மேலும் சில பக்கங்கள்

அவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு முருகபூபதி


கலையும் இலக்கியமும் இனத்தின்கண்கள் – அறிந்ததை பகிர்தல் - அறியாததை அறிந்துகொள்ள ஆவனசெய்தல் முதலான சிந்தனைகளின் அடிப்படையில் 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம், அடுத்தடுத்து ஏனைய மாநிலங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு மெல்பனில் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திய இவ்வியக்கம், பின்னர் சிட்னி, கன்பரா முதலான மாநிலத்தலைநகரங்களிலும் எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாக்களை நடத்தியது.

அத்துடன், காலத்துக்குக்காலம் கலை – இலக்கிய


சந்திப்புகளையும்  மேற்கொண்டுவந்தது.

இவ்வாறு அத்திவாரமிட்டு வளர்க்கப்பட்ட இவ்வியக்கமே 2005 ஆம் ஆண்டின்  பின்னர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கமாக உருவெடுத்து, விக்ரோரியா மாநில அரசிலும் பதிவுபெற்றது. அதனால் விக்ரோரியா மாநில பல்தேசிய கலாசார ஆணையத்தின் மானியத்தையும் பெறத்தொடங்கியது.

மெல்பன், சிட்னி, கன்பரா, பிரிஸ்பேர்ண் முதலான மாநிலத் தலைநகரங்களிலிருந்து கலை, இலக்கிய வாதிகள்  இச்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றதனால், இங்கெல்லாம் சங்கத்தின் எழுத்தாளர் விழாக்களும்,  கலை – இலக்கிய


சந்திப்புகள், மறைந்த எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சிகள், கவிதா மண்டலங்கள், கருத்தரங்குகள், குறும்படக்காட்சிகள்,  இதழ்கள் – புத்தகங்களின் கண்காட்சிகள்  என்பனவும் நடந்தன.

பத்தாவது  எழுத்தாளர் விழாவின்போது அனைத்துலக சிறுகதை, கவிதைப்போட்டிகளும் இடம்பெற்றன.

பல கலை, இலக்கிய ஆளுமைகளின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்தன.

அத்துடன் அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பாளிகளின் சிறுகதைகள், கவிதைகள் அடங்கிய  உயிர்ப்பு – வானவில் முதலான தொகுப்புகளும் பூமராங் என்ற மலரும் வெளியாகின.

பின்னாளில் பூமராங் என்ற பெயரிலேயே சங்கத்தின்


உத்தியோகபூர்வ இணையத்தளமும் இயங்கத்தொடங்கியது. web: www.atlasonline.org

கடந்த சில வருடங்களாக நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வுகளையும் நடத்திவந்தது.

அத்துடன் சர்வதேச பெண்கள் விழாவையும் நடத்தியிருக்கிறது.  இந்நிகழ்வுகளில்  மூத்த தலைமுறையினருடன்  இளம் தலைமுறையினரும் பங்கேற்கும் வகையிலும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டன.  

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து  கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்ததையடுத்து,  சமூக இடைவெளிபேணவேண்டிய சூழ்நிலைக்குத்தள்ளப்பட்ட இச்சங்கம், இணையவழி காணொளி ஊடாக சந்திப்புகளை நடத்திவருகிறது.



இதுவரையில் தொடர்ச்சியாக பல அரங்குகளை இணையவழியில் நடத்தியிருக்கும்  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், அதன் நடப்பாண்டு தலைவர் மருத்துவர் ( திருமதி ) வஜ்னா இரஃபீக் தலைமையில்  கடந்த  20 ஆம் திகதி சனிக்கிழமை இரவு அவுஸ்திரேலியாவில்  கடந்த காலங்களில் மறைந்த கலை, இலக்கிய, கல்வித்துறை மற்றும் சமூகம் சார்ந்த பணிகளில் அயராமல் உழைத்து மறைந்த ஆளுமைகள்  சிலரை  இணையவழியில்  நினைவுகூர்ந்தது.

மருத்துவர் வஜ்னா இரஃபீக், இலங்கையில் மூத்தகவிஞர்                       ( அமரர் ) மருதூர்க்கனியின் புதல்வி என்பதும், கலை – இலக்கிய ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இந்த  அரங்கில்  பேராசிரியர் சிவஶ்ரீ கா.


கைலாசநாதக்குருக்கள்,  கலாநிதி ஆ. கந்தையா, பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், எஸ். பொன்னுத்துரை, காவலூர் இராஜதுரை, கலாநிதி வேந்தனார் இளங்கோ, தெ. நித்தியகீர்த்தி ஆகிய ஏழுபேர் நினைவுகூரப்பட்டனர்.

இவர்களின் வாழ்வையும் பணிகளையும்பற்றியும், கலை, இலக்கிய, பண்பாட்டுத்தளத்தில் இவர்களின் பங்களிப்புகள் குறித்தும்  முறையே,  மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா,  நொயல் நடேசன்,    திருநந்தகுமார்,   பாடும்மீன் சு. சிறிகந்தராசா,  கானா. பிரபா,  செ. பாஸ்கரன்,  ஆவூரான் சந்திரன் ஆகியோர்    நினைவுரைகளை நிகழ்த்தினார்கள்.

நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆளுமைகளின்  உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அவர்களின் முன்னாள் மாணவர்களும் உலகெங்கிலிருந்தும் இந்த இணையவழி


அரங்கில் இணைந்திருந்தனர்.

குறிப்பிட்ட நினைவுரைகள் எழுத்திலும் ஆவணப்படுத்தப்படவேண்டியதாகும்.   














No comments:

Post a Comment