மேலும் சில பக்கங்கள்

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - ஜஸ்டிஸ் விஸ்வநாதன் - ச. சுந்தரதாஸ் - பகுதி 4

 .


தமிழில் நூற்றுக்கும் அதிகமான படங்களை தயாரித்து சாதனை புரிந்த நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். இவர்கள் நட்சத்திர நடிகர்களை மட்டும் நம்பாமல் சாதாரண நடிகர்களை வைத்து படம் எடுப்பார்கள். அசோகன், நம்பியார், மனோகர், மனோரமா போன்றோர் இவர்கள் நிறுவன படங்களில் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அந்த வகையில் மேஜர் சுந்தரராஜனை கதாநாயகனாக போட்டு அவர்கள் உருவாக்கிய படம்தான் ஜஸ்டிஸ் விஸ்வநாதன்.


உயர் நீதிமன்ற நீதிபதியான விஸ்வநாதன் தனக்கு இழைக்கப்படட துரோகத்திற்கு பழிவாங்குவதற்காக ஓடும் ரயிலில் சுரேசை சுட்டு கொன்று விடுகிறார், ஆனால் அதனை சந்தியா என்ற பெண் பார்த்து விடுகிறாள், கொலையைப் பற்றி எவரிடமும் மூச்சு விடக்கூடாது என்று கூறும் விஸ்வநாதன் சில தினங்கள் கழித்து வீடு திரும்புகிறார், அங்கே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. எந்தக் கொலையை ஒருத்தி பார்த்தாளோ அவளே அவரின் வீட்டிற்கு அவரின் தாயற்ற குழந்தையை பராமரிக்க வந்திருக்கிறாள்.



இவ்வாறு அமைக்கப்பட்ட கதையில் விஸ்வநாதனாக சுந்தரராஜன் அருமையாக நடித்திருந்தார். அலட்டல் இல்லாத நடிப்பு. சந்தியாவாக சிஐடி சகுந்தலாவும் நீதிபதியின் தம்பி கோபியாக ரவிச்சந்திரனும் நடித்தனர் இவர்களுடன் தேங்காய் சீனிவாசன், மனோரமா, மனோகர். வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரும் நடித்தனர். படத்தின் வசனங்களை ஏ எல் நாராயணன் எழுதினார். படத்தின் கதைக்கு அர்த்தம் சேர்ப்பது போல் கண்ணதாசனின் பாடல்கள் அமைந்தன. சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் இடம்பெற்ற இது நீரோடு செல்கின்ற ஓடம் பாடல் அருமையான தத்துவப் பாடலாக ஒலித்தது. இதுதவிர கண்வழியே கண்வழியே போனது கிளியே, சிலை செய்ய கைகள் உண்டு, இரு பாடல்களும் இனிமையாக அமைந்தன.



படங்களுக்கு நவீனமான முறையில் இசை அமைப்பதில் வல்லவர் வேதா. இப்படத்திலும் தன் திறமையை அவர் வெளிப்படுத்தியிருந்தார். துரதிருஷ்டவசமாக இதுவே அவரின் கடைசி படமாக அமைந்தது. படத்தை விறு விறுப்பாக டைரக்ட் செய்து ஒளிப்பதிவு செய்திருந்தார் ஜி ஆர் நாதன்.


1971 இல் வெளிவந்த இப்படம் 10 ஆண்டுகள் கழித்து ரஜினியின் நடிப்பில் பொல்லாதவன் என்ற பெயரில் மீண்டும் கலரில் வெளிவந்து வெற்றி பெற்றது .



No comments:

Post a Comment