11 பேரை காவுகொண்ட யாழ் விபத்து : 'தமிழர்கள் எம்மீது வெறுப்பாக இருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் தமிழ் மக்களே எமக்கு பூரண உதவிகளை வழங்கினார்கள்' : கண்ணீருடன் தெரிவித்த உறவுகள்
தென்னிந்தியாவிலிருந்து வடக்கிற்கு புதிய கப்பல் சேவை...!
கிளிநொச்சியில் மாணவி ஒருவர் தீ மூட்டி தற்கொலை
செட்டிகுளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒலிப்பதிவு : மஹிந்தவுக்கு அறிவுரை கூறும் லசந்த விக்கிரமதுங்க : இரவில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் வெளியானது
வவுனியா பொதுப்பூங்கா புதுப்பொலிவுடன் இன்று திறந்துவைப்பு.!
பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு.!
யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை : 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.!
11 பேரை காவுகொண்ட யாழ் விபத்து : 'தமிழர்கள் எம்மீது வெறுப்பாக இருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் தமிழ் மக்களே எமக்கு பூரண உதவிகளை வழங்கினார்கள்' : கண்ணீருடன் தெரிவித்த உறவுகள்
19/12/2016 யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் சிக்கிய எமது உறவுகளை தமிழ் மக்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு சகல உதவிகளையும் செய்தனர். சிங்களவர்கள் மீது வெறுப்பாக இருப்பார்கள் என நினைத்துகொண்டிருந்த நிலையில் விபத்தில் தமிழ் மக்களே எமக்கு பூரண உதவிகளை வழங்கினார்கள் என விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

விபத்து சம்பவத்தையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நேற்று அதிகாலை முதல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த நிலையில் அவர்களுக்கான தங்குமிடம் உணவு ஏற்பாடுகள் போன்ற அவர்களது அனைத்து தேவைகள் தொடர்பான ஏற்பாடுகளையும் யாழ்.போதனா வைத்தியசாலையினர் ஏற்பாடு செய்திருந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை விபத்து சம்பவம் இடம்பெற்ற போது இன பேதங்களை மறந்து காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு உதவிய யாழ்.மக்களுக்கு உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இது தொடர்பாக இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிலர் தெரிவிக்கையில் தமிழர்கள் எம்மீது வெறுப்பாக உள்ளார்கள்,
என நினைத்துகொண்டிருந்த நிலையில் இவ் விபத்தில் தமிழ் மக்களே எமக்கு பூரண உதவிகளை வழங்கியிருந்தார்கள். எமது இறந்த உறவுகளையும் காயமடைந்தவர்களையும் உடனடியாகவே வாகனத்தில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் எனைய உதவிகளை செய்வதற்கும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.
அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினரும் தங்குமிட உணவு ஏற்பாடுகளை வழங்கியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் இவர்கள் எமக்கு வழங்கிய உதவிகளை சாகும் வரையில் மறக்க மாட்டோம் என்று நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
நெஞ்சு, வயிறு பகுதிகளில் பலமாக அடி பட்டதே மரணத்திற்கான காரணம்..
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான பதினொரு பேரினதும் சடலங் கள் யாழ்ப்பாணத்தில் இருந்து விசேட வானூர்தி மூலம் நேற்று களுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
மேலும் குறித்த பதினொரு பேருக்கும் நெஞ்சு, வயிறு ஆகிய பகுதிகள் உள்ளடங்கலாக உடலின் பல பாகங்களிலும் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கான காரணம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் களுத்துறையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளது வாகனமும் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து
சபைக்கு சொந்தமான பஸ்ஸ{ம் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட கோர விபத்து சம்பவத்தில் வேனில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்துபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் வேனில் பயணித்த இருவரும் மற்றும் பஸ்ஸில் பயணித்த நால்வருமாக ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களில் ஒருவரான குறித்த வேனில் பயணித்த பதினொராவது நபரும் சிகிச்சை பலனின்றி அன்று மாலை உயிரிழந்திருந்தார்.
இதன்படி களுதாவில மாத்தளையைச் சேர்ந்த சுஜீத் பிரசன்ன சில்வா (வயது 37), பத்தரகாமத்தைச் சேர்ந்த உப்புல் இந்திரரட்ன (வயது 55), கல்தோட்டையைச் சேர்ந்த சுமனாவதி (வயது 65), ஜெயரட்ண (வயது 75), மாதம்பேயைச் சேர்ந்த குணசேன (வயது 58), குணரட்ன (வயது 52), நந்தாவதி (வயது 67), லீலாவதி (வயது 59), சந்திராவதி (வயது 60) லகுறு மதுசங்க (வயது 23), தயாவதி (வயது 54), ஆகியோரே இவ் விபத்தில் உயிரிழந்தவர்களாவர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சாவகச்சேரி பதில் நீதிவான் எஸ்.கணபதிபிள்ளை நேரில் சென்று மரண விசாரனைகளை மேற்கொண்டிருந்தார். சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் மேற்கொண்டிருந்தார்.
