ஈரான், நியூஸிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் ஜனாதிபதி அநுர குமாரவுடன் சந்திப்பு
இலங்கைக்கு விமானப்படைக்கு நவீன கண்காணிப்பு விமானம்
யாழில். இளம் வேட்பாளர் உயிரிழப்பு
அறுகம்பையை இலக்கு வைத்து தாக்குதல்?
அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு துரித நடவடிக்கைகள்
ஈரான், நியூஸிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் ஜனாதிபதி அநுர குமாரவுடன் சந்திப்பு
இன்றையதினம் (25) ஈரான், நியூஸிலாந்து, ஐரோப்பிய ஒன்றி தூதுவர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh) இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு மனப்பூர்வமாக வாழ்த்து கூறிய அவர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானின் (Masoud Pezeshkian) விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார்.
இலங்கைக்கு வரும் சுற்றுலா பிரயாணிகளினதும் பொது மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், நாட்டுக்குள் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு தொடர்புகள் குறித்து இதன்போது நினைவுகூறப்பட்டதுடன், பல துறைகள் ஊடாக ஈரான் – இலங்கை தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வதே தனது நோக்கமாகும் என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அது குறித்து சாதகமான பதில்களை கூறிய ஈரான் தூதுவர் வர்த்தகம்,தொழில்நுட்பம், கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைத்திட்டங்களுக்கு இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் ஜனாபதியுடன் சந்திப்பு
– இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, சுற்றுலா மேம்பாடு மற்றும் முதலீடுகளுக்கு உதவிகளை வழங்குவதாக நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் உறுதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் டேவிட் பயின்(David Pine) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறிய நியூசிலாந்து உயர் ஸ்தானிகர், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக நாட்டிற்குள் வலுவான மற்றும் பலன் மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.
தற்போது வருடாந்தம் இலங்கைக்கு 7,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், அந்த எண்ணிக்கையை 50,000 வரையில் அதிகரிக்க இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உயர் ஸ்தானிகர் உறுதியளித்தார்.
இலங்கைக்குள் நியூசிலாந்து முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம், பயிற்சி, வளங்கள் தொடர்பில் நியூசிலாந்தின் நிபுணத்துவ அறிவை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
இலங்கையின் கல்வித் துறையில், குறிப்பாக தொழில் கல்வித் துறையின் முன்னேற்றத்துக்காக நியூசிலாந்து பெற்றுக்கொடுக்ககூடிய உதவிகள் தொடர்பிலும், விளையாட்டுத்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் விளையாட்டுத்துறை நிர்வாக பயன்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இந்நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளினதும் இந்நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.
தற்போதைய சுற்றுலா பரிந்துரைகளை காலோசிதமானதாக மாற்றுவது குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதான சுற்றுலா வலயங்களுக்குள் பாதுகாப்பை
உறுதிப்படுத்தல், சட்டத்தை அமுல்படுத்தல், அவசர சேவைகளை வலுப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
நியூசிலாந்து பிரதி உயர் ஸ்தானிகர் கேப்ரியல் அயிசாக்கும் (Gabrielle Isaak) இதன்போது கலந்துகொண்டிருந்தார்.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திப்பு
– சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு விளக்கம்
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கமளித்ததுடன், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை மக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார்.
முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் முக்கியமான பங்காளியாகவுள்ளதோடு, இலங்கையின் இரண்டாவது பாரிய ஏற்றுமதி மற்றும் சுற்றுலா சந்தையாகவும் மூன்றாவது பாரிய இறக்குமதி சந்தையாகவும் செயல்படுகிறது.
இலங்கைக்கான தனது சந்தை பிரவேசத்தை விரிவுபடுத்தல், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஆதரவளிப்பதற்கான தமது அரப்பணிப்பை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது ஜனாதிபதியிடம் உறுதிப்படுத்தினர்.
அத்துடன், அறிவுப் பரிமாற்றம், கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளில் புதிய பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
தொழிற்கல்வி, கடல்சார் விவகாரங்கள், முதலீடு, அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பை தூதுக்குழு வலியுறுத்தியதுடன், இந்த பொதுவான முன்னுரிமைகளை முன்னெடுப்பதற்கு நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் உறுதி செய்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலை அமைதியான முறையில் நடத்திய இலங்கைக்கு தூதுக்குழுவினர் பாராட்டு தெரிவித்ததுடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து, நெதர்லாந்து, பிரான்ஸ், ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் தமது நாடுகளின் ஜனாதிபதிகள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்திகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இச்சந்தர்ப்பத்தில், ஜேர்மன் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமன் (Felix Neumann), இத்தாலிய தூதுவர் டெமியானோ பிராங்கோவிக், (Damiano Francovigh), ருமேனியாவின் தூதுவர் ஸ்டெலுடா அர்ஹைர் (Steluta Arhire), பிரான்சின் தூதுவர் மாரி-நோயில் டூரிஸ் (Marie-Noelle Duris), நெதர்லாந்தின் பிரதித் தூதுவர் இவாம்ஸ் ரட்ஜன்ஸ் (Iwams Rutjens) ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டனர். நன்றி தினகரன்
இலங்கைக்கு விமானப்படைக்கு நவீன கண்காணிப்பு விமானம்
அவுஸ்திரேலிய அரசு அன்பளிப்பு
அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை விமானப்படைக்கு Beechcraft King Air 350 என்ற கண்காணிப்பு விமானத்தை இலவசமாக நேற்று (24) வழங்கியுள்ளது.
