மேலும் சில பக்கங்கள்

உலகச் செய்திகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இதுவரை இல்லாத பாரிய ‘குண்டு மழை’

ஈரானின் ‘அணு நிலைகளை’ தாக்குவதற்கு பைடன் எதிர்ப்பு

காசாவில் உயிரிழப்பு 42,000ஐ நெருங்கியது

இஸ்ரேலிய தரைப்படையின் பெரும் இழப்பை தொடர்ந்து லெபனான் தலைநகரில் தாக்குதல்

யெமனிலும் தாக்குதல்



லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இதுவரை இல்லாத பாரிய ‘குண்டு மழை’

- சிரியா – லெபனான் பிரதான வீதியும் துண்டிப்பு

October 5, 2024 8:32 am 

லெபனான் தலைநகரின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாரிய வெடிப்புகளுடன், இரவு வானெங்கும் பெரும் தீப்பிளம்புகளுடன் கரும்புகை வெளிவந்தது.

கடந்த வியாழக்கிழமை (03) இரவு முழுவதும் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாக இருந்ததாகவும் கார் ஆலாரங்கள் ஒலிக்க ஆரம்பித்ததாகவும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் பெய்ரூட் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது இஸ்ரேலியப் போர் விமானங்கள் சர்வதேச விமானநிலையத்தின் சுற்றுப்பகுதிகள் உட்பட மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது சரமாரித் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேலியப் படை தொடர்ச்சியாக 11 தடவைகள் தாக்குதல்களை நடத்தியதாகவும் பெய்ரூட்டில் இதுவரை இடம்பெற்ற அதிக தீவிரமான தாக்குதலாக இது இருந்ததாகவும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் எந்த விளக்கமும் அளிக்காதபோதும் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு பதில் அந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் ஹாஷிம் சபிதீனை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் உளவுத் தகவல் அடிப்படையில் பெய்ரூட் மீது நடத்திய துல்லியமான தாக்குதலில் ஹிஸ்புல்லா தொடர்பாடல் வலையமைப்பின் தலைவர் முஹமது ரஷீத் சபாகியை கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் நேற்றுக் கூறியது. சபாக்கியின் நிலை குறித்து ஹிஸ்புல்லா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இஸ்ரேல் இராணுவம் சிரியாவுடனான லெபனானின் மஸ்னா எல்லை மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வீதி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வீதியைப் பயன்படுத்தியே அண்மைய நாட்களில் இஸ்ரேல் தாக்குதலுக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான லெபனானியர்கள் சிரியாவுக்கு தப்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 நாட்களில் 300,000க்கும் அதிகமான மக்கள் லெபனானில் இருந்து சிரியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலால் சிரியாவுடனான எல்லைக் கடவைக்கு அருகில் 12 அடி அகலமான பள்ளம் ஒன்று ஏற்பட்டிருப்பதாக லெபனானின் பொதுப் பணிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அலி ஹமிகே ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

லெபனானுக்குள் ஆயுதங்களைக் கொண்டுவர இந்த எல்லைக்கடவை பயன்படுத்தப்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ‘ஆய்தங்கள் கடத்தப்படுவதை இஸ்ரேலிய இராணுவம் அனுமதிக்காது என்பதோடு இந்த போர் முழுவதும் செய்வது போல் படை பலத்தை பயன்படுத்துவதற்கும் தயங்காது’ என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் அவிசாய் அட்ராயி எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் லெபனானில் உள்ள சுமார் 900 தற்காலிக முகாம்களும் கிட்டத்தட்ட நிரம்பி இருப்பதாகவும் மக்கள் வெட்ட வெளிகளில் உறங்கும் நிலை அதிகரித்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான நிறுவன அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று பெய்ரூட் நகரை வந்தடைந்தார். விமானநிலைய சுற்றுப்புறத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்திலேயே அவர் அங்கு சென்றுள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் 1,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மட்டுப்படுத்தப்பட்ட தரைவழி நடவடிக்கையை மேற்கொள்வதாக குறிப்பிடும் நிலையில் ஹிஸ்புல்லா போராளிகள் அங்கு தமது நிலைகளை தக்கவைத்து வருகின்றனர்.

இதன்போது இரு தரப்புக்கும் இடையே நேரடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தெற்கு லெபனானில் மேலும் 20 சிறு நகரங்களில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் நேற்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்த நிலையில் அது தனது தரைவழி நடவடிக்கையை விரிவுபடுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யவே தரைவழி படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது.   நன்றி தினகரன் 






ஈரானின் ‘அணு நிலைகளை’ தாக்குவதற்கு பைடன் எதிர்ப்பு

October 4, 2024 12:06 pm 

ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் அணு நிலைங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது 180க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் ஈரானிய அணு நிலைகள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துவதை ஆதரிப்பீர்களா என்று பைடனிடம் செய்தியாளர்கள் கடந்த புதனன்று கேட்டபோது, ‘இல்லை’ என்று பதல் அளித்தார்.

‘அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இஸ்ரேலுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று தாம் ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் பேசியதாகவும் இஸ்ரேல் பதிலடி கொடுப்பதற்கான உரிமையை அவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அந்த பதிலடி ஒத்த வகையில் அமைய வேண்டும் என்று அவர்கள் நம்புவதாகவும் பைடன் கூறினார்.   நன்றி தினகரன் 





காசாவில் உயிரிழப்பு 42,000ஐ நெருங்கியது

October 4, 2024 10:26 am 

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் நிலையில் நேற்றும் பலர் கொல்லப்பட்டதோடு அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42,000ஐ நெருங்கியுள்ளது.

காசா நகரின் மேற்காக உள்ள அல் ஷட்டி அகதி முகாமில் இருக்கும் தார்விஷ் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேல் நேற்றுக் காலை நடத்திய வான் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.

அதேபோன்று மத்திய காசாவின் அல் நுஸைரத் அகதி முகாமில் வீடுகள் மீது நடத்திய வான் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதேநேரம் மத்திய காசாவின் கிழக்கே உள்ள அல் மகாசி நகரில் இருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றுள்ள பாடசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற பீரங்கித் தாக்குதல்களில் பலரும் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 99 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 169 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட காசா போரில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41,788 ஆக அதிகரித்துள்ளது. தவிர, 96,794 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 





இஸ்ரேலிய தரைப்படையின் பெரும் இழப்பை தொடர்ந்து லெபனான் தலைநகரில் தாக்குதல்

ஒன்பது மருத்துவப் பணியாளர்கள் பலி: ஹிஸ்புல்லா தொடர்ந்து ஏவுகணை வீச்சு

October 4, 2024 6:34 am 

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவுடனான மோதலில் இஸ்ரேலியப் படை பெரும் இழப்பைச் சந்தித்த நிலையில் மத்திய பெய்ரூட்டில் அது நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் ஒன்பது போர் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனான் தலைநகரில் நேற்று முன்தினம் இரவு தொடக்கம் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தியதோடு பாராளுமன்றத்திற்கு அருகே பஷுரா குடியிருப்புப் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது குண்டு வீசியது. இதில் மேலும் 14 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லெபனான் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் தலைநகர் மீது இந்த வாரத்தில் தாக்குதல் நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதில் தாக்குதலுக்கு இலக்கான அடுக்குமாடி கட்டடம் ஹிஸ்புல்லா அமைப்பின் சுகாதார பிரிவுடன் தொடர்புபட்டது என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பெய்ரூட் தாக்குதலில் இரு மருத்துவர்கள் உட்பட ஏழு மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புபட்ட இஸ்லாமிய சுகாதார நிர்வாகம் தெரிவித்தது.

‘பெய்ரூட்டில் மற்றொரு உறக்கமற்ற இரவாக இருந்தது. நகரை அதிரச் செய்த வெடிப்புகளை எண்ணிக்கொண்டிருந்தேன். எந்த அபாய ஒலியும் இல்லை. அடுத்து என்ன நடப்பது என்று தெரியவில்லை. நிச்சயமற்ற சூழலே உள்ளது. கவலையும் பயமும் எங்கும் நிறைந்து காணப்படுகிறது’ என்று லெபனானில் உள்ள ஐ.நா. விசேட இணைப்பாளர் ஜீன் ஹரிஸ் பிளஸ்சார்ட் எக்ஸ் சமூகதளத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.

இதேநேரம் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த வாரம் கொல்லப்பட்ட இடமான, அந்த அமைப்பின் கோட்டை என அழைக்கப்படும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியான தஹியேவிலும் ஏவுணை தாக்குதல்கள் இடம்பெற்றன.

இந்நிலையில் தெற்கு லெபனானில் 15 ஹிஸ்புல்லா போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் நேற்றுக் கூறியது.

தெற்கு லெபனானில் பின்த் நகரில் உள்ள மாநகர கட்டடத்தின் மீது நடத்திய தாக்குதலிலேயே 15 ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

தெற்கு லெபனானில் கடந்த புதன்கிழமை தரைவழி படை நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலின் எட்டு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லை கடந்து இஸ்ரேல் துருப்புகளுடன் ஹிஸ்புல்லா போராளிகள் கடும் மோதலில் ஈடுபட்ட நிலையிலேயே இஸ்ரேல் இராணுவம் பெரும் உயிர்ச் சேதத்தைச் சந்தித்துள்ளது.

படையினர் இரு வெவ்வேறு சம்பங்களில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

லெபனான் கிராமமான கிபார் கிலாவில் வீடு ஒன்றுக்கு வெளியில் இஸ்ரேலிய துருப்புகள் நிலைகொண்டிருப்பது கண்காணிக்கப்பட்டதை அடுத்து போராளிகள் அந்தக் கட்டடத்தின் மீது வெடிவைத்து துப்பாக்கி மற்றும் ரொக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகளால் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அந்தப் படைப் பிரிவின் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்ததாக ஹிஸ்புல்லா கூறியபோதும் எத்தனை பேர் என்பதைக் குறிப்பிட்டுக் கூறவில்லை.

இந்நிலையில் இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருதோடு மேலும் ஐந்து இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு நேற்று குறிப்பிட்டது.

இஸ்ரேல் மீது ஈரான் கடந்த செவ்வாயன்று பாரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதை அடுத்து பிராந்தியத்தில் போர் பதற்றம் முன்னேப்போது இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூறிவரும் நிலையில் அவ்வாறான தாக்குதல் ஒன்றுக்கு எதிராக மிகப்பெரிய பதில் தாக்குதல் ஒன்று பற்றி ஈரான் எச்சரித்துள்ளது.


லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவதற்கு தீவிரமான போர் நிறுத்த முயற்சி ஒன்று தேவை என்று கட்டார் எமிர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல்தானி நேற்று வலியுறுத்தினார். பலஸ்தீன நாடு ஒன்று உருவாக்கப்படாத பட்சத்தில் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

டோஹாவில் நடைபெறும் ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் மாநாட்டில் பேசிய அல் தானி, மத்திய கிழக்கில் நடப்பது ‘ஒரு கூட்டு இனப்படுகொலை’ என்றும் இஸ்ரேல் தண்டனையில் இருந்து விலக்கு பெற்றிருப்பது பற்றி தமது நாடு தொடர்ந்து எச்சரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதே மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய ஈரான் ஜனாதிபதி மசூத் பஸஷ்கியான், இஸ்ரேலின் போர் வெறித்தனத்துக்கு முன் அமைதி காப்பது பற்றி எச்சரித்தார்.

‘எந்தவொரு இராணுவத் தாக்குதல், பயங்கரவாதச் செயல் அல்லது எமது சிவப்புக் கோட்டைத் தாண்டினால் எமது ஆயுதப் படைகள் தீர்க்கமான பதிலடி கொடுக்கும்’ என்று எச்சரித்தார்.

லெபனானில் கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்திய நிலையில் 1,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு பல்லாயிரக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறிய உள்நாட்டிலும் அண்டை நாடான சிரியாவிலும் அடைக்கலம் பெற்றுள்ளனர்.   நன்றி தினகரன் 





யெமனிலும் தாக்குதல்

October 1, 2024 4:46 am 

யெமனின் ஹுதைதா மற்றும் ராஸ் இஸ்ஸா துறைமுகங்களில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

யெமனின் ஹூத்திக்கள் அண்மைய நாட்களில் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வரும் நிலையிலேயே இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹுதைதா மற்றும் ராஸ் இஸ்ஸாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை இலக்கு வைத்தே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஒக்டோபரில் வெடித்த காசா போரை ஒட்டி யெமன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை யெமனிய ஆளில்லா விமானம் ஒன்று தாக்கியதை அடுத்து இஸ்ரேல் பதில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருந்தது.

காசாவில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி ஹுத்திக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.   நன்றி தினகரன் 





No comments:

Post a Comment