விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி முள்ளிவாய்க்காலில் தேடுதல் வேட்டை
கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ரஷ்ய ரொசடம் அரச கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…!
யாழ். நூலகத்துக்கு பெறுமதி மிக்க அன்பளிப்பு
இந்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஜனாதிபதியை சந்தித்தார்
இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கை விஜயம்
விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி முள்ளிவாய்க்காலில் தேடுதல் வேட்டை
17/01/2018 இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலை புலிகளால்
புதைக்கபட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி, தேடுதல் நடவடிக்கை ஒன்று
இன்றையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில்
முன்னெடுக்கப்பட்டது.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படையினரின் பங்குபற்றலுடன் முல்லைத்தீவு
மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை
நடைபெற்றது.
இறுதிவரை இடம்பெற்ற அகழ்வில் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டது. நன்றி வீரகேசரி
கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
17/01/2018 கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் ஆறு அம்சக் கோரிகைகளை
முன்வைத்து இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றில் நடைபெற்ற கவனயீர்ப்பு
போராட்டத்தில் நூற்றுக் கணக்கான கல்விசார ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவை 5 வருடத்திற்குள் 100 சதவீதமாக
அதிகரிப்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை 2018 ஜனவரி
மாதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டியிருப்பினும் இது
தொடர்பான சுற்று நிரூபம் இதுவரை வெளியிடப்படவில்லை.

2017 ஜூன் மாதம் 15 ஆம் திகதி மானியங்கள் ஆணைக்குழு சுற்றுநிருபம்
13/017 மூலம் ஒரு சாராருக்கு மாத்திரம் 15 சதவீதம் கொடுப்பனவு
வழங்கப்பட்டதுடன் அக் கொடுப்பனவானது இதுவரையிலும் கல்விசாரா
ஊழியர்குழுவினருக்கு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்காமை.

கொடுப்பனவு 2016.01.01 மீள்சீர்திருத்தம் செய்யப்பட்டு வழங்க
நடவடிக்கையெடுக்காமை. நிறுத்தப்பட்டிருந்த மொழி திறன் கொடுப்பனவை மீண்டும்
வழங்க இதுவரையில் நடவடிக்கையெடுக்காமை.

பல்கலைக்கழக அமைப்புக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்ட சொத்துக்கள் கடன்
திட்டத்தில் பாதி அளவிலான கடனை வழங்கல் என்ற நியதியை நீக்கி சகல
ஊழியர்களுக்கும் அதிகபட்ச கடன் தொகையாக இரண்டு மில்லியன் வழங்கல்.
சுகல பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் திறன் மிக்க வைத்திய
காப்புறுதித்திட்டம், ஓய்வூதியத்திட்டம் அமைப்பதற்கான பயன் தரக்கூடிய
செயற்றிட்டமொன்றினை இதுவரை நடைமுறையில் இல்லைநடைமுறைப்படுத்த வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சொத்துக் கடன் தொகையை
அதிகரி, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரே கல்விசாரா ஊழியர்களை
புறந்தள்ளாதே, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவே ஆட்சேர்ப்பு
திருத்தலின் போது எம்மையும் உள்வாங்கு, பல்கலைக் கழக ஊழியர்களுக்கான
காப்புறுதித் திட்டம் எங்கே, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவே சிறந்த
ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்து, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவே
நலன்மிக்க காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்து, ஊழியர்களின் மாதாந்தக்
கொடுப்பனவு அதிகரிப்பு எங்கே? ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவை 20
சதவீதத்தினால் அதிகரி போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஏந்திய
கோசங்களையெழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நன்றி வீரகேசரி
ரஷ்ய ரொசடம் அரச கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…!
17/01/2018 இலங்கை வந்திருக்கும் ரஷ்ய ரொசடம் அரச கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள்
இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேனவை சந்தித்தனர்.

ரொசடம் நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் நிகொலாய் ஸ்பாஸ்கி
உள்ளிட்ட 5 பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கையின்
விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத் துறையின் முன்னேற்றத்திற்கு
புலமைப்பரிசில்களை வழங்குதல் மற்றும் மின்சக்தி, கைத்தொழில், விவசாயம்
போன்ற பல துறைகளில் இருநாடுகளுக்கிடையில் கூட்டுறவை மேம்படுத்தும்
நோக்குடன் இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.
மின்சக்தி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆய்வு அமைச்சுகளுடன் இணைந்து
இதற்காக நீண்டகால, குறுங்கால நிகழ்ச்சித் திட்டங்களை தயாரிப்பது குறித்தும்
இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்துவரும் உறவுகளை
நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ரஷ்யா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும்
உதவிகளை பாராட்டினார்.
குறிப்பாக அண்மையில் தேயிலை ஏற்றுமதி தொடர்பில் எழுந்த பிரச்சினையை
உடனடியாக தீர்த்து இலங்கை நாட்டிற்கும் மக்களுக்கும் வழங்கிய இதய பூர்வமான
ஒத்துழைப்பு குறித்து ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினுக்கு ஜனாதிபதி தனது
விசேட நன்றியைத் தெரிவித்தார்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெடரி ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். நன்றி வீரகேசரி
யாழ். நூலகத்துக்கு பெறுமதி மிக்க அன்பளிப்பு
16/01/2018 யாழ். பொது நூலகத்துக்கு ஒரு இலட்சம் புத்தகங்களை
அன்பளிப்புச் செய்யும் முயற்சியில் 40 ஆயிரம் புத்தகங்களைத்
திரட்டியிருப்பதாக தமிழகம் தெரிவித்துள்ளது.

90 ஆயிரம் அரிய வகைப் புத்தகங்கள் மற்றும் ஓலைச் சுவடிகள் அடங்கிய யாழ்
பொது நூலகம் 1981ஆம் ஆண்டு விஷமிகளால் எரிக்கப்பட்டது. சர்வதேச
புத்திஜீவிகளையும் கல்வியியலாளர்களையும் கடும் கவலைக்குள்ளாக்கியிருந்தது
இச்சம்பவம்.
யுத்தத்தின் பின் மீண்டும் நூலகம் திருத்தியமைக்கப்பட்டாலும் அதில் உள்ள நூல்களின் வகைகளும் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றன.
இந்த நிலையில், யாழ். பொது நூலகத்துக்கு ஒரு இலட்சம் புத்தகங்களைத்
திரட்டித் தரும் முயற்சியில் தமிழகத்தின் நூலகங்களின் இயக்குனரகம்
இறங்கியுள்ளது.
தமிழகமெங்கிலும் இருந்தும் நூலகங்கள், பதிப்பகங்கள், புத்தக விற்பனை
நிலையங்கள் மற்றும் நலன்விரும்பிகளிடமிருந்து இதுவரை 40 ஆயிரம்
புத்தகங்களைச் சேகரித்திருப்பதாக இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில்
பங்கேற்றுள்ள பதிப்பகங்களிடமும் புதிய தலைப்புகளிலான புத்தகங்களைத்
தந்துதவுமாறும் இயக்குனரகம் கேட்டுள்ளது.
முன்னதாக, இரண்டு தொகுதிகளாகப் புத்தகங்களை அனுப்பத்
திட்டமிடப்பட்டிருந்தபோதும் தற்போது ஒரே தொகுதியில் புத்தகங்களை
அனுப்பவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பெப்ரவரி மாதமளவில் யாழ். நூலகத்துக்கு குறித்த புத்தகங்கள் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
இந்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஜனாதிபதியை சந்தித்தார்
16/01/2018 இந்தியாவின் பீகார் பிராந்தியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள்
பிரதிநிதியும் சட்டத்தரணியுமான ரவி சங்கர் பிரசாத் இந்திய நன்கொடை
செயற்திட்டத்தை நெறியாள்கை செய்வதுடன், சகல பிரஜைகளுக்கும் கணனி
மயப்படுத்தப்பட்ட அடையாளத்தினைப் பெற்றுக்கொடுக்கவும் அதனூடாக சகல சமூக
கொடுப்பனவுகளை வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையிலும் தகவல் தொடர்பாடல் துறையில்
ஏற்பட்டுள்ள மேம்பாட்டினை பாராட்டிய இந்திய அமைச்சர், இன்று இந்தியாவில்
சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக தகவல் தொழில்நுட்பம் உபயோகிக்கப்படும்
முறை தொடர்பாகவும் விரிவாக தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம் துறையில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையே
காணப்படும் தொடர்புகளை மேலும் விருத்தி செய்வதற்கான தேவைப்பாடுகள் குறித்து
இதன்போது ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தியதையடுத்து, அதற்கான சகல
ஒத்துழைப்புகளையும் தாம் பெற்றுத்தருவதாக இந்திய அமைச்சர் தெரிவித்தார்.

லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த உரை நிகழ்த்துவதற்காக ரவி சங்கர்
பிரசாத் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான
தகவல் தொழில்நுட்பத் துறையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று இன்று
முற்பகல் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள்
அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
ஜனாதிபதி அவர்களுடனான இன்றைய சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துவும் கலந்துகொண்டார். நன்றி வீரகேசரி
இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கை விஜயம்
15/01/2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று இந்தோனேஷிய ஜனாதிபதி
யோக்கோ விடோடோ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

இந்தோனேஷிய ஜனாதிபதி எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இருதரப்பு
பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment