10/08/2019 தேசிய அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக, சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் மக்கள் திகழ்கின்றார்கள். நெருக்கடியான அரசியல் சூழல்களில் இது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. தேர்தல்களிலும் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தை அல்லது ஜனாதிபதியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் மக்கள் திகழ்ந்திருக்கின்றார்கள். இந்த தீர்மானிக்கும் சக்தியில் முஸ்லிம் மக்களுக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

சிறுபான்மை இன மக்களின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டிய அரசியல் நிலைமை காணப்பட்ட போதிலும், அந்த மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் இன ரீதியான உரிமைகள் சார்ந்த நன்மைகளில் பேரின அரசியல்வாதிகளும், பேரின அரசியல் கட்சிகளும் உரிய அக்கறை செலுத்துவதில்லை.
ஆற்றைக் கடக்கும் வரையில் அண்ணன் தம்பி, ஆற்றைக் கடந்ததும் நீ யாரோ நான் யாரோ என்ற போக்கிலேயே சிறுபான்மை இன மக்களுடனான அவர்களின் அரசியல் உறவு காணப்படுகின்றது. கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதைப் போலவே சிறுபான்மை இன மக்கள் இலங்கை அரசியலில் பேரின அரசியல்வாதிகளினால் பயன்படுத்தப்படுகின்றார்கள் என்றே கூற வேண்டும்.
யுத்தத்திற்குப் பின்னரான அரசியலில் சிறுபான்மை இன மக்களை, குறிப்பாக தமிழ் மக்களைப் புறந்தள்ளி, பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களுடைய வாக்குகளிலேயே அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஓர் இனவாத அரசியல் போக்கில் பேரின அரசியல்வாதிகள் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதைக் காண முடிகின்றது.
நொண்டிச்சாட்டு
தேர்தல்களில் தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும் வாக்குகளைக் கவர்வதற்குக் காட்டுகின்ற அக்கறையும், ஆர்வமும் அதிகாரத்திற்கு வந்த பின்னர், அந்த மக்களுடைய நலன்களில் அவர்கள் காட்டுவதில்லை.
விசேடமாக தமிழ், முஸ்லிம் மக்களின் மொழி மற்றும் மத ரீதியான உரிமைகளை அடக்கி ஒடுக்குவதில் கரிசனை காட்டப்படுகின்றதே தவிர, அந்த உரிமைகளை உரிய வகையில் அவர்கள் அனுபவிக்கத்தக்க சூழலை உருவாக்குவதில் அக்கறை காட்டுவதே கிடையாது.
சிங்கள மொழியே அரச கரும மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது. தமிழ் மொழிக்கும் அரச கரும மொழி என்ற அந்தஸ்து அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள போதிலும், அது சிங்கள மொழிக்கு சமமான முறையில் தனித்துவம் உடையதல்ல.
சிங்களமே அரச கரும மொழி என்றும் தமிழ் மொழியும் பயன்படுத்தலாம் என்ற வகையிலேயே அந்த அரசியலமைப்பு உரிமை அமைந்துள்ளது. விரும்பினால் மாத்திரமே தமிழ் மொழி அரச கரும மொழியாகப் பயன்படுத்தப்படலாம். அவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
இதனை வேறுவிதமாகச் சொன்னால், வசதியான இடத்தில் மாத்திரம் அல்லது வசதியான போது மாத்திரம் தமிழ் மொழிக்கு அந்த அந்தஸ்தை வழங்கலாம் என்ற உறுதியற்ற நிலைமை அந்த அரசியலமைப்பு சட்ட உரித்துரிமையில் தொனிக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, தமிழ்ப்பிரதேசங்களுக்குக்கூட மத்திய அரசினால் அனுப்பப்படுகின்ற சுற்றறிக்கைகள், அதிகாரபூர்வ கடிதங்கள் என்பன சிங்கள மொழியில் மாத்திரமே அனுப்பி வைக்கப்படுகின்றது. அவற்றைத் தமிழ் மொழியில் அனுப்புவதற்கு உரிய மொழிபெயர்ப்பாளர்கள் தமது செயலகத்தில் அல்லது அலுவலகங்களில் இல்லை என்ற நொண்டிச்சாட்டு மிகச் சாதாரணமாகக் காரணம் கூறப்படுகின்றது.
அடிப்படை உரிமையாக நடைமுறைப்படுத்தத் தயாரில்லை
இதன் மூலம் அரச கரும மொழியாகிய தமிழ் மொழியின் பயன்பாடு ஏனோ தானோ என்ற முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது தமிழ் மொழி தெரிந்த அலுவலர்கள் இல்லை என்ற காரணம் நியாயப்படுத்தப்பட்ட நிலைப்பாடாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டு அந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி இடப்படுகின்றது.
அரச திணைக்களங்கள் சார்ந்த செயல் வல்லமைக்கான கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புக்கள், விழிப்புணர்வு மற்றும் போதனை வகுப்புக்களும்கூட, பெரும்பாலான முறையில் தனித்து சிங்கள மொழியிலேயே நடத்தப்படுகின்றன.
இந்த அமர்வுகளில் பங்கேற்கின்ற தமிழ் உத்தியோகத்தர்களுக்கு விளங்கத் தக்க வகையில் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படுவதற்கோ அல்லது அந்த அமர்வுகளை தமிழ் மொழியில் நடத்துவதற்கோ தங்களிடம் தமிழ் மொழியறிவுள்ள உத்தியோகத்தர்கள் இல்லை என்ற காரணம் மிகச் சாதாரணமாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மொழியறிவுள்ள உத்தியோகத்தர்கள் தங்களிடம் இல்லை என்ற காரணம் காலம் காலமாகக் கூறப்பட்டு வருகின்றதேயொழிய, சிங்கள மொழி தெரியாதவர்களும் நன்மை அடையத்தக்க வகையில் அல்லது தமிழ் உத்தியோகத்தர்களையும் அந்தப் பயிற்சிகளின் மூலம் திறனுடையவர்களாக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயற்படுவதில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இத்தகைய நிலைப்பாட்டுக்கு அப்பால் திணைக்களங்களின் கட்டமைப்புக்குப் பொறுப்பான அமைச்சுக்களும், அமைச்சர்களும் அவர்களுக்குமப்பால் அரசாங்கமும் அரச திணைக்களக் கட்டமைப்பில் தமிழ் மொழிப் பயன்பாடு ஒரு முக்கிய அம்சமாக உள்வாங்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியதில்லை.
இத்தகைய கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தினதும் குறிப்பாக அரச தலைவர்கள், அமைச்சர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். ஆனால் அரச தலைவர்களும் சரி அமைச்சர்களும் சரி சிறுபான்மை இன மக்களை உள்ளடக்கியதாக, தமது பணி களை முன்னெடுக்க வேண்டும் என்பதில் அக் கறை கொள்ளாதிருப்பதனாலேயே, இந்தக் கட்டமைப்புக்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.
மொழி அந்தஸ்து என்பது வெறுமனே அரசியலமைப்பில் சாக்கு போக்கிற்காகவே உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. அதன் காரணமாகவே அது அரச நிர்வாகத்தில் ஏனோ தானோ என்ற வகையில் கையாளப்படுகின்றது. அதனை நிர்வாகத்தில் பிரிக்க முடியாததோர் அம்சமாகவும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமையாகவும் பேணி நடைமுறைப்படுத்துவதற்கு அரச தரப்பில் ஆர்வம் கொண்டவர்களும், செயற்படுத்தும் வல்லமை கொண்டவர்களும் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.
தீவிர பேரினவாத அரசியல் போக்கு
இது ஒரு புறமிருக்க, சிறுபான்மை இன மக்களின் அரசியல் மற்றும் மத உரிமைகள் பேரின அரசியல்வாதிகளினால் பெயரளவில் மேம்போக்கான முறையிலேயே மதிக்கப்படுகின்றன. சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் உச்ச நிலையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் அரசியல், கலை, கலசாரப் பண்பாடாகத் திகழ்கின்றது. பன்முகத்தன்மை கொண்ட அரசியல் பண்பு அவர்களிடம் காணப்படவில்லை.
பௌத்த மதத்தை ஏனைய மக்களும் போற்றி பேண வேண்டும். பின்பற்ற வேண்டும் என்ற மதவாத சிந்தனையில் அவர்கள் மூழ்கிப் போயுள்ளார்கள். அந்த அடிப்படைக் கொள்கை காரணமாகவே இலங்கையை சிங்கள பௌத்த நாடு என்று அழைக்கின்றார்கள். அதனை முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றி அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அரசியல், சமூக, கலை, கலாசாரச் செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.
பௌத்தத்திற்கு முதலிடம் என்பதைப் போலவே பௌத்த அரசியலிலும் முதலிடம் மதத் தலைவர்களுக்கு முதலிடம் கொடுக்கப்படுகின்றது. மதம் வேறு அரசியல் வேறு என்ற அரசியல் நாகரிகப் போக்கு பேரினவாத அரசியல்வாதிகளிடம் இல்லை. பேரின அரசியல் கட்சிகளிடமும் இல்லை. சிங்கள பௌத்த நாடு என்றால் இங்கு ஏனைய மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு இடமில்லை என்பதே பொருள். அந்த அடிப்படையிலேயே அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பௌத்த மதத்தை முதன்மைப்படுத்த வேண்டும், மேன்மையுறச் செய்ய வேண்டும் என்பது மதப்பற்றுணர்வு கொண்ட பண்பாக மிளிரவில்லை. மாறாக பௌத்த மதம் மட்டுமே இருக்க வேண்டும். பௌத்தர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்ற அதிதீவிரப் போக்கு அவர்களின் அரசியலில் ஊறிப் போயுள்ளது. மறைமுக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நீண்ட காலத்துக்கான திட்டமிட்ட செயற்பாடாக அது, ஓர் அரசியல் வெறியாக ஆட்சியாள ர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற இருபெரும் அரசியல் கட்சிகளே நாட்டின் அரசியலில் ஆட்சியுரிமையைக் கைப்பற்ற வல்ல அரசியல் சக்திகளாகத் திகழ்கின்றன.
யுத்தத்தின் பின்னரான நாட்டின் அரசியல் செல்நெறியில் பொதுஜன பெரமுன என்ற புதிய அரசியல் சக்தியொன்று மேலெழுந்துள்ளது. இது பழம் பெரும் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றை மேவி சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறப் போகின்ற ஓர் அரசியல் சமிக்ஞை காணப்படுகின்றது என்பது வேறு விடயம்.
ஆனாலும் ஆட்சியதிகாரத்தை மாறி மாறி கைப்பற்ற வல்ல ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதிகாரப் போட்டிக்காகத் தமக்குள் மோதிக்கொள்கின்ற போதிலும், சிங்கள பௌத்த நாடு, பௌத்த மதத்திற்கு மட்டுமே முன்னுரிமை என்ற சிங்கள பௌத்த அரசியல் நிலைப்பாட்டில் அந்தக் கட்சிகளிடம் வேறுபாடு கிடையாது.
உள்நோக்கம் வேறு வெளிக்காட்டுவது வேறு இதனால்தான், சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டு ரீதியில் ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு இரண்டு கட்சிகளுமே அடிப்படையில் எதிரான கொள்கைகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றன.
ஆட்சியில் இருக்கும்போது ஐக்கிய தேசிய கட்சி இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண முற்பட்டால் அதனை எதிர்க்கட்சியாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமூச்சாக எதிர்த்து, அந்த முயற்சியை குழப்பியடிப்பது வழக்கம். அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள வேளையில் எதிர்க்கட்சியாக உள்ள ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முன்னெடுக்கின்ற அரசியல் தீர்வு முயற்சிக்கு எதிராகச் செயற்பட்டு அதனை முறியடித்துவிடுவதும் வழக்கமான அரசியல் நடைமுறையாக இடம்பெற்று வருகின்றது.
