மேலும் சில பக்கங்கள்

உலகச் செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து உக்கிரம்: வடக்கு காசா முற்றுகைக்கு மத்தியில் லெபனானுடன் சிரியாவிலும் தாக்குதல்

ஈராக், சிரிய குர்திஷ் நிலைகள் மீது துருக்கி கடும் தாக்குதல்

துருக்கி விமான நிறுவனம் மீதான தீவிரவாத தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் போர் விமானங்கள் கூட்டமாக சென்று குண்டு மழை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மீண்டும் நிவாரணப் பொருட்களை வழங்கிய இந்தியா 


இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து உக்கிரம்: வடக்கு காசா முற்றுகைக்கு மத்தியில் லெபனானுடன் சிரியாவிலும் தாக்குதல் 

October 25, 2024 7:14 am 

வடக்கு காசாவில் 20ஆவது நாளாகவும் இஸ்ரேலின் கடுமையான முற்றுகை நேற்றும் நீடித்ததோடு லெபனான் தலைநகரில் இடம்பெற்ற வான் தாக்குதலில் குடியிருப்புக் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சிரிய தலைநகர் டமஸ்கஸ் மற்றும் மேற்கு நகரான ஹோம்ஸிலும் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஓர் ஆண்டைத் தாண்டியுள்ள காசா போர், தற்போது பிராந்தியம் எங்கும் பரவி இருக்கும் சூழலிலேயே டமஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் நகருக்கு அருகில் இருக்கும் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மத்திய டமஸ்கஸின் கப்ர் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஒரு படை வீரர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்திருப்பதாக சிரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாக்குதல்களில் பொருட்சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அந்த அமைச்சு குறிப்பிட்டபோதும் அது பற்றி விரிவான தகவல்களை வெளியிடப்படவில்லை.

எனினும் சிரியா மீது நடத்தும் தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் வழக்கம்போல் எந்த பதிலும் அளிக்கவில்லை. சிரியாவில் ஈரானுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் கடந்த பல ஆண்டுகளாக தாக்குதல்களை நடத்தி வருவதோடு, கடந்த ஆண்டு ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் அவ்வாறான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

மறுபுறம் ஹிஸ்புல்லாக்களின் கோட்டை என கருதப்படும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு 
பகுதியில் இஸ்ரேல் கடந்த புதன்கிழமை இரவு உக்கிர தாக்குதல்களை நடத்தியது. குறைந்தது 17 இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆறு கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.



லெபனானில் கடந்த செப்டெம்பர் 23 இல் மோதல் தீவிரமடைந்தது தொடக்கம் பெய்ரூட் புறநகரில் இதுவரையில் நடந்த பயங்கரத் தாக்குத லில் ஒன்றாக இது உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பெய்ரூட்டின் இரவு வானில் தீப்பிளம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்தது என அங்கிருப்பவர்கள் விபரித்துள்ளனர்

இத்தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டு ஒரு சிறுவன் உட்பட ஏழு பேர் காயமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேபோன்று லெபனானின் பல பகுதிகளிலும் இஸ்ரேல் கடந்த புதன்கிழமை நடத்திய தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் ஆரம்பித்தது தொடக்கம் லெபனானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,574 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு, முதல் முறையாக துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் புதிய வகை ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி இஸ்ரேல் இலக்குகளை தாக்கியதாகக் குறிப்பிட்டது. எனினும் அது தொடர்பில் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை. லெபனானில் இருந்து வீசப்பட்ட எறிகணைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவைகளில் இரண்டு இடைமறிக்கப்பட்டதோடு மேலும் இரண்டு திறந்த வெளியில் விழுந்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.

தெற்கு லெபனானில் யட்டர் கிராமத்திற்கு வெளியே காயமடைந்தவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனான் இராணுவத்தின் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டதாக அந்த இராணுவம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அதேபோன்று ஹிஸ்புல்லா இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை எட்டும் கடைசி முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையிலேயே மோதல்களும் தீவிரமாக நீடித்து வருகின்றன.

காசா போர் வெடித்தது தொடக்கம் போர் நிறுத்த முயற்சியாக அடிக்கடி பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டு வரும் பிளிங்கனின் புதிய விஜயம், ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்ட பின்னர் இடம்பெற்றுள்ளது. அவரது மரணம் போர் நிறுத்தம் ஒன்றை எட்ட வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் நம்புகின்றன.

பிளிங்கன் நேற்று கட்டாரை சென்றடைந்தார். காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய மத்தியஸ்த நாடாக கட்டார் செயற்பட்டு வருகிறது. இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவைத் தொடர்ந்தே பிளிங்கன் கட்டார் சென்றுள்ளார்.

எனினும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தணிக்காத நிலையில் காசாவின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக வடக்கு காசாவில் இஸ்ரேலின் முற்றுகை 20 நாட்களை அடைந்திருக்கும் நிலையில் ஜபலியா நகரில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கே இஸ்ரேலின் படை நடவடிக்கை ஆரம்பித்தது தொடக்கம் அங்கு 770 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 1.000 பேர் வரை காயமடைந்திருப்பதாக காசா அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் தரை மற்றும் வான் வழியாக இஸ்ரேல் கடுமையாக தாக்கி வருவதோடு இதனால் அங்குள்ள குடியிருப்புகள் அழிக்கப்பட்டு மருத்துவமனைகள் செயலிழந்து காணப்படுவதோடு அங்கு உதவிகள் செல்வதையும் இஸ்ரேல் இராணுவம் தடுத்து வருகிறது.

ஜபலியா அகதி முகாம் மற்றும் சப்தாவி மற்றும் துவாம் பகுதிகளில் இருக்கும் வீடுகள் மற்றும் குடியிருப்புத் தொகுதிகளை குண்டு வைத்தும் தீ வைத்து அழித்துவரும் இஸ்ரேலியப் படை மக்களை தெற்கை நோக்கி வெளியேற்றி வருவதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.    வடக்கு காசாவில் இயங்கும் ஒரே ஒரு தீயணைப்பு வாகனத்தை இஸ்ரேலிய டாங்கிகள் தாக்கி அழித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேலிய முற்றுகைக்கு மத்தியில் வடக்கில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று பலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் ஓர் ஆண்டுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,800ஐ தாண்டி இருப்பதோடு மேலும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 





ஈராக், சிரிய குர்திஷ் நிலைகள் மீது துருக்கி கடும் தாக்குதல் 

October 25, 2024 8:44 am 

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்திஷ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது துருக்கி நேற்று முன்தினம் கடும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

குர்திஷ் தீவிரவாதிகள் இருவர் துருக்கித் தலைநகரில் திடீரென மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் தீவிரவாதிகளின் முகாம்களை இலக்கு வைத்து இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கு துருக்கி யுத்த விமானங்களைப் பயன்படுத்தியுள்ளது. இதன் ஊடாக குர்திஷ் தீவிரவாதிகளின் 32 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் குறித்த விவரங்களை துருக்கி பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை. ஆனால் குர்திஷ் இலக்குகள் மீதான எதிர் தாக்குதலில் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.   நன்றி தினகரன் 





துருக்கி விமான நிறுவனம் மீதான தீவிரவாத தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு 

- 20இற்கும் மேற்பட்டோர் காயம்

October 24, 2024 10:33 am 

துருக்கியில் உள்ள ஏரோஸ்பேஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

துருக்கி தங்கள் இராணுவத்துக்கு தேவையான போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனத்தில் தயாரிக்கிறது. இது தலைநகர் அங்காராவில் இருக்கும் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு நிறைந்த அந்த நிறுவனத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் யெரில்காயா தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை ஓர் ஆண் மற்றும் பெண் என இருவர் நடத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் என துருக்கி துணை ஜனாதிபதி செவ்டெட் இல்மா கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் குர்திஷ்தான் வொர்க்கர்ஸ் குழுவை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுவினரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பிகேகே பயங்கரவாத அமைப்பாக துருக்கியால் அறிவிக்கப்பட்ட இயக்கமாகும். ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவும் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகவே அடையாளப்படுத்துகிறது.

தாக்குதல் நடந்தபோது துருக்கி ஜனாதிபதி எர்டோகான், ரஷ்யாவின் காசன் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்தார். இத்தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்யா இரங்கல் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 






இஸ்ரேல் போர் விமானங்கள் கூட்டமாக சென்று குண்டு மழை 

- ஈரானில் இராணுவ தளங்கள் தரைமட்டம்

October 27, 2024 6:08 pm 

ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் 100 போர் விமானங்கள் இன்று (27) அதிகாலை ஆக்ரோஷ தாக்குதல் நடத்தின. ஈரானின் ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி ஆலைகள், ஆயுத கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் கூட்டமாக சென்று குண்டுமழை பொழிந்தன. இதில் ஈரான் இராணுவ தளங்கள் தரைமட்டமாகின.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வான், தரைவழி தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து லெபனான் மீதும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய தீவிரவாத அமைப்புகள் ஈரானின் பினாமிபோல செயல்படுகின்றன. இதேபோல சிரியா அதிபர் ஆசாத், ஏமனின் ஹவுதி தீவிரவாதிகளும் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு தரப்பும்மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்தது. கடந்த 1ஆம் திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் இராணுவம் 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த சூழலில், ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் 100 போர் விமானங்கள் இன்று அதிகாலை 2.00 மணி முதல் தாக்குதல் நடத்தின. முதலில், ஈரான் எல்லை பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த ரேடார் சாதனங்களை இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன.

ஈரானின் நட்பு நாடான சிரியாவின் ரேடார் அமைப்புகளும் குண்டுவீசி அழிக்கப்பட்டன. 2ஆவது கட்டமாக, இஸ்ரேல் போர் விமானங்கள் கூட்டமாக சென்று ஈரானின் ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி ஆலைகள், ஆயுதகிடங்குகள் மீது குண்டுமழை பொழிந்தன. 3ஆவது கட்டமாக, ஈரானின் 20 இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஆக்ரோஷ தாக்குதல் நடத்தின. இதில் ஈரான் ராணுவ தளங்கள் தரைமட்டமாகின. சுமார் 3 மணி நேரம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

2,000 கி.மீ. பயணித்த விமானங்கள்: இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹாகரி கூறும்போது, ‘‘இஸ்ரேல் மீது ஈரான் கடந்த 1ஆம் திகதி நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் ஈரானின் இராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகளை முற்றிலுமாக அழித்துள்ளோம். இஸ்ரேல் போர் விமானங்கள் சுமார் 2,000 கி.மீ. தூரம் பறந்து சென்று தாக்குதல் நடத்தின. அனைத்து விமானங்களும் பத்திரமாக இஸ்ரேல் திரும்பிவிட்டன’’ என்றார்.

இஸ்ரேல் இராணுவ வட்டாரங்கள் கூறியபோது, ‘‘ஈரான் மற்றும் அதன்ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக 7 முனைகளில் போரிட்டு வருகிறோம். ஈரான் ராணுவத்தால் எங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இராணுவ தளத்தில் ரஷ்யாவின் எஸ்ஆ300 ஏவுகணை தடுப்பு சாதனம் நிறுவப்பட்டு இருந்தது. அதை தாக்கி அழித்துள்ளோம். எங்களது ஒரு போர் விமானத்தைகூட ஈரான் இராணுவத்தால் சுட்டு வீழ்த்த முடியவில்லை. ஈரான் மீண்டும் தாக்கினால், மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுப்போம். அமெரிக்கா கூறியதால், தற்போது ஈரானின் அணு ஆயுத தளங்கள், எண்ணெய் கிணறுகள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை’’ என்று தெரிவித்துள்ளன.

ஈரான் வெளியுறவு துறை வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காப்பு நடவடிக்கை எடுக்க ஈரானுக்கு உரிமை உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

அமைதி காக்க இந்தியா அறிவுரை: இஸ்ரேல் ஆ ஈரான் மோதலால் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அனைத்து தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும். அமைதியை பேண வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. இதனால், மேற்கு ஆசியாவில் மட்டுமின்றி, அதையும் தாண்டி பாதிப்புகள் ஏற்படும். நாடுகள் இடையே பதற்றம் அதிகரிப்பதால் யாருக்கும் எந்த பலனும் கிடையாது. அப்பாவி மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். எனவே, அனைத்து தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும். அமைதியை பேண வேண்டும். பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மேற்கு ஆசியாவில் வாழும் இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், எகிப்து, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘ஈரான் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. போர் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட கூடாது என அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன    நன்றி தினகரன் 





வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மீண்டும் நிவாரணப் பொருட்களை வழங்கிய இந்தியா 

October 27, 2024 4:28 pm 

நேபாளத்திற்கான நீண்டகால ஆதரவைத் தொடர்ந்து, அண்மையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசரகால நிவாரணப் பொருட்களின் இரண்டாவது நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்கியது.

இந்திய அரசின் சார்பில் இரண்டாவது செயலாளர் நாராயண் சிங் நிவாரண உதவித் தொகையை பாங்கே மாவட்ட உதவித் தலைமை அதிகாரி தத்தா ராஜ் ஹமாலிடம் வழங்கினார்.

“அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள், மருந்துகள், கொசுவலைகள்,உயிர் பாதுகாப்பு ஜாக்கெட்டுகள், தூங்கும் பாய்கள், உணவுப் பொருட்கள், கம் பூட், ஊதப்பட்ட ரப்பர் படகு மற்றும் மோட்டார் ஆகியவை அடங்கிய 21.5 டொன் மனிதாபிமான உதவிகள் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. ” என்று காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.நேபாளத்திற்கு தேவையான ஆதரவையும் உதவியையும் இந்தியா தொடர்ந்து வழங்கும் என்று காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார் பதிவிட்டுள்ளது.

“இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் தொடர்கிறது.மேலும் 21.5 டொன் பொருட்கள் நேபாளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அவசரகால நிவாரண உதவியானது, வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சுகாதாரப் பொருட்கள், மருந்துகள், உயிர் காப்பு ஜாக்கெட்டுகள், தூங்கும் பாய்கள், உணவுப் பொருட்கள், றப்பர் படகுகள் மற்றும் மோட்டார்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. நேபாளத்திற்கு தேவையான ஆதரவையும் உதவியையும் இந்தியா தொடர்ந்து வழங்கும்” என்று இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

முன்னதாக ஒக்டோபர் 7 ஆம் திகதி, நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அவசரகால நிவாரணப் பொருட்கள், இந்திய அரசின் சார்பில் இரண்டாவது செயலாளர் நாராயண் சிங் அவர்களால் பாங்கே மாவட்ட முதன்மை அதிகாரி ககேந்திர பிரசாத் ரிஜாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

தார்பாய்கள், தூங்கும் பைகள், போர்வைகள், குளோரின் மாத்திரைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய 4.2 டொன் மனிதாபிமான உதவிகள் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அண்மைய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவுகளுக்குப் பிறகு அனைத்து ஆதரவையும் உதவிகளையும் வழங்க இந்திய அரசு நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. (ANI))    நன்றி தினகரன் 




No comments:

Post a Comment