மேலும் சில பக்கங்கள்

பாரதி என்றுமே தமிழுக்குச் சொத்தாவான் !

 .

image0.jpeg





மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா


பாரதி எங்கள் பண்பாட்டுப் பெட்டகம்
பட்டதை பக்குவமாய் ஈந்திட்ட வரகவி
விடுதலை நோக்கியே விரைந்திட்ட வீரன்
வீரமும் விவேகமும் நிறைந்த நற்கவிஞன்

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன் பாரதி
அமுதென்று தமிழதனை அகமிருத்திச் செப்பினான்
பன்மொழிகள் தெரிந்தாலும் தாய்மொழியாம் தமிழை
தலையேற்றி நின்று தரணிக்கே உரைத்தான்

முற்போக்குச் சிந்தனையை முன்னுக்கு வைத்தான்
பிற்போக்கு என்றாலே பிய்த்துமே எறிந்தான்
நற்போக்கு உள்ளோரை நயந்தேற்றி நின்றான்
நாட்டின் விடுதலைக்காய் நலமிழந்தும் நின்றான்

மூடத் தனத்தை மூர்க்கமாய் எதிர்த்தான்
சாதித் திமிரை தகர்த்தெறிந்து நின்றான்
உண்மையை நேர்மையை உயிரெனவே எண்ணினான்
கண்ணிலே கம்பீரம் காட்டியே  நின்றான்

பாரதியின் பாட்டு பாமரர்க்கு விருந்தாகும்
பண்டிதர்க்கு அவர்பாட்டு வேண்டாத மருந்தாகும்
பாப்பாவை முன்னிறுத்திப் பலவுரைத்தான் பாரதி
பற்பல தத்துவங்கள் பலருக்கும் இருந்தன

பக்தியைப் பாரதி பக்குவமாய்ப் பார்த்தான்
சத்தியமாய் பக்தியாய் தன்மனதில் இருத்தினான்
கீதையைப் பாடினான் கண்ணனைப் பாடினான்
பாஞ்சாலி சபதத்தால் பலவற்றைக் கூறினான்

எதுகையும் மோனையும் இணைந்துமே நின்றன
எத்தனையோ வித்தைகளை கவிதையில் காட்டினான்
பாரதியின் பாட்டைப் பலருமே படித்திட்டால்
பார்க்காத அத்தனையும் பார்த்துமே வியந்திடலாம்

அடிமைத் தளையகற்ற அத்தனையும் பாடினான்
ஆனாலும் அதனூடே அன்னைத்தமிழ் ஒளிர்ந்தது
அதிகார வர்க்கத்தை அவன்பாட்டு அசைத்தது
அஞ்சாத சிங்கமாய் அவனெங்கும் திரிந்தானே

விடுதலை வேண்டுவார் பாரதியைப் பார்க்கின்றார்
வீரத்தை நாடுவார் பாரதியை நாடுகிறார்
பக்திக்கும் பாரதியே பண்புக்கும் பாரதி
பாரதி என்றுமே தமிழுக்குச் சொத்தாவான் ! 





No comments:

Post a Comment