பாரதி பள்ளியின் இளைய தலைமுறையினர் மேடையேற்றிய சிலப்பதிகார நாடகத்தைப் பார்த்து மெய்மறந்த நாடக ஆர்வலர்களுள் நானும் ஒருவன். சிலப்பதிகாரக் காட்சிகளை தத்துரூபமாக எம் கண்முன்னே அரங்கேற்றி எம்மை எல்லாம் மெய்சிலிர்க்க வைத்த பெருமை பாரதி பள்ளியின் முதவர் திரு மாவை நித்தியானந்தன் அவர்களையே சாரும். சிலப்பதிகாரத்தின் பசுமையான நினைவுகளுடன் (ஒரு வருட காலத்துக்குள்) இராமாயண நாடகத்தை பார்க்கச் சென்றேன்.
கதையாகவே சித்திரிக்கப்பட்டிருந்தது. இராமனின் முடிசூட்டு நிச்சயயார்த்தம், இராமன் சீதை திருமணம் இவை இரண்டினையும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது, மாணவர்களின் நாட்டியங்களின் வாயிலாகக் காட்டப்பட்டமை பல்வேறு நாடக உத்திகளை திறம்பட கையாண்டு, காட்சிகளை வழி நடாத்திச் சென்ற பெருமை நாடக ஆசிரியரையே சாரும்.
கைகேயி - கூனி உரையாடல்களும், கைகேயி - தசரதன் உரையாடல்களும் அற்புதமாக அமைந்திருந்தது. இராமனைக் காட்டுக்கு அனுப்பும் கைகேயி, எமக்கு எரிச்சலை மூட்டி, வெறுப்பின் உச்சத்துக்கு எம்மை அழைத்துச் செல்ல, மகனைப் பிரிந்து, உயிரை விடப்போகும் தசரதன் கைகேயியின் காலில் விழுந்து கெஞ்சுவதும், மயங்கி விழுவதும் கண்களில் நீரை மல்க வைத்த காட்சிகள். இந்தச் சோகம், கடைசிக் காட்சியில் உச்சத்துக்குச் செல்கிறது. மரவுரி தரித்து, சீதையுடன் இராமனும் இலக்குவனும் காடு நோக்கி நடந்து செல்வதும், அவர்களைத் தொடரும் மக்கள் கூட்டமும் கண்களை விட்டு என்றும் அகலாக் காட்சியாகவும் நாடக ஆர்வலர்களை நீங்காத சோகத்தில் ஆழ்த்தியது.
மாணவர்கள் யாவரும் இங்கு வளர்ந்தவர்களாக இருந்த போதும், அவர்களின் தமிழ் உரையாடல்களும் பாடல்களும் திருத்தமாகவும்
தெளிவாகவும் இருந்தமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மாணவர்களின் இயல்பான
நல்ல நடிப்பும், இனிமையான கூத்து மெட்டுப் பாடல்களும் இவ்விரு நாடகங்களுக்கும் வளம் சேர்த்தன.
சிலப்பதிகாரத்தைப் போலவே, இந்த நாடகத்துக்கும் உடையலங்காரம் மிகச் சிறப்பான வலுவினைக் கொடுத்திருந்தது.
21 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழும் இளம் தலைமுறையினர்,
தமிழர் பாரம்பரிய இலக்கியப் பாடல்கள்
கதைகளை விரும்பி,
நாடகப் பாத்திரங்களில் தம்மை ஈடுபடுத்தி,
மேடையில் நடிப்பது என்பது தமிழர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட
வேண்டியது. மேலும் சிலப்பதிகாரம், இராமாயணம்
போன்ற நாடங்கள் இங்கு வாழும் இளம் சமூகத்தினருக்கு தமிழ் மொழியை மட்டுமன்றி
நமது பாரம்பரிய கலை கலாசார விழுமியங்களை வலுப்படுத்த உதவும் என்பதனையும் ஆழமாக பதிவு
செய்ய விரும்புகிறேன்.
ஒஸ்ரேலியா
No comments:
Post a Comment