மேலும் சில பக்கங்கள்

வெண்ணிற ஆடை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் நீண்ட காலம் கோலோச்சியவர்


ஜெயலலிதா. அவர் நடித்த முதல் தமிழ் படமே'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்ற தணிக்கை சான்றிதழுடன் வெளி வந்த படம் என்பது சுவாரசியமான ஒரு விஷயமாகும்!


எம் ஜி ஆர் நடிக்கும் படத்தை கறுப்பு வெள்ளையில் எடுப்பேன் , புதுமுகங்களை போட்டு எடுக்கும் படங்களை கலரில் எடுப்பேன் என்று எம் ஜி ஆரை கடுப்பேற்றி படம் இயக்கிய ஸ்ரீதர் 1965ம் வருடம் புதுமுகங்களை நடிக்க வைத்து கலரில் தயாரித்து டைரக்ட் செய்த படம் வெண்ணிற ஆடை. பிற் காலத்தில் பிரபலமான பல நடிகர்கள் இந்தப் படத்தில்தான் அறிமுகமானார்கள்.
 

காதலிக்க நேரமில்லை வெள்ளிவிழா படம், கலைக் கோயில் படு

தோல்விப் படம் இந்த இரண்டுக்குப் பிறகும் நட்சத்திர நடிகர்களை நாடிப் போகாமல் புது முகங்களோடு களத்தில் குதித்தார் ஸ்ரீதர். அமெரிக்கன் தூதரகத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த், சட்டம் படித்து விட்டு நடிப்பில் நாட்டம் கொண்ட மூர்த்தி, நடனம் பயின்று விட்டு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தும் அதை ஒதுக்கி விட்டு , காதலிக்க நேரமில்லை படத்தில் தன்னை தவிர்த்த அதே ஸ்ரீதர் படத்தில் மீண்டும் நடிக்க வந்த நிர்மலா , நகைச்சுவை நடிகையாக நடித்து பின்னர் கவர்ச்சி நடிகையான ஆஷா என்ற சைலஸ்ரீ , நாடகங்களில் நடித்து விட்டு திரைக்கு வந்த மாலி இவர்கள் எல்லோருக்கும் இதுவே முதல் படம். ஆனாலும் ஒரு நட்சத்திர நடிகையாக , அரசியல் தலைவியாக, முதல் அமைச்சராக உருவான ஜெயலலிதாவுக்கும் இதுவே முதல் தமிழ் படமாகும்!

வெண்ணிற ஆடை படம் ஆரம்பிக்கப் பட்ட போது இதில் ஹீரோயினியாக நடிக்க முதலில் தெரிவானவர் ஹேமமாலினி. ஆனாலும் அவர் எடுப்பான தோற்றமின்றி மெலிந்திருந்ததால் ஸ்ரீதர் அவரை நீக்கி விட்டு ஜெயலலிதாவை தெரிவு செய்தார்.


அமெரிக்க தூதரகத்தில் ஸ்ரீதர் பார்த்த டேவிட் அண்ட் லிசா என்ற படத்தின் கருவை அடிபடையாகக் தமிழ் படத்தின் கதையை ஸ்ரீதர் செதுக்கினார். இளம் வயதிலேயே திருமணமாகி முதல் நாளன்றே விதைவயாகி , அந்த அதிர்ச்சியினால் மன நோயாளியாகி விட்ட பெண்ணை குணப்படுத்த இளம் டாக்டர் வருகிறார். அவரின் மருத்துவ முயற்சி பலனளிக்கிறது. பெண்ணின் மன நோய் குணமாகிறது. ஆனால் தன்னை குணமாகிய டாக்டரையே காதலிக்கத் தொடங்குகிறாள் அவள். டாக்டருக்கோ ஏற்கனவே ஒரு காதலி இருக்கிறாள். காதலியை கை விட முடியாது, அதே சமயம் தன்னால் குணமான பெண்ணின் காதலை நிராகரித்தால் அவள் மீண்டும் மன நோயாளியாகி விடுவாளோ என்ற அச்சம் ஒரு புறமாக தடுமாறுகிறார் டாக்டர்.
 

இப்படி தன்னால் எழுதப்பட்ட கதைக்கு வசனங்களையும் எழுதி

இயக்கினார் ஸ்ரீதர். நடித்தவர்கள் எல்லோரும் புதுமுகம் என்பதால் தன் விருப்பப்படி அவர்களிடம் வேலை வாங்கினார் அவர். இதனால் காட்சிகளும் , நடிப்பும் மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்தது. குறிப்பாக டாக்டராக வரும் ஸ்ரீகாந்த்தின் நடிப்பு ஒரு கனவானின் பாத்திரத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. புதுமுகம் நிறமலா மிரட்சியுடன் நடித்த போதும் அதில் ஒரு லயம் இருக்கவே செய்தது. மூர்த்தி முதல் படத்திலேயே காமெடி நடிகர் என்று பேர் எடுத்து விட்டார்.


இவர்கள் எல்லோரும் படத்தில் இருந்த போதும் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதா தான் படத்தின் ஜீவநாடியாகத் திகழ்ந்தார். ஜெயலலிதா நடித்ததால் கதா பாத்திரத்துக்கு பெருமையா, அல்லது கதா பாத்திரத்தால் ஜெயலலிதாவுக்கு பெருமையா என்ற கேள்விக்குறியோடு இரண்டும் கலந்திருந்தன. அந்தளவுக்கு மன நோயாளியாகவும், பின்னர் தெளிவடைந்து ஒரு தலை காதல் வசைப்பட்டு, தனது காதலை நாசுக்காக வெளிப்படுத்தி, காதலை நிறைவேற்ற துடிப்பதும், இறுதியில் சாந்த சொரூபியாக தன் நிலையை தெரிவிப்பதில் ஜெயலலிதாவின் நடிப்பு உச்சம் தொட்டது. முதல் படம் என்று சொல்ல முடியா வண்ணம் அவர் நடிப்பில் பிரகாசித்தார்.

1960 ம் ஆண்டுகளை மெல்லிசை மன்னர்களின் இசை ராஜாங்கம் என்று சொல்லலாம். கவிஞர் கண்ணதாசனுடன் இணைந்து இந்தப் படத்திலும் அதனை நிரூபித்திருந்தார்கள். 
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல, என்ன என்ன வார்த்தைகளோ, சித்திரமே சொல்லடி, ஒருவன் காதலன், அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும் பாடல்கள் அன்றும், இன்றும் ரசிகர்களின் செவிகளில் ஒலித்ததுக் கொண்டே இருக்கின்றன.
படத்தை ஒளிப்பதிவு செய்தவர் ஜனக் ஜனக் பயல் பாஜே ஹிந்தி படப் புகழ் பாலகிருஷ்ணா. அவருடைய கைவண்ணம் கொடைக்கானல் வெளிப்புற காட்சிகளையும் ரம்மியமாக படம் பிடித்திருந்தன. என் எம் சங்கரின் படத் தொகுப்பும் நேர்த்தியாக அமைந்தது. கங்காவின் செட்டுகளும் கிரேட்.

இந்தப் படம்தான் ஜெயலலிதாவின் முதல் படம் என்ற போதும் அவருடைய கால்ஷீட்டுக்காக சில மாதங்கள் ஸ்ரீதர் காத்திருக வேண்டிய நிலை தீடிரென்று ஏற்றப்பட்டது. காரணம் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பி ஆர் பந்துலு ஜெயலலிதாவை எம் ஜி ஆருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்து ஷுட்டிங் நடத்த அழைத்து சென்று விட்டார். பிறகு ஜெயலலிதா திரும்பி வந்த பிறகு தான் ஸ்ரீதர் தன்னுடைய படத்தின் படப்பிடிப்பை ஒரு வழியாக நடத்தி முடித்தார்.
படம் வெளிவந்த போது ஸ்ரீதருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. 18வயது கூட நிறையாத ஜெயலலிதா நடித்த படத்துக்கு தணிக்கைக் குழு வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று தணிக்கை சான்றிதழ் வழங்கியிருந்தது. அதற்குரிய காரணத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. காலம் கடந்து பிறகு அரசல் புரசலாக காரணம் சொல்லப்பட்டது. படத்தில் சில காட்சிகளில் ஜெயலலிதா ஸ்லீவ் லெஸ் ரவிக்கை அணிந்து வந்ததே காரணம் என்று கூறப்பட்டது.

அடல்ஸ் ஒன்லி என்று முத்திரை குத்தப் பட்டு படம் வெளிவந்தவுடன்

ஸ்ரீதருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. படம் திரையிடப்பட்ட பல திரையரங்குகளில் ஆசனங்கள் பிளேடால் வெட்டப்பட்டு கிழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் தன்னுடைய ஆட்கள் சிலரை தியேட்டர்களில் நிறுத்தி அவ்வாறு ஆசனங்களை வெட்டுவோரை பிடிக்கும்படி நியமித்தார். அவ்வாறு பிடிபட்டவர்களை விசாரித்த போது அவர்கள் எல்லோரும் எம் ஜி ஆர் ரசிகர்கள் என்ற உண்மை வெளியானது. உடனடியாக எம் ஜி ஆரை நேரில் சந்தித்து விஷயத்தை சொன்னார் ஸ்ரீதர். இனி மேல் அவ்வாறு நடக்காமல் தான் பார்த்துக் கொள்வதாக எம் ஜி ஆர் சொல்லி அப் பிரச்சினை அதன் பிறகு முடிவுக்கு வந்தது.
 

இவ்வாறு பல சங்கடங்களை சந்தித்த வெண்ணிற ஆடை வெற்றி படமாகி ஸ்ரீதருக்கு, அதில் நடித்த நடிகர்களுக்கும் நல்ல பிரபல்யத்தை தேடி கொடுத்தது. அதன் பின் ஸ்ரீதர் பல படங்களை இயக்கிய போதும் தன்னால் தமிழுக்கு அறிமுகமான ஜெயலலிதாவை போட்டு வேறு படம் எதையும் ஏனோ டைரக்ட் செய்யவில்லை. என்றாலும் பலரின் வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்த பெருமையை வெண்ணிற ஆடை படம் பெற்றுக் கொண்டது!

No comments:

Post a Comment