மேலும் சில பக்கங்கள்

இலங்கைச் செய்திகள்

அனர்த்தம்: பாதிக்கப்பட்டோருக்கு உடன் நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

பீச் கிங் (360 ER) ரக கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு கையளிப்பு

வடக்கு அதிவேக ரயில் சேவை சிறிதுகாலம் குறைந்த வேகத்தில்

பொருளாதார நிலைப்படுத்தலில் பூரண திருப்தி

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி மூன்றாவது நாளாக தொடரும் அகழ்வுப் பணி


அனர்த்தம்: பாதிக்கப்பட்டோருக்கு உடன் நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

- அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

October 12, 2024 6:45 pm 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானத்துடன் செயற்படுமாறும், நிவாரணப் பணிகளை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

அவசரகால நிலைமையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தந்த மாகாணங்களின் அரச அதிகாரிகளை தொடர்பு கொண்டு எதிர்காலத்தில் அந்த நிவாரணங்களை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். அதுவரை மக்கள் அவதானமாக இருக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இந்த நிவாரணப் பணிகளுக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு நிதியமைச்சிற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, உரிய நிவாரணங்களை முறையாக மக்களுக்கு வழங்குவதற்கு நன்கு ஒருங்கிணைந்து செயற்படுமாறும் அரச அதிகாரிகளுக்கு மேலும் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 6,018 குடும்பங்களைச் சேர்ந்த 24,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

23 நிவாரண மையங்களில், 584 குடும்பங்களைச் சேர்ந்த 2,200 பேர் தற்போது பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தின் ஊடாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவசரகால நிலைமைகள் பற்றிய தகவல்களை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 அழைப்பு நிலையம் மற்றும் 0112136136, 0112136222, 0112670002 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தெரிவிக்கலாம்.   நன்றி தினகரன் 





பீச் கிங் (360 ER) ரக கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு கையளிப்பு

October 12, 2024 8:05 am 

ஐக்கிய அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட பீச் கிங் (360 ER) ரக கண்காணிப்பு விமானத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றது. இந்த வைபவத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல்(ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவன் கொளர் ஆகியோர் பங்கேற்றனர். கடந்த 10ஆம் திகதி இவ்வைபவம் இடம்பெற்றது.

இலங்கை விமானப்படையின் கடல் சார்ந்த படைப்பிரிவில் இந்த பீச் கிங் ரக விமானம் இணைக்கப்பட உள்ளது. அந்த வகையில் சம்பிரதாய முறை நீர் வரவேற்பு நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

மேலும் இதன் போது இலங்கை விமானப்படை தளபதி மற்றும் அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளை அதிகாரி ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் நடவடிக்கையை மேம்படுத்த கடல்சார் கண்காணிப்பு வகை விமானத்தை கையகப்படுத்துவது குறித்து 2019 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அதன் விளைவாக புதியதொரு விமானத்தை அமெரிக்க அரசு வழங்கியுள்ளது.

இலங்கை விமானப்படையின் விமானிகள், கண்காணிப்பாளர்கள், விமானப் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு அமெரிக்காவில் பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360 ஈஆர் விமானம் மற்றும் இந்த பீச் கிராஃப்ட் என இயங்கும் திறன் கொண்ட பீச்கிராப்ட் கிங் ஏர் 360 ஈஆர் விமானத்திற்காக அமெரிக்காவில் ஆய்வு செய்து பயிற்சி பெற்றுள்ளது.

கிங் ஏர் 360 இஆர் கண்காணிப்பு விமானம் என்பது ஒரு நவீன கண்காணிப்பு விமானம் (மல்டிரோல் லைட் டிரான்ஸ்போர்ட் ஏர்கிராப்ட்) ஆகும். இரட்டை என்ஜின் டர்போபிராப் (டர்போபிராப்) வகையுடன் ஒரே சமயத்தில் 1450 கடல் மைல் பயணிக்கும் திறன் கொண்டது. மேலும் இது அமெரிக்காவின் டெக்ஸ்ட்ரான் ஏவியேஷன் தயாரிப்பு ஆகும்.

(அஷ்ரப் ஏ சமட்)

நன்றி தினகரன் 





வடக்கு அதிவேக ரயில் சேவை சிறிதுகாலம் குறைந்த வேகத்தில்

22ஆம் திகதி மீண்டும் சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

October 12, 2024 6:01 am 

மணிக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கும் நோக்கில் நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி முழுமையடையாத காரணத்தால், அந்தப் பகுதி ரயில்களின் வேகத்தை மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ். முதலி மற்றும் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் தலைமையில் ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் பாதையை வரும் 22ஆம் திகதி திறக்கவும், முழுமையடையாத பழுதுகளை சரி செய்ய ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் ரயிலை இயக்கவும் பொது முகாமையாளர் அறிவுறுத்தினார்.

இதன் காரணமாக 64 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணிநேரத்தில் கடக்கும் முயற்சி இரண்டரை மணிநேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

3,000 கோடி ரூபா செலவில் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதியின் நிர்மாணப்பணிகள் இந்திய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டன. எனினும் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்த நிறுவனத்திடமிருந்து ரயில் பாதையை ரயில்வே திணைக்களம் உத்தியோகபூர்வமாக கையகப்படுத்தியுள்ளது.   நன்றி தினகரன் 




பொருளாதார நிலைப்படுத்தலில் பூரண திருப்தி

எதிர்வு கூறல்களை விஞ்சிவிட்டதாக உலக வங்கி தெரிவிப்பு

October 11, 2024 8:35 am 

— ஏற்றுமதி ஊக்குவிப்பு, முதலீடுகளை கவர தொடர் மறுசீரமைப்புகள் அவசியம்  

— Sri Lanka Development Update உலக வங்கியின் வெளியீட்டில் தெரிவிப்பு 

 

இலங்கையில்,  தற்போது பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்டுள்ளதால்,  2024 இல் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதத்தை அடையுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், முன்னைய எதிர்வுகூறல்களை இது விஞ்சிவிட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

முக்கிய கட்டமைப்பு மற்றும் கொள்கை மறுசீரமைப்புகள் ஆகியவற்றின் உதவியின் பிரகாரம், கைத்தொழில் மற்றும் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக, நான்கு காலாண்டுப் பகுதியில் இந்த சாதகத் தோற்றப்பாடு தொடர்ந்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் ஆண்டுக்கு இரு முறையான வெளியீடான இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தலில் (Sri Lanka Development Update – SLDU), எதிர்கால வாய்ப்புகளென தலைப்பிடப்பட்ட வெளியீட்டில், அறவிடல் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக காணப்படுவதாகவும் பேரினப் பொருளியல் நிலைபெறும் தன்மையை பாதிக்கக்கூடியதாக  உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடனை வெற்றிகரமாக மீள்கட்டமைத்தல், மத்தியகால வளர்ச்சி மற்றும் வறுமையை குறைத்தல் ஆகியவற்றை அதிகரிப்பதற்கு தொடர்ச்சியான கட்டமைப்பு மறுசீரமைப்புகள் அவசியமாகும். ஏற்றுமதிகளை ஊக்குவித்தல், வெளிநாட்டு முதலீடுகளை கவர்தல், பெண்கள் தொழிற்படைகளின் பங்களிப்புகளை மேம்படுத்துதல், உற்பத்தியை மேம்படுத்தல், மற்றும் வறுமை, உணவு பாதுகாப்பின்மை, நிதித் துறையில் காணப்படும் பாதிப்புறும் தன்மைகள் ஆகியவற்றை பிரதான மறுசீரமைப்புக்களாக கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலைபேறான வளர்ச்சி அடைவது அவசியமாகும்.

வியாபாரம் மூலம் உயர்வான மற்றும் நிலைபேறான வளர்ச்சியை அடைவதற்கான ஆற்றல்கள் நாட்டில் காணப்படுவதாகவும்  அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

வருடாந்தம் 10 பில்லியன் டொலர் மதிப்பிடப்பட்ட பயன்படுத்தப்படாத ஏற்றுமதி சார் ஆற்றல்கள், இலங்கையிடம் காணப்படுவதாகவும் இதன் மூலம் சுமார் 1,42,500 புதிய தொழில்களை  உருவாக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசியமான மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் உற்பத்தித் துறை, சேவைகள், விவசாயம் ஆகியவற்றில் பல்வகையில் ஏற்றுமதிகளை விரிவாக்கம் செய்வதற்கான காத்திரமான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

“இலங்கையின் அண்மைய பொருளாதார நிலைப்படுத்தல்கள், நான்கு காலாண்டு கால பகுதி வளர்ச்சி மற்றும் 2023 மிகை நடப்புக் கணக்கு ஆகியன முக்கிய திருப்புமுனைகளாகும்” என மாலைதீவு, நேபாளம், இலங்கைக்கான உலக வங்கியின் பிராந்திய நாட்டுப் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் குறிப்பிட்டுள்ளார்.

“இத்தருணத்தில், இலங்கை அதன் உண்மையான ஏற்றுமதி ஆற்றல்களை உணர்வதற்கான வாய்ப்புள்ளது. இது வருடாந்தம் 10 பில்லியன் டொலர்கள் என நாம் மதிப்பிட்டுள்ளோம். பூகோள பெறுமதி சந்தையில் தனது பங்குபற்றுதலை மேலும் காத்திரமாக மேற்கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்கு காணப்படுகின்றது, மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வளர்ச்சியில் நிலைபெறுவதற்கு புவியியல் தோற்றப்பாட்டின் சாதகப் பயன்பாடுகளைப் பயன்படுத்தி வளர்ந்து வரும் பூகோள தோற்றப்பாட்டில் நன்மையை பெற்றுக் கொள்ள முடியும். முக்கியமான பொருளாதார

மற்றும் ஆளுகை சார்ந்த மறுசீரமைப்புகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த தருணத்திலிருந்து முழுமையான நன்மைகளை இலங்கை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.”

2025 இல் 3.5 சதவீத மிதமான வளர்ச்சி ஏற்படலாமென இவ்வறிக்கையில் எதிர்கூறப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் வடுக்கள் காரணமாக மத்திய காலப் பகுதியினுள் மிதமான வழியில் வளர்ச்சி ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

வறுமை படிப்படியாக குறைவடையுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட 2026 ஆம் ஆண்டு வரையில் 20 சதவீதத்துக்கும் அதிகமாகக் காணப்படலாம். 2024 இல் மத்திய வங்கியின் இலக்கான 5 சதவீதத்தை விட குறைவாக பணவீக்கம் காணப்பட்டு, பின் கேள்விகள் அதிகரிக்கின்ற பொழுது படிப்படியாக அதிகரிக்கும். சுற்றுலாத் துறை மற்றும் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் ஆகியவற்றின் காரணமாக 2024 ஆம் ஆண்டில் நடப்பு கணக்கானது மிகையாக காணப்படலாமென எதிர்கூறப்பட்டுள்ளது.

2024 ஒக்டோபர் வெளியீடு, பெண்கள், வேலைகள் மற்றும் வளர்ச்சி என்ற தொனிப்பொருளில் இவ்வருடம் தெற்காசியாவில் 6.4 சதவீத வளர்ச்சியை எதிர்வு கூறியுள்ளதுடன், உலகில் துரிதமாக வளர்ந்து வரும் EMDE (Emerging Markets and Developing Economy) பிராந்தியமாக தெற்காசியா மாற்றம் பெற்று வருகின்றது.   நன்றி தினகரன் 




ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர்

- சரத் கணேகொட நியமனம்

October 10, 2024 11:03 am 

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக சரத் கணேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் நேற்று (09) வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனத்திற்கு  கனேகொட தலைமையில் புதிய பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக, சுகத் ராஜபக்ச , எரங்க ரோஹான் பீரிஸ், டி.அறந்தரா , ஆனந்த அத்துக்கோரல, லக்மல் ரத்நாயக்க , நிரஞ்சன் அருள்பிரகாசம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 






முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு

October 12, 2024 7:00 am 

2024 பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சமர்பித்த வேட்புமனு மற்றும் மற்றொரு சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கட்சியின் செயலாளர் கையொப்பமிடாதாலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 25 அரசியல் கட்சிகளும் 35 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதற்காக நியமனப்பத்திர அங்கீகாரம் பெற்றுள்ளன.

இதன்படி நேற்று தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் கங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளும் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளன.

ஒல்லாந்தர் கோட்டையிலுள்ள மட்டக்களப்பு பழைய செயலக கட்டடத்திலேயே இந்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெற்றது.

மட்டக்களப்பு சுழற்சி நிருபர் - நன்றி தினகரன் 






விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி மூன்றாவது நாளாக தொடரும் அகழ்வுப் பணி

October 11, 2024 1:04 am 

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி மூன்றாவது நாளாகவும் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள இளம் ஒளி விளையாட்டுக் கழக மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.

கொழும்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வுப்பணியானது கொழும்பிலிருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் நேற்றுமுன்தினம் மாலை முன்னெடுக்கப்பட்டது. எனினும் எதுவும் கிடைக்கப்பெறாமையால் அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

முள்ளிவாய்க்கால் கிழக்கு, மேற்கு பகுதிகளில் அண்ணளவாக 11 ற்கு மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழ்வு பணிகள் நடைபெற்ற போதிலும் இதுவரை எதுவும் கிடைக்காமையால் இப்பணிகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(ஓமந்தை விசேட நிருபர்) - நன்றி தினகரன் 




No comments:

Post a Comment