மேலும் சில பக்கங்கள்

தமிழ் இலக்கிய பாலம் அமைப்போம் ! முருகபூபதி

“ சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்    என்று மகாகவி


பாரதியார், சொன்னாலும் சொன்னார் !  இப்படிச்சொல்லிவிட்டதால், அதனைச் சரியாக புரிந்துகொள்ளாமல், இன்றும் எமது இலக்கிய உலகிலும், பொதுவெளியிலும் சர்ச்சைகள் தொடருகின்றன.

1983 ஆம் ஆண்டு இலங்கையில் கலவரம் வெடித்தபின்னர்,


தமிழ்நாட்டிலிருந்த எனது தந்தை வழி உறவினர்கள், எமது குடும்பத்தினரை அங்கே வந்துவிடுமாறு அழைத்தனர்.

எனது தந்தையாரும் அந்தக் கலவர அதிர்ச்சியினால், அந்த ஆண்டு  ஓகஸ்ட் மாதம் மறைந்துவிட்டார்.  தந்தையாருக்கு தமிழ்நாடு பாளையங்கோட்டையில் ஒரு பூர்வீக வீடும் இருந்தது.

தந்தையார் லெட்சுமணன், 1940 ஆண்டு காலப்பகுதியில், தனது நண்பர்கள் சிலருடன்  படகேறி வந்து புத்தளத்திற்கு அருகில் கற்பிட்டி கடல் ஏரியில் ஒதுங்கியவர்.  அதன்பின்னர் நீர்கொழும்பில்  வசித்த எனது அம்மாவை திருமணம்செய்து, இலங்கையிலேயே நிரந்தரமாகிவிட்டவர்.

தந்தையாரின் உறவினர்கள் அழைத்தமையால், முதல் தடவையாக 1984 ஆம் ஆண்டு நான் தமிழகம் சென்றேன்.  சென்னை பொது மருத்துவமனையில் ( General Hospital -   G H ) எழுதுவினைஞராக எனது தந்தையாரின் அண்ணன் மகன் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

எனக்கும் அண்ணன் முறையான அவரது சென்னை வீட்டுக்குச்சென்றேன். அவரின் மகன் சென்னை பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக்கொண்டிருந்தார்.

அவர் என்னிடம்,  “ உங்கள் அம்மா தமிழ் பேசுவார்களா..?  “ எனக்கேட்டதும், எனக்கு  தூக்கிவாரிப்போட்டது.

 “ ஏன்…. தம்பி அப்படி கேட்கிறீர்கள்..?  “ என்று நிதானமாகக் கேட்டேன்.

   உங்கள் அப்பா, தமிழ்நாட்டிலிருந்து அங்கே வந்தவர். அதனால், நீங்கள் தமிழ் பேசுகிறீர்கள். ஆனால், உங்கள் அம்மா, ஶ்ரீலங்காதானே…!?  அவர் சிங்களப்பெண்ணாகத்தானே இருக்கவேண்டும். அதனால்தான் கேட்டேன்.  “ என்றார்.

எனக்கு சிரிப்புத்தான் வந்தது. நான் ஏதோ அவரை தவறாக கணித்துவிட்டேன் எனக்கருதிக்கொண்டு,     பாரதியாரும் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்  “ என்றுதானே சொல்லியிருக்கிறார்.  “ என்று தனது கேள்விக்கு அவர் நியாயமும் கற்பித்தார்.

 “ எனது அம்மா பிறந்தது, தமிழ்ப்பிரதேசமான வடமாகாணத்தில்


மாதகல்.   அம்மாவின் அப்பா,  அதாவது எங்கள் தாத்தா, அப்போது  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பொலிஸ் சார்ஜண்டாக பணியாற்றியவர். மேற்கிலங்கையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் அவருக்கு இடமாற்றம் கிடைத்து வந்தார்.  “ என்று அந்த தமிழ்நாட்டு சென்னைத் தம்பிக்கு நான் நீண்ட விளக்கம் சொல்ல நேர்ந்தது.

அந்தப் பயணத்தில் நான் திருச்சிக்கும் சென்றிருந்தேன். ஒரு நாள் அதிகாலை நான் அங்கே இறங்கி, சுந்தர் நகரிலிருந்த உறவினர்களை பார்க்கச்செல்வதற்கு , ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறினேன். அந்த ரிக்‌ஷா செலுத்துனர்,  “ சார்… எங்கேயிருந்து வருகிறீர்கள்..?  “ என்று கேட்டார்.

“ சிலோனிலிருந்து வருகின்றேன். “ என்றேன்.

 உடனே அவர்,  “ கொழும்புவில் இருக்கும் சிலோனா சார்..?  “ எனக்கேட்டார்.

சரிபோகட்டும்.  இந்தக்கதைகளை விட்டுவிடுவோம்.

கமல்ஹாசன்,  ஜெயராம், ஜோதிகா, தேவயானி, மீனா ஆகியோர்


நடித்த திரைப்படம் தெனாலி.  2000 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளியானது.

இதில் கமல்ஹாசன்  இலங்கைத் தமிழ் பேசுவார்.  புகழ்பெற்ற அறிவிப்பாளர் பி. எச். அப்துல்ஹமீத்  அவர்கள்தான் கமல் பேசும் வசனங்களையும் எழுதிக்கொடுத்ததுடன், அத்திரைப்படத்திலும் நடித்தார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய அத்திரைப்படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நடந்தபோது அதில் உரையாற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,     இத்திரைப்படத்தில் நண்பர் கமல்ஹாசன் பேசிய சிங்களத்தமிழ் கேட்க சுவாரசியமாக இருந்தது.  “ என்றார்.

அந்த மேடையில் அமர்ந்திருந்த எங்கள் அபிமான அறிவிப்பாளர்  அப்துல்ஹமீத் உடனே குறுக்கிட்டு,  “ அது சிங்களத் தமிழ் அல்ல. அதுதான் இலங்கையின் சுத்தமான தமிழ்  “ என்று திருத்தினார்.

 “ இந்தியாவுக்கும் இலங்கைக்கும் தொப்புள்கொடி உறவிருக்கிறது.   


என்று இன்றும் சொல்லிக்கொண்டுதானிருக்கின்றோம்.  இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே அரசியல் ரீதியான பல ஒப்பந்தங்கள் நடந்திருக்கின்றன. அவற்றுள் சில இன்னமும் இழுபறி நிலையில்தான் இடியப்பச்சிக்கலாகியிருக்கின்றன.

இலங்கையின் உள்விவகாரங்களுக்குள் தனது பூகோள அரசியல் நலன் கருதி அடிக்கடி நுழைந்துகொண்டிருக்கும் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வாசித்துக்கொண்டிருக்கும்  தமிழ் வாசகர்கள் பலருக்கு இன்னமும் ஈழத்து பேச்சுமொழி வழக்குகள் புரியாமல்தான் இருக்கின்றன.

ஆறு சாப்பதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு  வந்த கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்,  “ ஈழத்து இலக்கியங்களுக்கு அடிக்குறிப்பு வேண்டும்  “ என்றார்.

கங்கை இதழின் ஆசிரியர் பகீரதன் இலங்கை வந்து,  “ ஈழத்து


இலக்கியம் ஐம்பது ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றது.  “ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

பல வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த                             “ பயணக்கதை மன்னன் ( ? )  இதயம் பேசுகிறது மணியனிடம், ஆறுமுகநாவலர் பற்றித் தெரியுமா..?  “ எனக்கேட்டபோது,             “ தனக்கு நாவலர் நெடுஞ்செழியனைத்தான் தெரியும்.  “ என்றார்! 

தமிழுக்காக இரத்தம் சிந்திய ஈழத்தமிழர்கள், இன்னுயிர்களையும் உடைமைகளையும் இழந்தது மட்டுமல்லாமல், தென்கிழக்காசியாவிலேயே புகழ்பெற்ற பெறுமதியான பொது நூல் நிலையத்தையும் பேரினவாதிகளின் தீ அரக்கனிடம் பறிகொடுத்தார்கள்.

பின்னர் அந்த நூலகம் பீனிக்ஸ் பறவையாக எழுந்தது !

இத்தனை அவலங்களையும் சுமந்துகொண்டு ஏதிலிகளாக கடல்கடந்து சென்று அந்நியம் புகுந்து, பனிக்குள் நெருப்பாக வாழ்ந்தவாறு ஆறாம் திணை இலக்கியத்தை உருவாக்கி,  புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தை படைத்தபோது,  “ அது என்ன புலம்பெயர்ந்தோர் இலக்கியம். உங்களை  யார் போகச்சொன்னது, அங்கே போயிருந்துகொண்டு புலம்பல் இலக்கியம்தானே படைக்கிறீர்கள் “  எனச்சொன்னார் காலத்தின் இடிமுழக்கம் என வர்ணிக்கப்பட்ட ஜே. கே. என்ற ஜெயகாந்தன்.

அதேசமயம் “எதிர்காலத்தில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம்தான் தமிழ் உலகில் தலைமை ஏற்கும் “  என்று மற்றும் ஒரு அடங்காத இலக்கியப் பேரோசை அவுஸ்திரேலியாவிலிருந்து  ஒலித்தது. அது எஸ்.பொ.  என்ற எஸ்.பொன்னுத்துரையின்  குரல்!

இத்தனை பின்னணிக்கதைகளுக்கும் மத்தியில், இன்னமும் தமிழக வாசகர்களும்  இலக்கியப் படைப்பாளிகளும்  ஈழத்திலிருந்தும் புகலிட தேசங்களிலிருந்தும் எழுதும் எமது எழுத்தாளர்களின் படைப்புகளில் இடம்பெறும் படலை, பற்றை, பன்னாடை, வடலி, காடையர் முதலான சொற்களுக்கு அர்த்தம் தெரியாமலிருக்கின்றனர்.

1984 ஆம் ஆண்டு நான் திருநெல்வேலி மாவட்டத்தில் இடைசெவல் கிராமத்தில் மூத்த எழுத்தாளர் கி.ரா. ( கி. ராஜநாராயணன் ) அவர்களை சந்தித்தபோது,   1983 இலங்கை கலவரங்களை யார் செய்தது..?  “ எனக்கேட்டார்.

 “ சிங்களக்காடையர்கள்  “ எனச்சொன்னதும்,   “ அது என்ன பாஷை..?  விளங்கப்படுத்துங்கள்  “ என்றார். தனது குறிப்பேட்டில் அந்தச்சொல்லை உடனே எழுதிக்கொண்டார்.

கி.ரா. தமிழக கிராமங்களின் கரிசல் மண்வாசனை கமழ எழுதியவர். அத்துடன் தமிழ் பேச்சு மொழி வழக்குகளை           “ சொலவடைகள்  “ என்ற பெயரில் அகராதியாகவும் தொகுத்தவர்.

 “ தமிழ்நாட்டில் ரவுடிகள், குண்டர்கள் என அழைக்கிறீர்களே அவர்களைப் போன்றவர்கள்.  “ என்று விளக்கினேன்.

இச்சந்தர்ப்பத்தில் தமிழ்நாட்டில் குண்டர்கள் தடுப்புச்சட்டம் இருப்பதையும்  இதனைப்படிக்கும் வாசகர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் ஆட்சிக்காலத்தில்தான் இந்தச்சட்டம் தமிழ் நாட்டில் அறிமுகமானது.

ஜெயாகாந்தனின் சினிமாவுக்குப்போன சித்தாளு குறுநாவல் முழுக்க முழுக்க சென்னையில் சேரிப்புறங்களில் வாழும் பாமர மக்களின் பேச்சுமொழியில் எழுதப்பட்டது. கவியரசு கண்ணதாசனின் கண்ணதாசன் இலக்கிய இதழில்தான் அது வெளியாகி,  பின்னர் மதுரை மீனாட்சி புத்த நிலையத்தால் புத்தகமாக வெளியானது.

ஈழத்து வாசகர்கள் அதனைப்படித்து புரிந்துகொண்டோம்,  கி.ரா, இமயம், சு. சமுத்திரம்,  நாஞ்சில் நாடன், பெருமாள் முருகன் முதலானோரின் படைப்புகளையும் அதில் வெளிவந்த பிரதேச மொழி வழக்குகளையும் படித்து புரிந்துகொண்டோம்.

தி. ஜானகிராமனின் படைப்புகளில் இழையோடிய  அக்ரகாரத் தமிழையும் புரிந்துகொண்டோம்.

அதேசமயம் தென்னிந்திய திரைப்படங்களின் வாயிலாக, டுபாக்கூர், கொய்யால,  சாவுக்கிராக்கி, தில்லாலங்கடி,  கலாய்க்கிறது, கோல் மால்  முதலான சொற்பிரயோகங்களையும் புரிந்துகொள்கின்றோம்.

எமது ஈழத்து எழுத்தாளர்களும் புகலிட  எழுத்தாளர்களும் வருடாந்தம் சென்னையில் நடக்கும் புத்தகத்  திருவிழாவுக்கு சென்று திரும்புகின்றனர்.  சிலர் தமது புத்தகங்களையும் அங்கே பதிப்பித்து வெளியிட்டு,  வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர்.

அந்நிகழ்ச்சிகளில் உரையாற்றும் தமிழக வாசகர்களும்கூட,  ஈழத்து  தமிழ் மொழிவழக்குகளை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

இந்திய அரசு  இந்து சமுத்திரத்திற்கூடாக  இலங்கைக்கு தரைவழிப்பாதையாக  இராமர்  பாலம்  அமைக்கவிருக்கிறதாம் என்று செய்தி வெளியாகியிருக்கிறது.

ஈழத்து இலக்கியத்தையும் ஈழத்தவரின் புகலிட இலக்கியத்தையும்  தமிழக வாசகர்களும் படைப்பாளிளும் புரிந்துகொள்வதற்கு  இலக்கியப்பாலம்  அமைப்பது பற்றியும் நாம்  யோசிக்கலாம்தானே.?!

----0---

( நன்றி:  கனடா – தமிழர் தகவல் 33 ஆவது ஆண்டு மலர் )

letchumananm@gmail.com

 

No comments:

Post a Comment