நம்பிக்கை
முருகபூபதி – அவுஸ்திரேலியா

இலங்கையில்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதிய அதிபர் தெரிவாகுவார் என்று தமது சிங்கள
சோதிட சஞ்சிகையில் எழுதியிருந்த சந்திரஸ்ரீ பண்டார என்னும் ஒரு சோதிடர்
விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.
இந்தச்செய்தி என்னைச்சற்று வியப்பில் ஆழ்த்தியது.
ஆனால்
சில செப்டெம்பர்கள் கடந்துவிட்டன. இலங்கை அதிபரின் தலைமையிலான கூட்டணிதான்
இந்த ஆண்டு செப்டெம்பர் நடந்த மூன்று மாகாண சபைத்தேர்தலிலும் வெற்றியை
தக்கவைத்துள்ளது. அதிபரும் தொடர்ந்து பதவியில்தான் இருக்கிறார்.
ஆந்தச்சோதிடரின் ஆரூடம் பொய்த்தது.
இப்படி
பல சோதிடர்களின் ஆரூடங்கள் இலங்கை, இந்திய அரசியலில் பொய்த்துத்தான்
இருக்கின்றன. எனினும் சோதிடர்களும் தங்கள் பணியை நிறுத்தவில்லை. இலங்கை,
இந்திய அரசியல்வாதிகளும் சோதிடம் பார்ப்பதை நிறுத்தவில்லை.
வேலுப்பிள்ளை
பிரபாகரன் பற்றியும் பல சோதிடர்கள் முன்பு கணித்துச்சொன்ன தகவல்களையும்
நாம் மறக்கவில்லை. தமிழ்ஈழம் பற்றியும் பல சோதிடக்கணிப்புகள் முன்பு
வெளிவந்திருப்பதையும் மறப்பதற்கில்லை.
இலங்கை அதிபர் தேர்தல் தொடர்பாக ஒரு சிங்கள சோதிடரின் ஆரூடத்துக்கு நேர்ந்த கதியை எண்ணி யார் மீது அனுதாபம் கொள்வது?
அரசியல்
தலைவர்கள் குறித்து எவரும் எப்படியும் விமர்சித்துவிடலாம். ஆனால்
அவர்களின் எதிர்காலம்குறித்து ஆரூடம் கூறும்பொழுது அவர்களுக்குச் சாதகமாகவே
பேசவேண்டும் எழுதவேண்டும் என்ற விதிமுறையை அந்த சிங்களச்சோதிடருக்கு
அரசாங்கத்தின் காவல் மற்றும் பாதுகாப்புத்துறை இச்சம்பவத்தின் மூலம்
உணர்த்திவிடுகின்றன.
பொதுவாகவே
இலங்கையிலும் இந்தியாவிலும் சோதிடத்திலும் யாகங்களிலும் நம்பிக்கைகொண்ட
அரசியல்வாதிகள் அநேகர். அவர்களுக்கு சாதகமாக சோதிடர்கள் ஏதும்
கணித்துச்சொன்னால் ஆனந்தப்படுவார்கள். ஆனால் பாதகமாகச்சொல்லிவிட்டால்
சோதிடர்பாடு அதோகதிதான்.
சகுனம்
பார்த்தல் ராசி பலன் பார்த்தல் அட்டமி நவமி பார்த்து தேர்தலுக்கு
வேட்புமனு தாக்கல் செய்தல், அமைச்சரவை அமைப்பதற்கு நல்ல நாள் குறித்தல்
இத்தியாதி…விடயங்களில் இந்த அரசியல் வாதிகள் எப்பொழுதும் தங்களின்
நலன்கருதியே இயங்குவார்கள்.
இலங்கையில்
கால் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ் அமைச்சர் இராஜதுரை ஒரு வெண்குதிரையை
இறக்குமதிசெய்து கொழும்பில் ஒரு கோயில் முற்றத்தில் அஸ்வமேதயாகம்
பலநாட்கள் நடத்தினார்.
அவர்
தமது தேர்தல்தொகுதியில் தொடர்ந்து இருபத்தியைந்து ஆண்டுகளுக்குமேல்
மக்களினால் தெரிவாகி முடிசூடா மன்னர் என்ற புகழும் பெற்றவர். ஆனால் அங்கே
எத்தனையோ யுத்த அனர்த்தங்கள் நடைபெற்றபோதும் பாதிக்கப்பட்ட மக்களை
எட்டியும் பார்க்காமல் அந்த நகரத்தையும் மக்களையும் மறந்தவர். 

