மேலும் சில பக்கங்கள்

சங்கீதம் யாருடையது? சர்ச்சை வேண்டுமா? நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

                          2024-ஆம் ஆண்டிற்கான ‘சங்கீத கலாநிதி’ விருது

இசைக்கலைஞரும் எழுத்தாளருமான T.M.கிருஷ்ணாவிற்கு வழங்கப்பட்டது. வருடாவருடம் மார்கழி இசைவிழாவில் மியூசிக் அகடமி, சிறந்த இசைக்கலைஞர்க்கு இவ்விருதினை வழங்கி கௌரவிக்கும். இவ்விருதை அவருக்கு வழங்குவது முறையல்ல என கர்நாடக சங்கீத சகோதரிகள் ரஞ்சனி, காயத்ரி எதிர்ப்பைத் தெரிவிக்க இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. சகோதரிகளின் வெறுப்புக்குக் காரணம், அவர் மரபை மீறினார் என்பதே. பார்ப்பனிய மரபான கர்நாடக இசையை இவர் யாவருக்கும் பொது என்கிறார் என்பதே பெரிய குற்றம். கிருஷ்ணாவோ இசையில் புனிதமானது என ஒன்றில்லை என்கிறார். கிருஷ்ணா இசையை

ஜனரஞ்சகப்படுத்துகிறார். சங்கீத அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கும் இசையை அவர் பொது இசையாக மாற்றுகிறார். குறிப்பிட்ட ஒரு சாராருக்கானது அல்ல இசை எனக் கூறி செயல்படுத்துகிறார். சேரிகளுக்குச் சென்று தனது இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

T.M.கிருஷ்ணா இசைக்லைஞராக இருப்பதுடன் தான் பயிலும் இசையில் பல ஆய்வு நூல்களை எழுதியவர். அவர் நூல்களில் மனிதநேயத்தைக் காணமுடியும்.

கர்நாடகம் என்றால் மிகப் பழமையானது என்று பொருள்படும்.

மிகம் பழமையான இசை என வைத்துக்கொண்டால் அதற்கான மூல இசை வடிவம் ஒன்று இருந்திருக்க வேண்டும். மொழிக்கு மூலச் சொற்களும் வேர்ச் சொற்களும் இருப்பது போல, கர்நாடகம், மலையாளம், தெலுங்கு மொழிகளின் வேர்ச் சொற்கள் தமிழில் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைப் போல, கர்நாடக இசையின் மூல இசை வடிவம் தமிழகத்தின் பண்ணே. இவை யாவும் இன்று யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவையே.

4-ஆம் நூற்றாண்டு முதல் 7-ஆம் நுற்றாண்டு வரை தொடர்ந்த பக்தி இயக்கக் காலத்திலே சமண மதத்திற்கு எதிராகத் தோன்றிய போராட்டமே பக்தி இயக்கம். சமணர்களால் ஒதுக்கப்பட்ட லலிதகலைகள் அத்தனையும் சமணத்தை எதிர்க்கும் ஆயுதமானது. கோயில்கள் கட்டப்பட்டு வடக்கில் இருந்து பிராமணர்கள் வரவழைக்கப்பட்டனர். வடமொழியும் கோயில் பூஜைக்கு உரிய மொழியானது. நாயன்மார் அழகு தமிழிலே தேவாரம் பாட, அதுவரை அரசருக்கும் பெரும்பணம் படைத்தோருக்கும் அடிய ஆடல் நங்கையரை, கோயிலுக்குள் வரவேற்று இறைவனை மணந்த தேவ அடியார் ஆக்கினர். இந்தச் சமயத்தில் கோயில் கலைகளாக இசை நடனம் முக்கிய இடம் வகித்தது. இதைக் கையாண்ட இசைக்கலைஞர்கள் இன்று இசை வேளாளர் எனப்படுவோரே. இவ்வாறு வந்த இசையை புரோகிதரும் கற்கலாயினர். அதில் பாண்டித்யமும் பெற்றனர். சுதந்திரப் போராட்டக் காலத்திலே ஆடற்கலையையும் தமதாக்கி சதிர் என்ற பெயரிலே ஆடிய ஆடலை பரதநாட்டியம் என புது நாமமிட்டு தமதாக்கினர். இவ்வாறு இசை வேளாளரிடம் இருந்து பெற்ற இசையை தமதே என்பதும், தேவதாசிகளிடம் இருந்து பெற்ற பரதத்தை தமதே என்பதும் இவர்கள் வழக்கம். அதுவே பிரச்சனை.

