ஜனாதிபதி அநுர உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பாப்பரசரின் மறைவுக்கு இரங்கல்
அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும் - ஹரிணி அமரசூரிய
மைத்திரிபால சிறிசேனவிடம் 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு
யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை ஆராய்ந்து விசாரிக்கும் குழுவில் ஷானி அபேசேகர
ஜனாதிபதி அநுர உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பாப்பரசரின் மறைவுக்கு இரங்கல்
Published By: Digital Desk 3
21 Apr, 2025 | 05:00 PM
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவரது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்ததாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
பாப்பரசருக்கு கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், வைத்தியர்களின் கண்காணிப்பில் இருந்த பாப்பரசர் பிரான்சிஸ் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், இன்று திங்கட்கிழமை (21) நித்திய இளைப்பாற்றுதல் அடைந்ததுள்ளார். காலை 7.35 மணிக்கு பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்ததாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
அந்த வகையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு ஆழ்ந்த துயரத்துடன், மறைவுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை மக்களின் சார்பாக அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது கருணை, நீதி மற்றும் மத நல்லிணக்கம் ஆகியன மரபுகள் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் 2015 ஆம் ஆண்டு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்களால் கருணை, பணிவு மற்றும் ஆன்மீகத்தின் கலங்கரை விளக்கமாக பாப்பரசர் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார்.
அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன்; விரிவான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகை
அமைதியில் இளைப்பாறுவாரா எனத் தெரிவித்து, வெள்ளை மாளிகை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோர் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் உடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸை ஞாயிற்றுக்கிழமை (20) சந்தித்தார்.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸ்
பாப்பரசர் பிரான்ஸிஸின் மரணத்தை அறிந்து நானும் என் மனைவியும் மிகுந்த வருத்தமடைந்தோம். எவ்வாறாயினும், பரிசுத்த பாப்பரசர் தனது வாழ்நாள் முழுவதும் மிகவும் பக்தியுடன் சேவை செய்த திருச்சபையுடனும் உலகத்துடனும் ஈஸ்டர் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது என்பதை அறிந்து எங்கள் கனத்த இதயங்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளன.
பாப்பரசர் பிரான்ஸிஸ் அவரது இரக்கத்திற்காகவும், திருச்சபையின் ஒற்றுமைக்கான அவரது அக்கறைக்காகவும், அனைத்து விசுவாசிகளின் பொதுவான காரணங்களுக்காகவும், மற்றவர்களின் நலனுக்காக பாடுபடும் நல்லெண்ணம் கொண்டவர்களுக்காகவும் அவர் காட்டிய அயராத அர்ப்பணிப்புக்காகவும் நினைவுகூரப்படுவார். படைப்பின் மீதான அக்கறை என்பது கடவுள் மீதான நம்பிக்கையின் இருத்தலியல் வெளிப்பாடு என்ற அவரது நம்பிக்கை உலகெங்கிலும் உள்ள பலருடன் எதிரொலித்தது.
மக்கள் மற்றும் கிரகத்தின் மீதான தனது பணி மற்றும் அக்கறை மூலம், அவர் பலரின் வாழ்க்கையை ஆழமாகத் தொட்டார்.
பல வருடங்களாக புனிதர் திருச்சபையுடனான எங்கள் சந்திப்புகளை நானும் ராணியும் மிகவும் அன்புடன் நினைவு கூர்கிறோம், மேலும் இந்த மாத தொடக்கத்தில் அவரைச் சந்திக்க முடிந்ததில் நாங்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்தோம்.
அவர் மிகுந்த மன உறுதியுடன் சேவை செய்த திருச்சபைக்கும், அவரது வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் இந்த உண்மையுள்ள சீடரின் பேரழிவு இழப்பால் துக்கப்படவுள்ள உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர்
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அனைவருக்கும் நியாயமான உலகத்தை மேம்படுத்துவதற்கான அவரது அயராத முயற்சிகள் ஒரு நீடித்த மரபை விட்டுச் செல்லும். ஐக்கிய இராச்சிய மக்கள் சார்பாக, முழு கத்தோலிக்க திருச்சபைக்கும் எனது மனமார்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
உலகளாவிய ஒற்றுமைக்கும், இரக்கத்திற்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் மறைவுக்கு நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, சமூக நீதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, எல்லைகள் மற்றும் நம்பிக்கைகளைக் கடந்து, உலகம் முழுவதும் உள்ள இலட்சக் கணக்கான மக்களை சென்றடைந்தது.
வத்திக்கானுக்கும், கத்தோலிக்க சமூகத்திற்கும், அவருடைய ஞானத்தைப் போற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா கடவுளின் அருளில் நித்திய இளைப்பாறுதலைக் காணட்டும், மேலும் அவரது போதனைகள் இளம் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும் - ஹரிணி அமரசூரிய
Published By: Digital Desk 2
21 Apr, 2025 | 03:45 PM
அனைத்து பிரஜைகளும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் ஒரு நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அவசியம் என்றும், பொதுமக்களின் விவகாரங்கள் குறித்து அரசாங்கம் அக்கறையுடன் உள்ளது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (20) வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் மனிக் பாம் சனசமூக அபிவிருத்தி நிலையம் மற்றும் உக்குளங்குளம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர்,
"எமது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றம் இதுதான். முன்பு, 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 5% க்கும் குறைவான பெண்களே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர். ஆனால் இந்த நாட்டின் சனத்தொகையில் 52% ஆனவர்கள் பெண்களாவர்."
இந்த நாட்டில் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதிலும், குடும்ப அலகைப் பராமரிப்பதிலும், சமூகத்தைப் பராமரிப்பதிலும் சிறப்பாகப் பணியாற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் எம்மிடம் மிகக் குறைவாகவே உள்ளது.
எனவே அடுத்த தேர்தலில் வன்னி மாவட்டத்திலிருந்து சகோதர உறுப்பினர்களை மட்டுமல்ல, சகோதரிகளான உறுப்பினர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
வவுனியா தற்போது அபிவிருத்தியடைந்து வரும் நகரமாக உள்ளது. ஒரு உள்ளூராட்சி மன்றத்தினால் நடக்க வேண்டிய விடயங்கள் நடைபெற வேண்டும். கிராமத்தின் வளர்ச்சியில் உள்ளூராட்சி மன்றம் செயற்திறமாக தலையிட வேண்டும்.
வடபகுதி மக்களுக்கு கல்வி மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். பொதுவாக, நாட்டில் கல்வி வீணடிக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
குறிப்பாக வடக்குப் பகுதி கல்வித் துறைக்கு போதுமான கவனம் செலுத்தப்படாததால், மற்ற பகுதிகளை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதற்கிடையில், நான் இன்னும் ஒரு பயங்கரமான விடயம் பற்றி அறிந்தேன்.
இளைஞர் யுவதிகள் கல்வியின் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து வருகிறது. போதைப்பொருள் மற்றும் மது இப்போது எல்லா இடங்களிலும் சாதாரணமாக கிடைக்கிறது. இவற்றில் இருந்து விலகி இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இங்கே வேறு வழிகள் இல்லை.
விஞ்ஞானம், கலை, நாடகம் போன்ற துறைகளில் வளர்ச்சி இல்லாததால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியை இழந்துவிட்டனர். எனவே இதற்கு ஒரு பெரிய தலையீடு தேவை என்பதை உணர்ந்தேன்.
ஊழல் இல்லாத ஒரு குழுவை நீங்கள் தெரிவுசெய்தால், நாங்கள் உங்களுக்காக ஒதுக்கும் பணத்தை பயமின்றி ஒப்படைக்க முடியும். உங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு இதைப் பயன்படுத்த முடியும். "அதனால்தான் உங்கள் தெரிவு எங்களுக்கு முக்கியமானது" என்று பிரதமர் கூறினார்.
இச் சந்திப்பில், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். திலகநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் ஆகியோர் உட்பட பல உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் பிரதேச வாசிகள் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரி
மைத்திரிபால சிறிசேனவிடம் 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு
21 Apr, 2025 | 05:02 PM
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்கு மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (21) காலை ஆஜராகியிருந்தார்.
இதன்போது, மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். நன்றி வீரகேசரி
யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்
22 Apr, 2025 | 11:58 AM
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கப்பட ஏதுவாக யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்திருந்தார்.
அதன்போது, கடவுச்சீட்டு அலுவலகத்துக்காக மாவட்டச் செயலகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே, கடவுச்சீட்டு அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடமையாற்ற தேவையான தமிழ் உத்தியோகத்தர்களை அரச திணைக்களங்களில் இருந்து தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை அண்மையில் கொழும்பில் இருந்து வருகைதந்த விசேட குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை ஆராய்ந்து விசாரிக்கும் குழுவில் ஷானி அபேசேகர
Published By: Digital Desk 3
23 Apr, 2025 | 04:43 PM
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுக்கும் குழுவில் ஐந்தாவது நபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் பதில் பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு, விசாரணை அறிக்கையை ஆய்வு செய்ய ஐந்து உறுப்பினர்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment