தமிழ் சினிமா


  • விமர்சனம்  ராஜபாட்டை
  • விட்டுச் செல்லும் ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு  பார்வை

ராஜபாட்டை
மசாலா படங்களில் கூட லாஜிக் பார்ப்பதில் தெளிவான பார்ட்டிகள் நம்ம தமிழ் ரசிகர்கள்.ஹீரோ எப்படி அடித்தான் என்பதை விட எதற்காக அடித்தான் என்பதைத்தான் கண்களில் விளக்கெண்ணேய் விட்டுக்கொண்டு பார்ப்பார்கள்.

வில்லன் வெறும் புஜபலத்தோடு இருக்கிறானா அல்லது ஹீரோவுக்கே தண்ணிக்காட்டும் புத்திசாலித்தனத்தோடு இருக்கிறாரான என கண்கொத்திப் பாம்பாக கவனிப்பார்கள்.

ஹீரோயின் இளமா கிழமா என்பது கூட அவர்களுக்கு முக்கியமல்ல எதற்காக ஹீரோவைக் காதலிக்கிறாள் என்பதில் நேர்மையான காரணம் இருந்தால் காலரை தூக்கிக் விட்டுக் கொண்டு இரண்டரை மணிநேரம் இவர்களும் அவளைக் காதலிப்பார்கள்.


கொடுத்து காசுக்கு ஒர்த்துப்பா! என்று ரசிகர்களை சொல்ல வைப்பது க்ளைமாக்ஸ்தான். அதில் கன்வின்சிங் இருந்தால் மட்டும்போதாது, தியேட்டரை விட்டு வெளியே வரும்போது அமைதியாக அவர்களை வெளியேற வைக்கிற புதுமை வேண்டும்.

மன்னிக்கவும்! சுசீந்திரன் பக்காவான மசாலா படம் தருகிறேன் என்ற ஓவர் காண்பிடன்ஸ் காரணமாக மிக பலகீனமான திரைக்கதை கொண்ட, அடுத்த காட்சியில சரியாயிடும் என்று காத்திருக்கும் ரசிகர்களின் பொறுமையை கடைசிவரை பதம் பார்க்கிற, படம் முழுவதும் காரல்நெடி அடிக்கிற மசாலாவை கொடுத்திருக்கிறார்.

சுசிந்திரன் இனி தனது வழியில் வயாமீடியா படங்களில் பயணப்படுவதுதான் அவருக்கும் நல்லது, தமிழ் மசாலா வகை சினிமாவுக்கும் நல்லது. லிங்குசாமி போன்று மசாலா படத்திலும் தமிழ் வாழ்கையை, அதன் வெகுஜன அழகியலோடு கொண்டுவரும் கைப்பக்குவம் தெரிந்த இயக்குனர்கள் அதைப் பார்த்துக் கொள்ளட்டும்.

ஆனால் வெண்ணிலா கபடிக் குழுவும், நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை படங்களை எடுக்க அவர்களால் இயலாது என்பதையும் சுசீந்திரன் புரிந்து கொண்டால், ரசிகர்களின் மணிபர்சக்கும் தமிழ்ரசனைக்கும் நல்லது.

நிற்க: இனி ராஜபாட்டை எப்படி என்று பார்க்கலாம்! சியான் விக்ரம் எத்தனை திறமையான நடிகரோ, அதே அளவுக்கு தனக்கான கதைகளை அவரால் தேர்வு செய்ய இயலாதவர் என்பதை மஜா, ராவணன், இப்போது ராஜாபாட்டை என அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருகிறார்.

முகத்தில் முதுமைக்கான சுருக்கங்களை வாங்கிக் கொண்டிருக்கும் விக்ரம், தன்னை ஒரு சினிமா ஸ்டண்ட் மேன் கதாபாத்திரத்தில் பொருத்திக் கொண்டு, வில்லன்களை வேட்டையாடும் கதையில் நடித்தால் சும்மா பிச்சுகிட்டு போகும் என எதிர்பார்த்திருகிறார்.