இவ்விமானம் விமானப்படையின் வான்வழி, கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்கள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைப் பேணுவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு உதவும்.
இந்த விமானத்தை இலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கியமை, இரு நாடுகளுக்கிடையிலான வலுவான பங்காளித்துவத்தை வலியுறுத்துகிறது. ஆட் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்தவும்,இவ்விமானம் பயன்படுத்தப்படவுள்ளது.
என்று இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
யாழில். இளம் வேட்பாளர் உயிரிழப்பு
- வேட்பாளரின் மறைவிற்கு அங்கஜன் இராமநாதன் இரங்கல்
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஜனநாயக தேசியக்கூட்டணியில் தபாற்பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும், உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவருமான இனியவன் என அழைக்கப்படும் செந்திவேல் தமிழினியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த வேட்பாளரின் மறைவிற்கு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
குறித்த இரங்கல் செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“எனது உடுப்பிட்டி தொகுதி இணைப்பாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான எனது அன்புச் சகோதரன் செந்திவேல் தமிழினியனின் (இனியவன்) மறைவுச் செய்தியை கலங்கிய மனதுடன் அறியத்தருகிறேன்.
அன்னாரின் இழப்பு எமக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இத்துயரத் தருணத்தில் நாம் அனைவரும் அன்னாரின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரோடும் துணைநிற்பதோடு, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
யாழ் . விசேட நிருபர் - நன்றி தினகரன்
அறுகம்பையை இலக்கு வைத்து தாக்குதல்?
- எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க தூதரகம்
– 1997 இலக்கத்திற்கு அறிவிக்கவும்: பொலிஸ்
பிரபலமான சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து குறித்த தகவல் கிடைத்துள்ளதால், மறு அறிவித்தல் வரை தமது தூதரக பணியாளர்கள் மற்றும் அமெரிக்க சுற்றுலா பிரயாணிகள் அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு தூதரகம் அறிவித்துள்ளது.
அனைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் மற்றும் அவசரநிலைகள் தொடர்பில் 119 இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு தூதரகம் தமது பிரஜைகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பணிப்பிற்கமைய, பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் புலனாய்வு திணைக்களங்கள் எடுத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஏதேனும் அவசர நிலைமை அல்லது தகவல்களை வழங்க 1997 இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பொத்துவில், அறுகம்பை பகுதியில் இஸ்ரேலியர்கள் அதிகளவில் இருப்பதாகவும் குறிப்பாக இஸ்ரேல் இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் அதில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுவதூடு, அவர்களை இலக்கு வைத்து மற்றுமொரு நாட்டிலிருந்து வந்துள்ள சிலர் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நன்றி தினகரன்
அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு துரித நடவடிக்கைகள்
- விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை
– சிறிய, நடுத்தர அரிசி வர்த்தகர்களின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்க அரசு ஆதரவு
– நியாயமற்று இலாபம் ஈட்ட அரிசி கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் செய்யப்படமாட்டாது
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவை சந்தித்தார்.
அரிசி விலை மற்றும் அது தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, விவசாயம், காணி, கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க, வணிக, வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.எம். நைமுதீன், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யு. பின்னலந்த,நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
சிறிய, நடுத்தர அரிசி வர்த்தகர்களின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்க அரசு ஆதரவு
அரிசி சந்தையை சமநிலைப்படுத்துவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி வியாபாரிகளின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்க அரசாங்கம் ஆதரவு வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறைகளை ஊக்குவிப்பதற்கும் உர மானியம் வழங்குவதற்கும் அரசாங்கம் பெருமளவிலான பணத்தைச் செலவிடுவதால், மக்களுக்கு அரிசி வழங்குவதில் சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுக்கு சமூகப் பொறுப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரித்து அரிசி சந்தையை சமநிலைப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அரிசியின் கட்டுப்பாட்டு விலையை அதிகரிப்பதன் மூலம் எந்தவொரு வியாபாரியும் நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment