உடுக்கை/உடுக்கு – தோற்கருவி
அனைவரும் அறிந்த ஒரு தமிழர் இசைக் கருவியாகவே உடுக்கை திகழ்ந்து வருகிறது. பழங்காலத்தில் மண்ணால் செய்யப்பட்டு பக்கவாட்டில் தோல் போர்த்தப்பட்டு
இசைக்கப்பட்டது உடுக்கை. நிகழ்காலத்தில் வேங்கை அல்லது பலா மரத்தைக் குடைந்து உடுக்கைக்கான உடல்பகுதி செய்யப்படுகிறது. சில காலமாக உடுக்கையின் உடல்பகுதி வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களிலும் செய்யப்படுகிறது. இவை நீண்டு உழைக்கக் கூடியதாகவும், காலத்திற்கும் இருப்பதாகவும் இருக்கின்றது. இருபுறமும் மரத்திலோ அல்லது பிரம்பு வளையத்திலோ சுமார் ஆறு இன்ச் அளவுள்ள வளைவுகள் செய்யப்பட்டு அதில் மாட்டின் இரைப்பையில் இருந்து எடுக்கப்படும் சவ்வைக் கொண்டு நன்கு இழுத்து, சோற்றின் பசையாலோ அல்லது அரைத்து காய்ச்சிய புளியங்கொட்டையின் பசையினாலோ ஒட்டப்படுகிறது. முன்பு சில இடங்களில் முயலின் சவ்வு பயன்படுத்தப்பட்தாக தெரிகிறது. இப்பொழுது நெகிழி தான் பெரும்பாலும். இதன் பிறகு ஒட்டிய தட்டுகளை துணிகளில் கட்டி ஒருநாள் அளவிற்கு உலர விட்டு பிறகு உடுக்கை உடன் சேர்த்து கட்ட தயாராகிவிடுகிறது உடுக்கை. உடுக்கைக்கு துணியாலான கச்சையும் கட்டப்படும். உடுக்கையின் ஓசையை கட்டுப்படுத்த கொங்காரம் உதவியாக இருக்கிறது அதை அழுத்தி பிடித்து/விடுத்து இசைக்கும்பொழுது வெவ்வேறு விதமான ஓசை வெளிப்படுகிறது. உடுக்கையின் வீரியத்தை அதிகரிக்க குதிரை வால் முடியை இசைக்கப்படும் முகத்தின் எதிர் முகத்தில் குறுக்காக பொருத்துவதும் உண்டு.
பண்ருட்டி பலா மிகப் பிரபலம். இதன் சுவை தனித்துவமானது. பண்ருட்டி நகரம், காடாம்புலியூர், சாத்திப்பட்டு, மாம்பட்டு, காட்டுக்கூடலூர், வரிசன்குப்பம் உள்ளிட்டக் கிராமங்களில் பலாவைக் குடைந்து இசைக்கருவிகள் செய்யப்படுகிறது. கடந்த 35 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் காடாம்புலியூரைச் சேர்ந்த ஏழுமலை பண்ருட்டிப் பலா மரம் குறித்த சில அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்: “இசையுடன் இணைந்த மரங்களில் முதன்மை இடத்தை வகிப்பது பண்ருட்டிப் பலா மரங்கள், அதற்கு முக்கியக் காரணம் வறண்ட பூமியான செம்மண் கொண்ட பண்ருட்டியில் விளையும் பலா மரங்களுக்குக் கடினத் தன்மை அதிகம், இதிலிருந்து ஒழுகும் பாலின் தன்மையும் அடர்த்தியானது. இத்தகைய சிறப்பு பண்ருட்டியில் விளையும் பலா மரங்களுக்கே உண்டு என்பதால், இசை வித்வான்கள் எதிர்பார்க்கும் நாதமும், சுருதியும், பிசகின்றி, துல்லியமாகக் கிடைக்கும். இது இறைவன் கொடுத்த வரம் என்றால் மிகையல்ல. தவில், உடுக்கை, செண்டை போன்ற இசைக் கருவிகள் இங்கே செய்கிறோம். வெளிநாடுகளில் இருந்து இசைக் கருவிகள் வேண்டி பல ஆர்டர்கள் வந்தாலும் அவற்றை அனுப்புகின்ற கூலி, விற்கும் பொருளைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது. இதனால் பலர் இத்தொழிலை தொடர்ந்து செய்ய தயங்குகின்றனர்.”
உடுக்கை ஒரு தொல் தமிழர் இசைக்கருவி என்பதை நமக்கு நமது இலக்கியங்களும், கல்வெட்டுகளும், கோவில் சிற்பங்களும் எடுத்துக்காட்டுகின்றன. சங்க இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் உடுக்கை பற்றிய குறிப்புகள் உள்ளன. ”சிரந்தை இரட்டும் விரலன்” என்பது பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவபெருமானைக் குறித்துப் பாடப்பட்டது. சிரந்தை என்பது உடுக்கை. உடுக்கை நிலையாய் சிவனின் கையில் இருப்பதாக சைவர்களின் நம்பிக்கை. நாட்டார் தெய்வமான மாரியம்மனின் கையிலும் உடுக்கை இருக்கின்றது. சோழர் ஆட்சி காலத்தில் பல கோவில்களில் உடுக்கை இசைக்க நில நிவந்தம் விட்ட கல்வெட்டுகள் பல தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராஜராஜன் காலத்தில் அவர் தஞ்சை பெரிய கோவிலில் ஓதுவார்களுக்கு பக்க இசையாக உடுக்கையை இசைக்க ஏற்பாடு செய்த செய்தி தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் இருந்து நாம் அறிகின்றோம். தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் நாட்டியத்திற்காக நானூற்று ஏழு நாட்டிய மங்கைகளும், ஏழு நட்டுவனார்களும், உடன்பாடுவோர் நான்கு பேரும், மெராவியம் எனும் இசைக்கருவி இசைப்பார் இருவர், கானம் பாடுவோர் இருவர், வங்கியம் இசைப்பார் மூவர், பாடவியம் எனும் இசைக்கருவியை இசைப்போர் நால்வர், உடுக்கை வாசிப்போர்
இருவர், வீணை வாசிப்போர் இருவர், ஆரியம் பாடுவார் மூவர் (அதாவது வேதம் ஓதுதல்) தமிழ் பாடுவோர் நால்வர், கொட்டி மத்தளம் வாசிப்போர் இருவர், முத்திரைச் சங்கு ஊதுவோர் மூவர், பக்கவாத்தியம் வாசிப்போர் ஐவர் இப்படி பற்பலர் இங்கு பணிபுரிந்ததற்கான வரலாற்று ஆவணங்கள் உண்டு. கீழுள்ள கல்வெட்டு குறிப்பை காண்க. "உடையார் ஶ்ரீ ராஜராஜீச்வரம் உடையார்க்குத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்ய உடையார் ஶ்ரீராஜ ராஜ தேவர் குடுத்த பிடாரர்கள் நாற்பத் தெண்மரும், இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும், இவர்களிலே நிலையாய் கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின்மருக்குப் பேரால் நிசதம் நெல்லு முக்குறுணி..."
தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிவபுரம் என்கிற சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டின் மூலம், நிவந்தம் விட்ட நிலத்திலிருந்து வரும் வருவாயினைக் கொண்டு வீணைவாசிப்பாா், உடுக்கை வாசிப்பவா், திருப்பதியம் பாடுவாா், பாடவியம்
இசைக்கும் உவச்சா் ஆகியோர் அமர்த்தப்பட்டதை நாம் அறிகின்றோம். முதலாம் பராந்தக சோழனின் 27 ஆட்சியாண்டு {கி.பி.934} கல்வெட்டு, திருவிடைமருதூர் இறைவன் (உற்சவமூர்த்தி) திருஓலகத்து மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் பொழுது, மூன்று சந்திகளிலும் இறைவன் முன்பு உடுக்கை வாசிக்கும் ஒருவனுக்கு விளங்குடி என்ற ஊரில், அவ்வூர் கோயில் நிலத்தில் 3/4 வேலி நிலம் நிவந்தமாக கொடுக்கப்பட்டது என்பதன் குறிப்பு கல்வெட்டில் உள்ளது. ”திருவிடைமருதூருடையார்க்குத் திருஓலக்கத்து மூன்றுசந்தியும் உடுக்கை வாசிப்பான் ஒருவனுக்கு விளங்குடி தேவர் நிலத்தில் நிவந்தமாகச் செய்த நிலம் முக்கால்” என்பது அப்பாடம்.( (1)157/1895-{S.I.I-5-Sl.No.721}).
தமிழர் நிலப்பரப்பு முழுதும் முழுவதிலும் உடுக்கை தவிர்க்கமுடியாத இசைக் கருவியாக பயன்பட்டு வருகிறது. தமிழகத்தில் காவடி ஆட்டங்களிலும் அனைத்து நாட்டார் தெய்வ வழிபாடுகளிலும் உடுக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. தென் தமிழகத்தில் உடுக்கை பரவலாக புழக்கத்தில் உள்ளது. அம்பலசேரியை சேர்ந்த ச.சரவண வேல் அவர்கள் விரிவாக நம்மிடம் பேசினார். “இந்த கருவிய ரெண்டு விதமா இசைக்கிறாங்க. வில்லுப்பாட்டுல இசைக்கிறது வெண்கலத்தால ஆன கிண்ணம். கோவில்ல பயன்படுத்துரது கோடாங்கி உடுக்கு. இது மரத்தாலான ஆன கிண்ணம். இது வில்லுப்பாட்டுல பயன்படுத்தரத விட பெருசா இருக்கும். உடுக்கு இசைக்க வெண்கலத்தாலான கிண்ணம் நாம சொல்லி செய்யுரது. ஒரு பட்டை இரண்டு பட்டைனு இருக்கு. நமக்கு தேவையானத சொல்லி செய்துகொள்ளலாம். இந்த கிண்ணம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம்கிற ஊர்ல செய்து கொடுக்கிறாங்க. உடுக்குக்கு தேவையான இன்னொன்னு தட்டு. அது மரத்தாலான வலை. இல்லண்ணா பிரம்பு வலை. இல்லண்ணா தற்போது தகர வலையும் கிடைக்கிறது. அந்த வலைல மாட்டு சவ்வு ஒட்டப்படுகிறது. இந்த மாட்டுச்சவ்வ ஒரு எட்டு மணி நேரம் தண்ணில நனைய போட்டு வலைல ஒட்ட சோத்து பசை இல்லன்னா புளியங்கொட்டைய அரச்சி பசையா தயார் பண்ணி ஒட்டி, அதுக்கப்புறம் வேஷ்டில சுத்தி கட்டனும் ஒரு நாள் காயவுட்டு
அதுக்கு அப்புறம் பயன் படுத்தலாம். வலையில ஆறு ஓட்டைகள் போடப்பட்டிருக்கு அதில் பம்பர நூல்ல குறுக்கு மறுக்கா கிண்ணத்தோட கட்டி இசைக்கனும். கிண்ணத்த சுத்தி கைல வச்சி அடிக்க கச்சைனு ஒரு ஒன்ட்ரை இஞ்ச் சைஸ்ல துணியிலான கச்சை வச்சி அடிக்கனும். பெரும்பாலா தவில் மகுடம் தட்டுக்களை ஒட்டுற மாதிரி இதுக்கு தனியாட்கள் இல்ல. உடுக்கு வாசிக்கிறவங்களே ஒட்டி கொள்வார்கள். சவ்வு மட்டும் வாங்கி நனைய போட்டு ஓட்டிரலாம்”.
மேற்கு தமிழகத்தில் நாட்டார் தெய்வ வழிபாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது உடுக்கை. குறிப்பாக அண்ணமார் மற்றும் கருப்பராயன் போன்ற தெய்வங்களின் கோவில் விழாக்களில் உடுக்கை இசைக்கப்படுகிறது. அண்ணமார் கதையை பல நாட்களுக்கு இசைத்து கூத்தாக நடத்தும் வழக்கம் மேற்கு தமிழகத்தில் ஈரோடு போன்ற பகுதிகளில் உள்ளது. இக்கூத்துகளில் பயன்படுத்தப்படும் உடுக்கை சற்று சிறியதாக இருக்கிறது. ஆண்கள்/பெண் வேடமிட்ட ஆண்கள் சேர்ந்து உடுக்கை இசைத்து பாடி நாடக வடிவில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இதில் சடங்குகளும் அடக்கம். இவையன்றி பெரிய உடுக்கை, அம்மன் கோவில்களிலும் சாமி அழைக்கவும் பயன்படுகிறது.
தருமபுரி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அம்மன் கோவில் விழாக்களில் ஆண்கள் குழுவாக சேர்ந்து தலையில் கரகம் வைத்து வட்டமாக நின்று ஆடுகிறார்கள். இவர்களுக்கு இடையில் உடுக்கை கலைஞர்களும் உடுக்கையை இசைத்துக்கொண்டு ஆடுகிறார்கள். இந்த ஆடல் வடிவம் தமிழகத்தின் வேறு எந்த பகுதிகளிலும் இருப்பதாக தெரியவில்லை.
புதுவையை சேர்ந்த பிரபல உடுக்கிசை இசைக் கலைஞர் அமரர் திரு ஞானராஜ் அவர்கள். புதுவை பகுதிகளில் நடந்த பெரும்பாலான அம்மன் கோவில் விழாக்களில் இவருடைய கம்பீரக் குரலில் அம்மன் வர்ணிப்பு பாடல்களும் அவரின் கைகளால் இசைக்கப்பட்ட உடுக்கையின் நாதமும் இன்று காற்றோடு மறைந்துவிட்டது. எங்கள் பகுதியில் உள்ள புதுச்சேரி ஸ்ரீ உலகமுத்துமாரியம்மன் கோவிலில் மஹாளய அமாவாசை அன்று தொடங்கி கார்த்திகை மாத கடைசி ஞாயிறு வரை சுமார் மூன்று மாத காலத்திற்கு தினமும் மாலை வேளைகளில் இக்ககலைஞரின் அம்மன் வர்ணிப்பு பாடல்களும் உடுக்கையின் இசையும் பம்பையின் ஓசையும் காற்றில் கலந்து வீடு தேடி வரும். இன்று பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி உள்ள அந்த கோவிலில் பிராமண பூசகர் மூலம் சமஸ்கிருத பூசை நடைபெறுகிறது. ஆனால் நான் சிறுவயதாக இருக்கும் போது இருந்த நிலை வேறு. அப்போது பூசாரி இருந்தார். தமிழ் வழி பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாரியம்மனை விட புதிதாக அமைக்கப்பட்ட துர்கையம்மன் தான் பிசியாக உள்ளார். ஆகம மயமாகிவிட்ட உலகமுத்துமாரியம்மன் கோயிலில் இன்று உடுக்கை பம்பை இசை கலைஞர்களுக்கு வேலை இல்லை. மூன்று மாதம் நடந்த இந்த தமிழ் இசை மரபு இன்று அந்தக் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்டு முற்றிலுமாக நிறுத்தப்பட்ட்டு விட்டது. ஃப்ரென்ச் ஆட்சி காலத்தில் புதுவையில் இருந்து மக்கள் புலம் பெயர்ந்த மொரிஷியஸ், ரீயூனியன் தீவு, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அம்மக்கள் பம்பை, உடுக்கை, கரகம், பறை, மாரியம்மன், திரெளபதியம்மன் போன்ற புதுவையின் சில அடையாளங்களையும் சுமந்து சென்றுள்ளார்கள்.
புதுச்சேரியில் எந்த அம்மன் கோவில் விழாவாக இருந்தாலும் உடுக்கையும் பம்பையும் கண்டிப்பாக இசைத்த காலங்கள் எல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது. கிராமப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் மட்டுமே பம்பையும் உடுக்கையும் இசைக்கப் படுவதை நாம் காணலாம். புதுவையில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் பம்பை உடுக்கை ஆகியவை திருவிழாக்காலங்களில் ஒலிப்பதை நாம் காணலாம். புதுச்சேரி பகுதிகளில் மாரியம்மன் கோவில்களில் பம்பை உடுக்கையும், திரௌபதி அம்மன் கோவில்களில் உடுக்கை இல்லாமல் பம்பை மட்டும் இசைக்கப்படுகிறது.
பேய் ஓட்டுதல், திருஷ்டி கழித்தல் போன்ற சடங்குகளில் உடுக்கை தவிர்க்கமுடியாத கருவியாக புழக்கத்தில் உள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் வாழும் கோடாங்கிகள் இதற்கு பேர் போனவர்கள். தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதுமே உடுக்கை பயன்பாட்டில் உள்ளது. கேரள மாநிலத்தில் பல அளவுகளில் உடுக்கை புழக்கத்தில் உள்ளது. சிந்து பாடல் எனப்படும் கலை வடிவத்தில் பல உடுக்கைகளை இசைத்து பாடல்களைப் பாடும் வழக்கம் கேரளத்தில் உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உடுக்கையை ஹுடுக்கா என்று அழைக்கிறார்கள். அங்கு அவர்கள் சிவன், பைரவர், கங்கா மாதா போன்ற தெய்வங்களை போற்றி வழிபட பயன்படுத்துகிறார்கள். ஹுடுக்கா என்ற பெயரில் ஒரு உடுக்கை ஆடல் வடிவமும் உத்தரகண்ட் மாநிலத்தில் இருக்கிறது.
உடுக்கை அழிந்து வரும் தமிழர் இசைக் கருவியா என்று சிலர் கேட்கலாம். ஆம் உடுக்கையும் அழிந்துவரும் பயன்பாடு மிகவும் அருகி வரும் தமிழர் இசைக் கருவி தான் என்று கூறுகிறார் புதுவையை சேர்ந்த உடுக்கிசை கலைஞர் திரு செந்தில் ஞானராஜ் அவர்கள். முன்பு தனது தந்தையோடு தான் சென்று இசைத்த பல கோவில்களில் தற்போது பம்பை உடுக்கை இசைக்கு இடம் இல்லை என்று மன வேதனைப் படுகிறார் திரு செந்தில். அடுத்த ஓரிரு தலைமுறைகளுக்கு பிறகு உடுக்கை இசைக்கருவி அருங்காட்சியகம் சென்றுவிடும் என்று கூறுகிறார் இவர். இதே நிலை தான் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும். இலங்கை போன்ற நாடுகளிலும், சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், ரீயூனியன் தீவு, தென் ஆப்பிரிக்கா போன்று தமிழர் வாழும் இடங்களிலும் உடுக்கையின் பயன்பாடு குறைந்து வருகிறது.
பாடல்:
எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க்
கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்கமா, வலனே! - பதிற்றுப் பத்து
உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்
பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. திருமுறை 1.65.10
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. திருமுறை 1.61.3
உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென
திகுத்த தீதிகு திகுர்த்த தாவென
உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி ...... ரங்குபோரில் – திருப்புகழ்
தத்த னானத னத்தன தானெனு
டுக்கை பேரிமு ழக்கிட வேகடல்
சத்த தீவுத யித்தியர் மாளிட ...... விடும்வேலா – திருப்புகழ்
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
ரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி ...... யாவும் – திருப்புகழ்
காணொளி:
இலங்கை:
உடுக்கை தயாரிப்பு:
https://www.youtube.com/watch?v=jRw2j1nH0j8
-சரவண பிரபு ராமமூர்த்தி
நன்றி:
1. தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 2, முனைவர் வீ.ப.கா சுந்தரம் அவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகம்
2. ச.சரவணன் வேல், உடுக்கு இசைக்கலைஞர், அம்பலசேரி, துத்துக்குடி
3. திரு சஞ்சிவன், மொரிசியஸ்.
No comments:
Post a Comment