மேலும் சில பக்கங்கள்

எல்லாமாக இருப்பவர் - சௌந்தரி கணேசன்

என் அப்பா

என் வாழ்க்கையின் சாகசம்

என் பிரபஞ்சத்தின் நட்சத்திரம்

அவர் முக்கியத்துவம்பற்றி

நான் சொல்லாத நாளில்லை

 

நான் சிறுமியாக இருந்தபோது

அவர் என்னோடு இருந்தார்

 

என்னை நன்றாக நேசித்தார்

என் ஆரோக்கியத்தை கவனித்தார்

ஓர் அன்புக் கடலை பரிசளித்தார்

 

நான் குமரியாக மாறும்போதும்

அவர் என்னோடு இருந்தார்

 

என் குறைகளை அனுமதித்தார்

என் தெரிவுகளைச் சரி செய்தார்

என் முயற்சிக்குத் துணை நின்றார்

 

நான் சுயமாக நின்ற போது

அவர் என்னோடு இல்லை

 

என் பலவீனத்தைப் பலமாக்கவில்லை

என் தவறுகளைச் சுட்டிக் காட்டவில்லை

என் சீற்றத்திற்கு அடைக்கலம் தரவில்லை

 

நான் ஓடிச் சென்று கைபிடிக்க

என் அப்பா இன்று என்னோடு இல்லை

 

எல்லாமாக இருப்பவர்தான் அப்பா

 

அன்பின் வெளிச்சத்தை பார்வையில் காட்டுவார்

நெருக்கமாக நின்று இதயத்தைப் பாதுகாப்பார்

பன்முறைப் பரிவுடன் தோழமை செய்வார்

எண்ணப் பறவைக்கு சிறகுகள் தருவார்

 

அவரது கைப்பிடிக்குள் வளராவிட்டால்

என் வாழ்வு கடினமாக இருந்திருக்கும்

 

அப்பாவின் மதிப்புடன் இன்றும் வளர்கிறேன்

எங்கு சென்றாலும் அவர் அன்பை உணர்கிறேன்

 

கொண்டாடத் தகுதியானவர் என் அப்பா

 

காலத்தின் கதவுகள் வழியே

ஆண்டுகள் கடந்தாலும்

 

என் காலம்வரை

நான் வணங்கும் கடவுள்

என் அப்பா

 





 

1 comment:

  1. நன்றி தமிழ்முரசு. அன்பர் ஒருவர் எனது கவிதையை வாசித்துவிட்டு நெகிழ்ந்து பதிவிட்டார், அவரின் அப்பாவை ஞாபகப் படுத்திவிட்டது போலும். உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள்

    ReplyDelete