வாழ்வளித்த தெய்வம்நீ -- எம். ஜெயராமசர்மா ... மெல்பேண்

.
     பள்ளிக்குச் சென்றாலும்
     பால்குடிப்பதை நினைத்து
     துள்ளிவந்து உன்மடியில்
     துடுக்காக படுத்திடுவேன்
     அள்ளி அணைத்துயெனை
      ஆவலுடன் பால்கொடுத்த
     அம்மாவே உனதன்பு
      ஆருக்குத் தான்வந்துவிடும்

     உன்னைவிட்டு ஒருநாளும்
     ஓரமாய்ப் படுத்தறியேன்
     உன்கண்ணில் நீர்காணின்
     ஓவென்று நானழுவேன்
     என்னைநிதம் அணைத்தணைத்து
      என்தலையத் தடவிவிடும்
      அன்புநிறை உன்கையை
     ஆயுளிலும் நான்மறவேன்

     அம்மாவைப் போலுலகில்
     அனைத்துமே இருந்துவிடின்
     தெம்மாங்கு பாடிக்கொண்டு
      தென்றலுமே வந்துநிற்கும்
     சும்மாவே இருக்காமல்
      சுறுசுறுப்பா யிருப்பாள்
     அம்மாவைப் போல்பிறவி
     அகிலமதில் வேறுண்டோ


   வாழ்நாளில் உனைமறவேன்
   வாழ்வளித்த தெய்வம்நீ
    ஓய்வுறக்கம் கொள்ளாத
    உயர்ந்தவளும் நீதானே
   நான்குபிள்ளைக் கப்பாவாய்
   நானிப்போ இருந்தாலும்
   உன்மடியில் கிடக்கின்ற
   உணர்வுடனே இருக்கின்றேன்

No comments: