மேலும் சில பக்கங்கள்

உலகச் செய்திகள்


உலகளவில் கொரோனா பேரழிவை ஏற்படுத்தும் நிலை

தென்னாபிரிக்க தேவாலயத்தில் தாக்குதல்: ஐவர் உயிரிழப்பு

சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்

திடீர் மூச்சுத் திணறல்; ஐஸ்வர்யா ராய் வைத்தியசாலையில் அனுமதி

அண்டை நாடுகளுக்கான அமெரிக்க எல்லைகள் பூட்டு



உலகளவில் கொரோனா பேரழிவை ஏற்படுத்தும் நிலை



உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மிக மிக மோசமான நிலையை எட்ட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கவலை தெரிவித்துள்ளார். 
ஜெனீவாவில் பேசிய அவர், கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் தவறான திசையில் பயணித்து கொண்டுள்ளதாக எச்சரித்தார். உலக மக்களின் முதல் எதிரியாக கொரோனா வைரஸ் உருவெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடுகள் விரிவான யுக்திகளை கையாளாவிட்டால், இன்னும் சில காலத்திற்கு இயல்பு நிலை திரும்பப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
அமெரிக்காவில் அதிக அளவு தொற்றுகள் பதிவாவதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், 'சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும். பரவுதல் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதை மையமாகக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை அரசாங்கங்கள் வகுக்க வேண்டும். மக்கள் சமூக இடைவெளி , கை கழுவுதல், முகக்கவசம் அணிவது, இருமல் மற்றும் தனிமைபடுத்துதல் போன்ற அடிப்படை பொது சுகாதாரக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்றால் இந்த நோய் நம்மை மோசமான நிலைக்கு இழுத்து செல்லுமென தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கொரோனா வைரஸின் பரவல் தொடக்கம் குறித்து ஆராய சீன சென்றிருக்கும் தங்களது குழு, பணியை தொடங்கும் முன்பு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவன அதிகாரி மைக் ரியான் தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன்    












தென்னாபிரிக்க தேவாலயத்தில் தாக்குதல்: ஐவர் உயிரிழப்பு






தென்னாபிரிக்க தேவாலயம் ஒன்றில் தலைமை பற்றிய விவாதத்திற்கு மத்தியில் தாக்குதல்தாரிகள் ஊடுருவிய சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜொஹன்னஸ்பேர்க் புறநகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தாக்குதல்தாரிகளிடம் பிணைக்கைதியாகச் சிக்கிய பெண்கள், சிறுவர்கள் உட்பட பலரையும் மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது குறைந்தது 40 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு பல டஜன் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் தேவாலயத்தில் இருந்து பிரிந்து சென்ற குழு ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியதாக பார்த்தவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு இந்த தேவாலயத்தின் முன்னாள் தலைவர் உயிரிழந்தது தொடக்கம் தலைமைக்காக போட்டி இடம்பெற்று வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு உறுப்பினர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தேவாலய வளாகத்தை கைப்பற்றும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கார்களுக்குள் சுடப்பட்டும் தீமூட்டப்பட்டும் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதோடு காவல் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.    நன்றி தினகரன் 













சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்






சீனாவில் கடந்த ஒருசில நாட்களாக பெய்து வரும் கனமழையால் 33 நதிகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாக நீர்வள அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு மழை நீடிப்பதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. சீனாவில் வெள்ள காலம் ஜூன் மாதம் ஆரம்பித்த நிலையில் கடந்த திங்கட்கிழமையாகும்போது 433 நதிகள் மற்றும் டொங்டின், பொயங் மற்றும் டாய் போன்ற பிரதான ஏரிகளின் நீர் மட்டம் எச்சரிக்கை அளவைத் தாண்டி உயர்ந்திருப்பதாக பிரதி நீர்வள அமைச்சர் யி ஜியான்சுன் தெரிவித்துள்ளார்.
1961 ஆம் ஆண்டு பதிவு ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இல்லாத அளவுக்கு சராசரி மழைவீழ்ச்சியும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் 141 பேர் உயிரிழந்து, பலரும் காணாமல்போயிருப்பதோடு 60 பில்லியன் யுவான் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக சீன அவசரநிலை அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை கூறியது.
சீனாவின் மிகப்பெரிய நதியான யங்சே பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்கனவே ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டிருப்பதாக வெள்ளக் கட்டுப்பாட்டு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.    நன்றி தினகரன் 










திடீர் மூச்சுத் திணறல்; ஐஸ்வர்யா ராய் வைத்தியசாலையில் அனுமதி





கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பொலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரபல பொலிவூட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் கொரோனோ  தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பொலிவூட்  நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்று  இருப்பது கடந்த13ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.
வைரஸ் அறிகுறிகள் சிறியளவில் இருந்ததால், இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் நேற்று நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகமானதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து, ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவும் மும்பையில் உள்ள நனாவதி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஏற்கனவே கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து, இவர்களும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment