.
விடிகாலை என்று கூட சொல்ல முடியாது ஒன்று அல்லது இரண்டு மணிக்கு என் கைப்பேசி சிணுங்குகின்றது. அடுத்த பக்கத்திலிருந்து அழைப்பது ஸ்ரீதர் என்று தெரிந்துவிடும் ஏனென்றால் இந்த இரண்டும் கெட்ட நேரத்தில் தொலைபேசி எடுப்பது அவராகத்தான் இருக்கும் என்பது என்அசைக்க முடியாத நம்பிக்கை.கைப்பேசியை எடுத்தால் ''டேய் கவிஞா தூங்குறியா? தூங்கப்போறியா? அல்லது என் போனுக்கு காத்திருக்கியா?" என அடுத்தடுத்து கேள்வியை கேட்டு விட்டு சிரித்துக்கொண்டிருப்பார்.நானும் இல்லை உடுப்பு துவைக்கப்போறேன்''என சொல்ல ''உனக்கு உடுப்பு துவைக்க நேரங்காலமே கிடையாதா? என என்னை கலாய்ப்பார். அந்த கலகலப்புக்கு பின் இலக்கியம் பேச ஆரம்பிப்போம்.அன்று தான் வாசித்த ஏதேனும் ஒரு நூலைப்பற்றி அல்லது ரசித்த திரைப்படம் பற்றி ஓவியங்கள் பற்றி நாம் பேச ஆரம்பிப்போம்.ஒரு படைப்பை இரசித்து அதனை மற்றவரோடு பகிர்ந்து கொள்கின்ற உயர்ந்த பண்பினை அவரிடம் நிறைய தடவை கண்டிருக்கிறேன்.

'' இந்தநடுசாமத்தில் கைப்பேசியில் இலக்கியம் பேசுவது நாங்கள் இருவராகத்தான் இருக்க வேண்டும் என நான் சொல்ல ''இத தான் கவிஞர் விடிய விடிய இலக்கியம் பேசுறதுனு எல்லோரும் சொல்லுவாங்க'' என்று சொல்லி என்னை சிரிக்க வைப்பார்.ஸ்ரீதருடைய பெயரை போல அவருடைய பேச்சில் வற்றாத ஓடையாக சிரிப்பலை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அந்த வஞ்சகமில்லா சிரிப்புக்கு சொந்தக்காரன் என் இனிய நண்பனாக அண்ணானாக வாழ்ந்து மறைந்து, என்னுள் இன்றும் வாழ்ந்து வரும் மாபெரும் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா. அந்த கலைஞனின் ஈர நினைவு அலைகளிலிருந்து சிறு துளிகளை மட்டும் இங்கேஅள்ளித்தருகின்றேன்.

ஸ்ரீதர் பிச்சையப்பாவை நான் முதலில் சந்தித்தது 1995 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஒரு இசை நிகழ்வில் சந்தித்தோம். ஆனால் என்னால் பேச முடியவில்லை அப்போது நான் இலக்கிய துறைக்கு வந்த புதிது.மனதில் ஒரு சிறு பயமும் இருந்தது. அப்போது ஸ்ரீதர் பிச்சையப்பா இலங்கையின் அதி உச்சத்தில் கொண்டாடப்பட்ட ஒரு கலைஞனாக இருந்தார்.அதற்கு பிறகு 1997 இல் அதுவும் அந்த ஆண்டின் நடுப்பகுதி ஒன்றில் டவர் மண்டபத்தில் (அதுவும் ஒரு இசை நிகழ்ச்சி தான்) அன்று நான் ஸ்ரீதரை அருகில் சென்று சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. உடனே அவர் என்னை இறுக அனைத்து என்னைப்பற்றி தெரிந்து கொண்டதும் உன் கவிதைகளை நான் வாசித்திருக்கின்றேன் என கூறினார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருவரும் அருகருகே இருந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அதற்கு பின் ஸ்ரீதர் பிச்சையப்பாவுடன் இத்தனை ஆண்டுகாலம் பழகி வந்தாலும் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று என்னிடம் இருப்பது ---97 களில் நாங்கள் எடுத்துக்கொண்ட அந்த ஒரேயொரு புகைப்படம் மட்டும்தான் என்றும் நினைவுகளை சுமந்த வண்ணம் உள்ளது.ஸ்ரீதர் பிச்சையப்பாவை ஒரு பாடகனாக நடிகனாக பாடலாசிரியராகத்தான் எல்லோருக்கும் தெரியும். அதைவிட ஒரு சிறந்த ஓவியனாகவும் எனக்குள் பரவ ஆரம்பித்தார்.அந்த தருணங்களை என்னால் ஆயுள் உள்ள வரை மறக்கவே முடியாது. இப்படி பன்முக ஆற்றலுடன் இலங்கை மண்ணில் வாழ்ந்து வந்த ஸ்ரீதரின் வாழ்க்கைப் பயணத்தில் பல துன்ப அலைகளும் இல்லாமலில்லை. அவற்றை எல்லாம் கடந்து முன்னோக்கி பயணித்த அவரது வாழ்க்கை படகில் நானும்பயணித்திருக்கிறேன் என்பதை உணரும் போது என்னையறியாமல் கண்கள் ஈரமாகின்றன. இதையெல்லாம் என்னால் கட்டுப்படுத்தவே இயலவில்லை.
எனது பதினாறு வயதில் எழுதிய கவிதைகளை 1994 ஒரு தொகுதியாக 2002 இல் வெளியிட முயற்சி செய்துகொண்டிருந்த வேளையில் எனது கவிதை தொகுதியை இலங்கையின் மூத்த படைப்பாளியும் மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக் ஜீவா தனது மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளியிட முன்வந்தார். எனது பல கவிதைகளை மல்லிகை இதழில் வெளிவர செய்து இலக்கியத்தின் கதவுகளை திறக்கச்செய்த மல்லிகை ஜீவாவுடன் ஸ்ரீதர் பிச்சையப்பாவும் மிக நெருக்கமாக பயணித்த தருணமொன்றில் எனது முதல் தொகுதி வெளிவருகிற தென்றால் எனக்கு பேரானந்தமாய் இருந்தது. என் கவிதை தொகுதியை வெளியிட ஆயத்தமான வேளையில் கவிதைகளுக்குரிய அனைத்து படங்களையும் ஸ்ரீதர் பிச்சையப்பாவிடம் இருந்து தான் பெற்றுக்கொண்டேன்.

பத்து படங்களை தவிர பெரும்பாலான படங்கள் ஸ்ரீதர் பிச்சையப்பா ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வரைந்து வெளிவந்திருந்த ஓவியங்களையும் இந்த தொகுதிக்காக பயன்படுத்தினோம் அதற்காக ஸ்ரீதர் என்னிடமிருந்து பணமெதையும் பெறவில்லை. ''உன் புத்தகம் நல்லா வரவேண்டும்'' என்று வாழ்த்தினார்.எனது முதல் புத்தகமான அப்புறமென்ன (2003) வெளிவந்த போது என் கவிதைகளோடு ஸ்ரீதரின் ஓவியங்களும்எல்லா திசையிலும் பேசப்பட்டது.அப்போது தான் இலங்கையின் பலபேர் ஸ்ரீதர் ஒரு ஓவிய கலைஞர் என்பதை உணர்ந்து கொண்டனர். இதுவும் எனக்கு மகிழ்ச்சியை தரும் ஒன்றாகவே அமைந்தது.அதே போல் ஸ்ரீதர் தயாரித்த ஒரு புத்தகத்துக்கு நானும் சில ஓவியங்களை வரைந்து கொடுத்தேன்.
காலம் அந்த புத்தகத்தை வெளிக்கொண்டுவராமலேயே போய்விட்டது.இன்னொரு விடயத்தையும் இங்கே சொல்ல வேண்டும் இலங்கை இசைத்துறையில் தனி முத்திரைப்பதித்த இசையமைப்பாளர்களில் பி.எஸ்.ஷாஜகானும் ஒருவர். அவருடைய இசைத்தொகுப்புக்கான அனைத்து பாடல்களையும் நான் எழுதியிருந்தேன்.அதில் ஒரு பாடல் ஒளிப்பதிவுக்கு வந்தது அந்த முதல் பாடலை அதாவது நான் எழுதிய முதல் பாடலை பாடியவர் ஸ்ரீதர் பிச்சையப்பா. இதுவும் எனக்கொரு ஆனந்தத்தை தந்த விடயமாகும். இப்படியே ஸ்ரீதருக்கும் எனக்குமான உறவு நீண்டுகொண்டிருந்தது. அதற்கு பிறகு இருவருமாக இணைந்து பல சந்தர்ப்பங்களில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் (பெரும்பாலும் இந்திய உலக) புத்தகங்களைப்பற்றியும் ஓவியங்களைப் பற்றியும் பேசிக்கொண்டேயிருப்போம்.
அந்த பேச்சு எப்போதுமே எனக்கு மனநிறைவு தருவதாகவே இருக்கும். அடுத்து எங்காவது ஸ்ரீதர் ஒளிப்பதிவுக்கு போக வேண்டும் என்றால் நான் ஓய்வாக இருப்பதை தெரிந்து கூட என்னையும் அழைத்துக்கொண்டு செல்வார். ஒளிப்பதிவு செய்யும் இடத்தில் விளம்பரத்துக்கான தனது குரல் பதிவுகளை செய்துவிட்டு இருவருமாக நடந்து வந்து அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு இலக்கியம் பேசியபடியே வீடுகள் நோக்கி எம் கால்கள் நடக்க ஆரம்பிக்கும். இப்படி பல சந்தர்ப்பங்கள் எனக்குள் அனுபவங்களாக பரவிகிடக்கின்றன. ஒரு கலைஞனாக ஒரு மாபெரும் உயரத்தை தொட்டவனுடைய வாழ்க்கையிலே மிக இலகுவாக என்னை போன்ற ஒரு சாமானியனையும் இணைத்துக்கொண்டது என்னை மிகவும் விசித்திரத்தில் ஆழ்த்தியது. ஸ்ரீதரும் நானும் கடைசியாக சந்தித்துக்கொண்ட தருணங்களும் ஒரு இலக்கிய தருணமாகத்தான் இருந்தது.
வீரகேசரி நாளிதழிலே தம்பி எஸ்.ஜே.பிரசாத் செய்து வந்த நான் சித்தன் பகுதியிலே ஒரு காதலர் தினத்தன்று 2010 படங்கள் வரைந்து தரும்படி என்னிடம் கேட்டிருந்தார். அதற்கான படங்களை வரைந்து கொடுத்துவிட்டு திரும்பும் வேளை ஸ்ரீதரையும் இதே வீரகேசரி அழைப்புமண்டபத் தில் வைத்து சந்தித் தேன்.அப்போது உடல் கொஞ்சம் தளர்ந்து இருந்தது. என்னைக்கண்டதும் ஆரத்தழுவி கட்டிக்கொண்டார்.பார்த்து வெகு நாட்களாகிறது என்றார்.காதலர் தினத்துக்கு அவரும் படங்களை வரைந்து கொடுக்கப்போகிறார் என நான் அறிந்திருக்கவில்லை.அப்போது அவரும் ஓவியங்களை வரைந்து கொடுத்துள்ளார்.எம் இருவரது ஓவியங்களும் காதலர் தினத்தன்று வெளியாகியதோடு மிகவும் பேசப்பட்ட ஓவியங்களாகவும் காணப்பட்டது. அதுதான் ஸ்ரீதர் பத்திரிகைக்கு வரைகிற கடைசி ஓவியங்களாக இருக்குமென கனவில் கூட நினைக்கவில்லை.எப்படி எனக்கு -97 களில் அறிமுகமான ஸ்ரீதர் நினைவில் நிற்கிறாரோ அது போல சித்தன் பகுதியில் வந்த அந்த கடைசி ஓவியங்களும் நினைவில் உள்ளன.
அதன் பிறகு நான் தொழில் நிமித்தம் தூர இடங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டி ஏற்பட்டது. (பாடசாலை சுவரொன்றின் கீதாசார காட்சியை வரைந்து தர சொல்லி என்னை கேட்டிருந்தார்கள் அந்த ஓவியத்தை வரைந்து முடிக்கும் தறுவாயில் நின்ற வேளையில்...)
அதே மாதம் ஒரு நாள் என் கைபேசி ஒலித்தது எடுத்து கதைத்தேன் மறுபுறமிருந்து இசையமைப்பாளர் ஷாஜகான் ஸ்ரீதர் இறந்துவிட்டதாக செய்தியை எனக்கு சொல்ல நான் அப்படியே உறைந்து போனேன். என் நாவிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தது. என் நிலையை புரிந்து கொண்ட ஷாஜகான் ''வருத்தப்படாதிங்க நம் இதயங்களிலிருக்கும் ஸ்ரீதரை யாராலும் கொண்டு போக முடியாது'' என்று எனக்கு ஆறுதலளித்தார். வர்ணங்கள் சிதறிக்கிடந்த தூரிகைகளை ஓரத்தில் வைத்துவிட்டு அருகிலிருந்த படியில் அமர்ந்து கொண்டேன் என் சிந்தனையில் ஸ்ரீதரின் உருவமும் அவரின் குரலும் என்னுள் பரந்து விரிகிறது.
ஸ்ரீதர் மறைந்து விட்டார் என என்னால் நம்பவே முடியவில்லை. இனி என்னை '' டேய் கவிஞா '' என்று யார் அழைப்பார்கள், நான் வாசித்த படைப்புகள் குறித்து இனி யாரோடு பகிர்ந்து கொள்வேன் அதை விட சிரிக்க சிரிக்க பேசும் அவரின் நகைச்சுவை உணர்வுகளும் குழந்தைத் தனமான அந்த வஞ்சமில்லா சிரித்த முகத்தையும் இனி யாரிடம் காண்பேன் என என்னுள்ளம் எதை எதையோ யோசித்து கண்ணீர் விட்டெழுந்து பாதையில் நடக்கின்றேன். தூரத்தில் சுவரில் நான் வரைந்த கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்யும் கீதாசார காட்சி என்னுள் ஏதேதோ சொல்லிப்போவது போல் இருக்கிறது. ஈடுசெய்ய முடியா இழப்பின் இடைவெளியை நிரப்ப இனி இப்படியொரு மகா கலைஞன் பிறப்பானா என்று ஸ்ரீதரின் ஈரநினைவுகளுடன் காத்திருக்கிறேன்.
எழுத்தாக்கம் - கனிவுமதி
சித்திரங்கள் - ஸ்ரீதர் பிச்சையப்பாவினுடையது
nantri: virakesari.lk
No comments:
Post a Comment