  மேலும் T.M.கிருஷ்ணா ஆய்வாளர். உண்மையைத் தேடும் கலைஞர். மிருதங்கம் பசு மாட்டுத் தோலில் இருந்து பெறப்படுவது. பசுவைக் கொன்று மாட்டிறைச்சியை உணவாகக் கொள்பவர்களே அதை மிருதங்கமாக தயாரிப்பவர்கள். மேல்வர்க்கத்தால் தீண்டத்தகாதவர் எனப்படுவோர் அவரே. ஆனால் மிருதங்கத்தை வாசிப்பவர் அதைத் தொட்டு வாசிப்பார். தீண்டத்தகாதவர் என்பவரால் தயாரிக்கப்பட்ட வாத்தியமான மிருதங்கம், அதை வாசிப்பவர் கைப்பட்டு நாதம் பிறப்பிப்பது அந்த பசு மாட்டுத்தோலில் அல்லவா? அப்போது உயர்ஜாதியின் தூய்மை கெடாதா எனக் கேட்கிறார் கிருஷ்ணா.  (Sebastian and sons: A brief history of mrdangam makers) என்ற நூலிலேயே எழுதி உள்ளார்.

T.M.கிருஷ்ணா, பெருமாள் முருகனால் எழுதப்பட் ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்‘ என்ற பாடலை கர்நாடக இசையில் தனது இனிய குரலில் மேடைகளில் பாடிவருகிறார். பெரியார் பார்ப்பன எதிர்ப்பாளர். அவரை இப்படிப் பாடலாமா? பார்ப்பனியத்தை பார்ப்பனிய சமூகத்திற்குள்ளேயே பிறந்த T.M.கிருஷ்ணாவே காட்டிக் கொடுக்கலாமா என கோப்படுகிறார்கள். கோபம், எரிச்சல், ஆற்றாமை அவர்களை வாட்டுகிறது.

கிருஷ்ணாவோ “கொக்கோ கோலாவைப் பற்றி சமஸ்கிருதத்தில் ஒரு பாட்டுப்போட்டு கச்சேரியில் நான் பாடினால், அம்பாளைப் பற்றிதான் பாடுகிறேன் என்று மெய்யுருகி இரசிப்பார்கள். இதுதான் இன்றைய கர்நாடக இசை ரசிக வட்டாரங்களின் நிலை“ என்று உண்மை நிலையை எழுதுகிறார். அந்த அளவுக்கு வெற்றுப் போலிக்கூட்டமே கர்நாடக இசையைக் காப்பாற்றுகிறோம் என்று தம்பட்டம் அடிக்கிறது” எனக் கூறுகிறார். இவர்கள் அவரைச் சாட, அவரோ இவர்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என் வழியில் போவேன் எனக் காட்ட இம்முறை மியூசிக் அகடமி கச்சேரிக்கு லுங்கியும் பூக்கள் போட்ட ஷேட்டுமாக வந்து பாடியுள்ளார். இதுவே புது சர்ச்சை. இவர் அத்தனை சம்பிரதாயங்களையும் எதிர்த்து மக்களிடம் இசையைக் கொண்டு செல்வேன் என்பதைக் கூறாமல் கூறுகிறார்.    

 

 

1 comment:

  1. நடுநிலை நின்று எழுதி இருக்கிறார் கார்திகா . வாழ்த்துக்கள்

    ReplyDelete