இலங்கைச் செய்திகள்


நயினாதீவில் ஜனாதிபதி

முல்லைத்தீவில் தமிழ் - சிங்கள மீனவகுழுக்களுக்கிடையில் அமைதியின்மை

காணி சுவிகரிப்புக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

கோத்தபாய கடற்படை முகாமை அகற்றக்கோரி போராட்டம்..!

43 நாட்களாக விடையேதுமின்றி தொடர்வதாக முல்லைத்தீவில் போராடிவரும் தாய்மார் கவலை!!!

வைத்தியர் வீட்டின் மீது குண்டு தாக்குதல் ; யாழில் சம்பவம்













நயினாதீவில் ஜனாதிபதி

17/04/2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நயினாதீவுக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
தனது பாரியாருடன் நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நயினை நாகபூசணி அம்மான் ஆலய தரிசனத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புத்தபிரானின் பாதம்பதிந்த வரலாற்றுபெருமைமிக்க நயினாதீவு ரஜமகா விகாரைக்கு இன்று முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
விகாராதிபதி நவந்தகல பதுமகித்திதிஸ்ஸ தேரரைத் தரிசித்து, அவரது நலன்களை விசாரித்து துறவிகளுக்கான காணிக்கையை செலுத்தினார். பின்னர் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, நயினாதீவு புராண ரஜமகா விகாரையிலுள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
ருவன்வெலிமகாசாய விகாராதிபதி வண. பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி  
















முல்லைத்தீவில் தமிழ் - சிங்கள மீனவகுழுக்களுக்கிடையில் அமைதியின்மை

18/04/2017 முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில்  இன்று காலை முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
முகத்துவாரம் பகுதியை அண்டிய கடலில் மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பிலான அளவீட்டின் போதே இந்த அமைதியின்மை இன்றைய தினம் ஏற்பட்டுள்ளது.
கடந்தகாலங்களில் நடைபெற்ற  யுத்தத்தினால் கொக்குளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்ந்த நிலையில், தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த சிங்கள மீனவர்கள், ஆக்கிரமித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி இருதரப்பினருக்குமிடையில் முறுகல் நிலைமை தோன்றுவது வழக்கம். 
மீள்குடியேற்றத்தின் பின்னர் தமக்கான கரைவலைப்பாடு உரிமையைப் பெற்றுத்தருமாறு கோரி, தமிழ் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அதிகாரிகள் மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், இது தொடர்பான விடயம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்படி முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய கரைவலைப்பாட்டை அளவிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த அளவீட்டுப் பணிகளின் போது, கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி பகுதி அதிகாரிகள், முல்லைத்தீவு நீரியல்வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கொழும்பில் இருந்து வந்த நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது, கொழும்பில் இருந்து  வந்த நீரியவளத் திணைக்கள அதிகாரிகள், சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள முகத்துவாரம் அமைந்துள்ள  தலைப்பாடு என்ற பகுதியில் இருந்து 300 மீற்றருக்கு அப்பால் இருந்தே அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து அளவீட்டு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக அளவீடு இடம்பெறும் பகுதியில் கடமைக்காக பிரசன்னமாகியிருந்த கரைதுறைப்பற்று காணிப்பகுதி அதிகாரிகள் கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் பக்கச்சார்பான வகையில் முகத்துவாரம் அமைந்துள்ள தலைப்பாடு பகுதியை விட்டு அதிலிருந்து 300 மீற்றருக்கு அப்பால் அளவீட்டை ஆரம்பிக்கும் செயற்பாடானது நீதிமன்றின் உத்தரவுக்கு முரணானது என தெரிவித்து வெளிநடப்பு செய்த்திருந்தனர்.
ஏற்கனவே, தமது வசமுள்ள தலைப்பாடு என்ற பகுதியில் இருந்து கரைவலைப்பாட்டுக்கான அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு சிங்கள மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.எனினும், தமிழ் மீனவர்கள் தலைப்பாடு என்ற பகுதியில் இருந்தே அளவீடு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், ஏற்கனவே நிலஅளவைத் திணைக்களம் அளவீடு செய்து சரியான இடத்தை தமக்கு  கொடுத்ததாக தமிழ் மீனவர்கள் கூறியுள்ள நிலையில்இ இன்றைய தினம் அளவீடு செய்யும் போதுஇ சிங்கள தமிழ் மீனவர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி  














காணி சுவிகரிப்புக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

19/04/2017 மன்னாரில் உள்ள காணிகளை விடுவிக்ககோரி மன்னார் மறை மாவட்டத்தின் ஊடாக தற்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
முள்ளிக்குளம், பள்ளிமுனை மற்றும் பாதுகாப்பு படையினர் அபகரித்துள்ள  மக்களது காணிகளை விடுவிக்க கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி  














கோத்தபாய கடற்படை முகாமை அகற்றக்கோரி போராட்டம்..!

19/04/2017 முல்லைத்தீவு வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதிகளை உள்ளடக்கி 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாமை அகற்றக்கோரியும் வட்டுவாகல் மற்றும் நந்திக்கடலில் மக்களின்  மீன்பிடி தொழிலுக்கு இடையூறாக தடைகளை ஏற்படுத்தியுள்ள கடற்படையினரை விலககோரியும் 3நாள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை வட்டுவாகல் மக்களும், மீனவர்களும் இணைந்து கோத்தபாய கடற்படை தளத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு  பகுதி மற்றும் வட்டுவாகல் பகுதியை உள்ளடக்கி  பொதுமக்களுக்குச் சொந்தமான 397 ஏக்கர்காணி மற்றும் அரச காணிகள் உட்பட 617 ஏக்கர் வரையான காணியை கடந்த 2009ம் ஆண்டு முதல் கடற்படையினர் ஆக்கிரமித்து பாரிய கடற்படைத்தளமொன்றை  அமைத்துள்ளதுடன் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியிலும்  கடற்தொழிலை மேற்கொள்வதற்கும் மீனவர்களுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அத்தோடு குறித்த மக்களின் காணிகளில் அமைந்துள்ள கடற்படைத்தளத்தினுள் மக்களுக்கு சொந்தமான கால் நடைகளையும் பிடித்து வைத்துள்ளனர்.
குறித்த காணிகளை விடுவிக்குமாறும், வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் எந்தவித தடைகளையும் ஏற்படுத்தாது தம்மை தொழில் செய்ய அனுமதிக்குமாறு கோரியும் பல தடவைகள் போராட்டங்களை இந்த மக்கள் முன்னெடுத்த போதிலும்   காணிகளை கடற்படையினர் தமது தேவைக்கு சுவிகரிக்கும் விதத்தில் இரண்டு தடவைகள் அளவீடு செய்ய முற்பட்ட சமயம் பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். தற்போது கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 617 ஏக்கர் காணிகளும் மிகவும் வளம் நிறைந்த பகுதியாகவும் அதிக வருமானம் தரக்கூடிய கடற்தொழில் பகுதிகளையும் கொண்டுள்ளது. இதனை விடுவித்து தருமாறு அதன் உரிமையாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமது சொந்த நிலங்களை விடுவிப்பது தொடர்பில் கடற்படையினரிடமிருந்து  எந்தவிதமான சாதகமான பதில்களும் கிடைக்காத நிலையிலும் மாறாக கடற்படையினர் குறித்த முகாமை சுற்றி நிரந்தர காவலரண்களை அமைந்து வருவதோடு பெரும் எடுப்பில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதோடு முகாமையும் விஸ்ரித்து வருகின்றனர். இதனால்  விரக்தி உற்ற மக்கள் இனியும் சொந்த நிலங்களை இழந்து வாழமுடியாது என தெரிவித்து குறித்த காணி கடல் மீட்பு போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவித்தனர்.
இன்றும் நாளையும் குறித்த கடற்படை தளத்துக்கு முன்பாக இரவுபகலாக தொடரும் இந்த போராட்டம் நாளை மறுதினம் வெள்ளிகிழமை வட்டுவாகலிலிருந்து பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட செயலகம் முன்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்து பின்னர் 14 நாட்கள் தமது  காணிகளை விடுவிப்பது தொடர்பில் உரிய நல்ல பதிலுக்காக அரசுக்கு காலஅவகாசம் வழங்கி மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றினை கையளித்த பின்னர் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவது எனவும் 14 நாட்களுக்குள் நல்ல முடிவு அரசால் வழங்க படாவிட்டால் மீண்டும் கோத்தபாய கடற்படை முகாமுக்கு முன்பாக தொடர்கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்க இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்  தெரிவித்துள்ளனர்.
மக்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் இன்றையதினம் ஆரம்பிக்கபட்ட இந்த மக்களின் போராட்டத்தை தொடர்சியாக கடற்படையினர் ஒளிப்படம் எடுத்துவருவதோடு புலனாய்வாளர்களும் குறித்த பகுதியெங்கும் குவிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கமுடிந்தது.
நன்றி வீரகேசரி  












43 நாட்களாக விடையேதுமின்றி தொடர்வதாக முல்லைத்தீவில் போராடிவரும் தாய்மார் கவலை!!!

19/04/2017 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 43நாட்களாக தொடர்கின்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போரட்டம் இன்று வரையில் எந்தவித சாதகமான பதில்களும் அற்றநிலையில் தொடர்ந்து செல்கின்றது.
இந்தநிலையில் தமது உறவுகள் தொடர்பில் எந்தவித பதில்களும் அற்றநிலையில் இன்றுடன் 43 நாட்களாக விடையேதும் இன்றி தமது போராட்டம் தொடர்ந்து செல்வதாக காணாமல் ஆக்கப்பட்டொரின் உறவுகளை கவலை தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை இன்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்;னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
நன்றி வீரகேசரி  













வைத்தியர் வீட்டின் மீது குண்டு தாக்குதல் ; யாழில் சம்பவம்

20/04/2017 யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் வைத்தியரொருவரின் வீடொன்றின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த குண்டுத் தாக்குதலில் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியரின் தந்தைக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி  



No comments: