பனையோலை கொண்டுவேய்ந்த பதிவான கூரைவீடு!
பசுஞ்சாணத் தால்அம்மா மெழுகிவிட்ட பசுந்திண்ணை!
மனைமுழுதும் தெளித்ததனால் மணம்பரப்பும் மஞ்சள்நீர்!
மல்லிகையும் முல்லையொடு மலர்ந்தளித்த பூப்பந்தல்!
எனையன்று மகிழ்வித்த 'இளவல்கள்' சிரிப்பினொலி!
என்றுமெனைக் கண்டவுடன் துள்ளும்'பப்பி'வாலாட்டம்!
நினைத்தவுடன் முகர்வதெலாம் சொந்தமண்ணின் வாசனையே!
நெஞ்சிலின்பம் தந்தநாளை நினைந்தின்று மகிழ்கின்றேன்!
நாற்றிசையும் அருள்சுரக்கும் நல்லதிருக் கோவிற்கெலாம்
நற்றமிழாற் பதிகங்கள் நனிசிறக்கப் பாடிநின்று
ஏற்றம்பெற் றுயர்ந்திட்ட ஈடில்லாப் பெரும்புலவர்!
எனக்கெழுத்தை அறிவித்த சோமசுந்தரத் தாத்தாவைப்
போற்றித் தொழுகின்றேன்! புலமைமிகு அறிவாளர்
பொலிந்திலங்க இயற்கைதரும் பொற்பெல்லாம் அணிகூட்ட
ஊற்றின்றி நிறைந்தோடும் ஒழுகலாறு புகழ்சேர்க்கும்
ஓரரிய ஒப்பில்லா நவாலிநகர் என்னூரே!
ஆறைந்து ஆண்டுகளாய்ப் புலம்பெயர்ந்து வாழ்கின்றேன்!
ஐயோநான் இழந்ததெல்லாம் அடுக்கிச்சொல விடிந்திடுமே!
மாறாத காதலுடன் வளர்த்தவென்தாய் தந்தையரை
மனக்கண்ணால் தினம்நினைந்து தொழமட்டும் முடிகிறதே!
பேறாகப் பெருஞ்செல்வக் கொடையாக அவரன்பைப்
பெற்றவென்னை அணைத்தன்று பெரிதுவந்து வளர்த்ததிறம்
கூறாது விட்டிட்டால் ஆறிடாதே என்னிதயம்!
குறையெதுவும் வைத்திடாது நிறைகல்வி தந்தனரே!
இளமுருகன் என்தந்தை இன்றமிழ்ப் பேராசிரியன்!
இணையற்ற கவிமாலை தமிழன்னைக்(கு) அணிந்தி;ட்டோன்
களமிறங்கித் தமிழ்சிதைப்போர் கண்டஞ்சக் கண்டனங்கள்
கடிதெழுதித் தனித்தமிழுக் குயிரளித்த காவலனே!
பழைமைமிகு தமிழினிலே பண்டிதையாய் அணிசேர்த்த
பண்பான இல்லத்து அரசியென்றன் அன்னையவள்
குழகனவன் தாழ்தொழுது வழிநடத்தி வளர்த்தெடுத்துக்
குலப்பெருமை துலங்கிடவே வாழ்வாங்கு வாழவைத்தார்.
அதிகாலை எழுந்தம்மா அடுக்களைக்குச் சென்றிட்டால்
அவளுக்கு இளைப்பாற நேரந்தான் எங்கிருக்கும்?
கெதியாகப் பறித்துவந்த 'பன்னாடை' ஒன்றெடுத்துக்
கிடுகிடென நெருப்பேற்றி அடுப்பினிலே விறகெரித்து
பதியவர்க்கும் பாசமிகு பண்பான பிள்ளைகட்கும்
பொறுமையொடு; பட்சணங்கள் செய்துநறுஞ் சுவைபில்கப்
புதிதாக நாள்தோறும் செய்;துண்ணத் தந்திடுவாள்
பொன்மனத்தாள் அன்பிற்கு ஈடெதுவும் இல்லையம்மா!
