"மனிதர்களிடையே பரஸ்பரம் நிலவும் வெறுப்பிற்கு எதிராக பணியாற்றியே தீர வேண்டும் " -- மேரி மெக்லாய்ட் பெத்யூன்
கருப்பையா ராஜா

கமலாலயன் எழுத்துக்களில் மேரி பெத்யூனின் வாழ்க்கை சரிதம் குறித்து மெல்பன் வாசகர் வட்ட உரையாடலில் பேசிக்கொண்டு இருந்த வேளையில், சிரியாவில் இரசாயன குண்டு மழை பொழிந்து எண்ணற்ற இளம் தாய்களும் நம் குழந்தைகளின் சாயல் கொண்ட பள்ளி சென்று திரும்பாத குழந்தைகளும் ரத்தச் சகதியில் ....
பதினெட்டாம் நூற்றாண்டில் தங்கள் நாட்டை உருவாக்க ஒன்றறைக்கோடி ஆபிரிக்கர்களை அடித்து சங்கிலியால் பூட்டி அடிமைகளாக்கி அமெரிக்கா கொண்டு வருவதற்காக அதை விட பல மடங்கு ஆபிரிக்கர்களை கொன்றனர் அமெரிக்க வெள்ளையர்.
மேரி பெத்யூன் சொல்கிறார்:-
1900களில் இன மோதல்களை அன்றைய ஊடகங்கள் சரியான முறையில் வெளிக்கொண்டு வராமல் பார பட்சமாகவே நடந்து கொண்டனவாம் . இன்றுவரையில் அதே நிலையைத்தான் நாம் பார்க்கின்றோம்.
ஆணவம், வெறுப்பு ஆகிய
இரண்டின் சாட்சியாக இரண்டு உலகப்போர்களை கடந்து வந்து விட்டோம்.
ஜப்பான்மீதான அணுகுண்டு சோதனையை அது தந்த அழிவை மறந்து விட்டோம்,
கடந்த சில வருடங்களில் வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர்களையும் அழிவுகளையும் மறந்தே போய்விட்டோம், இத்தனைக்கும் மேல் நம் இன மக்களின் மேல் கொண்ட வெறுப்பால் இலங்கை இன படுகொலையையும் அதற்கு துணை நின்ற பேரினவாதங்களையும் மறந்தே போனோம்,...!?
இதோ இன்றைய தினத்தில் சிரியா....!?
இந்தப்பின்னணிகளிலிருந்துதான் கமலாலயனின் எழுத்தில் "
"உனக்குப்படிக்கத்தெரியாது" என்ற நூலை மெல்பன் வாசகர் வட்டம் அண்மையில்
ஆய்வுசெய்தது.
இந்த நூலின் நாயகி மேரி பெத்யூன், கல்வியின் மூலம் தன் இனம் முற்றிலும் விடுதலை அடையும் என நம்பினார் செய்தும் காட்டினார்.
ஆனால் கோடிக்கணக்கான தன் இன மக்கள் இறந்து பின் அடிமையாய் வாழ்ந்து
அதன்பின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று பின்னாளில் கருப்பின மக்களும் அமெரிக்காவின் வெள்ளைச்சிந்தனையை தலையிலேற்றி அமெரிக்காவின் பூர்வ
குடிகளை கொன்றழித்தது துரதிஷ்டமே!
"உனக்கு படிக்க தெரியாது" கமலாலயன் எழுத்துக்களில் வாசல் வெளியீடாக வந்துள்ளது. இந்தப் புத்தகம் வாசகனுக்கு பல சிந்தனை வாசல்களை திறக்கவே செய்கிறது.
எளிய கிராமத்தில் பிறந்து பருத்திக்காட்டில் வளர்ந்து தம் பண்ணை முதலாளியின் பகட்டான வீட்டில் ஆர்வம் கொண்டு அங்கிருந்த ஒரு புத்தகத்தை சிறுமி
மேரி பெத்யூன் தொட முயலும்போது அங்கிருந்த ஒரு வெள்ளையினப்பெண் தடுத்து, " அதனைத்
தொடாதே, உனக்கு படிக்க தெரியாது" எனும் வார்த்தையால் அவளைக்காயப்படுத்துகிறாள்.
அதே வார்த்தைகளினால் ஏற்பட்ட
வலியை புறம் ஒதுக்கி, உத்வேகம் கொண்டு தன் வறுமையையும் புறம் தள்ளி தனக்கான வாய்ப்புகளை வசமாக்கி கல்வி கற்று தன் இன மக்களின் உயர்வையும் வாழ்வையும் கல்வியால் சாத்தியமாக்கியவர் மேரி பெத்யூன்.
திருக்குறளின் பல குறள்களை அவர் கற்றிருப்பாரோ என வியக்கும் விதமாய்
இவரின் வாழ்வு குறளோடு பொருந்திப் போகிறது.
மேரி பெத்யூன் பல கேள்விகளை கேட்காமலேயே நம்முள் விதைத்துச் செல்கிறார்.
இன்றைய கல்வித் தந்தைகளை.... அவர்தம்(பண)சேவைகளை......
பல்வேறு கல்விக் கொள்கையால் உயிரிழக்கும் மாணவ, மாணவிகளை.....சரியான தகவல்களை, சரியான நேரத்தில் தராத ஊடகங்களை...... வெறுப்பினால் இன்றும் தொடரும் இனப் படுகொலைகளை......
அன்பான வாழ்வை கற்றுத்தராத கல்வியை...,
சமூகத்தை....இன்னும் பலவற்றை இந்த நூல் நினைவுபடுத்துகிறது. அத்துடன் அவரது வாழ்வின்
சித்திரிப்பின் ஊடாக எமக்கும் வழிகாண்பிக்கிறது. மேரிபெத்யுனின் வாழ்க்கைச்சரிதம்
மூலம் பாடம் கற்போம்.
இந்த வாய்பினை வழங்கிய மெல்பன் வாசகர் வட்டத்திற்கும் இதனை ஒழுங்கு செய்த
சிவக்குமார் தம்பதியருக்கும் நிகழ்வில் பங்கேற்று நூல் பற்றிய தத்தமது
கருத்துக்களை பகிர்ந்துகொண்ட வாசகர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
--0--
No comments:
Post a Comment