.
தமிழ்த் திரையுலகில் முன்ணணி பட நிறுவனங்களில் ஒன்று ஏ எல் எஸ் புரொடக்க்ஷன்ஸ் . இதன் அதிபரான ஏ. எல் . சீனிவாசன் தமிழில் மட்டுமன்றி பல மொழிகளில் படங்களை தயாரித்தவர். அதோடு திரையுலகில் பல சங்கங்களுக்கு தலைவராகவும் விளங்கியவர். இவர் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்து விட்டால் அதற்குரிய கலைஞர்கள் , தொழிநுட்பவியலாளார்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்கி விடுவார். படம் அவரின் சாரதா ஸ்டுடியோவில் உருவாகி திரைக்கு வந்து விடும்.
இந்த செயல் முறையின் கீழ் ஏ எல் எஸ் , ஏவி . எம் .ராஜன், முத்துராமன், காஞ்சனா நடிப்பில் , சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் நியாயம் கேட்கிறோம் என்ற படத்தை தயாரித்தார். படம் தோல்விப் படமானது. ஐந்து இலட்சம் ருபாய் சுளையாக நஷ்டம் !
இதனால் வெறுப்படைந்த ஏ .எல் .எஸ் .தனது படத் தயாரிப்பு நிர்வாகியான வீரய்யாவை அழைத்து கடிந்து கொண்டார். அது மட்டுமன்றி உடனடியாக மற்றுமோர் படத்தை தயாரித்து இலாப கணக்கு காட்ட வேண்டும் என்றும் கடுமையாக சொல்லி விட்டார் . இதன் காரணமாகவே சூட்டோடு சூடாக சினிமாப் பைத்தியம் படம் தயாரானது.
முதலாளியின் கடும் சொல்லுக்கு உள்ளான வீரய்யா உடனடியாக சென்று இயக்குனர் முக்தா சீனிவாசனை பார்த்தார். தனக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடத்தை சொல்லி உதவும் படி கேட்டுக் கொண்டார். வெளிப் படங்களை பொதுவில் இயக்காத முக்தா, வீரய்யாவுக்காக குறைந்த செலவில் துரித கதியில் ஒரு படத்தை உருவாக்கித் தர முன் வந்தார்.
இதன் காரணமாக ஹிந்தியில் குட்டி ( Guddy ) என்ற பெயரில் புதுமுகம் ஜெயபாதுரி நடிப்பில் தயாராகி வெற்றி பெற்ற படம் தமிழில் சினிமாப் பைத்தியமானது. சினிமா மீது அதீத மோகம் கொண்ட கல்லூரி மாணவி ஜெயா சினிமா பார்த்து ரசிப்பதோடு நின்று விடாது ஒரு படி மேலே போய் நடிகர் ஜெய்சங்கரை கல்யாணம் செய்து கொள்ள கங்கணம் கட்டிக் கொள்கிறாள். இந்த வெறியினால் ஜெய்சங்கரின் பெயரை தன் கையில் பச்சை குத்திக் கொள்கிறாள்.
அவளையே திருமணம் செய்ய ஆசை படும் நடராஜனுக்கு இது அதிர்ச்சியை அளிக்கிறது. பெற்றோர்களும் மகளின் நிலையை பார்த்து வருந்துகிறார்கள். இவர்கள் எல்லோரும் இணைந்து சினிமா என்றால் என்ன, அங்கு நடக்கும் சம்பவங்கள், சங்கடங்கள் என்ன என்பதை ஜெயாவுக்கு புரிய வைக்க முனைகிறார்கள். சினிமா ஸ்டுடியோக்களுக்கு ஜெயாவை அழைத்து சென்று , நடிகர்களை காட்டி, படப்பிடிப்புகளை காட்டி , நிழலுக்கும், நிஜத்துக்கும் உள்ள வேறுபாடுகளை அவளும்கு உணர்த்துகிறார்கள். அதன் பின் ஜெயாவும், நடராஜனும் இணைந்தார்களா என்பதே கிளைமக்ஸ் !
படத்தில் ஜெயாவாக ஜெயசித்ரா நடித்தார். பாத்திரத்துடன் பொருந்துவதாக அவரின் நடிப்பு அமைந்தது. ஆனாலும் ஹிந்தியில் புதுமுகமாக ஜெயபாதுரியின் நடிப்பில் இருந்த ஈர்ப்பு , தமிழில் ஜெயசித்ரா நடிப்பில் சற்று மங்கிய தெரிந்தது. காரணம் ஏற்கனவே இது போன்ற குறும்புக்கார வேடங்களில் தமிழில் அவர் நடித்து விட்டதுதான்! நடராஜனாக கமல்ஹாசன் நடித்தார் . அவரின் ஆரம்ப கால படம் என்பதால் நடிப்பும் அந்தளவிலேயே இருந்தது. சில இடங்களில் உருக்கமாகவும் நடித்திருந்தார். பி. ஆர். வரலஷ்மிக்கு மனதில் நிற்கும் பாத்திரம். ஜெய்சங்கர் இதில் ஜெய்சங்கராக வந்து இறுதியில் திருப்பத்துக்கு உதவினார். அவருடைய அசிஸ்டென்ட் சோ. இவர்களுடன் சுந்தரராஜன், சௌகார் ஜானகி, மனோரமா,நீலு, எஸ். வரலஷ்மி, சச்சு ஆகியோரும் நடித்தார்கள்.
இவர்களைத் தவிர சிவாஜி, ஜெயலலிதா, பாலாஜி, செந்தாமரை, சி. ஐ டி சகுந்தலா, இயக்குனர்களான ஏ. பீம்சிங், சி வி ராஜேந்திரன், பி. மாதவன், ஆகியோரும் படத்தில் தோன்றியும், நடித்தும் ஜெயாவையும், ரசிகர்களையும் மகிழ்வித்தார்கள். இவர்களில் பீம்சிங், மாதவன் இருவரும் ஏ. எல் சீனிவாசனால் முதன் முதலாக இயக்குநர்களாக அறிமுகப்படுத்தப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் மூன்றே மூன்று பாடல்கள்தான். கண்ணதாசன் பாடல்களை எழுத சங்கர் கணேஷ் இசையமைத்தனர். வாணி ஜெயராம் குரலில் ஒலித்த என் உள்ளம் அழகான வெள்ளித் திரை பாடல் மட்டுமே ரசிக்கும் படி ஒலித்தது. படத்தை வி .செல்வராஜ் ஒளிப்பதிவு செய்தார் .
குல்சார் எழுதி, ரிஷிகேஷ் முகர்ஜி ஹிந்தியில் இயக்கிய படத்துக்கு ஏ. எஸ். பிரகாசம் கதை வசனம் எழுதினார். வேலைக்கு போன புருஷன் வீடு திரும்புற வரைக்கும் காத்திருக்கிறதும், கவலை படுறதும் பொண்ணோட பழக்கம், நீ கற்பனை பண்ணி வைத்திருப்பது எல்லாம் திரையில் தெரியும் நிழல் அது நிஜமில்லை, நிழல் என்று ஒன்றிருந்தால் நிஜம் என்று ஒன்று இருக வேண்டும் தானே போன்ற வசனங்களில் பிரகாசம் தெரிந்தார். சில மாற்றங்களுடன் முக்தா சீனிவாசன் படத்தை தமிழில் இயக்கினார். படம் வெற்றி பெற்று ஏ. எல். எஸுக்கு இலாபத்தை பெற்று தந்தது. நூறு நாள்கள் ஓடிய இந்தப் படம்தான் பெரும் தலைவர் காமராஜர் பார்த்த கடைசிப் படம் என்பது ஒரு விஷேசம். அது மட்டுமன்றி ஏ எல் சீனிவாசன் தயாரித்த கடைசிப் படமாகவும் சினிமாப் பைத்தியம் அமைந்தது.
No comments:
Post a Comment