மேலும் சில பக்கங்கள்

வாசகர் முற்றம் - அங்கம் 01 "வாசிப்பு மனிதர்களை முழுமையாக்கும்" - மகாத்மா காந்தி " வாசகர் வட்டங்கள் நண்பர்களை உருவாக்கும்" - முத்துக்கிருஷ்ணன் மெல்பனில் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சிவக்குமார் - முருகபூபதி


முன்னுரைக்குறிப்பு
பல வருடங்களுக்கு முன்னர் தமிழக இலக்கிய விமர்சகர் க.நா. சுப்பிரமணியம் ( க.நா.சு) - (1912-1988) அவர்கள் தொகுத்து வெளியிட்டிருந்த படித்திருக்கிறீர்களா? நூலின் இரண்டு பாகங்களும் படித்தேன். இன்றும் என்வசம் அந்த நூல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. "பாதுகாப்பு" எனச்சொல்வதன் அர்த்தம் புரியும்தானே!?
கா. ந. சு. வாசகருக்கு மாத்திரமல்ல படைப்பாளிகளுக்கும் தரமான நூல்களை இனம்காண்பித்திருந்தார். அவர் படித்த சிறந்த தமிழ் நூல்களை நயந்து மற்றவர்களும் அவற்றைத் தேடி எடுத்துப்படிக்கத்தூண்டுவிதமாக எழுதினார். அவரிடத்தில் அங்கீகாரம் பெறுவது எளிதானது அல்ல என்பார்கள். அவரது குறிப்பிட்ட நூல்களை படித்ததுமுதல், நானும் எனக்குப்படித்ததில் பிடித்தமான நூல்களைப்பற்றி " படித்தோம் சொல்கின்றோம்" என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிவருகின்றேன். இலங்கை, தமிழக, மற்றும் புகலிட படைப்பாளிகளின் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். எனது ஊடக, இதழியல் நண்பர்களும் அவற்றை விரும்பி ஏற்று பிரசுரித்தும் பதிவேற்றியும் வருகின்றனர். அவற்றைப்படிக்கும் அன்பர்களில் சிலரும் என்னுடன் தொடர்புகொண்டு தமது எதிர்வினைகளை தெரிவிப்பதுடன், குறிப்பிட்ட நூல்களை எங்கே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விசாரிப்பதுண்டு.

அவுஸ்திரேலியாவில் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தோன்றியது முதல் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளையும் ஒழுங்குசெய்தோம். காலத்துக்குக் காலம் இதன் ஒருங்கிணைப்பாளர்களாக யாராவது ஒருவர் இயங்குவார்.
எதிர்பாராதவகையில் மெல்பன் வாசகர் வட்டம் என்ற அமைப்பினை கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருங்கிணைத்துவரும் இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவக்குமார் அவர்களின் அயராத சீரிய இலக்கியத் தொண்டு என்னை பெரிதும் கவர்ந்தது. அவர் படைப்பிலக்கியவாதியல்ல. தேர்ந்த வாசகர்.
அதனால் இந்த வாசகர் முற்றம் என்ற எனது புதிய தொடரை அவரிலிருந்து ஆரம்பிக்கின்றேன்.  இதுவரைகாலத்தில் மறைந்த இலக்கிய ஆளுமைகள், சமூகப்பணியாளர்கள், மற்றும் கலை, இலக்கியவாதிகளை,  பெண்ணிய ஆளுமைகளைப்பற்றியெல்லாம் நூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியிருக்கின்றேன். ஆனால், தேர்ந்த வாசகர்கள் பற்றிய குறிப்புகளை இதுவரையில் எழுதவில்லை.  எதற்காக இந்தக்குறையையும் வைக்கவேண்டும் என்பதற்காக எழுதும் புதிய தொடர்தான் இந்த வாசகர் முற்றம். இந்த தொடர்பத்தியில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் இடம்பெறமாட்டார்கள். எம்மத்தியில் வாழும் தேர்ந்த வாசகர்கள்தான் வருவார்கள்.
-----------------------------
கலைஞர்களுக்கு, குறிப்பாக சினிமா நடிகர் நடிகையர்களுக்கு ரசிகர்கள் இருந்தால்தான் அவர்களின் திரைப்படம் ஓடும். அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தும் கிடைக்கும். தயாரிப்பாளர்களும் இந்த ரசிகர்களை நம்பித்தான் கோடிக்கணக்கில் முதலிட்டு, திரைப்படங்கள் எடுக்கிறார்கள்.  அந்தப்பணம் மட்டுமல்ல, திரை ரசிகர்களும்தான்  சினிமாவுக்கு மூலதனம்.
அவ்வாறு இசை, நடனம் முதலான துறைகளையும் ரசிப்பதற்கு ரசிகர்கள் வேண்டும். அதனால், இந்தக்கலைஞர்களுக்கும் ரசிகர்கள்தான் தேவை.
அப்படியானால்  எழுத்தாளர்களுக்கு? அவர்களும் வாசகரை நம்பித்தான் எழுதுகின்றனர். " இன்னமும் தமிழ்நாட்டில் ஒரு சிறந்த தமிழ் இலக்கிய நூல் ஆயிரம் பிரதிகள் விற்றாலே பெரிய சாதனைதான்" என்று ஒரு சந்தர்ப்பத்தில் (அமரர்) சுந்தரராமசாமி சொன்னார்.
பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் , தி. ஜானகி ராமன், பிரபஞ்சன்  முதலானோரின் படைப்புகள்  சமகாலத்தில் செம்பதிப்புகளாக வந்துள்ளன. இலங்கை எழுத்தாளர் கே. டானியலின் கதைகளும் செம்பதிப்பாகியுள்ளன. இந்த வரிசையில் மேலும் பல மறைந்த இலக்கிய ஆளுமைகளின் நூல்களும் செம்பதிப்பு தகுதியை பெற்றுவருகின்றன.
இந்தப்பின்னணிகளுடன் வருடந்தோறும் ஜனவரி  மாதத்தில் சென்னையில் புத்தகத் திருவிழா நடக்கிறது. அதற்கு வாசகர்கள்  அலைமோதும்  காட்சியையும் பார்த்துவருகின்றோம்.
இணையத்தின் ஊடாகவும் தற்காலத்தில் (ஒன்லைனில்) நூல்களை வரவழைத்து படிக்கமுடிகிறது. அவ்வாறும் பெறப்படும் நூல்களைப்பற்றிய வாசிப்பு அனுபவம் பற்றிய  குறிப்புகள் வெளிவரும்போது, அவற்றை எழுதிய எழுத்தாளர்கள் பெருமிதம் அடைகின்றனர்.
அந்தக் குறிப்புகளை தங்களது தனிப்பட்ட வலைப்பூக்களிலும் (Blogs) முகநூல்களிலும் ( Face Book) பதிவேற்றிவருகின்றனர். எத்தனைபேர் அவற்றை படித்தார்கள், எத்தனைபேர் "லைக்" செய்தார்கள் என்ற கணிப்பையும் துல்லியமாகக் சொல்லிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களையும் நாம் சமகாலத்தில் பார்க்கின்றோம்.
ஓராண்டு காலத்திற்கு முன்னர் மெல்பனில் வாசகர் வட்டம் என்ற அமைப்பை தொடங்குவதில் முன்னின்று செயல்பட்டவர்களில் ஒருவர்தான் திருமதி சாந்தி சிவக்குமார். இவர் தேர்ந்த வாசகர். தமிழகத்தில் விழுப்புரத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். அங்கு அவர்  உயர்தரத்தில் படிக்கும்போது வணிகவியலையும் கணக்கியலையும் சிறப்பு பாடங்களாக பயின்றவர்.  படிக்கின்ற காலத்திலேயே வாசிப்பிலும் தீவிரம் காண்பித்தவர். அத்துடன் தான் படித்ததில் பிடித்தமானவற்றை தனது நண்பர்கள் சிநேகிதிகளையும் படிக்குமாறு பரிந்துரை செய்தவர்.  தனது இளைமைக்காலம் நண்பர்கள், சிநேகிதிகளுடனும் நல்ல நூல்களுடனும் கழிந்தது எனச்சொல்கிறார் சாந்தி. அந்தப்பருவத்தில்  அவரது உலகம் சிறந்த நூல்கள்தான். திருமணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா மெல்பனில் வாழத்தலைப்பட்டு 23 வருடங்களாகின்றன.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கனவு இருக்கும். திருமதி சாந்தி சிவக்குமாருக்கு நீடித்திருந்த கனவு,  தனது இல்லத்தில் ஒரு அருமையான நூல் நிலையம் உருவாக்கவேண்டும் என்பதுதான். இவரது சிறந்த பொழுதுபோக்கு வீட்டில் உள்ளக - வெளிப்புற பூந்தோட்டம் வளர்த்து பராமரிப்பது. தேர்ந்த இசை கேட்பது.
