மேலும் சில பக்கங்கள்

மனிதன் விளையாடும் இடம் பணத்தோட்டம் ! பொலிஸ்காரன் வீட்டில் பொலிஸார் தேடுதல் நடத்திய கதை! முருகபூபதி

லரிடத்திலும் அஞ்சல் முத்திரை, பழைய நாணயக்குற்றிகள், பழைய ரூபா நாணயத்தாள்கள் சேகரிக்கும் பழக்கம் இருப்பதை அறிவோம்.
ஒரு காலகட்டத்தில் புழக்கத்திலிருந்த நாணயக்குற்றிகள் காலப்போக்கில் மறைந்துவிட்டன.
நான் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்த காலத்தில் ஒரு சதம், இரண்டு சதம், இரண்டு அவுஸ்திரேலியன் வெள்ளி நாணயத்தாள்களும் புழக்கத்தில் இருந்து  காலப்போக்கில் மறைந்துவிட்டன.
இலங்கையில் சிறிய வயதில் ஒருசதத்திற்கும் சீனிபோலை எனப்படும் இனிப்பு மிட்டாய் வாங்கிச்சாப்பிட்ட காலத்தையும் கடந்துள்ளோம்.
எமது முன்னோர்கள்  ஒரு அணா, இரண்டு அணா, கால் அணா பயன்படுத்திய  அக்காலத்தகவல்களும் அறிவோம். தேசங்களின் பொருளாதாரமும்  நாணயங்களின்  பெறுமதியில்தான் தங்கியிருக்கின்றன.
நம்பிக்கையின் அடிப்படையில்  பிறந்த சொல்தான் நாணயம்.  நேர்மை என்றும் பொருள்படும்.  நாணயத்தாள்கள் அறிமுகமானதன்பின்னர்தான் அதன் நாணயத்தன்மையும் நம்பிக்கையும் கேள்விக்குரியதாகியது.

கள்ளநோட்டு அச்சடித்து குறுக்குவழியில் சம்பாதிக்கப் புறப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதியும் அறிவோம். நவீன உலகில் அதிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்து கடன் அட்டை ( Credit card ) மோசடிகளும் நிகழ்ந்துவருகின்றன.
நாம் வாழும் அவுஸ்திரேலியாவில்  நாணயத்தாள்களை கிழித்தல், அவற்றில் கையொப்பம் ( ஓட்டோகிராஃப் ) இடுதல் என்பனவும் குற்றமாக கருதப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்  போல் கீட்டிங் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரையில் பிரதமராக பணியாற்றியவர். இந்நாட்டின் வரலாற்றில் அவர் 24 ஆவது பிரதமர். அதற்கு முன்னைய தொழில் கட்சி அரசில் நிதியமைச்சராகவும் பணியாற்றியவர்.
அக்காலப்பகுதியில் அவர்  ஒரு மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றிருந்தபோது,  ஒருவர் இடையில் புகுந்து ஐந்து டொலர் நாணயத்தாளை நீட்டி, அதில் ஓட்டோகிராஃப் பெற்றுவிட்டார்.
அதனை படம் எடுத்து ஊடகங்களில் வெளியிட்டு அவரை வாங்கு வாங்கென்று  வாங்கி கழுவி ஊற்றிய தொண்டினையும் இந்த கங்காரு தேசத்து ஊடகங்கள் செய்தன.
ஒரு முன்னாள் நிதியமைச்சருக்கு இந்நாட்டின் சட்டம் தெரியவில்லையா..? என்பதுதான் பிரதான பேசுபொருளாக அப்போதிருந்தது.
1984 ஆம் ஆண்டில்  ஏப்ரில் மாதம் சென்னை மயிலாப்பூர் ராஜேஸ்வரி கல்யாணமண்டபத்தில்  நடந்த இலக்கியச்சிந்தனை பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்துப்பேசிக்கொண்டிருந்தபோது, அவரது தீவிர பெண் ரசிகை ஒருவர் குறுக்கிட்டு, இந்திய ஐந்து ரூபா நாணயத்தாளை நீட்டி, அவரிடம் ஓட்டோகிராஃப் பெற்றார்.
நடிகர் மாதவன் நடித்த ஜே.ஜே. என்ற திரைப்படத்தின் திரைக்கதையும்  ஒரு இந்திய ரூபா நாணயத்தாளைச்சுற்றியே அலைந்து ஓயும்.  நாயகன் ஒரு  உணவு விடுதியில் சந்தித்த நாயகியிடமிருந்து அவளது கையொப்பத்துடன் பெற்ற நாணயத்தாளை தவறவிட்டு, அதனையும் அவளையும்  தேடி கடும்பிரயாசத்திற்கு பின்னர் கண்டுபிடிக்கும் கதை.
கடந்த ஆண்டு (2019 )   இலங்கை சென்றிருந்தபோது எங்கள் ஊரில் இலங்கை நாணயத்தாள் ஆயிரம்ரூபா ஒன்று – ஒரு முனையில்  எவ்வாறோ சற்று கிழிந்த நிலையில் என்னிடம் வந்துசேர்ந்துவிட்டது.  அதனை மாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டேன்.
இந்தப்பின்னணிக் கதைகளுடன் எனக்கு பன்னிரண்டு  வயதாகவிருந்தபோது எங்கள் வீட்டில்,   கள்ள ரூபா நோட்டுத்தேடி,  தேடுதல் வேட்டைக்கு பொலிஸார் வந்த கதையை சொல்கின்றேன். 
எங்கள் அப்பா  லெட்சுமணன், அக்காலப்பகுதியில் கொழும்பில் மிகவும் பிரபல்யமான மெக்‌ஷா என்ற ஏற்றுமதி – இறக்குமதி கம்பனியின் வெளியூர் விற்பனைப் பிரதிநிதியாக   ( Sales Representative )   இருந்தார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் வண்ண வண்ணக்குடைகள், பாக்கர் பேனாக்கள்,  இயக்கிவிட்டால் ஆடும் விளையாட்டு பொம்மைகள் உட்பட பல நானாவித பொருட்களுடன் அவரும் அவரது உதவியாளரும், சாரதியும் வாகனத்தில் வெளியூர் சென்றால்,  திரும்பி வருவதற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களாகும்.
வெளியூரில் விற்பனை துரிதமாக முடிந்துவிட்டால், அந்த நாட்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். வரும்போது அப்பா, எங்களுக்கு தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டு வருவார்.
அதற்காகவே அப்பாவுக்கு காத்திருப்போம்.  அம்மா, வீட்டுச்செலவுக்காக அப்பா கொண்டு வரும் சம்பளப்பணத்திற்கு காத்திருப்பார்.
தினமும் விற்பனை முடிந்ததும் கிடைத்த பணத்தை கணக்குப்பார்த்து, அவர் அச்சமயம் எந்த ஊரில் நிற்கிறாரோ, அங்கிருக்கும் வங்கியில், அது மாலையில் மூடப்படுவதற்கு முன்னர் கம்பனியின் கணக்கில் வைப்பிலிடவேண்டும்.
அவ்வாறு அவர் ஒரு நாள் கண்டியிலிருக்கும் வங்கியொன்றுக்கு சென்றபோதுதான், அவருடன் விதி விளையாடியது.
கண்டி – நீர்கொழும்பு பொலிஸார் எங்கள் வீடு தேடி வந்து தேடுதல் வேட்டை நடத்தும் அளவுக்கு அந்த விதி எமது அப்பாவின் வாழ்வில் விளையாடியது. எங்கள் வீடு வரையும் அந்த விதி வந்தது.
மாத்தளை – கண்டி பிரதேசங்களுக்கு விற்பனைக்குச் சென்றிருந்த அப்பா, அன்று மாலை வங்கிக்குச்சென்று அன்றைய விற்பனைப்பணத்தை  கம்பனியின் பெயரில் செலுத்தியிருக்கிறார்.
அனைத்தும் நூறு ரூபா – ஐம்பது ரூபா நாணயத்தாள்கள்.  இன்றுபோல், இயந்திரங்கள் எண்ணும் காலம் அல்ல. ஒவ்வொன்றாக கைவிரல்களினால் எண்ணி, லாச்சியிலிடும் காலம்.
அந்த வங்கி ஊழியர் பணத்தை எண்ணிப்பெற்றுக்கொண்டு, அதற்கான ரசீதை வழங்காமல்,  “ கொஞ்ச நேரம் நில்லுங்கள்   “ எனச்சொல்லிவிட்டு உள்ளே முகாமையாளரின் அறைக்குள் சென்றுள்ளார்.
சற்று நேரத்தில் முகாமையாளரும் அந்த ஊழியரும் திரும்பி வந்தனர். அதனையடுத்து சில நிமிடங்களில்  வங்கியின் வாசலுக்கு விரைந்து வந்த பொலிஸ் ஜீப்பிலிருந்து சில பொலிஸார் குதித்தோடி வந்து, வங்கி ஊழியர் அடையாளம் காண்பித்த அப்பாவை கைது செய்தனர்.
அப்பா, அன்றையதினம் வங்கியில் செலுத்திய ரூபாய்களுக்குள் ஒரு நூறு ரூபா கள்ள நோட்டு இருந்துள்ளது. இதுவே அப்பாவின் கைதுக்கு காரணம் என்பது அதன்பிறகுதான் அப்பா தெரிந்துகொண்டார்.
அப்பாவை ஒருநாள் முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரித்துள்ளனர். அப்பாவின் சாரதி தாமதிக்காமல் கொழும்பிலிருந்த கம்பனியின் தலைமைக்காரியாலயத்திற்கு  கண்டி தபால் கந்தோரிலிருந்து தொலைபேசி மூலமாகத் தெரிவித்ததையடுத்து கம்பனி  நிர்வாக இயக்குநர் கண்டியிலிருந்த ஒரு சட்டத்தரணி மூலம் அப்பாவை வெளியில் எடுத்திருக்கிறார்.
எனினும் அப்பாவுக்கு எதிராக பொலிஸார் ஒரு வழக்கை தாக்கல் செய்துவிட்டு அனுப்பிவிட்டனர். இவ்வளவு நடந்தும் எமக்கு எதுவும் தெரியாது.
நீர்கொழும்பில் எமது வீட்டில்,  நாம் பாடசாலை முடிந்து திரும்பிவந்து,  அம்மாவின் அன்றைய மதிய சமையல் சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அப்பாவின் கம்பனி வாகனம் வந்தது.  வழக்கத்தைவிட அப்பா  முன்னரே வந்துவிட்டார் என்ற குதூகலத்தில், சாப்பாட்டுத்தட்டத்தை அப்படியே வைத்துவிட்டு எழுந்து சென்று அப்பாவை கட்டிப்பிடித்துக்கொண்டோம். 
முகமலர்ச்சியுடன் என்னையும் அக்கா, தம்பிமார் தங்கையையும் உச்சிமோந்து அணைக்கும் அப்பா, அவ்வாறேல்லாம் செய்யாமல் சோர்ந்த முகத்துடன் கிணற்றடிக்குச்சென்று கால் முகம் கழுவிக்கொண்டு வந்தார். அவரது இந்தப்பழக்கம் அவர் 1983 இல் மறையும் வரையில் இருந்தது.
வெளியே சென்று திரும்பினால், வாசலில் நின்று தான் கொண்டுவந்தவற்றை நீட்டிவிட்டு, அவர்  வெளிப்புறமாக முதலில் செல்லும் இடம் எங்கள் வீட்டுக்கிணற்றடிதான். கைகால் , முகம் கழுவும்போது புறங்கால்களை அழுத்தித்தேய்த்து கழுவுவார்.
வெள்ளை நிற வேட்டி, நேஷனல் அணியும்  அவர் செருப்பே அணியாதவர். எமக்கு விதம்விதமான பாதணிகளை வாங்கித்தந்திருக்கும் அப்பா, தனது வாழ்நாளில் இறுதிக்காலத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட வேளைகளில்தான்  நாம் குளியலறைக்குப்பாவிக்கும் இரப்பர் பாட்டா பாதணிகளை அணிந்தார்.
முகவாட்டத்துடன் காணப்பட்ட  அப்பாவிடம்,  “ என்ன நடந்தது..? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்கள்…? என்று அம்மா கேட்டதும், அப்பாவை முந்திக்கொண்டு, அப்பாவின் சாரதியான பீரிஸ் அய்யாவும் உதவியாளர் மைக்கலும் கண்டியில் நடந்த சம்பவத்தை சொல்லத்தொடங்கினார்கள்.
நாம் பாதியில் வைத்துவிட்ட சாப்பாட்டுத் தட்டங்களை எடுத்த அப்பா, எமக்கு சோற்றை ஊட்டிவிட்டார். எமது பால்ய காலத்தில் அதுவும் அவரது பழக்கங்களில் ஒன்று.  எமது அம்மா ஒரு பொலிஸ் சார்ஜன்டின் மகள். தந்தையிடமிருந்த கண்டிப்பு அம்மாவிடமும் இருந்தது.  அதனால் நாம் அம்மாவுக்கு மிகுந்த பயம். வளர்ந்து திருமணமாகி பிள்ளைகளைப் பெற்றபின்னரும் அந்தப்பயம் தொடர்ந்தது. அதனால், அம்மாவை நாமனைவரும் பொலிஸ்காரன் மகள் என்றுதான் அழைப்போம். சில வருடங்களுக்கு  முன்னர் வெளிவந்த எனது சொல்லவேண்டிய கதைகள் நூலிலும் இந்த பொலிஸ்காரன் மகள் பற்றிய ஒரு அங்கம்  இடம்பெற்றுள்ளது.
நாம் அப்பாவின் செல்லப்பிள்ளைகள். அதனால் அவரிடம் பயமே இல்லை. எனினும் அன்று அப்பாவின் சோர்வுற்றமுகம் எம்மையும் சோர்வடையச்செய்தது.
சாரதி அய்யாவும் உதவியாளரும் அம்மாவிடம் கண்டி கதைகளை சொல்லிக்கொண்டிருந்தபோது எங்கள் வீட்டு வாசலில் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டரும் ஒரு கான்ஸ்டபிளும் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கி, திடுதிப்பென வீட்டினுள் நுழைந்து, எமக்கு சோறூட்டிக்கொண்டிருந்த அப்பாவை விசாரிக்கத்தொடங்கியதுடன் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர்.
தடித்த திடகாத்திரமான தோற்றத்தில், கட்டபொம்மன் மீசையுடன் காட்சியளித்த சிவந்த நிறத்தைக்கொண்ட அந்த இன்ஸ்பெக்டர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு வீட்டின் அறைகளுக்குள் சென்று துலாவினார். பொலிஸ்காரர் கட்டில், மேசைகளையெல்லாம் தூக்கிப்பார்த்தார்.
அவ்வேளையிலும் அந்த இன்ஸ்பெக்டர் எங்கள் வீட்டு நிலைக்கண்ணாடியைப் பார்த்து தனது மீசையை வருடி முறுக்கிக்கொண்ட காட்சியை இன்றளவும் மறக்கமுடியவில்லை.
சமையலறைப் பாத்திரங்களையும் விட்டுவைக்கவில்லை. வீடு அமளி துமளிப்பட்டது.  இந்தக்கூத்துக்களையெல்லாம்  பார்த்துக்கொண்டிருந்த எங்கள் பாட்டிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வெற்றிலை இடித்துக்கொண்டிருந்த பாட்டி வெகுண்டு எழுந்தார்.
“  புத்தாலா… மேக்க பொலிஸ் நிலதாரிகே கெதர… அன்ன பலண்ட மகே சுவாமி புருஷயாகே பிந்தூர  “ (  மகன் மாரே… இது பொலிஸ் அதிகாரியின் வீடு.  அதோ பாருங்கள் எனது கணவரின் படம் )   “ என்று உரத்துக்கத்தினார்.
அந்த இன்ஸ்பெக்டர் மீசையை முறுக்கியவாறு சுவரில் காணப்பட்ட அந்தப்படத்தையும் தூக்கி திருப்பிப்பார்த்தார். 
 “ இவர் இருக்கிறாரா..?  “ என்று கேட்டார்.
பாட்டி ,   “ இறைவனிடம் போய்விட்டார்  “  என்றவாறு கைகளை மேலே உயர்த்தினார்.   
சுமார் இரண்டு மணிநேரம் வீட்டை குலைத்துப்போட்டுவிட்டு,  “ கண்டி பொலிஸிலிருந்தும்  தகவல் வரும்.  கண்டி நீதிமன்றத்திற்கு வரவேண்டிவரும்  “ என அப்பாவிடம் சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் திரும்பிச்சென்றனர்.
வீட்டு வாசலில் அயலவர்கள் கூடிவிட்டனர்.
பொலிஸ்தாத்தா வாங்கிய   அந்த வீட்டில்  எந்த கள்ளநோட்டும் சிக்காமல் அந்த பொலிஸார் ஏமாற்றத்துடன் சென்றனர்.
கண்டி நீதிமன்றில் விசாரணை நடந்து,  அப்பா குற்றமற்றவர் என்றும், வர்த்தகம் செய்யும்போது, எப்படியோ  அந்த நூறுரூபா கள்ளநோட்டும் சேர்ந்திருக்கிறது. என்றும் தீர்ப்பளித்த நீதிபதி ,  அப்பாவை அந்த வழக்கிலிருந்தும் விடுவித்தார்.
அக்காலப்பகுதியில் வெசாக் வந்தது. அப்பா எம்மையெல்லாம் அழைத்துக்கொண்டு கொழும்பில் வெசாக் பந்தல்கள் காண்பிக்க அழைத்துச்சென்றார். ஒரு நாள் எமது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தோம்.
கொழும்பு கிங்ஸ்லி திரையரங்கில் அந்த ஆண்டு ( 1963 ) வெளியான எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி நடித்த சரவணா பிலிம்ஸ் பணத்தோட்டம் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.
அப்பா எங்களனைவரையும் அந்தப்படம் பார்க்க அழைத்துச்சென்றார். அப்பா அன்றொருநாள்  எப்படி கண்டி வங்கியில் சிக்கினாரோ அதேபோன்றதொரு காட்சியில் அந்த பணத்தோட்டம் படத்தின் முதல் காட்சியில்  எம்.ஜி.ஆர். பொலிஸாரிடம் சிக்குவார்.  உடனே அப்பா, எங்களிடம்,                            “ இப்படித்தான் நானும் அன்று சிக்கினேன்  “ என்றார்.
அதன்பிறகு அந்தப்படத்தில் வரப்போகும் சுவாரசியமான காட்சிகளைப்பார்த்தோம்.  எம். ஜி.ஆர், பொலிஸ் காவலிலிருந்து தப்பியோடி, பல மாறுவேடங்கள் புனைந்து   கள்ளநோட்டு அச்சடிப்பவர்களை கண்டுபிடிப்பார். நாயகி சரோஜாதேவியை காதலித்து ஆடிப்பாடுவார்.
 மாறுவேடத்தில் வரும் எம்.ஜி.ஆரை நாம் உட்பட ரசிகர்கள் அனைவரும் இனம்காண்போம் !  ஆனால், அந்தப்படத்தில் வரும் வில்லன்களும், பொலிஸாரும், நாயகியும்தான் அவரை அடையாளம் காணமுடியாதிருப்பார்கள்.
இதுதான் தமிழ்ப்படம்!
எங்கள் அப்பா,  எந்த மாறுவேடமும் தரிக்காமல் நிரபராதியானார். அப்பா நிஜம். எம்.ஜி.ஆர் . நிழல்.
"குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம் -  வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம்

அந்த மனிதன் விளையாடும் இடம் பணத்தோட்டம் பணத்தோட்டம் பணத்தோட்டம்  “  என்ற கவியரசு கண்ணதாசனின் பாடலும் இப்படத்தில் இடம்பெறுகிறது.

இந்தத்திரைப்படத்தின் மூலக்கதையை எழுதியவர்:  தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் பி. எஸ். ராமைய்யா.
அப்பா,  பொலிஸாரிடம் சிக்கிய கதையை எழுதியது மகன் முருகபூபதி என்ற எழுத்தாளர்.
----0---





No comments:

Post a Comment