லண்டனில் இருந்து சென்னை வந்திருந்த இலங்கை தமிழரை கடத்திச் சென்று ரூ.17 1/2 லட்சத்தை பறித்த கும்பலை போலீசார் வாகன சோதனையில் கைது செய்தனர்.இங்கிலாந்து நாட்டில் குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் சண்முகவேல் (வயது 36). இவர் தொழில் அதிபர் ஆவார். இவரது மனைவி பெயர் ராதிகா. இவர் சென்னையை அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர்.
சண்முகவேல் கடந்த 5-ந் தேதி பல்லாவரம் போலீசில் ஒரு புகார் மனு தந்தார். அதில், ``கடந்த 22-ந் தேதி காரில் திருவல்லிக்கேணிக்கு சென்று கொண்டிருந்த போது ஆட்டோ ரிக்ஷாவில் வந்த சிலர் தன்னை வழி மறித்து கடத்திச் சென்று ஒரு வீட்டில் 2 நாட்கள் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும், பின்னர் தனது மனைவி ரூ.171/2 லட்சம் கொடுத்து அவர்களிடம் இருந்து தன்னை மீட்டதாகவும் கூறி இருந்தார். கடத்தல் கும்பல் தாக்கி தனது கையை உடைத்ததாகவும் குறிப்பிட்டு இருந்த அவர், அந்த கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து, அந்த கடத்தல் கும்பலை பிடிக்க புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவின் பேரில், பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜ× மேற்பார்வையில், மீனம்பாக்கம் உதவி கமிஷனர் குப்புசாமி, பல்லாவரம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஆல்பின்ராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சண்முகவேல் லண்டனில் இருந்தபோது இலங்கை தமிழரான பாலா என்பவருடன் சேர்ந்து தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், இதைத்தொடர்ந்து பாலா சென்னையில் உள்ள தன்னுடைய நண்பர் சிவா என்பவருடன் சேர்ந்து சண்முகவேலை கடத்திச் சென்று ஒரு வீட்டில் வைத்து ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதும், பின்னர் பல்லாவரத்தில் வைத்து சண்முகவேல் மனைவியிடம் இருந்து ரூ.171/2 லட்சத்தை பெற்றுக்கொண்டு அவரை விடுவித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையே போலீசார் பல்லாவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பி ஓடினார்கள். இருந்தபோதிலும் போலீசார் விரட்டிச் சென்று 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கொளத்தூர் ஜனார்த்தனம் (30), பெரம்பூர் சீனிவாசன் (28), சுரேஷ் (29), பெரியபாளையம் பாஸ்கர் (31) ஆகியோர் என தெரிய வந்தது. காரில் இருந்த கத்தி, உருட்டுகட்டைகள் மற்றும் ரூ.9 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பாலா, சிவா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment