
" முள்ளும் மலரும் " மகேந்திரன் என அறியப்பட்ட இவரின் இயற்பெயர்
ஜோசப் அலெக்ஸாண்டர். தமிழகத்தில் இளையான்குடி இவரது பூர்வீகஊர். மாணவப்பருவத்திலேயே
கையெழுத்து சஞ்சிகை நடத்தியிருக்கும் இவரது
எழுத்தனுபவம், பின்னாளில் சென்னையில்
பத்திரிகை ஊடகத்துறையினுள் இவரை அழைத்துக்கொண்டது.

அந்த விழாவில்
எதிர்பாராதவிதமாக அலெக்ஸாண்டர் பேசவேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. திரைப்படங்களில்
காதலிகளுடன் ஓடிப்பிடித்து பாட்டுக்கு உதடு அசைத்து பாடும் எம். ஜி.ஆர் பற்றி இவர்
இவ்வாறு பேசுகின்றார்:

மண்டபம் கைதட்டலினால்
அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் திகைத்தார். தொடர்ந்து
அந்தப்பேச்சைக்கேட்டு ரசித்த எம்.ஜி.ஆர், தனது
ஏற்புரையையடுத்து விடைபெறும்போது ஒரு காகிதத்தில் " நல்ல பேச்சு. நல்ல கருத்து. நகைச்சுவையுடன்கூடிய வன்மையான உணர்ச்சியுடன்
கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்கத் தகுந்தவர். வாழ்க " என்று எழுதிக்கொடுக்கிறார்.
இச்சம்பவம் நடந்த திகதி: 30-11-1958.
இந்த நூலின்
தொடக்கத்தில், நீங்களும் நானும் என்ற தலைப்பில்
மகேந்திரன் இவ்வாறு தெரிவிக்கின்றார்:

'கடலும் நானும் ' என்ற தலைப்பில் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்களும்
, கப்பலில் நாடு நாடாகச்சுற்றுகிற கப்பல் மாலுமிகளும், பயணிகளும் கட்டுமரத்தில் போய்
மீன் பிடிப்பவர்களும், முத்துக்குளிப்பவர்களும் புத்தகம் எழுதலாம். அந்த வகையில் சினிமா
என்ற சமுத்திரக்கரையில் அழகிய கிழிஞ்சல்களைத்
தேர்ந்தெடுத்து மடியில் கட்டிக்கொள்கிறவன் என்ற முறையில் ' சினிமாவும் நானும் ' என்று எழுதியிருக்கின்றேன்.
தான் நடிக்கும்
படங்கள் எவ்வளவுதூரம் இயற்கைக்கு விரோதமாக
இருக்கிறது என்பதை ஒரு மாணவன் அன்று மேடையில்
சுட்டிக்காட்டியபின்னரும், அவனை பாராட்டி தன்கையால் சான்றிதழ் எழுதிக்கொடுத்திருக்கும்
எம்.ஜி.ஆர்., பின்னாளில் ஒரு பத்திரிகையாளர்
சந்திப்பில் மகேந்திரனை அடையாளம் கண்டு, தனது
இல்லத்திற்கு அழைத்து தனி அறை ஒதுக்கிக்கொடுத்து
தான் விலைகொடுத்து உரிமை வாங்கியிருந்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்குவதற்காக திரைக்கதை வசனம் எழுதவைத்துள்ளார்.
மகேந்திரன் எழுதினார். ஆனால், படம் தயாராகவில்லை.
பின்னாளில்
மகேந்திரன் சினிமாவுக்காக திரைக்கதை வசனம் எழுதிய சில சிறுகதைகளும் நாவல்களும் கூட
திரைப்படமாகவில்லை. அதில் ஒன்று அவுஸ்திரேலியா எழுத்தாளர் நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவல். இதனையும் எஸ்.பொ.வின்
மித்ரதான் வெளியிட்டு, இரண்டு பதிப்புகள் கண்டது.
" உயர்வான
நல்ல ஒரு சினிமாவே ஒரு இலக்கியம்தான்! அதேசமயம் இலக்கியம் சார்ந்து நல்ல ரசனையோடு ஒரு
திரைப்படம் உருவாகும்போது அந்தத் திரைப்படத்தின் இரட்டிப்பு வெற்றியும் உன்னதமானது.
பல நாட்டு சினிமாப்படைப்பாளிகளும் நாவல்களை ஆதாரமாகக்கொண்டு பெருமைக்குரிய வெற்றிப்படங்களைத்
தந்திருக்கிறார்கள். தருகிறார்கள். இந்தியாவும் இதற்கு விலக்கு அல்ல. திரைப்பட மேதை
சத்தியஜித்ரேயின் உலகப்புகழ்பெற்ற படங்கள் அனைத்தும் நாவல்களையும் சிறுகதைகளையும் ஆதாரமாகக்கொண்டவை.
" எனக்கூறும் மகேந்திரன் ரே எடுத்த
படங்கள் பதேர் பஞ்சலி, அபராஜிதோ, அபூர்சன்சார் பற்றியும் இந்த நூலில் எடுத்துரைக்கிறார்.
உமாசந்திரனின் முள்ளும் மலரும், புதுமைப்பித்தனின் சிற்றன்னை
( உதிரிப்பூக்கள்) பொன்னீலனின் பூட்டாத பூட்டுக்கள், கந்தர்வனின் சாசனம் , சிவசங்கரியின் நண்டு, முதலான நாவல்களுக்கு திரைக்கதை வசனம்
எழுதி இயக்கி படமாக்கியவர் மகேந்திரன்.
ஏற்கனவே திரைப்படமாகிய
அகிலனின் பாவை விளக்கு, கல்கியின் பார்த்திபன் கனவு, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா
மோகனாம்பாள், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் பற்றியும் மகேந்திரன் இந்த
நூலில் பேசுகிறார்.
இந்திய தேசிய
திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் ( National
Film Development Corporation - N.F.D.C) நிதியுதவியில் இவர் கதை வசனம் எழுதி இயக்கிய
சாசனம் படத்தினை 28 நாட்களில் எடுத்திருந்த
அனுபவத்தையும், அதனை திரைக்கு எடுத்துவருவதற்கு
பட்ட கஷ்ட நஷ்டங்களையும் துன்பங்களையும் பதிவுசெய்துள்ளார். அந்த அத்தியாயத்திற்கு
"என் சாசனம்" என்றுதான் தலைப்பும்
இரட்டை அர்த்தத்தில் சூட்டியிருக்கிறார்.
தான் சென்னையில்
இனமுழக்கம் பத்திரிகையில் சினிமா விமர்சகராக
பிரவேசித்த கதையை சொல்லும்போது, " எதிர்பாராத திருப்பங்கள், தற்செயல் நிகழ்ச்சிகள்
தான் என் வாழ்வைத் தீர்மானித்தன என்பதை இப்படிப் பல சந்தர்ப்பங்கள் உங்களுக்கு நினைவூட்டும்.
அதேசமயம் நம்ப முடியாத திருப்பங்கள் நிறைந்த சினிமாத் திரைக்கதை மாதிரித்தான் என் வாழ்க்கையும்
என்பது இன்னொரு நல்ல உதாரணம். ஆனால், சினிமாவில் இடம்பிடிக்க முயலும், எவரும் என்னை
'ரோல் மாடல்' ஆக நினைக்கவே கூடாது. அது
ஆபத்து என்பதையும் எச்சரிக்கிறேன். " என்று பதிவுசெய்கிறார்.
சூப்பர் ஸ்டார்
இன்றளவும் தான் நடித்த படங்களில் மகேந்திரன் இயக்கிய முள்ளும்மலரும் தான் மிகச்சிறந்தது எனச்சொல்லிவருபவர். சுஹாசினிக்கு பெரும்
புகழையும் பெற்றுத்தந்த படம் நெஞ்சத்தை கிள்ளாதே.
ஒளிப்பதிவளாராக வளர விரும்பியிருந்த அவரை, நடிப்புலகிற்கு இழுத்துவிட்ட முதலாவது படம்.
மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது. மகேந்திரன் கதை வசனம் எழுதி இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே. சிவாஜிகணேசன் நடித்த
தங்கப்பதக்கம் திரைப்படத்திற்கும் இவர்
வசனம் எழுதினார். அது முதலில் மேடை நாடகமாகி நூறு நாட்கள் மேடை ஏறி வெற்றிபெற்றது.
இவற்றின் பின்னணிகள் பற்றியெல்லாம் விரிவாக அலசியிருக்கும் மகேந்திரன், நடிகரும் பத்திரிகையாளரும்
அரசியலில் அதிர்வேட்டுக்களை அயராமல் விட்டு, அரசியல்வாதிகளின் கண்களில் விரலை ஆட்டியவருமான சோ - ராமசாமி பற்றியும் வெளியுலகத்திற்கு
அதிகம் தெரியாத ஒரு செய்தியையும் இந்த நூலில் உணர்ச்சிகரமாக பதிவுசெய்துள்ளார்.
சோவின் மொட்டந்தலை
பிரசித்தமானது. அவர் மறையும் வரையில் அந்தத் தலையுடன்தான் காட்சியளித்தார். மகேந்திரன், சோவின் துக்ளக்
பத்திரிகையிலும் நிருபராக பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் மகேந்திரனின் மூத்த குழந்தை
டிம்பிள் பிறந்ததிலிருந்து கடுமையாக நோயுற்றிருந்தாள்.
உடல்நிலை மோசமடைந்தையடுத்து, எழும்பூர் குழந்தைகள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.
குழந்தை நிலைகுறித்து
தொலைபேசியில் சோவிடம் சொல்லி அழுதிருக்கிறார் மகேந்திரன். அதனைக்கேட்டு ஆறுதல் சொல்லி தேற்றியிருக்கிறார் சோ. சில நாட்களில்
குழந்தை சுகமடைந்துவிட்ட செய்தியுடன் மகேந்திரன் துக்ளக் அலுவலகம் திரும்புகிறார்.
அதனைக்கேட்டுவிட்டு
சோ, மகேந்திரனையும் அழைத்துக்கொண்டு திருப்பதி சென்று தனது நேர்த்தியை நிறைவேற்றுகிறார்.
அக்குழந்தை குணமாகவேண்டும் என்று தனது மேசையிலிருந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தைப்பார்த்து
வேண்டுதல் செய்திருக்கும் சோ, மொட்டைஅடித்துக்கொள்வதாக பிரார்த்தித்திருக்கிறார்.
இந்தச்சம்பவத்தை
நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் கிறிஸ்தவராக பிறந்த அலெக்ஸாண்டர் என்ற மகேந்திரன்.
அந்த சம்பவத்தை மறந்துவிடாமல் அதே குழந்தை பின்னாளில் மணமகளான தருணத்தில் திருமணவிழா
மேடையில் வாழ்த்துவதற்கு வருகைதந்த சோவின் முன்னிலையில் நினைவுபடுத்திப்பேசுகிறார் நன்றி மறவாத மகேந்திரன்.
சினிமாவுக்கு
மகேந்திரனை இழுத்துவந்த எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். அதனை விருப்பு வெறுப்பின்றி துக்ளக்கில் விமர்சித்து
அவரது கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறார்.
திரைப்பட
இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் சிறுகதை எழுத்தாளருமான
தங்கர்பச்சான் குங்குமம் தீபாவளி சிறப்பிதழுக்காக
(1998) மகேந்திரனை பேட்டி காண்கிறார்.
அந்தப்பதிவின்
இறுதியில், மகேந்திரன் இவ்வாறு சொல்கிறார்:
" டைரக்டர்
ரிஷிகேஷ் முகர்ஜி சொன்னதுன்னு நினைக்கிறேன். " நல்ல படம் எடுக்கிறதுக்கும் மோசமான
படம் எடுக்கிறதுக்கும் ஒரே கெமராவைத்தான் பயன்படுத்துறீங்க. ஒரே மாதிரித்தான் செலவு
பண்றீங்க. அதை நல்ல படமாகவே எடுத்துட்டா என்ன? ன்னார். நானும் அதையேதான் சொல்றேன்.
நாம், நம்முடைய உழைப்பை, செலவை நல்ல படங்கள்
எடுக்க பயன்படுத்தணும்"
தமிழ் சினிமாவில்
நகைச்சுவை நடிகர்கள், நமது தமிழ் சினிமா இயக்குநர்கள் முதலான தலைப்புகளில் பலரைப்பற்றிய
தனது அவதானம் குறித்தும் மகேந்திரன் இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
அவர் சம்பந்தப்பட்ட
திரைப்படங்களின் சில காட்சிகளையும் இந்த நூலில் பார்க்கமுடிகிறது. தனது இலக்கியத்துறை
ஈடுபாட்டையும் படைப்பிலக்கியத்தையும் சினிமாவையும் இணைக்கும்போது ஏற்படும் சுவாரசியமான
திருப்பங்கள் - அனுபவங்களையும் வாசகரை மிறட்டாத
மொழி நடையில் எளிமையாக சொல்கிறார்.
இந்திய சினிமா
உலகம் குறித்தும் உலகத்தரம்வாய்ந்த சினிமாக்கள்
பற்றியும் இந்த நூல் உரத்தசிந்தனைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சுகின்றது. அத்துடன்
அவர் தன்னையும் பல அத்தியாயங்களில் சுயவிமர்சனம் செய்துகொள்கிறார்.
தனது 79 வயதில் மறைந்துவிட்ட இயக்குநர் மகேந்திரனுக்கு
எமது அஞ்சலி.
letchumananm@gmail.com
---0---
No comments:
Post a Comment