தாயக விடுதலைப்போரில்
தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள்
நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் மாவீரர் நாளான கடந்த செவ்வாய்க்கிழமை
உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஸ்பிறிங்வேல்
(Springvale) நகரமண்டபத்தில் 27-11-2012 அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் எண்ணூறுக்கும்
மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மரியாதை
செலுத்தினர்.
தமது
மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்காகவும்
தமது உயிரையே விலையாக கொடுத்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் உன்னதமான அர்ப்பணிப்பை
உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார்கள்.

தொடர்ந்து
எழுபத்தைந்து மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் தமது மாவீரச் செல்வங்களுக்கு
ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம்
மிகவும் உணர்வுபூர்வமானதாக நடைபெற்றது. சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை வரிசையில் நின்று, எங்களின் சுதந்திர வாழ்வுக்காக தங்களின்
உயிரையே அர்ப்பணித்த அந்த உத்தம சீலர்களுக்கு கண்ணீராலும் பூக்களாலும் வணக்கம்
செலுத்தினர்.
மலர்வணக்கநிகழ்வின்போது
தாயக துயிலுமில்லக்காட்சிகளை தாங்கிய காணொலி அகன்ற திரையில்
காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந் தது. தாயகதுயிலுமில்ல நிகழ்வுகளை நினைவில் சுமந்து
மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினர். நிகழ்வில்
அடுத்ததாக இடம்பெற்ற அகவணக்கத்தை தொடர்ந்து துயிலும் இல்ல பாடல் மண்டபத்தை
நிறைத்துக்கொண்டது.
தாம்
நேசித்த மக்களின் வாழ்வுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த மாவீரச் செல்வங்களின்
நினைவில் தங்கள் உணர்வுகளை அர்ப்பணித்தவர்களாக அனைவரும் அப்பாடலோடு
இணைந்திருந்தனர்.
நினைவேந்தல்
நிகழ்வுகளாக முதலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அறிக்கை புலிகளின் குரல்
வானொலியின் இணைப்பின் ஊடாக ஒலிபரப்பப்பட, அதனைத் தொடர்ந்து உறுதியுரையும்
இடம்பெற்றது.
மாவீரர்களை நினைவு கூரும் - இப்புனித நன்நாளில்
ஈழத்தமிழனாகிய நான் - உலகின் எந்தத்திசையில் வாழ்ந்தாலும்
தமிழீழமே எனது இலட்சியம் என்றும் - சுதந்திரமும் இறைமையுமுள்ள
தமிழீழத்தனியரசான - எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக
அயராது உழைப்பேன் என்றும் - உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்
”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
என்ற உறுதி மொழி வாசிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும்
எழுந்து நின்று அதனை உரத்துக்கூறி பிரமாணம் செய்துகொண்டனர்.
அதனை
அடுத்து, மாவீரர் எழுச்சிப் பாடலுக்கான நாட்டியாலய நடனப்பள்ளி மாணவிகளின் நடனம்
இடம்பெற்றது. அதை தொடர்ந்து தமிழ்த்தேசிய செயற்பாட்டாளரான திரு வசந்தன் அவர்கள்
மாவீரர் நினைவுரையை ஆற்றினார்.
மாவீரர்களின்
உயிர்க்கொடையை விட போராட்ட காலத்தில் அவர்கள் காட்டிய ஒழுக்கம், கடுமையான பணி,
சகிப்புத்தன்மை என்பனவே அர்ப்பணிப்பின் உச்சம் என்பதை மாவீரர்களின் வரலாற்றோடு
பதிவுசெய்தார். மேலும் அவர் தனதுரையில், "இன்று அவுஸ்திரேலியா முழுமையாகவே
சுமார் 300 க்கு மேற்பட்ட மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் வாழ்ந்துவருகின்றார்கள்.
இவர்களுக்கு இம்மாவீரர்கள் பெற்றவர்களாக துணைவர்களாக உடன்பிறந்தவர்களாக
இருக்கின்றார்கள். இவ்வாறு 40000 இற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தாயகவிடுதலைக்காக
தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள். அந்தவகையில் இவர்கள் எப்படி
பயங்கரவாதிகளாக இருக்கமுடியும் என்ற கருத்தை ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு
எடுத்துச்செல்லவேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

மாலை 8.20
மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற
உறுதிமொழியுடன் நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது.
இந்நிகழ்வின்
இன்னொரு முக்கிய விடயமாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மெல்பேர்ண் கிளையினர் கடந்த
ஆண்டைப்போன்று வெளியிட்ட ”காந்தள் 2012” மாவீரர் நினைவுதின சிறப்பிதழ்
இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தேசியத்தலைவர், மாவீரர்கள், தேசியக்கொடி,
தேசியகீதம், தமிழீழம் ஆகியவை குறித்த விளக்கக் கட்டுரைகளுடன் பொதுமக்கள் மற்றும்
தமிழ் அமைப்புக்கள், தமிழ் ஊடகங்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய மாவீரர் வணக்க
கவிதைகளையும் தாங்கி “காந்தள் இதழ்“ வெளியாகியிருந்தது.
நன்றி.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)
No comments:
Post a Comment