தெய்வமகன்

1963ம் ஆண்டு வெளிவந்து மணியோசை படத்தின் கதை இது. பிரபல இயக்குனரான பி. மாதவன் இயக்கிய முதல் படம் இதுவாகும். பாசுமணி கதை வசனம் எழுதிய படம் தோல்வி கண்டது. ஆனால் இந்தப் படத்தைப் பார்த்து ரசித்த சிவாஜி மாதவனுக்கு தான் நடிக்கும் அன்னைஇல்லம் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கி அப்படம் வெற்றி பெற்று மாதவன் பிற்காலத்தில் பெரிய இயக்குனரானார்.
ஆறாண்டுகள் கழித்து இப்படத்தின் கதை சில மாறுதல்களுடன் மீண்டும் படமானது. அந்தப் படம்தான் தெய்வமகன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் அதாவது கல்யாணகுமார், எம், ஆர். ராதா, முத்துராமன் ஆகியோரின் வேடங்களில் நடித்து சாதனை படைத்தார். படத்தை ஏ. சி. திருலோகசந்தர் இயக்கினார். கதைவசனத்தை ஆருர்தாஸ் எழுதினார். கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணி மணியோசை தெய்வமகன் இரண்டிலும் தொடர்ந்தது.
சுpவாஜியின் திரையுலக வரலாற்றில் தெய்வமகன் குறிப்பிடக் கூடிய படமாகும். கொடுர முகம் கொண்ட இரு வேடங்களிலும் அழகும் வெகுளித்தனமும் கொண்ட மற்றுமொரு வேடத்திலும் சிவாஜி வெளுத்துக் கட்டியிருந்தார். இந்த வேடங்களுக்காக மேக் அப் போட அவர் எடுத்துக் கொண்ட நேரம் அதிகம். ஆதனால் ஏற்படும் உபாதைகளும் அதிகம். ஆனாலும் அவற்றை எல்லாம் சகித்து தன் நடிப்பாற்றலை வழங்கி இருந்தார் சிவாஜி.
மணியோசை படத்தில் கல்யாணகுமாருக்கு கூன் விழுந்தவரான மேக் அப்பை போட்;ட அதே ஹரி பாபுதான் தெய்வமகன் படத்திற்கும் கோரமான முகம் கொண்ட மேக் அப்பை சிவாஜிக்கு போட்டிருந்தார். மேக் அப் மேன் ஹரி பாபு உண்மையிலேயே ஒரு திறமைசாரிதான். அவரின் கைவண்ணம் பாத்திரங்களின் தன்மையை வெளிப்படுத்த பெரிதும் உதவியது.

படத்தில் கதாநாயகியாக வரும் ஜெயலலிதா தன் நடிப்புடன் கவர்ச்சியையும் சேர்த்து வழங்கியிருந்தார். ஆனால் அழகான சிவாஜியுடன் சண்டை போடுவதும் அலட்சியம் காட்டுவதும் மற்றைய சிவாஜியுடன் அன்பையும் இரக்கத்தையும் காட்டும் காட்சியில் தன் திறமையை வெளிக்காட்டியிருந்தார். தாயாக வரும் பண்டரிபாயை இவ்வளவு இளமையான தாயாக எந்தப் படத்திலும் காட்டியதில்லை. ஆனால் நடிப்பில் அவர் முதிர்ச்சி முத்திரை பதித்தார். குறிப்பாக கோயிலில் தன் மகன் என்று தெரியாமல் அவர் சிவாஜியைப் பார்த்து பார்த்து தவிப்பது அபாரம்.

படத்திற்கு மேலும் வலு சேர்த்தது கண்ணதாசனின் பாடல்கள். கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா, தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே பாடல்களில் டி. எம். சௌந்தரராஜன் சிவாஜியாக மாறி நடித்து பாடியிருந்தார்.
மூன்று சிவாஜிகளையும் தன் ஒளிப்பதிவு மூலம் படம் பிடித்தவர் தம்பு. மிகவும் நேர்த்தியான படப்பிடிப்பு. கறுப்பு வெள்ளையில் ஜாலம் செய்திருந்தார் தம்பு.
தொடர்ந்து சிவாஜியின் வெற்றிப் படங்களை இயக்கிக் கொண்டிருந்த திருலோகச்சந்தர் இந்தப் படத்தையும் இயக்கி நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படமாக உருவாக்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் இந்தப் படம் ஓரே நேரத்தில் வெலிங்டன் லிடோ ஆகிய இரு திரைகளிலும் ஒடி ரசிகர்களை மகிழ்வித்தது.
1969ம் ஆண்டு வெளிவந்து 2019ல் பொன்விழா கண்ட படங்களின் வரிசை முடிகிறது. மீண்டும் அடுத்தாண்டு 1970ம் ஆண்டிற்கான பொன்விழா ஆண்டுப் படங்களைப் பார்ப்போம்!
நன்றி சுந்தரதாஸ்!
No comments:
Post a Comment