ஆனால் கதைக்களம் எவ்வித சீரியஸ்நெஸும் இல்லாமல் நில அபகரிப்பை ப் பற்றி மிக பலகீனாமான ஜல்லியடிக்கிறது. அது ஏதோ, தட்ஷிணா மூர்த்தி என்ற தனிப்பட்ட கிழவரின் கருணை இல்லம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதுபோல தேங்கி விடுவதால் விக்ரம் என்ற மாஸ் ஹீரோ நிஜமாகவே மொத்த படத்திலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகிவிட்டார்,

இயக்குனர் தரணி தூள் படத்தில் ஏற்கனவே விக்ரமுக்கு சொர்ணம் அக்கா என்ற பெண் தாதாவை வில்லியாக காட்டி விட்டார். அந்தக் கதாபாத்திரத்தின் டேய் என்ற காட்டுக் கத்தலான குரல்வளம் ரசிகர்களை தியேட்டரிலேயே உலுக்கியது.

ஆண்களை இழுத்துப் போட்டு அடித்த அதன் பாடி லங்குவேஜ்� இளம் ரசிகர்கள் கொஞ்சம் புரட்டுப்பெண்களை கடந்து போக நேர்ந்தால் டேய் அவ சொர்ணம் அக்காடா பக்கத்துல போகாதே என்று ஒதுக்க வைத்தது.

அனால் ராஜாபாட்டையில் பிரதான வில்லியாக வரும், ஒரு துக்கடா அரசியல் கட்சியின் தலைவியான அக்கா கேரக்டரை ஷட்டிலாக ட்ரிட் செய்து விட்டாலே எடுபட்டு விடும் என்று நினைத்து விட்டார் இயக்குனர்.

அந்தக் கதாபாத்திரம், தமிழகம் முழுவதும் ஏன் நிலங்களை வளைத்துப் போடுகிறது. அது யாருக்காக? அப்படி நிலங்களை வளைப்பதால் அதன் மாற்று விளைவுகள் என்ன என்பது பற்றியெல்லாம் இயக்குனரோ கதாசிரியரோ கவலைப் படவில்லை.

மாறாக ஏற்கனவே மொத்த இந்திய சினிமாவும் இஸ்லாமிய சகோதர்களை ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளைப் போல சித்தரித்து களைத்து விட்ட நிலையில், அரசியல் மாபியாக்களின் பின்னால் இருப்பதும் இஸ்லாமியர்கள்தான் என்பதைப் போல வாப்பா என்ற இன்னோரு வில்லனை படைத்திருகிறார்கள்.

தன்னிடம் அடைக்கலமாக அழைத்து வரும் முதியவர்( இயக்குனர் விஸ்வநாத்) தட்ஷிணா மூர்த்தியின் கருணை இல்ல நிலத்தை அக்கா அபகரித்துக் கொள்ள, இது போன்ற அபகரிப்புகளை வாப்பா மூலம்தான் அக்கா செய்கிறார் என்பதை அறிந்து, அவரைக் கடத்தி, தனது சினிமா செட் சிபிஜ அலுவலகத்தில் வப்பாவை வைத்து பல்வேறு கெட்-அப்புகளில் வந்து அவரை சிபிஐ அதிகாரி போல விசாரித்து வீடியோ ஆதாரத்தை உருவாகுகிறார் ஸ்டண்ட் பாய் அணல் முருகனாக நடித்திருக்கும் விக்ரம்.

ஸ்டண்ட் பாய் என்பதற்காக வில்லன்களின் அடியாட்களை பதினைந்து நிமிட இடைவெளியில் கைநரம்பு புடைக்க அடித்துக் கொண்டே இருகிறார். அய்யோ! இப்போ சண்டை வரப்போகுது என்று நாம் பயந்தால் நிஜமாகவே அந்தரத்தில் பய்ந்து அடிக்கிறார் விக்ரம். சண்டைக்காட்சிகளில் கூட அவருக்கு குளோஸ் அப்புகளை அதிமாக வைத்து, அவருக்கு வயதாகி விட்டது என்று காட்டிக் கொண்டே இருகிறார்கள்.

படத்தில் விக்ரம் போட்டிருக்கும் கெட்-அப்புகள் நன்றாக பொறுந்தியிருக்கும் நிலையில் அவைகளை வைத்து இரண்டாவது பாதியை ஜமாய்த்திருந்தால் குறைந்தது விக்ரம் ரசிகர்களையாவது திருப்திப் படுத்தியிருக்கலாம்.

