மேலும் சில பக்கங்கள்

அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்


அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் நாவல்கள், சிறுகதைகள், தொழில் சார் அனுபவ நூல்கள் மற்றும் பயண இலக்கியம் தொடர்பான அறிமுகமும் விமர்சன அரங்கும் எதிர்வரும் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மெல்பனில் நடைபெறும்.
நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கியவர். இவரது விலங்கு மருத்துவத்துறை சார்ந்த கதைகளை உள்ளடக்கிய நூல் வாழும் சுவடுகள் இதுவரையில் இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளன.  இதுவே இவரது முதலாவது நூலாகும்.
இலங்கையில் மதவாச்சியா தொகுதியில் பதவியா என்னுமிடத்தில் விலங்கு மருத்துவராக இவர் பணியாற்றிய அனுபவத்தின் பின்னணியில் எழுதிய முதலாவது நாவல் வண்ணாத்திக்குளம். இக்கதையை தமிழக திரைப்பட இயக்குநர் (அமரர்) முள்ளும் மலரும் மகேந்திரன் திரைப்படமாக்குவதற்கு விரும்பி, திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார்.
எனினும் இலங்கை அரசியல் சூழ்நிலைகளினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனினும் இந்த நாவல் Butterfly Lake என்ற பெயரில் ஆங்கிலத்திலும், சமணள வெவ என்ற பெயரில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன.
1983 இனக்கலவரத்தை பின்னணியாகக் கொண்டு நடேசன் எழுதிய உனையே மயல்கொண்டு என்ற நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.
நடேசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளும் மலேசியன் எயர் லைன் 370 என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்த நூலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அசோகனின் வைத்தியசாலை என்ற நாவலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சுக்குத்தயாராகியுள்ளது.
எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி  பிற்பகல் 2.30 மணிக்கு மெல்பனில், வேர்மன் தெற்கு கல்வி நிலையத்தில், கலை, இலக்கிய ஆர்வலர் மருத்துவர் ( திருமதி) வஜ்னா ரஃபீக் தலைமையில்,  நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் அனைத்து நூல்களின் விமர்சன  அரங்குடன்,   புதிய நாவலான கானல் தேசம், மற்றும்    நனவிடை தோயும்  சுயவரலாற்று பத்தி எழுத்து தொகுப்பான எக்ஸைல் முதலான நூல்களும் அறிமுகப்படுத்தப்படும்.

கானல் தேசம் - நாவல் - அறிமுகம்: மருத்துவர் நரேந்திரன்.
எக்ஸைல் - சுயவரலாறு - அறிமுகம் : கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர்.
அந்தரங்கம் - சிறுகதைத் தொகுப்பு-  அறிமுகம்:  சட்டத்தரணி பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா.
வண்ணாத்திக்குளம் - நாவல் - விமர்சனம்: ஆவூரான் சந்திரன்.
உனையே மயல்கொண்டு - நாவல் - விமர்சனம்: கலாதேவி பாலசண்முகன்.
நைல்நதிக் கரையோரம் - பயண இலக்கியம் - விமர்சனம்: சண்முகம் சபேசன்.
வாழும் சுவடுகள் - தொழில் சார் அனுபவங்கள் - விமர்சனம்: விஜி இராமச்சந்திரன்.
அசோகனின் வைத்தியசாலை - நாவல் - விமர்சனம்: சாந்தி சிவக்குமார்.
மலேசியன் ஏர் லைன் - சிறுகதைத் தொகுப்பு - விமர்சனம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.
நிகழ்ச்சியின் இறுதியில் முருகபூபதி தொகுப்புரையும்,  நூல்களின் ஆசிரியர் நடேசன்  ஏற்புரையும் வழங்குவர்.






-->











No comments:

Post a Comment