மேலும் சில பக்கங்கள்

செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் - “சிவபூமி” வழி பன்முகப்பட்ட அறப்பணிகள் - கானா பிரபா


செஞ்சொற் செல்வர் கலாநிதி  ஆறு திருமுகன் அவர்கள்  தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி என்ற சிறுவர் மன வளர்ச்சிப் பாடசாலைகள், சிவ பூமி முதியோர் இல்லம், கீரிமலைச் சிவபூமி யாத்திரிகர் மடம், நாவற்குழியில் திருவாசக அரண்மனை, ஆதரவற்ற நாய்களைப் பேணும் காப்பகம் போன்ற அற நிலையங்களை நிறுவி அவற்றைக் கொண்டு நடத்துபவராகவும் இயங்கி வருகிறார். தன் வாழ்வைச் சைவத்துக்கும் அறப் பணிகளுக்காகவும் அவரை நினைக்கும் போதெல்லாம் வியப்பும், பெருமையும் எழும். 

நம்மால் ஒரு சிறு துரும்பை எடுக்கக் கூட ஆயிரம் சாட்டுச் சொல்லும் வாழ்வியலில் அவரின் பன்முகப்பட்ட அறப்பணிகள் நம் ஈழச் சமூகத்துக்குக் கிட்டிய பெரும் பேறு.
தாயகத்துக்குப் போகும் தோறும் என்னை அவரின் வாகனத்தில் இருத்தித் தன் சமூக ஸ்தாபனங்களின் இயக்கத்தைக் காட்டி வருவார்.

ஆறு திருமுருகனின் “சிவபூமி” அறச் செயற்பாடுகளை அவுஸ்திரேலிய மக்களின் பார்வைக்கு எட்டும் வண்ணம் ஒரு ஆவணப்படத்தை எடுக்க வேண்டும் என்று நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் நினைத்த போது அதற்குச் செயல் வடிவம் தந்தவர் சகோதரன் ஜெரா.
இப்படியான பட வேலைகளுக்கு இரண்டு, மூன்று கமெராக்கள் தேவைப்படும் சூழலில் ஒரே கமராவை வைத்துக் கொண்டு, நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கத் தானே தன் குரலில் ஒலிச் சேர்க்கை செய்து திறமானதொரு ஆவணப்படத்தை ஆக்கியளித்தார். அவருக்கு உறுதுணையாக விளங்கிய சகோதரர்கள்
யோ ரவீந்திரன், காண்டீபன் இப்பட உருவாக்கத்தில் இணைந்துள்ளார்கள்.
இவ் ஆவணப்படம் சிட்னியில் ஆறு திருமுருகன் அவர்கள் கலந்து கொண்ட நிதி சேகரிப்பு ஒன்று கூடலிலும் திரையிடப்பட்டது.

இந்த ஆவணப் படம் சிவபூமி என்ற சமூக இயக்கத்தின் பன்முகச் செயற்பாடுகளை விரிவாகக் காண்பிக்கின்றது.

இன்று பிறந்த தினத்தைக் கொண்டாடும் பெரு மதிப்புக்குரிய செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் பல்லாண்டு காலம் நோயற்ற வாழ்வும், குறைவற்ற தன் அறச் செயற்பாட்டோடும் உழைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இன்றைய நாளில் 
“ஈழத்தில் சிவபூமியின் அறப்பணிகள்” என்ற ஆவணப்படத்தை உங்கள் பார்வைக்காகவும் பகிர்கின்றேன்


அன்புடன்
கானா பிரபா

No comments:

Post a Comment