இட்டமுடன் தாளித்த இதமான கீரைக்கறி;
ஏற்றபடி வறுத்தரைத்த 'தூதுவளை'க் காரசம்பல்
மட்டுவிலில் விழைந்திட்ட 'வெள்ளைக்கத் தரி'ப்பொரியல்
மணமணக்கும் 'மொசுமொசுக்கை' வறுத்தரைத்த தனிக்கூட்டு
'சட்டிக்கர ணைக்கிழங்கில்' தனியவொரு பிரட்டற்கறி
'சாறணை'யொடு சேர்த்துவைத்த உள்ளிமல்லி மிழகுரசம்!
பட்டியலாய் எழுதியின்று பார்;த்தவற்றை ரசிக்கின்றேன்
பாழும்போர் வந்தெங்கள் தலையெழுத்தை மாற்றியதே!
மண்ணோடு பெயர்த்தெடுத்த மரவள்ளிக் கிழங்கிலம்மா
வகைவகையாய்ச் செய்தளித்த உணவுகளை நினைக்கின்றேன்
வண்ண 'அகத் திப்பூ'வுடன் இலைசேர்த்த தனிவறுவல்!
வாச'முல்லை முசுட்டை'யுடன் வைப்பாளே பாலிற்சொதி!
எண்ணவெண்ண இன்பந்தரும்; 'மொட்டைக்கறுப் பன்'ஊர்ச்சோறும்
ஏற்ற'வெந்தை யக்குழம்பும்' இதமான தயிரோடு
உண்ணத்தந் திட்டதெலாம் நினைத்தாலே வாயூறும்!
ஊரிலம்மா சமைத்ததுபோல் ஒருசுவையும் இங்கிலையே!
அழைக்காத விருந்துவர ஆசைநண்பர் கூடிவர
அன்பாக விருந்தோம்பல் அற்புதமாய் ஆற்றிடவே
களைக்காது காலநேரம் பார்த்தவர்க்கு அமுதளிப்;பாள்
காலமெலாம் சலிக்காது கடமையொன்றே கண்ணாக
உழைத்துவந்த உத்தமியோர் ஒப்பரிய தெய்வமன்றோ?.
உண்மையிலே தமையுருக்கி எமைவளர்த்த பெற்றோர்கள்
இளைப்பாறி எம்அன்பில் இணைந்துருகித் திழைத்திருந்து
இறையுடனே இறவாத இன்பநிலை எய்தினரே!
சிறுவயதில் நான்வீட்டிற் செய்திட்ட குறும்புகளைச்
சின்னவனாம் தம்பியுடன் சிறியவென்றன் தங்கையுடன்
குறும்;புபல செய்ததையும் பிரம்படியும் பெற்றதையும்
குரங்கினைப்போல் மரமேறிக் கொப்பிருந்து விழுந்ததையும்
விறுவிறெனக் கொய்யாவில் பழம்பறித்துக் கொறித்ததையும்
விழாம்பழத்திற் கெறிந்தகல்லென் தலையைப்பதம் பார்த்ததையும்
மறுபடியும் நினைத்திடிலோ மகிழ்ச்சியிற்கண் பனித்திடுமே!
மாமரத்;துக் கிளையிலூஞ்சல் ஆடியதும் தோற்றிடுமே!
வில்வளைத்து நாண்பூட்டி விளையாட்டாய் மைத்துனரும்
விட்டஅம்பின் கூரெனது விழியின்கீழ்த் தைத்தம்மா!
கல்லெறிந்து நெல்லிமரக் கனிபொறுக்கி உண்டதையும்;
கால்நடையாய்க் கந்தNரைடைப் பள்ளிக்குச் செலும்வழியில்
நல்ல'பச்சை தின்னிமாங்காய்'க் குலைக்குநண்பன் தடியெறிய
நடுவீதி விழுந்தவொரு மாங்காயைத் தூக்கிநாமும்
நில்லாது ஓடியொரு கல்மீது குத்தியதை
நிம்மதியாய்ப் பங்கிட்டுத் தின்றதையும் மறக்கலையே!.