விக்ரமை விட பரிதாப நிலை தீக்‌ஷா ஷேத் உடையது. கொஞ்சம் முத்தலான ஹீரோயினாக இருந்தாலும், அவரை அநியாயத்துக்கு ஊறுகாய் ஆக்கியிருகிறார் இயக்குனர். இதனால் விக்ரமோடு இரண்டு பாடல்களில் ஆட்டம் போடுவதோடு முடிந்து போகிறது.

அக்கா கதாபாத்திரம் அழுத்தமில்லாமல் படைக்கப் பட்டிருப்பதால் அதை விக்ரம் சாகடித்தால் படம் இன்னும் சொம்பையாகிவிடும் என்று நினைத்த இயக்குனர். அதை மிகப்பழைய டெக்னிக் மூலம் கொன்றுவிட்டு, இதுதாண்டா க்ளைமாக்ஸ் எனும்போது ரசிகர்கள் காசுபோச்சே என்று தியேட்டரில் கதறுகிறார்கள்.

இவ்வளவு மொக்கையான க்ளைமாக்ஸுக்கு பிறகு தனது தோழிகள் ரீமா சென், ஸ்ரேயா இருவரோடும் விக்ரம் ஆடும் குத்தாட்டம் எதற்கென்று தெரியவில்லை. அந்த பாடலின் பல்லவி முடியும்வரை கூட பார்க்க பொறுமையில்லாமல் வெளியேறுகிறார்கள் ரசிகர்கள்.

இப்படியொரு படத்துக்கு ராஜபாட்டை என்ற தலைப்பை வைத்து வீனடித்தது ஒருப்பக்கம் இருக்க, அற்புதமான வசனகர்த்தா பாஸ்கர் சக்தி, பாடலாசிரியர் யுகபாரதி, இளமையான இசைதரும் யுவன், என ஒரு அசத்தலான டீமை மாவு பிசைய வைத்திருகிறார். சாமி சத்தியமாக ராஜபாட்டை கண்களுக்கு ஃபுட் பாய்சன். காசுக்கும்தான்!
நன்றி குசும்பு


விட்டுச் செல்லும் ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு  பார்வை

ஏ.எம். றிஷாத்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொலிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினி, கமல் இருவரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளியாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறிவிட்டது. ஆனால் அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பலரின் படங்களும் இவ்வாண்டில் வெளியாகின

உண்மையில் பொங்கலுடனேயே இவ்வாண்டு சினிமா சூடுபிடிக்க ஆரம்பமானது. ஆடுகளம், சிறுத்தை, காவலன், இளைஞன் ஆகிய நான்;கு படங்களே பந்தையத்தை ஆரம்பித்து வைத்தது. இதில் ஆடுகளம், சிறுத்தை 14ஆம் திகதியும் காவலன், இளைஞன் 15ஆம் திகதியும் வெளியானாலும் இவையே போட்டியாகப் பார்க்கப்பட்டது.

என்னதான் அளவுக்கதிகமாக திரைப்படங்கள் வெளியான போதிலும் கடந்த வருடத்தினை விட குறைவான படங்களே வெற்றிப்படங்களாக அமைந்துள்ளது. இருந்தாலும் இவ்வாண்டின் ஆரம்பத்தின் முதலே தமிழ் சினிமா இன்னும் சோடை போகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல படங்கள் அமைந்திருந்தது. இவற்றில் பல வணிக ரீதியாக வெற்றியடை யாவிட்டாலும் நல்ல விமர்சனங்களை அள்ளிச் சென்றது.

2010 ஆம் அண்டிற்கான தேசிய விருதுகளில் 13 விருதுகளை குவித்து தமிழ் சினிமாவும் களத்தில் இருப்பதை இந்தியளவில் உணர்த்தியது ஆண்டு இது. இதில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் வெளியான ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது. இதுபோல எதிர்வரும் ஆண்டுகளிலும் இடம்பெறலாம் என இவ்வாண்டில் வெளியான படங்கள் நம்பிக்கை அளிக்கிறது.

குறிப்பாக ஆரண்ய காண்டம், வாகை சூடவா, தூங்கா நகரம், அழகர் சாமியின் குதிரை, முரண், வர்ணம், வெங்காயம், யுத்தம் செய், குள்ளநரிக்கூட்டம் பயணம் போன்ற படங்கள் வசூலில் சாதிக்கவில்லை என்றாலும் பலரது பாராட்டையும், சில விருது களையும் பெற்றுக்கொண்டது. இவற்றுடன் ஆடுகளம், தெய்வத் திருமகள், அவன் இவன், வானம், மயக்கம் என்ன படங்கள் பராட்டுக்களுடன் நின்றுவிடாமல் ஓரளவு சிறப்பான வசூலினை ஈட்டியது.
ஆண்டின் மாபெரும் வெற்றித் திரைப்படமாக வணிக ரீதியாகவும் தியேட்டரில் ஓட்டப்படாமல் ஓடிய உண்மையான வெற்றிப்ப டங்களாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் மங்காத்தா படத்திற்கு முக்கிய இடம் உண்டு இதேபோல அயன் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தினை தந்த கே.வி ஆனந்தின் கோ படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மங்காத்தா, கோ இவ்விரு படங்களுமே இந்த வருடத்தில் அதிகளவான இலாப ஈட்டிய திரைப்படங்களாக உள்ளது.

இவற்றுடன் சேர்த்து லோரன்ஸின் இயக்கத்தில் வெளியான காஞ்சனா, கார்த்தியின் நடிப்பில் வெளியான சிறுத்தை படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. மேலும் பலரின் கவனத்தை ஈர்த்து பெரும் வரவேற்பை பெற்ற அறிமுக இயக்குனரான எம். சரவணன் இயக்கத்தில் வெளியான எங்கேயும் எப்போது திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றியடைந்தது.

இவற்றுடன் விஜயின் காவலன், நாடோடிகள் வெற்றிக்குப் பின்னர் சமுத்திரக்கனி, சசிகுமார் கூட்டணியில் வெளியான போராளி, சிம்புவின் ஒஸ்தி முதலுக்கு மோசமில்லாத படங்களாக மாறின. இவை தவிர சில பெரிய பட்ஜெட் படங்கள் விளம்பரங்களில் வெற்றி கண்டது உண்மையில் தயாரிப்பாளரின் கையை கடித்துவிட்டது.

தற்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவைப் பொறுத்தளவில் 50 நாட்கள் படங்கள் ஓடுவதென்பது மலையில் மடேற்றும் கதையாகிவிட்டது. இதனாலேயே என்னவோ சில படங்கள் வெளியாகி 2 தொடக்கம் 5 நாட்களிலேயே விண்ணைப் பிளக்கும் வெற்றி, மாபெரும் வெற்றி என விளம்பரப்படுத்தி விளம்பரங்களில் வெற்றி கண்டதே தவிர நிஜத்தில் ஏமாற்றமளித்தது என்றுதான் கூற வேண்டும்.

தீபாவளிக்கு வெளியான விஜயின் வேலாயுதம் மற்றும் சூர்யாவின் 7ஆம் அறிவு திரைப்படங்களின் நிலைவரங்கள் புரியாத புதிராகவே இருக்கிறது. காரணம் நடிகர், இயக்குனர் தரப்பிலிருந்து வெற்றி என அறிவித்திருந்தாலும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இதுவரையில் எவ்விதமான கருத்துக்களும் வெளிவரவில்லை. ஆரம்பத்தில் 7ஆம் அறிவு தொடர்பாக சில பொக்ஸ் ஒபிஸ் தகவல்கள் வெளியாகின.

குறித்த தீபாவளிப் படங்கள் இரண்டும் முதலுக்கு மோசமில்லாம் ஓடியுள்ளது எனலாம். இதில் விஜயின் வேலாயுதம் சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தினை விட சற்று அதிமான இலாபத்தையே கொடுத்துள்ளது. 7ஆம் அறிவு படத்தின் பட்ஜெட் சுமார் 85 கோடியிலும் வேலாயுதம் திரைப்படம் 45 கோடியிலும் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய பட்ஜெட் படங்களாக அமைந்தது.

