கொடுகொட்டி/கொடுங்கொட்டி – தோற்கருவி
அமைப்பு
இரு கருவிகள் இணைந்த தோலிசைக்கருவி கொடுகொட்டி.
அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள் இரண்டின் நடுப்புறமும் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும். இடுப்பில் கட்டிக்கொண்டோ, கழுத்தில் மாட்டியபடியோ இசைப்பார்கள். மரச்சட்டிகளில் தோல் கொண்டு வார்த்து தயாரிக்கப்படும் கருவி இது. கனத்த பலா மரத்தை குடைந்து, சட்டி போன்ற உருவம் செய்து, மேலே ஆட்டுத்தோல் அல்லது மாட்டுத்தோல் கொண்டு வார்க்கப்படும். ஒன்று, தொப்பி. ‘தொம்... தொம்...’மென இசையெழுப்பும். மற்றொன்று வளந்தலை. இதில் ‘தா... தா...’வென ஒலி எழும்பும். ஒன்று பெரிதாகவும், மற்றொன்று சற்றே சிறிதாகவும் இருக்கும். தொப்பி மென்மையான தோலாலும், வளந்தலை கடினமான தோலாலும் வார்க்கப்படும். இக்கருவியின் வலந்தலையை புளியங்குச்சி கொண்டு இசைக்கிறார்கள். தடிமனற்ற புளியங்குச்சியை உடைத்து, தண்ணீரில் நன்கு ஊறவைத்து, ”உ” வடிவில் வளைத்து கட்டி, பின் நெருப்பில் வாட்டி வளைத்து வலந்தலையில் வாசிக்கத் தகுந்ததாகிறது. இடந்தலைக்கு மூங்கில் பயன்படுதுவார்களாம்.
கிரிகிட்டி, கிடுகிட்டி, கிடிக்கட்டி, கொடுங்கொட்டி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இக்கருவி. தமிழறிஞர் வீ.பா.கா.சுந்தரனார் அவர்கள் இக்கருவியானது தொன்மையாக ஒரு பகுதி மண்சட்டியாலும் மற்றொரு பகுதி உலோகத்தாலும் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 10 அல்லது 12 அங்குலம் உயரமும் எட்டு அங்குல குறுக்களவும் உடைய மண்சட்டி இதை விட இரண்டு அங்குலம் அளவில் குறைந்த சிறிய உலோக சட்டி, இவைகளில் தோல் போர்த்தி, இரண்டையும் சேர்த்து இடுப்பில் கட்டிக் கொண்டு இசைப்பார்கள் என்று குறிப்பிடுகிறார். புதுச்சேரி மாநிலத்தில் சில இடங்களில் நாட்டார் இசைக் கலைஞர்கள் இக்கருவியை பண்டைய குறிப்புகளின்படி மீட்டுருவாக்கம் செய்து கச்சேரிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். புதுச்சேரியை சேர்ந்த திரு பிரபாகரன் அவர்கள் இவர்களில் குறிப்பிட தக்கவர்.

‘‘தேரில் தியாகராஜர் உலாவரும்போது, பாரி நாதஸ்வரத்தோடு கொடுகொட்டி இசைக்கப்படும் என்கிறார் திருவாரூர் கோயில் இசைக்கலைஞர் பழனி. திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சென்றால் கொடுகொட்டியை காணலாம் என்கிற உத்தரவாதம் இல்லை. காரணம் இது வருடத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ தான் இசைக்கப்படுகிறது. ஆனால் நமது கொடுகொட்டி இசைக்கருவி இலங்கையில் உள்ள புத்த விகாரையில் நாள்தோறும் இசைக்கப்படுகிறது. இவர்கள் இதை ”தம்மமட்டா” என்று அழைக்கிறார்கள். தம்பட்டை என்பதன் மருவிய வடிவம் தான் தம்மமட்டா என்பது இசை வல்லுநர்களின் கருத்து. சிறிய வகை முகவீணை போன்ற இசைக்கருவியான ஹொரானாவெ உடன் கொடுகொட்டி இலங்கையிலுள்ள புத்த விகாரைகளில் நாள்தோறும் முழக்கப்படுகிறது. தமிழருக்கும் தமிழ் மண்ணிற்கும் சொந்தமானதும் தமிழகத்தில் இருந்த சிவன் கோவில்களில் ஒரு காலத்தில் முழக்கப் பெற்றதுமான இந்த கொடுகொட்டி இசைக்கருவி இன்று தமிழகத்தில் அரிதாகி போய்விட்டது. ஆனால் சிங்கள மக்கள் இக்கருவியை தவறாமல் தினமும் பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
கொங்கு பகுதி சலங்கை ஆட்டங்களிலும் கொடுகொட்டியின் பங்கு உண்டு. பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்கு இக்கருவி இசைக்கப்படும். மேலும் மதுரை வட்டாரங்களிலும், தெற்குத்
தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் கிடுகிட்டி என்ற பெயரில் இந்த இசைக்கருவி அறிவிப்பு கருவியாக பயன்பாட்டில் உள்ளது. பலா மரத்தை குடைந்து ஒரு முகத்தை மட்டுமே கொண்ட இந்த இசைக்கருவி இடுப்பில் கட்டிக்கொண்டு இசைக்கப்படுகிறது. இக்கருவியை கரகாட்டம் போன்ற நாட்டார் கலை வடிவங்களிலும் அறிவிப்பு கருவியாகவும் பயன்படுத்துகிறார்கள்.
கருநாடக மாநிலத்தில் ருத்ர வாத்தியா என்ற பெயரில் நமது கொடுகொட்டியை ஒத்த இருமுக இசைக் கருவி ஒன்று இசைக்கப்படுகிறது. இது நமது தமிழ்நாட்டின் கொடுகொட்டியை விட அளவில் மிகப் பெரியதாக உள்ளது. அவர்கள் இதை சம்மேளா (சேர்ந்த மேளம்) என்று அழைக்கிறார்கள். பைரவர், வீரபத்திரர், சிவன் கோவில்களில் இசைக்கப்படுகிறது.

புழக்கத்தில் உள்ள இடங்கள்
· திருவாரூர் தியாகராஜர் கோயில்
· பழங்குடி ஆதியன்(பூம்பூம் மாட்டுக்காரர்) மக்களிடம்
· கொங்கு பகுதி சலங்கை ஆட்டங்களில்
· இலங்கை உள்ள புத்தர் விகாரைகளில்
பாடல்:
தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டி வீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்.
- திருமுறை 2.84.7 , சம்பந்தர்
விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந்
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
- திருமுறை 4.111.8 , அப்பர்
கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே.
- திருமுறை 5.7.1 , அப்பர்
கொடுகொட் டிபடத் துடிகொட் டிநடத்
தடமிட் டுவளைத் திருக்கு மொருதிரள் - திருவகுப்பு , அருணகிரிநாதர்
காணொளி:
தமிழகம்
https://www.youtube.com/watch?v=IGYrFwRsTBY
https://youtu.be/fy7athwRaBo
கருநாடகம்
https://www.youtube.com/watch?v=7UuBmdfOlW8&feature=youtu.be
இலங்கை:
https://youtu.be/fy7athwRaBo
-சரவண பிரபு ராமமூர்த்தி
நன்றி:
1. வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்
3. ஆதியன் புகைப்படம் உதவி - திரு மணிகண்டன்(பறை பயிற்றுனர், +919865614511), ஈரோடு
கொடுகொட்டி விலை எவ்வளவு அண்ணா இருந்தா a.mariappan333@gmail.com 6383472477 க்கு அனுப்புங்க Please Please Please
ReplyDelete