நலமுடன் நாங்கள்வாழ நாயகியைச் சரணடைவோம்
நிலமெலாம் அமைதிகாண நெஞ்சார வேண்டிநிற்போம்
அளவில்லா ஆசைதன்னை அகற்றிடு தாயேயென்று
அன்னையின் நாமம்தன்னை அனைவரும் துதித்தேநிற்போம்
மதமதை அடக்கிநிற்கும் மகத்தான மாதாநீயே
மனமதில் உறைந்துநிற்கும் மலமதைப் போக்குதாயே
உளமதில் உன்னைவைத்து உருகியே பாடுகின்றோம்
ஒருகணம் எம்மைப்பார்த்து உத்தமராக்கு தாயே
கல்வியைத் தரும்போதம்மா கசடினை நீக்கித்தாநீ
நல்லதைச் செய்யுமெண்ணம் நன்குநீ படியச்செய்வாய்
சொல்லெலாம் தூய்மையாக சொல்லிட வைப்பாயம்மா
நல்மனத் தோடுநாளும் வாழ்ந்திடச் செய்வாய்தாயே
கோலமிட்டு கும்பம்வைத்து குத்துவிளக் கேற்றுகிறோம்
குடும்பமெலாம் ஒன்றுசேர்ந்து குறைசொல்லல் தவிர்க்கின்றோம்
வாழுதற்கு நல்லவற்றை தேடித்தேடி எடுக்கின்றோம்
வல்லமையின் நாயகியே வந்திடுவாய் மனமெல்லாம்
ஈரமுள்ள வீரமதை எங்களுக் கருள்வாய்தாயே
கோரமுள்ள குணமதனை கொன்றொழிக்க வேண்டுமம்மா
பாரமுள்ள வினையனைத்தும் பறந்தோடச் செய்வாயென்று
ஆர்வமுடன் வேண்டுகின்றோம் அம்மாநீ அரவணைப்பாய்
|
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
No comments:
Post a Comment