நாட்டில்
சமாதானம் வேண்டித்தான் அந்த குதிரையாகம் நடத்தியதாகவும் பத்திரிகை, வானொலி
ஊடகங்களுக்கு அறிக்கையும் விடுத்தவர். எனினும் அந்த யாகத்தில் எழுந்த
புகைமண்டலம் வானத்தைநோக்கிச்சென்றதுபோன்று ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களின்
ஆவிகளும் தொடர்ச்சியாக வானத்தை நோக்கிச்சென்றுவிட்டன.
அன்று
நடந்தது நாட்டுக்கான - சமாதானத்திற்கான அஸ்வமேதயாகமா? அல்லது அந்த
அமைச்சருக்கான ஆயுளுக்காக நடத்தப்பட்ட யாகமா? என்று இப்போது எண்ணத்
தோன்றுகிறது.
இந்தக்கதை இப்படி இருக்க, நல்ல சகுனத்திற்காக கண்ணகியே இடம்பெயர்ந்த கதை தமிழகத்தில் இருக்கிறது.
ஒரு
காலத்தில் கறுப்புத்துணியை தோளில் சுமந்து பகுத்தறிவுப்பிரசாரம் செய்த
கலைஞர் கருணாநிதி, தற்காலத்தில் மஞ்சள் துணியுடன் சக்கரநாற்காலியில்
வலம்வருகிறார். இந்த மஞ்சளின் மகிமை அவருக்கும், அதனை வலியுறுத்தி
போர்த்தியவர்களுக்கும் மாத்திரமே தெரியும்.
முன்னாள்
பிரதமரும் ஜனாதிபதியுமான பிரேமதாஸாவுக்காக கொழும்பு கப்பித்தாவத்தை
செல்வவிநாயகர் கோயிலில் தினமும் காலையில் அவரது ஆயுளுக்காகவும்
நல்லாரோக்கியத்திற்காகவும் விசேட பூசை நடந்துகொண்டிருந்தது. அந்தப்பூசை,
அவர் கொழும்பு ஆமர்வீதி- கிராண்ட்பாஸ் வீதி சந்தியில் புலிகளின் தற்கொலைக்
குண்டுதாரிகளினால் சிதறும் வரையில் அந்த விசேட பிரார்;;த்தனையை
கப்பித்தாவத்தை செல்வவிநாயகர் ஏற்றுக்கொண்டுதானிருந்திருக்கவேண்டும்.
இ.தொ.கா
எம்.எஸ். செல்லச்சாமி, ஜனாதிபதிகளின் பிறந்தநாட்களின்போது மறக்காமல்
கோயில்களில் அர்ச்சனை செய்வார். கோயில் ஐயர் தரும் காளாஞ்சி பிரசாதத்தை
மாலை மரியாதையுடன் ஜனாதிபதிகளுக்கு நேரில் சென்று வழங்கும் மரபையும்
அந்தக்காட்சி பத்திரிகைகளில் படங்களாக வெளியாகும் மரபையும் தொடர்ந்து
பேணிக்கொண்டுதானிருந்தார்.
இலங்கை
அதிபரில் மாற்றம் வரப்போகிறது என்று எந்த நேரத்தில் பி.பிஸி.யில்
குறிப்பிடப்பட்ட அந்த சிங்கள சோதிடர் ஆரூடம் கணித்து தமது சோதிட
சஞ்சிகையில் எழுதினாரோ தெரியவில்லை.?
ஆனால்
அவருக்கு “இப்படி தான் எழுதினால் மாமியார் வீட்டுக்குப்போக நேரும்” என்பதை
தமது ஜாதகத்தில் கணித்துக்கொள்ளமுடியாதுபோனதுதான் துர்ப்பாக்கியம்.
இச்சந்தர்ப்பத்தில்தான் இந்த சொல்ல மறந்த கதையை எழுத நினைத்தேன்.
அப்பொழுது நான் இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம்.
எனக்கு
சிங்கள மொழியும் தெரிந்திருந்தமையால் சில சிங்கள வர்த்தக
பெரும்புள்ளிகளின் சாதகங்களை (சோதிடம்) மொழிபெயர்த்துச்சொல்ல வேண்டிய
நிர்ப்பந்தம் உருவாகியிருந்தது.
இந்தச் சாதகம், தமிழ்ப்பஞ்சாங்கம் பார்த்து ஒரு சோதிடரால் கணிக்கப்படும் குறிப்பு அல்ல. சற்று அல்ல முழுமையாகவே வித்தியாசமானதுதான்.
அந்தச் சோதிடத்தின் பெயர் நந்திவாக்கியம்.
நந்திவாக்கியம்
பனையோலை ஏட்டில் பதிவாகியிருக்கிறது. ஏராளமான நந்திவாக்கிய
ஏட்டுச்சுவடிகளுடன் மகாலிங்கம் என்று ஒரு தாடி வளர்த்த சோதிடர்
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு செல்லும் பாதையில் வத்தளை என்னும் ஊரில்
சிறிய வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்தார்.
அவரது உருவத்தை இப்படிச்சொல்லலாம்.
1965
இல் ஜெயகாந்தனின் விழுதுகள் குறுநாவலில் வரும் ஓங்கூர் சாமியை
ஆனந்தவிகடனில் ஓவியமாக பார்த்ததுண்டு. இந்த மகாலிங்கமும் தோற்றத்தில்
அப்படித்தான் இருப்பார்.
தமது
வெண்ணிற தாடியை வருடியவாறு சாய்மனைக் கதிரையில் அமர்ந்து வெற்றிலை
குதப்பிக்கொண்டு அருகிலே துப்புவதற்கு படிக்கமும் வைத்துக்கொண்டு கண்ணாடியே
அணியாமல் கண்களை இடுக்கியவாறு ஏடுகளை உற்றுநோக்கி வாசிப்பார்.
நான்
அவருக்கு அருகே ஒரு ஸ்டூலை வைத்துக்கொண்டு அவர் சொல்லச்சொல்ல எழுதுவேன்.
எதுகை மோனையோடு நந்திவாக்கியம் பாடல் வரிகளாக வந்துவிழும். நான் வேகமாக
எழுதுவேன். இவ்விரண்டு வரிகள் முடிந்ததும் சோதிடர் மகாலிங்கம் அதன்
பொழிப்புரையை சொல்லுவார். நான் அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்து சாதகம்
கணிக்க வந்தவர்களுக்குச்சொல்லுவேன். அவர்களும் தம்மிடமிருக்கும்
நோட்புக்கில் சுருக்கமாக எழுதிக்கொள்வார்கள்.
நான்கு
வரி எழுதியதும் பொழிப்புரையை விஸ்தாரமாக விளக்கவுரையாகவே மகாலிங்கம்
நிகழ்த்துவார். அது வெறும் கதையளப்பாகவும் மாறி எனக்கும் வந்தவர்களுக்கும்
அலுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும்.
ஒரு
அமைச்சரின் சகோதரிக்குத்தான் முதல் முதலில் இந்த மொழிபெயர்ப்பு வேலைக்காக
சென்றேன். எங்கள் ஊரில் அமைச்சருக்கு நெருக்கமான ஒரு தமிழ் பிரமுகர்,
அவர்தான் ஐ.நாவில் முக்கிய பதவியில் இருக்கும் ராதிகா குமாரசாமியின்
தாய்மாமனார் ஜெயம்விஜயரத்தினம். அவரது தந்தையார் விஜயரத்தினம் அவர்கள்
நீர்கொழும்பில் மேயராகவும் மக்களுக்கு தொண்டாற்றியவர். அவர் 1954 இல்
நீர்கொழும்பில் ஸ்தாபித்த இந்து தமிழ் வித்தியாலயம்தான் தற்போது கம்பஹா
மாவட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு இந்துக்கல்லுரி. இன்றும் அவரது
பெயரைச்சொல்கிறது. என்னுடன் சேர்த்து 32 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட
இந்தவித்தியாலயத்தில் முதலாவது மாணவன் (சேர்விலக்கம் 01) என்ற பெருமையை
ஊர்மக்கள் எனக்குத் தந்துள்ளனர்.
நீர்கொழும்பில் தமிழர்கள் இருந்தார்களா? என்று கேட்பவர்களுக்கு இந்தத்தகவல்களைத்தான் நான் சொல்வதுண்டு.
ஆனால்
பிரபாகரனின் விடுதலைப்புலிகளும் ஏனைய இயக்கங்களும் நீர்கொழும்பை தமது
தமிழ் ஈழ வரைபடத்தில் இணைக்காதுவிட்டாலும் கூட 1977, 1981, 1983
காலப்பகுதியில் தாக்கப்பட்டதுதான்.
சிலவாரங்களுக்கு
முன்னர் மறைந்த முன்னாள் புடவை கைத்தொழில் அமைச்சர் விஜயபாலமெண்டிஸின்
சகோதரியையும் அவரது கணவரை அறிமுகப்படுத்துவதற்காக ஜெயம் விஜயரத்தினம் ஐயா ,
எனது வீடுதேடியே வந்துவிட்டார்.
எந்த நேரத்தில் இந்த சகவாசம் எனக்குக்கிடைத்ததோ தெரியாது. ஆனால் அது தொடர்கதையாகிவிட்டது.
ஒருநாளைக்கு இந்தக்கூட்டத்துடன் அலைவதற்கு எனக்குக் கிடைக்கும் ஊதியம் நூறு ரூபா.
எனக்கு அப்பொழுது திங்கட்கிழமைகளில்தான் ஓய்வுநாள்.
இதனைத்
தெரிந்துகொண்ட பல சிங்கள செல்வந்தர்கள் காலையிலேயே என் வீட்டுக்கு தமது
காரை எடுத்துக்கொண்டுவந்து வத்தளைக்கு அழைத்துச்செல்வார்கள்.
மகாலிங்கம், அவர்களை காலை 9 மணிக்கு வருமாறு Appoinment கொடுத்திருப்பார்.
நாமும்
உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருப்போம். ஆனால் ஆசாமி அப்பொழுதுதான்
துயில் எழுந்து காலைக்கடனில் இருப்பார். அவர் குளித்து சுவாமி தரிசனம்
முடித்து சாய்மனைக்கதிரைக்கு வெற்றிலைத்தட்டத்துடன் வந்து சேருவதற்கு
பத்து-பதினொரு மணியும் ஆகிவிடும்.
எங்கள் பொறுமைக்காக நோபல் பரிசும் கொடுக்கலாம்.
மகாலிங்கம,;
உலகின் முதல் பெண்பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடும்பத்துக்கும்
நந்திவாக்கியம் வாசித்துக்கொடுத்தவர் என்றும் அந்த சோதிடத்தை அம்மையாருக்கு
நெருக்கமான முன்னாள் இறைவரித் திணைக்கள ஆணையாளர் சிற்றம்பலம்தான்
மொழிபெயர்த்தார் என்றும் ஒரு இரகசியத் தகவல் எப்படியோ வெளியில்
கசிந்தமையால்தான் பல அரசியல்வாதிகளும் அவர்களின் செல்வந்த நண்பர்
குடும்பங்களும் மகாலிங்கத்தின் வீட்டுக்கு படையெடுத்தனர் என்ற உண்மையையும்
சில நாட்களில் அறிந்துகொண்டேன்.
ஒருநாள் அவரும் அங்கே பிரசன்னமாகியிருந்ததைக்கண்டேன்.
மற்றும்
ஒரு நாள் இலங்கை போக்குவரத்துச்சபையின் இயக்குநர் ஒருவரின் மனைவியின்
சாதகத்தை நந்திவாக்கியத்திலிருந்து எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண்ஸ்
காரில் ஒரு பௌத்த பிக்கு வந்து இறங்கினார்.
அவர்
வந்ததும் மகாலிங்கத்தைத் தவிர நாம் அனைவரும் மரியாதைக்காக எழுந்து
நின்றோம். சாய்மனைக்கதிரையில் சாய்ந்திருந்த அவரால் எழுந்திருக்க
முடியவில்லையோ அல்லது தன்னிடம் தனது முற்பிறவிக்காலம் மறுபிறவிக்காலம்
பார்க்க வந்திருக்கும் காவிச்சந்நியாசிக்காக ஏன் தான் எழுந்திருக்கவேண்டும்
என்ற இறுமாப்போ தெரியவில்லை.
அந்த சிங்கள பௌத்த பிக்கு மகாலிங்கத்திற்கு அருகில் அமர்ந்து தனது இரண்டு கைகளையும் விரித்து ரேகைகளைக்காண்பித்தார்.
மகாலிங்கம்
இடுங்கிய கண்களினால் (அவர் கண்ணாடி அணியாததுதான் எனக்கு பேராச்சரியம்)
ரேகைகளை பார்த்து தமது குறிப்பேட்டில் ஏதோ எழுதினார். பிறகு அந்த
பிக்குவிடம் பிறிதொருநாள் வருமாறும் அந்த கைரேகைகளுக்குரிய நந்திவாக்கிய
ஏடுகள் கிடைத்தால் எழுதலாம் என்றும் சொன்னார்.
அந்தநாட்களில்
ஆயிரம் பத்தாயிரம் என்று ஊதியம் சம்பாதித்தார் அந்த நந்திவாக்கிய சோதிடர்
ஆனால் அவரது வருமானத்துக்கு ஏற்றதாக அவரது குடும்பமும் அந்த வீடும்
அமைந்திருக்காதது முதுமையிலும் கண்ணாடி அணியாத அவரது கோலத்தைவிட
மிகப்பேராச்சரியம்
பிக்குவின் வருகைக்கு என்ன காரணம் என்று கேட்டேன்.
“துறவியாக
இருந்தாலும் முற்பிறவியையும் மறு பிறவியையும் பார்க்கவேண்டும் என்ற ஆசை
அவருக்கு. ஆசை யாரைத்தான் விட்டது.”; சிரித்துக்கொண்டு சொன்னார்.
அங்கே
காலையில் நந்திவாக்கியம் எழுதி மொழிபெயர்க்கவும் சென்றால் அந்த முதல்பாகம்
முடிய மாலையாகிவிடும். முதல்பாகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை அவர்
சொல்லச்சொல்ல எழுதுவேன். இரண்டாம் பாகத்தை சிலநாட்களின் பின்னர் மகாலிங்கமே
எழுதிக்கொடுப்பார்.
இப்படித்தான்
ஒருநாள் ஒரு சிங்கள வர்த்தகபிரமுகருக்கு எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு
சிங்கள அன்பர் காரில் வந்திறங்கினார். மகாலிங்கத்திற்கு சிங்களம் தெரியாது.
வந்தவரிடம் வந்த காரணத்தைக் கேட்குமாறு என்னிடம் சொன்னார்.
நானும் அந்த அன்பருக்கு ஒரு ஆசனத்தை எடுத்துக்கொடுத்து அமரச்செய்தபின்னர் கேட்டேன்.
அந்த
நபர் சுமார் 172 பக்கமுள்ள பெரிய நோட்டு பத்தகத்தை விரித்து காண்பித்து
அதில் சில முன்பகுதி பக்கங்களை தனது விரல்களினால் மடித்து (மறைத்து)
குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் தமிழில் எழுதப்பட்டிருந்த நந்திவாக்கிய பாடல்
வரிகளில் சிவப்புக்கோடுகளினால் அடையாளமிடப்பட்டிருந்த வரிகளை சிங்களத்தில்
மொழிபெயர்த்து தருமாறு கேட்டார். அந்த நந்திவாக்கியம் வேறு ஒருவரால் அழகான
தமிழில் எழுதப்பட்டிருந்தது.
நானும் குறிப்பிட்ட நோட்டு பத்தகத்தை கையில் எடுத்து அந்த வரிகளை வாசித்தேன்.
மகாலிங்கம் பொழிப்புரை சொன்னார்.
தென்னிந்தியாவில்
கர்னாடக மாநிலத்துக்கு அருகில் ஒரு குறிப்பிட்ட கோயிலுக்கு செல்லவேண்டும்.
அந்த சாதகர் மட்டுமல்ல அவரது மனைவியும் அந்த கோயிலின் முன்பாகவுள்ள
குளத்தில் நீராடிவிட்டு அந்தக்கோயிலில் ஒரு சாந்தி பூசையில்
கலந்துகொள்ளவேண்டும். அதனைச்செய்தால் சில தோசங்கள் நீங்கிவிடும். 

நான் மகாலிங்கம் சொன்னதை மொழிபெயர்த்துச்சொன்னேன். வந்தவர் அதனை
குறித்துக்கொண்டார். குறிப்பிட்ட நோட்டு பத்தகத்தை மீண்டும்
திருப்பிக்கொடுக்கும்போது மடிக்கப்பட்ட முன்பகுதி பக்கங்களை தற்செயலாக
பார்த்துவிட்டேன்.
குறிப்பிட்ட நந்திவாக்கியத்துக்குரிய சாதகரின் பெயர் இப்படி ஆங்கிலத்தில் இருந்தது.
Junious Richard Jayawardena ( ( ஜே.ஆர்.ஜயவர்தனா)
அவர்தான் அச்சமயத்தில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதி உயர் ஜனாதிபதி.
வந்தவர் ஜனாதிபதியின் அந்தரங்கச்செயலாளர் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன்.
சில நாட்களின் பின்னர் எங்கள் வீரகேசரியில் ஜனாதிபதி தனிப்பட்ட விஜயமாக இந்தியா பயணம் என்ற செய்தி வெளியாகியிருந்தது.
பல
மாதங்கள் யார்யாருக்காகவோ நந்திவாக்கியம் எழுதியிருக்கும் நான், எனது
தலைவிதியை பார்க்க எனது கைரேகையை அந்த சோதிடரிடம் காண்பிக்கவேயில்லை.
1 comment:
[quote]பல மாதங்கள் யார்யாருக்காகவோ நந்திவாக்கியம் எழுதியிருக்கும் நான், எனது தலைவிதியை பார்க்க எனது கைரேகையை அந்த சோதிடரிடம் காண்பிக்கவேயில்லை. [/quote]
அதுதான் முற்போக்கு எழுத்தாளர்
Post a Comment