மாதாகோ விலிலோர்நாள் மணியோசை கேட்டவுடன்
மளமளவென் றோடிநானும் மாமரத்தில் ஏறியென்றன்
காதோரம் ஒலித்திட்ட திசைநோக்கிப் பார்த்தேனே!
கண்கொள்ளாக் காட்சியொன்றைக் கண்டவுடன் எனைமறந்தேன்
தேவாலயத் திலே'கூடு' காவிவரக் கண்டவுடன்
தெரியாது ஒருகாலைச் சிறுகொப்பில் வைத்துமுன்னே
ஆகாவென் றேநிலத்தில் நடப்பதுபோல் அடிவைக்க
அடுத்தகணம் ஐயோவென்(று) அலறிமண்ணில் விழுந்தேனே!
அலறியதைக் கேட்டதுவும் பாட்டியங்கே ஓடிவந்து
'அப்பனேயிது என்னடா'வென் றென்னைத்ளோள் மேற்றூக்கி
குலதெய்வம் முருகனையும் கும்பிட்டே தாத்தாவைக்
கூவியழைத் தேயென்னைக் கட்டிலிலே வளர்த்திவிட்டுச்
சிலநிமிடம் என்முகத்தில் குளிர்நீரைத் தெளித்துநின்றார்
திகைப்போடு ஓடிவந்த தாத்தாவும் திருநீறு
பலமுறைபூ சிக்கோளறு பதிகத்தைப் பாடியதும்
பாரதிநான் கண்திறந்து பார்த்ததையும் 'கேட்டறிந்தேன்'!.
கீச்சுக்கீச் சுத்தம்பலம் கீயோமா யோத்தம்பலம்
கேட்டுநாமும் கூடிநின்று கைகொட்டிப் பாடிடுவோம்
ஆச்சியோடு சேர்ந்துவிளை யாடித்தினம் மகிழ்ந்திடுவோம்
ஆசையாக மாமரத்தில்; ஊஞ்சலொன்றைக் கட்டிநாமும்
மூச்சுவாங்க நானுமதில் உன்னிஉன்னி ஆடிடுவேன்
முதுகிற்கை வைத்துமைச்சான்; முன்னாலே தள்ளிவிட
வீச்சுவீச்சாய் மேலுங்கீழும் வேகமாகப் போனவூஞ்சல்
விசைகூடிக் கயிறறுந்து விழுந்ததையும் நினைக்கின்றேன்.
ஒற்றைமாட்டு வண்டியிலே தந்தைவழிப் பாட்டியுடன்
ஓரமாக இருந்துநானும் ஒழுங்காகப் போகையிலே
வெற்றுவெளி வந்தவுடன் விரைவாய்க் கீழேபாய்ந்து
வீதிவழி சிறுதூரம் விளையாட்டாய் ஓடிடுவேன்
சற்றுமிகக் கோபத்துடன் சத்தமிடும் பாட்டிபார்க்கச்
சடக்கென்றே துள்ளிநானும் வண்டிஉள்ளே ஏறிடுவேன்
சொற்படிநான் கேட்காது தொடர்ந்தவிந்தச் செயல்கண்டு
சூழுரைக்கக் கேட்ட'வாத்தி' சும்மாதா னிருப்பாரா?
இரும்புமனங் கொண்ட'வாத்தி' எனைப்பார்த்து 'வா'வென்றார்
'இனியும்நீ வண்டியிலே இருந்துகுதிப் பாயோடா?
மருந்தாக ஒன்றுதாறேன் வாங்கிப்போ' என்றவரும்
வைத்தாரே பிரம்புகொண்டு வசமாக மூன்றுகுறி
'இருந்துவிட்டேன்' பயத்தாலே என்னுடுப்பும் நனைந்திற்றே!
'இனிக்குதிக்க மாட்டேன்நான்'; என்றுபாட்டிக் குரைத்திட்டேன்.
வருந்தியவென் கண்ணீரைத் துடைத்தபாட்டி அணைத்திட்டாள்
வழக்கத்தை விடவதிக முத்தமிட்டாள் மகிழ்வுற்றேன்!
(வேறு)
பாட்டியும் பதமொடு ஆடித் தினமதில்
பல்லுக் கொழுக்கட்டை அவித்து திற்பாள்
கேட்டதும் கொஞ்சிநின் றேயவள் தருவளே
கிடைத்ததும் ஆசையாய்ச் சுவைத்துநாம் தின்பமே!
தேடிப் பலாஇலை ஓடிப் பொறுக்கியே
திண்ணையில் வைத்திட அம்மா வந்து
வாடிப் பழுத்த இலைகோலி யேயதில்
வாசநற் கூழ்தனை ஊற்றி நிற்பாள்
ஊட்டநற் சத்தெலாம் ஊறிய கூழ்தனை
ஊதியே மெல்லக் குடித்து நிற்;போம்
வீட்டில் அனைவரும் பாட்டிசைத் தேவந்த
விருந்தின ரோடு மகிழ்ந்தி ருப்போம்!
காரை நகரிலும் கீரிம லையிலும்
கடற்கரை நீரிலே குளிக்க நண்பர்
மாரையும் அழைத்தங்கு சென்ற கதைதனை
மனத்தால் நினைத்திட இன்ப மின்பம்!
விடுமுறை என்றதும் வீட்டினைச் சுற்றியே
வெற்று நிலமெலாம் பதப்ப டுத்தி
நடுவமே பலன்தரும் காய்கறிக் கன்றுகள்
நாளும் வளர்வதைப் பார்த்து மகிழ்வமே!
பெரியபூ வரசிலே பறித்த இலைதனில்
பீப்பீக் குழல்களும்; செய்துநாம் ஊதுவம்!
கரிய பனையதன் பழங்கள்; பொறுக்கியே
கடித்துச் சுவைத்துத் துள்ளி மகிழ்வமே!
கெந்திப் பிடித்துக் கிளித்தட் டுமாடியே
அந்திப் பொழுதெலாம் அமர்க்களம் பண்ணுவம்
பந்தடிக் கவரும் நண்பரைக்; கூட்டியே
பச்சைக் குரும்பையற் பம்பரம்; செய்வமே!
இப்படிச் செய்து களித்தவை எத்தனை!!
எண்ணிடக் கண்களும் பனித்திடா திருக்குமோ?
எப்படி மறப்பது? 'எண்பதை' அணுகிறேன்
இளமையின் அருமையை எண்ணியே மகிழ்கிறேன்!.
ReplyDeleteநன்றிகள்.
பாட்டு எழுதி பழைய நினைவெல்லாம் கொண்டு வந்தீர்.
யாழ் மண்ணில் பிறந்தவர்க்கு பொருத்தமான கதை சொன்னீர்.
எமக்குமது பொருத்தமான செய்திகள் தாம்.
தாம் கூறும் அனுபவங்கள் யாமும் அனுபவித்தோம்.
இன்னுமொன்றையும் நான் கூற விளைகின்றேன்.
நானும் என் தம்பிமார் அயல் நண்பர் கூடி நின்று
கிட்டி அடித்து விளையாடியதை எனக்கும் நினைவூட்ட
தம் கவிதை உதவியதை நன்றியுடன் செப்புகிறேன்.
தங்கள் கவிதை என்னையும் கவி எழுதத் தூண்டியதால்
நானும் ஒரு கவி எழுத முனைந்துள்ளேன்.
பிழை களைந்து ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
அதற்கும் நன்றி.
அன்புடன்,
பொன்மயிலைநாதன்
sweet memories.thanks veetitku veedu athey thaan
ReplyDeleteஅற்புதமான கவிதைக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்
ReplyDelete