மேலும் சில பக்கங்கள்

உலகச் செய்திகள்

காசா போர் நிறுத்தத் திட்டம் குறித்து ஹமாஸ் பாதக நிலைப்பாடு: தொடர்ந்து பேச்சுவார்த்தை

இஸ்ரேலுடனான உறவை துண்டிக்கிறது கொலம்பியா

பத்தா-ஹமாஸ் சீனாவில் நல்லிணக்கம் பற்றி பேச்சு

இஸ்ரேல் மீதான ஹேக் நீதிமன்ற விசாரணைக்கு அமெரிக்கா எதிர்ப்பு

இஸ்ரேல் இராணுவத்தின் உரிமை மீறல்கள் உறுதி

பல்கலை ஆர்ப்பாட்டம்: பலஸ்தீன – இஸ்ரேல் ஆதரவாளர்கள் மோதல்


காசா போர் நிறுத்தத் திட்டம் குறித்து ஹமாஸ் பாதக நிலைப்பாடு: தொடர்ந்து பேச்சுவார்த்தை

May 3, 2024 8:00 am 

காசாவில் இஸ்ரேல் படை தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி பலஸ்தீன போராளிகளுடன் கடும் மோதல் இடம்பெற்று வரும் நிலையில், போர் முன்மொழிவு தொடர்பில் தமது நிலைப்பாடு பாதகமாக இருப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் போர் நிறுத்த முன்மொழிவு தொடர்பான (ஹமாஸ்) அமைப்பின் நிலைப்பாடு பாதகமாகவே இருப்பதாகவும் ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் ஒசாமா ஹம்தான் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு நேற்று (02) குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தமது அமைப்பின் நோக்கமாக இருந்து வருகிறது என்று ஹமாஸ் மூத்த அதிகாரி சுஹைல் அல் ஹின்தி ஏ.எப்.பி. இடம் குறிப்பிட்டுள்ளார். இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நிலைப்பாட்டுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காசாவின் தெற்கு விளிம்பில் உள்ள ரபாவில் 1.5 மில்லியன் பொதுமக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் அந்தப் பகுதியிக்கு தரைப்படையை அனுப்புவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக குறிப்பிட்டிருந்தார்.‘உடன்பாடு எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நாம் ரபாவுக்குள் நுழைந்து ஹமாஸ் படைப்பிரிவுகளை ஒழிப்போம்’ என்று நெதன்யாகு இந்த வாரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இரகசிய இடம் ஒன்றில் இருந்து தொலைபேசியில் பேசிய ஹமாஸ் அதிகாரி ஹின்தி, ‘எல்லாவற்றையும் அழித்து வரும் பலஸ்தீன மக்கள் மீதான இந்தப் பயங்கரப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் மற்றும் அனைத்து பலஸ்தீன போராட்டக் குழுக்களும் பெரும் ஆர்வத்துடன் உள்ளன.

ஆனால் அது எந்த விலை கொடுத்ததாகவும் இருக்காது’ என்று குறிப்பிட்டார். ‘எந்த சூழ்நிலையிலும் வெள்ளைக் கொடியை உயர்த்தவோ அல்லது இஸ்ரேலிய எதிரியின் நிபந்தனைகளுக்கு சரணடையவோ முடியாது’ என்று அவர் வலியுறுத்தினார்.

காசா போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்கும்படி அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கல் ஹமாஸ் அமைப்பை வலியுறுத்தி வருகிறார்.

40 நாள் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பல பலஸ்தீனர்களுக்காக பணயக்கைதிகளை விடுவிக்கும் திட்டத்தை மத்தியஸ்தர்கள் ஹமாஸிடம் முன்வைத்துள்ளனர்.

இந்த முன்மொழிவுக்கு விரைவில் பதிலளிப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

‘ஹமாஸ் ஆம் என்று குறிப்பிட்டு இதனைச் செய்ய வேண்டும்’ என்று ஒக்டோபர் 7 ஆம் திகதி காசா போர் வெடித்த பின்னர் ஏழாவது முறையாக பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிளிங்கன் இஸ்ரேல் சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், ‘பலஸ்தீன மக்கள் மீது அக்கறை செலுத்தி அவர்கள் படும் வேதனையை உடன் நீக்கும் உண்மையான நோக்கத்தை ஹமாஸ் கொண்டிருந்தால் இந்த உடன்படிக்கையை அவர்கள் ஏற்பார்கள்’ என்றார்.

காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கெய்ரோவில் இடம்பெற்று வருகிறது.

உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு தேவையான நெகிழ்வுப் போக்கை அனைத்து தரப்புகளும் காண்பிக்க வேண்டும் என்று எகிப்து வெளியுறவு அமைச்சர் ஹசாமிஹ் ஷுக்ரி அழைப்பு விடுத்துள்ளார். போர் நிறுத்த முயற்சியாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஸ்டபனே செஜோர் கெய்ரோ பயணித்த நிலையில் அவரை சந்தித்தபோதே சுக்ரி இதனைத் தெரிவித்தார்.

எனினும் மற்றொரு தற்காலி போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் உடன்படும் என்பதில் சந்தேகம் நீடிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இஸ்ரேல் தமது படை நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதில் ஹமாஸிடம் இருந்து இன்னும் ஓர் இரு நாட்களில் போர் நிறுத்தம் குறித்து பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கட்டார் மத்தியஸ்தர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் முன்மொழிவில் ‘உண்மையான சலுகைகள்’ இருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஆரம்ப போர் நிறுத்தத்தை தொடர்ந்து ‘நிலையான அமைதி’ மற்றும் பணயக்கைதிகள் பரிமாற்றம் ஆகியவை உள்ளடங்குகிறது.எனினும் காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் அங்கிருந்து இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெற ஹமாஸ் நிபந்தனை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 28 பேர் பலி

இந்நிலையில் மத்திய காசாவின் பிராதான சந்தியில் நிலைகொண்டிருக்கும் இஸ்ரேலிய துருப்புகள் மீது பலஸ்தீன போராட்டக் குழுக்கள் நேற்று கடும் தாக்குதல்களை நடத்தியதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த புதன் இரவு தொடக்கம் காசாவில் இஸ்ரேலின் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் தீவிரமாக இருந்ததாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் மத்திய காசாவின் நுசைரத் அகதி முகாமில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதோடு அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றையும் இஸ்ரேலிய படைகள் தாக்கியுள்ளன.

மத்திய காசாவின் அல் சஹ்ரா பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலின் குண்டு வீச்சில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. அங்கு குடியிருப்பாளர்கள் மற்றும் மீட்பாளர்கள் இடிபாடுகளில் இருந்து மூன்று சிதைந்த உடல்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

தெற்கு நகரான கான் யூனிஸில் கா அல் குரைன் பகுதில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் ஒருவர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்தாக வபா குறிப்பிட்டது.

அதேபோன்று காசா நகரின் தெற்கில் உள்ள அல் செய்தூன் பகுதியின் இஷ்தைவி குடும்பத்திற்கு சொந்தமான குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய குண்டு மழையில் இருவர் கொல்லப்பட்டதோடு காணாமல்போன பலரும் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் 28 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 51 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35,596 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 77,816 பேர் காயமடைந்துள்ளனர்.   நன்றி தினகரன் 





இஸ்ரேலுடனான உறவை துண்டிக்கிறது கொலம்பியா

May 3, 2024 6:00 am 

காசா போர் தொடர்பில் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவை துண்டிக்கப்போவதாக கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.

தலைநகர் பொகோடாவில் நேற்று முன்தினம் (01) நடந்த மே தின ஊர்வலத்தில் பேசிய ஜனாதிபதி, காசாவில் இஸ்ரேலின் முற்றுகை போர் குற்றமாகும் என்றும் குறிப்பிட்டார். லத்தீன் அமெரிக்காவில் இஸ்ரேலின் நெருங்கி நட்பு நாடாக கொலம்பியா இருந்து வந்தபோதும், 2022 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இடதுசாரி தலைவரான பெட்ரோ, காசா போர் வெடித்தது தொடக்கம் பிராந்தியத்தில் இஸ்ரேலை கடுமையாக விமர்சிப்பவராக மாறியுள்ளார்.

‘இனப்படுகொலைகளுக்காக இஸ்ரேல் அரசுடனான இராஜதந்திர உறவை நாளை முறித்துக் கொள்கிறோம்’ என்று கூறிய பெட்ரோ, ‘பலஸ்தீனர் உயிரிழந்தால், மனித குலத்தின் உயிரிழப்பாகும், அதனை மரணிக்க நாம் விடமாட்டோம்’ என்றும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 




பத்தா-ஹமாஸ் சீனாவில் நல்லிணக்கம் பற்றி பேச்சு

May 1, 2024 11:44 am

பலஸ்தீன போட்டிக் குழுக்களான ஹமாஸ் மற்றும் பத்தா அமைப்புகள் சீனாவில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

இந்த இரு அமைப்புகளும் அண்மையில் பீஜிங்கில் சந்தித்ததை சீன வெளியுறவு அமைச்சு உறுதி செய்துள்ளது. இந்த இரு அமைப்புகளும் பல ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டிருந்தபோதும் காசாவில் இஸ்ரேலின் போர் பலஸ்தீன ஐக்கியம் தொடர்பில் பேசுவதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு குழுக்களும் சீனாவிற்கு விஜயம் செய்து, ஆழமான மற்றும் நேர்மையான உரையாடலில் பங்கேற்றது என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிட்டார். எனினும் எப்போது இந்தக் கூட்டம் நடந்தது என்பது பற்றிய விபரத்தை அவர் வெளியிடவில்லை.

‘பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான தங்களது அரசியல் விருப்பத்தை இரு தரப்பும் முழுமையாக வெளிப்படுத்தியதுடன், பல குறிப்பிட்ட விவகாரங்களில் சாதகமான முன்னேற்றம் கண்டன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 





இஸ்ரேல் மீதான ஹேக் நீதிமன்ற விசாரணைக்கு அமெரிக்கா எதிர்ப்பு

May 1, 2024 10:00 am 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இஸ்ரேலிய அதிகாரிகள் மீது பிடியாணை பிறப்பிக்கும் அச்சத்திற்கு மத்தியில் இஸ்ரேலின் காசா நடவடிக்கை தொடர்பில் ஹேகில் உள்ள அந்த நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கு அமெரிக்கா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அவதானத்திற்கு கொண்டு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு நாம் ஆதரவு அளிப்பதில்லை என்பதில் தெளிவாக இருப்பதோடு, அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருப்பதாகவும் நாம் நம்பவில்லை’ என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரின் ஜீன் பீரே குறிப்பிட்டுள்ளார்.

இதில் நெதன்யாகுவும் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுக்கக் கூடும் என்று இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாஸ் தலைவர்கள் மீதும் குற்றம்சாட்டி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பைடனை தொலைபேசியில் அழைத்த நெதன்யாகு இஸ்ரேலிய அதிகாரிகள் மீது பிடியாணை பிறப்பிப்பதை தடுக்குமாறு கோரியதாக எக்சியோஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் பெற்ற நாடுகளல்ல என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பலஸ்தீன நிலப்பகுதியில் போர் குற்றங்களில் ஈடுபட்டது குறித்து அந்த நீதிமன்றம் கடந்த 2021 இல் இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் ஏனைய பலஸ்தீன போராட்டக் குழுக்களுக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





இஸ்ரேல் இராணுவத்தின் உரிமை மீறல்கள் உறுதி

May 1, 2024 9:48 am 

இஸ்ரேல் இராணுவத்தின் ஐந்து பிரிவுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிப்பட்ட சம்பவங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கண்டறிந்தபோதும் அமெரிக்காவின் இராணுவ ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த அனைத்து சம்பவங்களும் தற்போதைய போருக்கு முன்னர் காசாவுக்கு வெளியில் இடம்பெற்றவையாகும். இவை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இடம்பெற்றவை என்று நம்பப்படுகிறது.

இதில் நான்கு பிரிவுகளில் இஸ்ரேல் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் ஐந்தாவது பிரிவு தொடர்பில் மேலதிக விபரங்களை வழங்கி இருப்பதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டது இதனால் இந்த அனைத்து இராணுவப் பிரிவுகளும் அமெரிக்க இராணுவ உதவியை பெற தகுதி பெற்றுள்ளன.

இஸ்ரேலுக்கு இராணுவ உதவி அளிக்கும் பிரதான நாடான அமெரிக்கா ஆண்டுதோறும் 3.8 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு முறைமைகளை வழங்குகிறது.   நன்றி தினகரன் 






பல்கலை ஆர்ப்பாட்டம்: பலஸ்தீன – இஸ்ரேல் ஆதரவாளர்கள் மோதல்

April 30, 2024 8:07 am 

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் மேலும் பலர் கைது செய்யப்பட்டிருப்பதோடு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது.

கலிபோர்னிய பல்கலையில் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்ட முகாமின் அளவு விரிவடைந்திருக்கும் நிலையில் அங்கு பதில் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் இரு ஆர்ப்பாட்டக்காரர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்ட நிலையில் பரஸ்பரம் கோசங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதோடு சில சந்தர்ப்பங்களில் கைகலப்பும் ஏற்பட்டன. இவர்களை பொலிஸார் விலக்கியுள்ளனர். காசாவில் போர் நிறுத்தத்தை கோரியும், இஸ்ரேலுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை பல்கலைக்கழகங்கள் புறக்கணிக்கவும் கோரியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

10 நாட்களுக்கு மேல் தொடரும் போராட்டங்களில் குறைந்தது 800 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 




No comments:

Post a Comment