மேலும் சில பக்கங்கள்

ஹமாஸ் அமைப்பு எதிர்கொள்ளும் தொடர் இழப்புகள்!

 October 21, 2024 10:13 am 

தெற்கு காஸாவில் ஒரு மறைவிட கட்டடத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வரும் ஒருவர் என்பதை இஸ்ரேல் பின்னர் உறுதிப்படுத்தி உள்ளது.

உயிரிழந்தது ஹமாஸ் தலைவர்தானா என்பதை உறுதி செய்ய 62 வயதான சின்வரின் விரல் ஒன்று வெட்டப்பட்டு இராணுவ ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

யாஹியா சின்வர் தலையில் துப்பாக்கிக் குண்டு தாக்கி ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஒரு சிறிய வகை ெராக்கெட் அல்லது தாங்கி குண்டு தாக்குதலுக்கு உள்ளான பின்னர் அவரது முன்னங்கை உடைந்து இரத்தப்பெருக்கு ஏற்பட்டது.

மின்சாரக் கம்பியைப் பயன்படுத்தி அவர் இரத்தப் பெருக்கினை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முழுவதுமாக பலனளிக்கவில்லை.


சின்வர் இறந்து 24 முதல் 36 மணி நேரத்துக்கு பின்னர் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்த உடன் சின்வரின் உடல் இஸ்ரேல் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர்கள் யாரும் அறியாத இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

கடைசி கணங்களில் இறக்கும் தறுவாயில் கூட, தன்னைத் தாக்கி வீடியோ எடுத்த ட்ரோன் மீது மரக்கட்டையை எறிந்து இஸ்ரேலிய இராணுவத்துக்கு எதிரான தனது எதிர்ப்பை யஹ்யா சின்வர் காட்டியுள்ளார்.

சின்வரின் மரணம் பலஸ்தீன போராட்டத்தின் சின்னமாக மாறி இருக்கிறது. அவர் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த் தியாகம் செய்த யாஹியா சின்வர் தனது கொள்கையில் உறுதியானவர், தைரியமானவர், பாலஸ்தீன விடுதலைக்காக அவர் உயிர்த் தியாகம் செய்துள்ளார் என்றும் அவரது தரப்பு கூறியுள்ளது.

‘அவர் தனது முடிவை தைரியத்துடன் சந்தித்தார். கடைசி மூச்சுவரை அவர் போராடியுள்ளார். அவர் தனது வாழ்க்கை முழுவதையும் பாலஸ்தீன விடுதலைக்கான போராளியாகவே வாழ்ந்துள்ளார் என பாலஸ்தீன மக்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவரான யஹ்யா சின்வர் (Yahya Sinwar) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிக வீறாப்புடன் தெரிவித்துள்ளார்.

இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொலை:

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சின்வர் என இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வந்தது. கடந்த சில மாதங்ளுக்கு முன்பு ஹமாஷ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைமையை ஏற்ற சின்வர் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வந்தார்.

தற்போது ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மக்கள் மீது பல தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் (62) மட்டும் இஸ்ரேல் இராணுவத்திடம் இருந்து நீண்டகாலமாக தொடர்ந்து தப்பி வந்தார்.

மக்களோடு மக்களாக அவர் கலந்திருந்ததால், அவர் பிடிபடவில்லை. அவரை உயிரோடு அல்லது பிணமாக மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் இராணுவம் சபதம் செய்திருந்தது.

இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தியது. இதையடுத்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டார்.

அவர் அளித்த பேட்டியில், “உயிர்த் தியாகம் செய்த யாஹியா சின்வர் தனது கொள்கையில் உறுதியானவர், தைரியமானவர். பாலஸ்தீன விடுதலைக்காக அவர் உயிர்த் தியாகம் செய்துள்ளார். அவர் தனது முடிவை தைரியத்துடன் சந்தித்தார். கடைசி மூச்சுவரை அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அவர் தனது வாழ்க்கை முழுவதையும் போராளியாகவே வாழ்ந்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.

சின்வர் கொல்லப்பட்ட இறுதிக் கணம்:

சின்வர் கொல்லப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு அரசு, “சாத்தானுக்கு பெரிய அடியை இஸ்ரேல் கொடுத்துள்ளது, எங்கள் இலக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவரது கடைசி நிமிட வீடியோக்களை வெளியிட்டு, இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன. சின்வர் கொல்லப்பட்ட வீடியோ உலக அளவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அவரின் இழப்பு இஸ்லாமிய போராளிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சின்வரின் இறுதித் தருணங்களை இஸ்ரேல் வெளியிட்டது தவறு என கடுமையான கண்டனங்களும் எழுந்துள்ளன.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பிரபல திரைப்பட இயக்குனரான டான் கோஹன், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சின்வர் தனது இறுதிக் கடமையை ஆற்றும் போது உயிரிழந்துள்ளார். மேலும் கடைசி நொடியில் கூட தன்னை வீடியோ எடுத்த ட்ரோன் மீது தடியை எறிந்து ஆக்கிரமிப்புக்கு எதிரான தனது கடைசி எதிர்ப்பை தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சின்வர், பாலஸ்தீன மக்கள் பார்வையில் போராட்டத்தின் சின்னமாக மாறி இருக்கிறார். அவர் வீரமரணம் அடைந்ததாகவும் மக்கள் கூறி வருகின்றனர். மேலும் இஸ்ரேல் தனது எதிரியை தற்போது தீர்த்து கட்டி இருந்தாலும், இந்தப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.

சின்வரின் மரணம் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் பல போர் நிபுணர்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதன் பின்னர், தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் உச்சபட்ச தலைவரான யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளமை அரபு உலகில் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.    --ஐங்கரன் விக்கினேஸ்வரா - நன்றி தினகரன் 

No comments:

Post a Comment