பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார்



.


பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில்  காலமாகியுள்ளார். 
 பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் (67) உடல் நலக் குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

 கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பு மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த மலேசியா வாசுதேவன், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.





 இன்று இறுதிச் சடங்கு: மலேசியா வாசுதேவனின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள கோதண்டபாணி ஸ்டூடியோவில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு உஷா என்ற மனைவியும், யுகேந்திரன் என்ற மகனும், பிரசாந்தினி, பவித்ரா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
 பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களில் யுகேந்திரன் நடித்துள்ளார். பிரசாந்தினி பின்னணி பாடகராக உள்ளார். மலேசியா வாசுதேவனின் உடல் போரூர் மின் மயானத்தில் திங்கள்கிழமை தகனம் செய்யப்படுகிறது.
 பாடகர், இயக்குநர், நடிகர்: மலேசியாவைச் சேர்ந்தவரான வாசுதேவன் நாடக நடிகராவர். நடிகராகும் எண்ணத்தில் சென்னைக்கு வந்தவர், வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் பாடகராகும் முயற்சியில் ஈடுபட்டார். இயற்கையிலேயே அமைந்த அவரது குரல் வளம் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை பெரிதும் கவர்ந்தது. பின்னர் மலேசியா வாசுதேவனுக்கு சில வாய்ப்புகளை தந்து பாட வைத்தார். இவர் பின்னணி பாடகராக அறிமுகமான "டெல்லி டூ மெட்ராஸ்' இதுவரை வெளிவரவில்லை.
 பாரதிராஜா, இளையராஜா ஆகியோருக்கு தொடக்க காலத்தில் நெருங்கிய நண்பராக இருந்த மலேசியா வாசுதேவன், தேனாம்பேட்டை சிக்னல் அருகில் தங்கும் விடுதியில் அவர்களுடன் ஒன்றாக தங்கியிருந்தார்.
 பின்னாளில் "16 வயதினிலே' படத்தில் வந்த ""ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...'' என்ற பாடல் அவருக்கு பெரும் புகழ் சேர்த்தது. அதைத் தொடர்ந்து இளையராஜா இசையில் ஏராளாமான பாடல்களை பாடினார்.
 ""ஆகாய கங்கை...'' (தர்மயுத்தம்), ""பூங்காற்று திரும்புமா....'' (முதல் மரியாதை) ""பொன்மானைத் தேடி...'' (எங்க ஊரு ராசாத்தி) ""கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ...'' (கிழக்கே போகும் ரயில்) உள்ளிட்ட பாடல்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.
 "முதல் வசந்தம்' என்ற படத்தில் குணசித்திர நடிகராக அறிமுகமானர். பின்னர் வில்லன் வேடங்களிலும் நடித்தார். "பூவே உனக்காக', "ஒரு கைதியின் டைரி', "பாலைவனரோஜாக்கள்' உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
 நடிகர்கள் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள மலேசியா வாசுதேவன் தமிழில் மட்டும் 8,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
 இது தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
 ஜெயலலிதா இரங்கல்: தனது இனிய குரலாலும், திறமையான நடிப்பாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த மலேசியா வாசுதேவனின் மரணம் தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பு என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்

No comments: