‘இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற ரீதியில்தான் தேசிய மக்கள் சக்தியினராகிய நாம் இயங்குகின்றோம். ஆனால் இனப்பிரச்சினையை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முடியாது‘ என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்டத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தினகரனுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.
கேள்வி: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறது. தமிழ் தேசியக் கட்சிகளை வடக்கு,கிழக்கு மக்கள் புறந்தள்ளுகின்றார்களா? அல்லது உங்களுடைய கட்சியின் கொள்கைகளால் மக்கள் ஈர்க்கப்படுகின்றார்களா?
பதில்: இதுவரை காலமும் வடக்கு, கிழக்கு மக்கள் சில கட்சிகளின் கொள்கைகளை நிராகரித்திருந்தாலும் அதற்கு எதுவிதமான மாற்றீடுகளும் இருக்கவில்லை. சம்பிரதாய கட்சிகளிலிருந்து விலக வேண்டும், வேறொரு அரசியல் பயணத்திற்குச் செல்ல வேண்டும் என மக்கள் தெரிவித்தபோதும் இதுவரை காலமும் அதற்குரிய மாற்றீடுகள் மக்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது மக்களுக்கு அந்த மாற்றீடு கிடைத்திருக்கிறது. அந்த அடிப்படையில் எமது கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். சம்பிரதாய கட்சிகளிலிருந்து மக்கள் வெளியே வந்திருக்கிறார்கள். இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற ரீதியில்தான் இயங்குகின்றோம். ஆனால் இனப்பிரச்சினையை வைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாது.
எமது கட்சியின் தலைவர் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்கின்ற தலைவராக இருக்கிறார். இந்த அடிப்படையில் அவரின் தலைமைத்துவமும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியும் நாட்டுக்கு முக்கியமாக உள்ளது.
கேள்வி: கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்கான விசேட திட்டங்கள் ஏதும் தங்களிடம் உள்ளதா?