தமிழ் ஆர்வலரும்,  மெல்பனில் அவுஸ்திரேலிய தமிழ் கலாசாலை,  வள்ளுவர் அறக்கட்டளை ஆகியனவற்றை உருவாக்கி ஒருங்கிணைத்து தமிழ்ப்பாடசாலைகளை நடத்திவரும் திரு. நாகை சுகுமாறன் ஒழுங்கு செய்திருந்த தமிழ் ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பட்டமளிப்பு விழாவில்தான் சாந்தியை முதல் முறை சந்தித்தேன். அந்த முதல் சந்திப்பிலேயே அவர் ஒரு தேர்ந்த வாசகர் என்பதையும் தெரிந்துகொண்டேன்.
குடும்பத்தலைவியாகவும் இரண்டு பிள்ளைகளின் தாயாகவும் இருக்கும் சாந்தியின் கணவர் சிவக்குமாரும்,  சிவக்குமாரின் தாயரும் கலை, இலக்கிய ஆர்வமுள்ளவர்கள்தான். இவர்களது வீட்டுக்கு நான் சென்றால் சிவக்குமாரின் தாயாரிடம் தமிழகத்தின் அக்காலப்புதினங்களை கேட்டுத்தெரிந்துகொள்வேன். மிகவும் சுவாரசியமாக கதை சொல்வார். சிவக்குமாரும் தமிழகத்தின் நடப்புகளை விஸ்தரிப்பார்.
இவ்வாறு வாசிப்பிலும் ரஸனையிலும் ஆர்வமுள்ள குடும்பத்தினருக்கும் இலக்கிய வாசகர்களுக்கும்  ஆரோக்கியமான உறவுப்பாலத்தை மெல்பன் வாசகர் வட்டத்தின் ஊடாக ஏற்படுத்தியவர் சாந்தி.
ஓராண்டு காலத்திற்கு முன்னர் இவர்கள் வீட்டில் விருந்தினராக தங்கியிருந்த தமிழக எழுத்தாளரும் கீழடி தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடும் தன்னார்வலருமான திரு. முத்துக்கிருஷ்ணன் தொடக்கிவைத்ததுதான் மெல்பன் வாசகர் வட்டம்.
அவர் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டவாறு பயணங்களையும் தொடருபவர். சில நூல்களை வரவாக்கியிருப்பவர். அவ்வப்போது மெல்பனுக்கு வருவார். இவர் சிறந்த பேச்சாளர். இலக்கிய நண்பர் ஜே.கே.யின் இல்லத்தில் ஒருநாள் நடைபெற்ற  "மஹாகவி உருத்திரமூர்த்தியுடன்  மாலைநேரச்சந்திப்பு" நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். முத்துக்கிருஷ்ணனும் அதற்கு வருகை தந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்து அங்கு கலந்துரையாடிக்கொண்டிருக்கும் வேளையில் முத்துக்கிருஷ்ணனை அழைத்துச்செல்வதற்காக சாந்தியும் கணவரும் வந்தனர்.
அச்சமயத்தில் எனது சொல்லவேண்டிய கதைகள் நூல் யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக வந்திருந்தது. நான் சாந்தியைப்பார்த்து,  எனது நூல் வெளியீட்டில் பேசுமாறு கேட்டேன். அவருக்கு இன்ப அதிர்ச்சி.
"நான் மேடைகளில் பேசுவது இல்லை அய்யா. ஏன் என்னை தெரிவுசெய்கிறீர்கள்..?" எனக்கேட்டார்.
" நீங்கள் தேர்ந்த வாசகர். எனது புத்தகவெளியீட்டில் எழுத்தாளர்களை அல்ல, வாசகர்களைத்தான் பேசவைக்கப்போகின்றேன். பேசவிருப்பவர்களும்  நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கவிருப்பவரும் பெண்கள்தான். அத்துடன் வாசகர்கள். நீங்கள் தைரியமாகப்பேசலாம்" என்றேன்.
பின்னர் சம்மதித்தார். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் திருமதி வஜ்னா ரஃபீக். இவர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் (அமரர்) மருதூர் கனியின் புதல்வி. சாந்தி, ரேணுகா தனஸ்கந்தா, கௌஸி ஜெயேந்திரா, அஸீரா நஜிமுன்னியாஸ் ஆகியோர் உரையாற்றினர். இவ்வாறு பெண்கள் மாத்திரமே உரையாற்றிய இலக்கிய நிகழ்வு  அவுஸ்திரேலியாவில் வேறு எங்கும் நடந்திருக்கும் தகவல் இருப்பின் சொல்லுங்கள்!
தமிழ் அமைப்புகளில் பெண்களுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கும் தயங்கும் சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோம். நிகழ்ச்சிகளுக்காக உணவு தயாரிப்பதற்கும் பரிமாறுவதற்கும்தான்   பெண்களை நாடுகின்றோம். அவர்களின் கருத்துக்களுக்கு, சிந்தனைகளுக்கு களம் வழங்குவதற்கு நாம் முன்வரல் வேண்டும் என்பதற்காகவே எனது நூல் வெளியீட்டை அன்று சற்று வித்தியாசமாக நடத்தினேன்.
சாந்தி, எனது நூலில் இருந்த " மனைவி இருக்கிறாவா?" என்ற கட்டுரையை தொட்டுப்பேசும்போது,  தான் சென்னையில் படித்த காலத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் சொல்லியதுடன், ரயில், பஸ்ஸில்  தூரப்பயணத்திற்கு தயாராகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவும் வேறுபாட்டை வெகு நுட்பமாகவும் யதார்த்தமாகவும் விஸ்தரித்துப்பேசினார்.  ஆண்கள் பயணிக்கும்போது கையில் ஒரு போத்தல் தண்ணீரும் பத்திரிகை, இதழ்களும் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், பெண்களால் அப்படி முடியாது. பயணம் முடியும்வரையில் தாகம் எடுத்தாலும் முடிந்தவரையில் தண்ணீர் அருந்தாமல் வருவார்கள். குழந்தைகளுடன் வந்தால், அவர்களைத்தான் கவனிக்க முடியும். அவர்களால் பத்திரிகை படிக்கவும் முடியாது.
பெண்களின் இந்தப்பக்கங்களை எந்த ஆண்கள்தான் பார்க்கிறார் என்று சாந்தி அன்று சொல்லாமல் சொன்னது என்னை வியக்கவைத்தது. ஒரு பெண் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைளை உபாதைகளை கடந்துவருகிறாள். இது பற்றி ஒருநாள் எனது மனைவியிடத்தில் சொன்னபோது, " பெண்கள் பொறுமையின் இருப்பிடம். சகிப்புத்தன்மைகொண்டவர்கள். அதனால் அவர்களை பூமாதேவிக்கும் ஒப்பிடுகிறார்கள்" என்றாள்.
உடனே நான், " பூமாதேவிக்குள்தானே பூகம்பமும் இருக்கிறது" என்றேன்! என்னை ஒரு பார்வை பார்த்தாள்.
சாந்தி, அதன் பின்னர் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய நிகழ்ச்சிகளிலும் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அண்மையில் தமிழக எழுத்தாளர்கள் சல்மா ( மனாமியங்கள் நாவல்) தமிழச்சி சுமதி தங்கபாண்டியனின் கவிதை உலகம் பற்றியெல்லொம் பேசினார். மெல்பனில் எமக்கு ஒரு தேர்ந்த வாசகரும் இலக்கியப்பேச்சாளரும் கிடைத்ததையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி.
                              மெல்பனில் சாந்தி சிவக்குமார் மாதாந்தம் ஒருங்கிணைக்கும் வாசகர் வட்டத்தின் சந்திப்புகள் சிலவற்றிலும் பங்குபற்றியிருக்கின்றேன். ஜெயகாந்தன், தோப்பில் முகம்மது மீரான், சு. வேணுகோபாலன், வண்ணதாசன், சுள்ளிக்காடு பாலச்சந்திரன் ( எச்.வி ஷைலாஜா மொழி பெயர்ப்பு) , ஏ. கே. செட்டியார், அந்த்வான் து செந்த்- எக்சுபெரி ( குட்டி இளவரசன்) இரா. நடராசன் ( ஆயிஷா),  மேரி மெக்லாய்ட் பெத்யூன் ( உனக்குப்படிக்கத் தெரியாது - கமலாலயன் மொழிபெயர்ப்பு)  ஆகியோரின் படைப்புகள் வாசகர் வட்டத்தில் பேசுபொருளாயின.
இதில் கலந்துகொள்பவர்கள்,  தத்தம் வாசிப்பு அனுபவங்களை குறிப்பெடுத்து வந்து சமர்ப்பிக்கிறார்கள். பெரும்பாலான சந்திப்புகள் சாந்தியின் இல்லத்தில் உபசரிப்புடன் தொடர்கிறது.
ஓரிடத்தில் குறிப்பிட்டதொரு நூல் பற்றி பலரதும் கருத்துக்கள் சங்கமிக்கின்றன. கலந்துரையாடல், சுவாரசியமாக கலகலப்புடன் நிறைவுபெறுகின்றன. சிலரது எதிர்வினைகள் வாசகருக்கு புதிய வாசல்களை திறக்கின்றன. வாசிப்பில் தேர்ச்சி பெறுவதற்கும், தரமான நூல்களை அடையாளம் காண்பதற்கும் சாந்தி சிவக்குமார் ஒருங்கிணைக்கும் மெல்பன் வாசகர் வட்டம் வழிசமைக்கின்றது.
அண்மையில் மெல்பன் வாசகர் வட்டத்தின் ஓராண்டு நிறைவு கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டமாகவும் நடந்தது. தமிழகத்திலிருந்து வந்து வாசகர் வட்டத்திற்கு மெல்பனில் கால்கோள் இட்ட நண்பர் முத்துக்கிருஷ்ணனும் அன்றைய தினம் தொடர்புகொண்டு அனைவருடனும் உரையாற்றினார். வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்ற மகாத்மா காந்தியின் சிந்தனையையும் நினைவுபடுத்தி, நண்பர்களை இணைப்பதற்கும் வாசகர் வட்டங்கள் ஒரு சிறந்த மார்க்கம் என்றார்.
சாந்தியுடன் ஒரு நாள் கலந்துரையாடியபோது, எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகள் பற்றியும் பேச்சு வந்தது. "ஜெயமோகனின் அறம் நூலை, ஒரு கூட்டத்தில் கமல்ஹாசன் விதந்து பேசியபின்னர்தான் அதனை தருவித்துப்படித்தேன்." என்றார். 
"அடடா அங்கீகாரங்கள் எங்கிருந்து வருகின்றன" என ஆச்சரியப்பட்டேன். கமல், ஜெயமோகனின் நண்பர். கமலின் பாபநாசம் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன்,  சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 2.0 படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார். இந்த ஆண்டு இந்திய சாகித்திய அக்கடமி விருது பெற்றுள்ள எஸ். ராமகிருஷ்ணனும் முன்னர்  ரஜினியின் "பாபா" படத்திற்கு வசனம் எழுதியவர்.
எஸ்.ரா.வுக்கு கனடா இயல் விருது கிடைத்தபோது சென்னையில் நடந்த  பாராட்டுவிழாவில் ரஜனி நேரில் வந்து பாராட்டுரை வழங்கினார். வருங்காலத்தில், ஏனைய பிரபல சினிமா நட்சத்திரங்களையும் நூல் வெளியீடுகளுக்கு அழைத்து பேசவைத்தால், அவர்கள் வாசகர்களுக்கு பரிந்துரைக்கும் நூல்களும் ஓகோ என்று விற்பனையாகும் என்று நான் சொன்னதும்,  சாந்தி கலகலவென சிரித்தார்.
தேர்ந்த வாசகரான இலக்கிய சகோதரி திருமதி சாந்தி சிவக்குமாருக்கும் அவர் அயர்ச்சியின்றி மாதாந்தம் ஒருங்கிணைக்கும்   மெல்பன் வாசகர் வட்டத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.



-->









No comments:

Post a Comment