மேலும் சில பக்கங்கள்

அக்கரைப் பச்சை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகர்களான எம் ஜி ஆர், சிவாஜி


இருவரும் வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதும் இருவரும் ஒன்று சேர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்த்தே வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அடுத்த கட்ட நாயகர்களாக திரையில் பவனி வந்த ஜெய்சங்கர், ரவிசந்திரன் இருவரும் ஆரம்பம் முதலே ஒன்று சேர்ந்து படங்களில் நடிக்க தயங்கவில்லை. அப்படி ரவிசந்திரன், ஜெய்சங்கர் இருவரும் சேர்ந்து நடித்த படம்தான் அக்கரைப் பச்சை.

 தன்னிடம் இருப்பதையிட்டு சந்தோஷப் படாமல் பிறரிடம் இருப்பதை

எண்ணி , எண்ணி ஆதங்கப் பட்டு மன நிம்மதியை இழக்கும் பலரின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்ற கருவை கொண்டு பேராசிரியர் ஏ எஸ் பிரகாசம் இப் படத்தின் கதை, வசனத்தை எழுதியிருந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியரான இவர் எம் ஜி ஆரின் கண்ணன் என் காதலன் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, பின்னர் புகுந்த வீடு படத்தின் மூலம் பிரபலமாகியிருந்தார்.

அந்த வகையில் அவரின் கதையை யோகசித்ரா என்ற நிறுவனம் படமாக்கியது. ஜி. கே தர்மராஜன் என்ற புதியவர் படத்தை தயாரித்தார். தயாரிப்பாளர் புதியவர் என்பதாலோ என்னவோ குறைந்த செலவில் , சிக்கனமாக படம் தயாரானது. பிரகாசத்தின் கதையும் அதற்கு ஏதுவாக அமைந்தது.
அண்ணன் , இரண்டு தங்கைகள் மூவருமாக சேர்ந்து உபதேசம் என்ற பத்திரிகையை நடத்துகிறார்கள். வசந்தா செய்தி நிருபராகவும், அக்கா உதவி ஆசிரியையாகவும் பணிபுரிகிறார்கள். அக்கா, தங்கை இருவருக்குமே தங்களிடம் இல்லாத பொருள் மீதே எப்போதும் மோகம். வசதியாக , ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதே அவர்களின் ஒரே இலட்சியம். அக்கா பிரபல எழுத்தாளன் ராஜாவை காதலித்து மணக்கிறாள். வசந்தா தொழிலதிபர் பிரபுவை கல்யாணம் செய்கிறாள். ராஜா பொருளாதார வசதியில் பின் தங்கியவனாகவே காணப்படுகிறான். வசந்தாவோ வசதி இருந்தும் கணவனின் அரவணைப்புக்கும், அன்புக்கும் ஏங்குகிறாள். அவனோ தொழிலிலேயே மூழ்கி கிடக்கிறான். இரண்டு சகோதரிகளும் திருப்தியின்றி வாழ்கிறார்கள்.


அவர்களை திருப்தி செய்ய பிரபு, ராஜா இருவரும் ஓர் இணக்கப் பாட்டுக்கு வருகிறார்கள். அதன் படி பிரபு தன் தொழிற்சாலையை ராஜாவிடம் முற்றாக ஒப்படைத்து விட்டு வசந்தவுடன் கிராமத்தில் குடியேறி வெட்டியாக பொழுதை போக்குகிறான். ராஜாவோ நிர்வாக திறமை இன்றி தொழிற்சாலையை நட்டத்தில் நடத்துகிறான். இதனால் இரண்டு தம்பதிகளும் புதுப் பிரச்சனைகளை எதிர் கொள்கிறார்கள். அவர்கள் எவ்வாறு அதிலிருந்து மீள்கிறார்கள் என்பதே மீதிக்கதை.
அம்புலிமாமா கதையை போல் படத்தின் கதை அமைந்த போதும் , வசனங்கள் மூலம் அதை சரி செய்கிறார் பிரகாசம். இதனால் காட்சிகள் ரசிக்கும் படி அமைந்தன. படத்தில் அக்கா வேடத்தை ஏற்ற

லஷ்மி நடிப்பில் தன் திறமையை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார். அவருக்கு சோடை போகாவண்ணம் ரவிச்சந்திரன் நிதானமான தன் நடிப்பை வழங்கியிருந்தார். ஜெய்சங்கர், ஜெயசித்ரா இருவரும் படம் முழுவதும் துறு துறுவென்று காட்சியளித்தார்கள்.நாகேஷ் படத்தை நகர்த்த உதவுகிறார். தாயாக வரும் சாவித்திரிக்கு வாய்ப்பு குறைவு. இப்படி மெலிந்த ராஜஸ்ரீயை ஒரு போதும் பார்த்ததில்லை என்பது போல் சில காட்சிகளில் வருகிறார் ராஜஸ்ரீ.
 
படத்தில் ரவிசந்திரன், ஜெய்சங்கர் இருவரும் இருந்தும் சண்டை காட்சி இல்லை. வில்லனும் இல்லை.ராஜஸ்ரீ இருந்தும் கவர்ச்சி நடனம் இல்லை. இப்படி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருந்தார்கள். கண்ணதாசன் எழுதிய இக்கரைக்கு அக்கரைப் பச்சை, அரசனை பார்த்த பொண்ணுக்கு புருஷனை பார்த்தால் பிடிக்காது, ஊர் கோலம் போகின்ற பனிக் கூட்டம் எல்லாம், பாடல்கள் எல்லாம் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் சுவை சேர்த்தன.


ஏ .வெங்கட் படத்தை ஒலிப்பது செய்ய , என் . வெங்கடேஷ் படத்தை டைரெக்ட் செய்திருந்தார். வெங்கட், வெங்கடேஷ் இருவருக்கும் ஒளிப்பதிவிவிலும், இயக்கத்திலும் தொழிநுட்ப ஆலோசகராக பிரபல ஒளிப்பதிவாளர் ஏ , வின்சென்ட் அனுசரணை வழங்கினார். காரனம் வெங்கட், வெங்கடேஷ் இருவரும் அவரின் சீடர்கள் ஆயிற்றே ! படம் ரசிகர்களின் ஆதரவை பெற தவறவில்லை.

No comments:

Post a Comment