இவற்றினைத் தவிர்த்து பெரும்பாலான படங்கள் படுமோசமான தோல்விகளையே சந்தித்துள்ளது. வருடத்தின் இறுதியில் வெளியான மம்பட்டியான் சற்று சிறப்பான ஆரம்ப வசூலினை ஈட்டியுள்ளது. மற்றும் ஒஸ்தி, ராஜபாட்டை படங்கள் சிறந்த ஆரம்ப பொக்ஸ் ஒபிஸ் நிலைமைகள் காணப்பட்ட போதும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதுடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படங்களினால் மேலும் இவற்றின் வசூல் நிலைகள் பாதிக்கப்படலாம்.

இவ் ஆண்டில் தற்போதைய முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் சற்று சிறப்பாகவே அமைந்துள்ளது எனலாம். இதில் விசேட அம்சம் என்னவென்றால் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஸ் என முன்னணியிலுள்ள நடிகர்கள் அனைவரும் இவ்வாண்டில் களத்தில் குதித்தனர்.

இதில் அஜித் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அசல் படத்தின் சறுக்கலுக்கு பின்னர் ஆண்டின் பெரிய வெற்றியாக மங்காத்தா அமைந்துவிட்டதால் ஆண்டின் வெற்றி நாயகனாக தனக்குரிய இடத்தினை தக்கவைத்து ஏனைய நடிகர்களுக்கு தானும் போட்டியில் இருப்பதனை உணர்த்தியுள்ளார். இவருடன் விஜயும் தன் தொடர்ச்சியான 3 வருட சறுக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவலன் மூலம் தனது மீள்வருகையை பலப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரின் அடுத்தடுத்த படங்கள் தற்போது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

என்னதான் அடுத்த தலைமுறை நடிகர்களில் அஜித், விஜய் பற்றி அதிகம் பேசினாலும் கடந்த 5 ஐந்து வருடங்களில் சத்தமில்லாமல் அதிக வெற்றிகளை கொடுத்து தனக்கென தனியான ஒரு வட்டத்தினை உருவாக்கியிருப்பவர் சூர்யா தான். 7ஆம் அறிவில் சிறிய சறுக்கல் என்றாலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக (ரஜினி, கமல் தவிர்த்து) மாறியுள்ளார் சூர்யா. இவரின் அடுத்த படம் வெற்றிபட இயக்குனரான மாறியுள்ள கே.வி. ஆனந்த்தின் மாற்றான் திரைப்படம் என்பதால் இவரது வெற்றி தொடரலாம்.

அடுத்ததாக தேசிய விருது நடிகர் விக்ரம் அந்நியனுக்கு பிறகு பெரிய வெற்றிகள் இன்றி பரிதவிக்கிறார். தெய்வத்திருமகள் நல்ல பெயரை ஏற்படுத்தினாலும் பெரிய வெற்றியாக அமையவில்லை அது ராஜபாட்டையிலும் கிடைக்காது போல தெரிகிறது. தமிழ்சினிமாவின் புதிய தேசிய விருது நடிகர் தனுஸுக்கு 2011 சிறந்த ஆண்டாகவே உள்ளது. ஆடுகளம், மயக்கம் என்ன என நடிப்பில் பாராட்டுக்ளை குவித்ததுடன் ஆடுகளத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

சிம்பு வானம் படத்தில் கிடைத்ததை ஒஸ்தியில் மேலும் ஒஸ்தியாக்க முடியாமல் போய்விட்டது. விஷால் அவன் இவன் படத்தின் மூலம் நடிகராக நல்ல வரவேற்புக்களை பெற்றார். தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியமில்லை ஆனால் வெடியில் கோட்டை விடடார். கோ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு வரிசையாக சிங்கம் புலி, ரௌத்திரம், வந்தான் வென்றான் வரிசையாக 3 தோல்விகளால் தவிக்கிறார். ஜெய் சென்ற வருடத்தில் ஏற்பட்ட தோல்விகளுக்கு எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். விமல் வாகை சூடவா மூலம் நல்ல நடிகர் என்ற பெயரினை பெற்றார்.

கார்த்தி சிறுத்தையுடன் தனது வெற்றியை தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவி பேராண்மை படத்திற்கு பிறகு தில்லாலங்கடி இவ்வாண்டு எங்கேயும் காதல் என தோல்வியில் பயணிக்கிறார். அமீர் இயக்கத்தில் ஆதிபகவன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பார் எனலாம். வானம் படத்தில் 2வது நாயகனாகனாக தோன்றினார் பின்னர் யுவன் யுவதி படத்தில் நாயகனாக தோன்றினாலும் படம் சரியாகப் போகவில்லை.

பார்த்திபன் வித்தகனுடன் பொன்விழா படத்தினை பூர்த்தி செய்திருந்தார். வருட இறுதியில் வெளியான மம்பட்டியான் பிரசாந்திற்கு ஒரு வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த், மாதவன், ஆதி போன்றோரின் படங்கள் வெளியாகவில்லை. சத்தியராஜ் சட்டப்படி குற்றம், வெங்காயம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நாயகனாக அல்லாமல் நடித்து வரவேற்பினை பெற்றார்.

இவற்றுடன் நடிகைகளில் அஞ்சலி தவிர வேறு நடிகைகள் பெரிதாக பிரகாசிக்கவில்லை. எங்கேயும் எப்போதும் படத்திற்காக அனன்யாவும் காவலனில் அசினும் பராட்டுக்களை பெற்றனர். சிறுத்தையில் தமன்னா, மங்காத்தாவில் த்ரிஷா கமர்ஷியல் ஹீரோயின்களாக தோன்றினர். புது வரவுகளில் ஸ்ருதி ஹாசன், ரிச்சா மனதில் நிற்கின்றனர்.

இசையமைப்பாளர்கள் ஜீவீ. பிரகாஸ், யுவன் சங்கர் ராஜா இவ் ஆண்டு முழுவதும் பேசப்பட்டனர். ஹரீஸ் ஜெயராஜ் கோ படத்தில் வெற்றிபெற்றார். அறிமுக இசையமைப்பாளர் அநிருத் வை திஸ் கொலைவெறி பாடலினால் நம்பிக்கை அளிக்கிறார்.

மணிரத்தினம், சங்கர், பாரதிராஜா, ரவிக்குமார் போன்றோரின் படங்கள் வெளியாகவில்லை. வெற்றிமாறன், ஏ.எல். விஜய், சற்குணம், மிஸ்கின், கே.வி. ஆனந்த் போன்றோர் தங்களை முன்னணி இயக்குனர்களாக அடையாளம் காட்டினர். வெங்கட் பிரபு மங்காத்தாவினால் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். பிரபு தேவா இயக்கிய வெடி, எங்கேயும் காதல் இரண்டும் தோல்வியாக அமைந்தது. முருகதாஸ், கௌதம் மேனன் சற்று சறுக்கலை சந்தித்தனர். அறிமுக இயக்குனர் எம். சரவணன் எங்கேயும் எப்போதும் படத்தினால் அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

வடிவேலு, விவேக், கஞ்சா கருப்பு என அனைவரையும் ஓரங்கட்டி விட்டு இந்தாண்டும் சந்தானமே கொமடியனாக ஜெயித்துள்ளார். அரசியல் காரணங்களால் வடிவேலு ஓரிரு படங்களிலேயே தோன்றினார் இதனால் இவரின் இடைவெளி வருடம் முழுவதும் காணப்பட்டது. மொத்தத்தில் 2011ஆம் ஆண்டு தமிழ்சினிமாவில் சில சறுக்கல்கள் காணப்பட்ட போதும் பல ஏற்றங்களுக்கு வழிவகை செய்துள்ளது. மேலும் பலருக்கு திருப்பமாக அமைந்துள்ளதால் எதிர் நோக்கும் வருடம் சிறப்பாக அமையுமெனலாம்.

2011இல் வெற்றிப் படங்களை விட மிக அதிகமான தோல்விப் படங்கள் வெளிவந்த போதிலும் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை அளிக்கும விதத்தில் பல படைப்புக்கள் கிடைத்துள்ளதால் வரும் வருடங்களில் சிறந்த படைப்புக்கள் பலவற்றை தமிழ்சினிமா ரசிகர்களுக்கு அளிக்கும் என எதிர்பார்ப்போம்.

நன்றி வீரகேசரி

1 comment:

Anonymous said...

The advertistment for this movie mislead the fans. A hopeless movie disappointment for the Rasihar.
Kuhan