தேசிய அளவிலான இரண்டு பெரிய அரசியல் கட்சிகளுமே, அடிப்படையில் சிங்கள பௌத்த நாடு என்ற சிங்கள பௌத்த தேசிய அரசியல் கொள்கையில் மூழ்கி இருப்பதன் காரணமாகவே, சிங்கள மக்களுடைய ஆதரவின் ஊடாக தேர்தல்களில் வெற்றி பெறுகின்ற அரசியல் சாணக்கிய உத்தியில் பற்றுறுதி கொண்டிருக்கின்றன.
சிறுபான்மை இன மக்களை இந்த நாட்டின் பங்குதாரர்களாக சம உரிமையுடைய சக குடிமக்களாகக் கருதினால், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அரசியல் ரீதியாக அவர்களுடைய ஆதரவைப் பெற்றுச் செயற்படுவதிலும் பேரின அரசியல்வாதிகள், அக்கறை கொண்டிருப்பார்கள். ஆனால், அத்தகைய பல்லின அரசியல் கொள்கையும் பல்லின பலமதங்களைக் கொண்ட நாடு என்ற வகையிலான அரசியல் போக்கும் அவர்களிடம் காணப்படவில்லை.
இதனாலேயே சிறுபான்மை இன மக்களின் அரசியல் மற்றும் மத உரிமைகள் மோசமான முறையில் மீறப்படுகின்ற நிலைமை நாளுக்குநாள் தீவிரமடைந்து செல்கின்றது. பல்லின மக்களையும் பல மதங்களைச் சேர்ந்த மக்களையும் கொண்ட பன்மைத்துவக் கொள்கையுடைய ஜனநாயக நாடாக இலங்கையை அவர்கள் வெளிக்காட்டிக் கொண்ட போதிலும், சிங்கள பௌத்தம், சிங்கள பௌத்த தேசியம் என்பதே அவர்களின் உண்மையான அரசியல் நிலைப்பாடாகும்.
வாக்குறுதிகள் கைவிடப்படுவதே வழமை
இதன் அடிப்படையிலேயே சிங்கள மக்களுடைய பேராதரவின் ஊடாக அதிகாரங்களையும், ஆட்சி உரிமையையும் கைப்பற்ற வேண்டும் என்ற தேர்தல்கால அணுகுமுறையில் பேரின அரசியல்வாதிகள் நாட்டம் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையிலேயே பெயரளவில் சிறுபான்மை இன மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வையும், அவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்குமான அபிவிருத்தி சார்ந்த வாக்குறுதிகளையும் தேர்தல் கால வாக்குறுதிகளாக அவர்கள் முன்வைக்கின்றார்கள்.
ஆனால் தேர்தல் காலத்தில் சிறுபான்மை இன மக்கள் தொடர்பில் வெளிப்படுத்துகின்ற தீர்வுகளுக்கான நிலைப்பாடும், அபிவிருத்திக்கான வாக்குறுதிகளும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் கருத்திற் கொள்ளப்படுவதில்லை. கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுமில்லை. அவர்கள் தங்களுடைய மறைமுக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சிங்கள பௌத்த தேசியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலேயே தீவிர கவனம் செலுத்துவார்கள். இதுவே அரசியல் யதார்த்தமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த இரட்டை வேட அரசியல் போக்கு நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவர் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக வெளிப்படுத்திய உறுதிமொழிகளும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் அளித்த உறுதிமொழிகளும் காற்றில் பறந்தனவே தவிர அவற்றில் எதுவுமே உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை.
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று அவர் அளித்த உறுதிமொழி இன்னுமே நிறைவேற்றப்படவில்லை. மீள்குடியேற்றம் தொடர்பில் மாற்று நடவடிக்கைகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகிவிட்ட போதிலும், மூன்று தசாப்தங்களாக இடம்பெயர்ந்துள்ள அந்த மக்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதிகளும் அவ்வாறே காற்றில் பறக்கவிடப்பட்ட சங்கதியாகவே உள்ளது. இது விடயத்தில் கண்துடைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட நுணுக்கங்கள் பற்றிய சாட்டுக்கள் கூறப்பட்டனவே தவிர அரசியல் கைதிகளின் விடுதலை அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் ஏறக்குறைய மறக்கப்பட்ட விடயமாகவே உள்ளது.
இதுபோலவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயத்தில் அவர்களுடைய உறவினர்களினால், ஆதாரபூர்வமாக விடயங்கள் முன்வைக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறிதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூறுமாறு கோரி கிட்டத்தட்ட 1000 நாட்களாக அவர்களுடைய உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றார்கள். அவர்களுடைய கோரிக்கைக்கு எவருமே உரிய முறையில் செவிசாய்த்திருப்பதாகத் தெரியவில்லை. இதனால் தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்துள்ளார்கள்.
சாதுரியமான செயற்பாடும் அதற்கான சிந்தனையும் அவசியம்
சிறுபான்மை இனமக்கள் பேரின அரசியல்வாதிகள் மீதும், பேரின அரசியல் கட்சிகள் மீதும் அரசியல் ரீதியாக நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இதனை பேரின அரசியல்வாதிகளும், பேரின அரசியல் தலைவர்களும் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
இருப்பினும் சிறுபான்மை இனமக்களும் இந்த நாட்டின் குடிமக்களே என்ற அடிப்படையில் அவர்களையும் அரவணைத்துக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற அரசியல் நல்லுணர்வு பேரின அரசியல்வாதிகளிடத்தில் மனப்பூர்வமாக ஏற்படவில்லை.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 75 வீதமான சிங்கள மக்களின் ஆதரவு இருந்தாலே போதும், அத்துடன், பெயரளவில் சிறுபான்மை இன மக்களின் ஒரு தொகை வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிவிடலாம் என்ற சிந்தனை அவர்களிடம் இருந்து வெளிப்பட்டிருக்கின்றது.
விசேடமாக ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரருமாகிய கோத்தபாய ராஜபக் ஷ இந்த விடயத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாய்ப்பைப் பெறுவதற்காகப் பல்வேறு தரப்பினரையும் சந்திப்பதுடன், தமது நிலைப்பாடு தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் வெளியிடத் தொடங்கியிருக்கும் அவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தனுடனான சந்திப்பின்போது சிங்கள மக்களின் பேராதரவில் தேர்தலில் வெற்றி பெற உத்தேசித்துள்ளமை குறித்து தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களாக யார் யார் எந்தெந்தக் கட்சிகளிலிருந்து போட்டியிடப் போகின்றார்கள் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் மிகப் பலம் வாய்ந்த வேட்பாளராக கோத்தபாய ராஜபக் ஷ கருதப்படுகின்றார். அவரே பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ளார் என்ற தகவலும் பரவலாக வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சிங்கள மக்களுடைய ஆதரவை மட்டுமே பெரிய அளவில் நோக்க மாகக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஏனைய வேட்பாளர்களும் போட்டியிடுவார்களானால் இம்முறை ஜனாதிபதி தேர்தல் களம் மிகச் சூடுபிடித்த களமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை, தேர்தல் வெற்றிக்காக சிங்கள மக்களைக் குறிவைக்கின்ற தேர்தல் உத்தியானது, சிறுபான்மை இனமக்களின் வாக்குகளாளே வெற்றியாளரைத் தீரமானிக்கின்ற பலமுள்ள சக்தியாகப் பரிணமிக்கின்ற சந்தர்ப்பம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, இத்தகைய நுணுக்கமான தேர்தலுக்கு முந்திய கள நிலைமைகளின் போக்கு தந்திரோபாயச் செயற்பாடுகள் என்பனவற்றைத் தீர்க்கமாக உய்த்து உணர்ந்து அதற்கேற்ற வகையில் மிகச் சாதுரியமாக இந்தத் தேர்தலைத் தமிழ் மக்கள் கையாள வேண்டும். இது விடயத்தில் தங்களுக்குள் முட்டிமோதி ஆளை ஆள் சீண்டிக்கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே தீவிரமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியதும் அவசியம்.
- பி.மாணிக்கவாசகம் நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment