - அதாவது, 236 அடியும்
6.58 அங்குலம் என்று அளவிடப்பட்டிருந்தது.
அதன்படி, உலகின் உயரமான செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் என்ற சாதனையை இது படைத்துள்ளது. நன்றி வீரகேசரி
வவுனியாவில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதி
12/12/217 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிக்க, ஒரு
இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட
உதவித்தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி
மன்றங்களுக்கான 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14
ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் ஒரு நகரசபை உட்பட 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன.
அதில் வவுனியா நகரசபைக்கு 20 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 20
ஆயிரத்து 300 வாக்காளர்களும், வவுனியா வடக்கு பிரதேச சபையில் 23
உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 12 அயிரத்து 166 வாக்காளர்களும், வெண்கல
செட்டிகுளம் பிரதேச சபைக்கு 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 16
ஆயிரத்து 680 வாக்காளர்களும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 26
உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 55 ஆயிரத்து 5 வாக்காளர்களும், வவுனியா
தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 10
ஆயிரத்து 448 வாக்களாருமாக 103 அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கு ஒரு
இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அவர்
மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
நத்தார் தினத்திலிருந்து அனைத்து சேவைகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இடம்பெறும்
16/12/2017 வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து நத்தார் தினத்தன்று அனைத்து
பேரூந்து சேவைகளும் இடம்பெறும் என வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து
உரிமையாளர் சங்கத்தலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா புதிய பேரூந்து நிலையம் கடந்த 2017 ஜனவரி 16 ஆம் திகதி திறந்து
வைக்கப்பட்டதன் பின்னர் சேவைகள் எவையும் அங்கிருந்து இடம்பெறாத நிலையில்
பயன்பாடின்றி காணப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் வட மாகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி.
விக்னேஸ்வரனுடன் வட மாகாணசபை கட்டிடத்தொகுதியில் புதிய பேரூந்து நிலையம்
தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா பேரூந்து நிலையமானது பயன்பாடின்றி காணப்படுவது தொடர்பாக நாம் பல
தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும்
சுட்டிக்காட்டியிருந்தோம்.
எனினும் அங்கிருந்து சேவைகளை மேற்கொள்ளவதற்கு இலங்கை போக்குவரத்து சபை
முன்வராத நிலையில் எம்மாலும் சேவையினை அங்கிருந்து செயற்படுத்த
முடியாதிருந்தது.
இந் நிலையில் வட மகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.
இதன்போது தேசிய போக்குவரத்து அணைக்குழுவின் தலைவர், வட மகாண
போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மற்றும் செயலாளர், வட மகாண தனியார்
பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் ஒன்றியத்தினர், ஐந்து மாவட்ட தனியார்
பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், இலங்கை போக்குவரத்து சபையினுடைய 7
சாலை முகாமையாளர்கள் இப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தோம்.
இதன்போது இறுதி முடிவாக அவைரும் இணைந்து எதிர்வரும் 25 ஆம் திகதி
நத்தார் தினத்தன்று புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை
ஆரம்பிப்பது என முடிவு எட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார். நன்றி வீரகேசரி
கொழும்பிலிருந்து வாரணாசிக்கு நேரடி விமானச் சேவை : மோடி அறிவிப்பு
17/12/2017 கொழும்பிலிருந்து - வாரணாசிக்கான நேரடி விமானசேவை
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இடம்பெறுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஐக்கிய நாடுகள்
வெசாக் தின நிகழ்வை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்த பின்னர்
உரையாற்றுகையிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் இந்தியா நம்பிக்கையுடன் இருக்கின்றது.
மேலும் கொழும்பிலிருந்து - வாரணாசிக்கான நேரடி விமான சேவை எதிர்வரும்
ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாகும். இதன் மூலம் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள்
வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை இலகுவாக சென்று தரிசிக்க முடியும்.
மேலும் பௌத்த மதத்தின் தெய்வீக நறுமணம் இந்தியாவின் பல பகுதிகளிலும்
பறந்துள்ளது. பௌத்த மதத்தின் நற்செய்திகளை உலக நாடுகள் பின்பற்றுமாயின்,
உலக நாடுகளில் தற்போது வளர்ந்துவரும் வன்முறைகள் குறைந்துவிடும் என நான்
நம்புகின்றேன்.
இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு எமக்கு சிறந்த வாய்ப்பு
கிட்டியுள்ளது. நட்பு ரீதியில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கு
உதவுவதற்கு தயாராகவுள்ளோம்.
அதுமாத்திரமின்றி இலங்கையின் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்புக்கு
வழிசமைக்கும் முகமாக நாம் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு
வழங்க எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
இலங்கையை வந்தடைந்தார் மலேசிய பிரதமர்
17/12/2017 மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரவித்தார்.
அவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விஞ்ஞான தொழில்நுட்பம், புதிய உற்பத்திகள் என்பன தொடர்பில் இரண்டு நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2020 ஏப்ரல் மாதம் 52 நாடுகள் பங்கேற்கும் பொதுநலவாய மாநாட்டின் பங்கேற்பு நாடுகளில் மலேசிய தலைமைத்துவம் தொடர்பாக ஆராயும் நோக்கிலேயே இவரது இவ்விஜயம் அமைந்துள்ளது.
இவ்விஜயத்தின் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன உள்ளிட்ட தலைவர்களை சந்திக் கவுள்ளார். நன்றி வீரகேசரி

அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரவித்தார்.
அவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விஞ்ஞான தொழில்நுட்பம், புதிய உற்பத்திகள் என்பன தொடர்பில் இரண்டு நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2020 ஏப்ரல் மாதம் 52 நாடுகள் பங்கேற்கும் பொதுநலவாய மாநாட்டின் பங்கேற்பு நாடுகளில் மலேசிய தலைமைத்துவம் தொடர்பாக ஆராயும் நோக்கிலேயே இவரது இவ்விஜயம் அமைந்துள்ளது.
இவ்விஜயத்தின் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன உள்ளிட்ட தலைவர்களை சந்திக் கவுள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment