மேலும் சில பக்கங்கள்

இலங்கைச் செய்திகள்

பலாலி ஊடாக காங்கேசன்துறை வரை பஸ் சேவைகள் : தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம்

யாழ். மண்டைதீவில்  சர்வதேச கிரிக்கெட் மைதானம் : விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சனத் உள்ளிடோர் கள விஜயம்

35 வருடங்களின் பின் யாழ். அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வீதி திறப்பு 

பலாலி வீதியில் பொங்கல் பொங்கி மகிழ்ச்சியை கொண்டாடிய மக்கள்!

வவுனியாவில் எல்லை கற்கள் நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் அறிவுறுத்தல் 



பலாலி ஊடாக காங்கேசன்துறை வரை பஸ் சேவைகள் : தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் 

10 Apr, 2025 | 04:35 PM

யாழ்ப்பாணம் பலாலி வீதி முழுமையாக வியாழக்கிழமை (10) திறக்கப்பட்டதையடுத்து, காங்கேசன்துறை - பலாலி - யாழ்ப்பாணம் வழித்தட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும் குறித்த வழித்தட பேருந்துகள் வசாவிளான் சந்தியில் அமைந்திருந்த இராணுவத்தின் வீதி தடையுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்திக்கொண்டன. 

தற்போது பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளமையால், இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764ஆம் இலக்க வழித்தட பேருந்துகள் பலாலி வீதியூடாக பருத்தித்துறை - பொன்னாலை வீதியை சென்றடைந்து, அதனூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் சேவையில் ஈடுபடும் எனவும், அதன் மூலம் பலாலி வடக்கு, அந்தோணிபுரம், மயிலிட்டியை சென்றடையும்.

மக்கள் குறித்த பேருந்து சேவை ஊடாக இலகுவாக யாழ்ப்பாண நகர் பகுதிக்கு தமது பயணத்தினை மேற்கொள்ள முடியும் எனவும், இன்னமும் ஓரிரு நாட்களில் நேர அட்டவணைகள் தயார் ஆனதும் , பேருந்து சேவைகள் இடம்பெறும் என 764ஆம் இலக்க வழித்தட , தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 




யாழ். மண்டைதீவில்  சர்வதேச கிரிக்கெட் மைதானம் : விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சனத் உள்ளிடோர் கள விஜயம்  

10 Apr, 2025 | 02:59 PM


யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் குழுவினர் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர். 

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு சென்ற அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்,  யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மனாடா யஹம்பத் உள்ளிட்ட குழுவினரே மண்டைத்தீவு பகுதியில் கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அந்த காணியின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். 

அங்கு மைதானம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டதோடு,


இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது குறித்தும் இதன்போது பேசப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய மைதானத்தின் கட்டுமானத்துக்காக நிதி உதவி வழங்குமாறு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

அதேவேளை சனத் ஜயசூரிய இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியையும்  சந்தித்துள்ளார்.  இந்த  சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தியும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 










 







நன்றி வீரகேசரி 



35 வருடங்களின் பின் யாழ். அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வீதி திறப்பு 

10 Apr, 2025 | 09:34 AM

யாழ்ப்பாணம் வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. 

அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு


செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில், குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் குறித்த வீதியானது இன்றைய தினம் வியாழக்கிழமை முதல், பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டப்பட்டுள்ளது. 

குறித்த வீதி ஊடாக காலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே மக்கள் பயணிக்க முடியும். 


வீதியில் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் வாகனத்தினை நிறுத்துதல், வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே பயணிக்க வேண்டும். சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை


எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தல் பதாகை வீதியில் தமிழ் மொழியில் எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்திற்கு நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் , இன்றைய தினம் வீதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 



பலாலி வீதியில் பொங்கல் பொங்கி மகிழ்ச்சியை கொண்டாடிய மக்கள்! 

Published By: Digital Desk 2

10 Apr, 2025 | 11:18 AM

யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான  கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக  வியாழக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , அப்பகுதி மக்கள் வீதியில் தேங்காய் உடைத்து பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில், குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் இன்று (10) வீதி கட்டுப்பாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் வீதியில் தேங்காய் உடைத்து , பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   















நன்றி வீரகேசரி 






வவுனியாவில் எல்லை கற்கள் நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் அறிவுறுத்தல் 

09 Apr, 2025 | 07:20 PM


(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

வவுனியா கணேசபுரத்தில் வனவளத்துறை  திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட எல்லை கற்கள் நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக  கூட்டுறவு அபிவிருத்தி  பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 பாராளுமன்ற    உறுப்பினர்  செல்வம்  அடைக்கலநாதன்  விசேட கோரிக்கையை முன்வைத்து உரையாற்றுகையில்,

வவுனியா கணேசபுரம் மக்கள் தற்போது ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். வன இலாகா திணைக்களத்தால் அந்தப் பகுதியில் கல் நடப்படுவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் அந்த விடயங்களை கையாளுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

எவருக்கும் கூறாது கல் நாட்டப்படக் கூடாது என்றே அபிவிருத்திக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவருக்கும் கூறாது அது நடைபெறும் நிலையில் மக்கள் அங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உடனடியாக அந்த நடவடிக்கைகளை நிறுத்த அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இதற்கு  எழுந்து பதிலளித்த   பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, இந்த விடயம்   நேற்று செவ்வாய்க்கிழமை (08)   காலையில் எங்களுக்கு அறியக் கிடைத்தது. அதனை அறிந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது தேர்தல் காலம் முடிவடையும் வரையிலும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அதனை செயற்படுத்தும் வரையில் அந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.   நன்றி வீரகேசரி 











No comments:

Post a Comment