இதன்படி குறித்த மரணம் ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி தெரிவிக்கையில், அனைவரது உடலிலும் நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் பலமான காயம் ஏற்பட்டிருந்தன. அத்துடன் உடலில் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்டிருந்த காயங்களே மரணத்திற்கான காரணமாகும். குறிப்பாக உயிரிழந்தவர்களது உடலில் உள்ள காயங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது விபத்து இடம்பெற்று சிறிது நேரத்திலேயே உயிரிழந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பதினொரு சடலங்களில் மாத்தளை பகுதியை சேர்ந்தவரின் சடலம் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதுடன் ஏனைய பத்து பேரின் சடலங்களும் இலங்கை விமான படையினர் மற்றும் தரைப்படையினரின் ஒத்துழைப்புடன் விஷேட வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து களுத்துறை மாதம்பை மற்றும் ஏனையோரது இடங்களுக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன. நன்றி வீரகேசரி
தென்னிந்தியாவிலிருந்து வடக்கிற்கு புதிய கப்பல் சேவை...!
19/12/2016 வடக்கிலிருந்து தென்னிந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவையை தொடர்வதற்கு 32 வருடங்களின் பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள திருவாதிரை உற்சவத்திற்கு வடக்கிலுள்ள பக்தர்களும் தென்னிந்திய வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இவ்வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
குறித்த பயணிகள் படகு சேவையானது ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி 12 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
இப்பயணமானது சிவசேனா இந்து அமைப்பின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதோடு, குறித்த பயணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டாயிரம் யாத்திரிகள் பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகண ஆளுனரிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கிணங்க ஆளுனரினால் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படையின் அனுமதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதோடு. பயண சேவையானது காங்கேசன் துறையிலிருந்து தென்னிந்திய வணக்கஸ்தலத்திற்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இப்பயண சேவைகளை தொடர்வதற்கு எதிர்கால சந்தை நிலைகள் மற்றும் குடியகழ்வு மற்றும் குடிவரவு திணைக்கள விடயங்களை கருத்திற்கொண்டு நல்லெண்ண போக்கில் எதிர்காலத்தில் இத்திட்டத்தை தொடர முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
கிளிநொச்சியில் மாணவி ஒருவர் தீ மூட்டி தற்கொலை
21/12/2016 கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்துள்ளாா்.
இச் சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது என உறவினா்கள் தெரிவிக்கின்றனா். தனக்குதானே தீ மூட்டியுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கனகாம்பிகைகுளத்தைச் சோ்ந்த கிருஸ்ணகுமாா் வா்னுஜா வயது 17 எனும் மாணவியே இவ்வாறு இறந்துள்ளாா். குறித்த மாணவியின் தந்தை இறுதி யுத்த காலத்தில் இறந்துள்ள நிலையில் தாய் உயா்தரம் கற்கும் மாணவியை யாழ்ப்பாணத்தில் படிப்பித்து வந்துள்ளாா்.
சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா். நன்றி வீரகேசரி
செட்டிகுளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
21/12/2016 வவுனியா வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை சந்தை கடைத்தொகுதி வழங்குவதற்கான கேள்வி கோரலை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி பொதுமக்கள் இன்று காலை 9மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபையினால் நெல்சிப் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சந்தைக்கட்டிடத் தொகுதிக்கான மாவட்ட மட்ட கேள்வி கோரலை உடனடியாக இரத்தச் செய்து பிரதேச எல்லைக்குள் வழங்கக்கோரி செட்டிகுளம் பிரதேச வாழ் மக்கள் இக் கவனயீர்ப்பப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளுர் வியாபாரிகளின் வயற்றில் அடிக்காதே, செட்டிகுளம் பிரதேச சபை அதிகாரிகளே எமது பிரதேச கடைத் தொகுதியை எமது பிரதேச மக்களுக்கு வழங்கு என பல்வேறு வசனங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ப. சத்தியசீலன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
செட்டிகுளம் பிரதேச சபையின் ஆட்சி எல்லைக்குள் அமைக்கப்பட்ட இந்தச் சந்தைத் தொகுதியானது வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையாலே அதற்கான கேள்வி மனுக்கோரப்பட்டிருந்தது. அது மாவட்ட மட்டத்தில் கோரப்பட்டுள்ளமையால் செட்டிகுளம் பிரதேச சபை எல்லைப் பரப்பிற்குள் வாழுகின்ற இந்த பொதுமக்கள் அல்லது வியாபாரிகள் இதனால் பாதிக்கபட்டிருக்கின்றார்கள். செட்டிகுளம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் இவ்விடயத்தை வடமாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
இதனையடுத்து, இது தொடர்பாக இன்று காலை வடமாகாண முதலமைச்சரும் உள்ளுராட்சி அமைச்சருமாகிய சி. வி. விக்கினேஸ்வரனுடன் வடமாகாண சுகாதார அமைச்சர் கலந்துரையாடியபோது, தற்போது கோரப்பட்டுள்ள கேள்வி மனுக்கோரலை உடனடியாக இரத்துச் செய்வதாகவும் புதிதாக பிரதேச மட்டத்தில் இந்தக் கேள்வி மனுக்கோரலை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இறுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளரிடம் வட மாகாண சுகாதார அமைச்சருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். நன்றி வீரகேசரி
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒலிப்பதிவு : மஹிந்தவுக்கு அறிவுரை கூறும் லசந்த விக்கிரமதுங்க : இரவில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் வெளியானது
21/12/2016 படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு ஒன்று தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லசந்த விக்கிரமதுங்க இலங்கை அரசுக்கெதிராகவும் பல அரசியல்வாதிகள் தொடர்பாகவும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் மிக நீண்டகாலமாக மிகக் கடுமையான கட்டுரைகளை "சண்டே லீடர்', மோர்னிங் லீடர் மற்றும் ஞாயிறு சிங்களப் பத்திரிகையான "இருதின' ஆகியற்றில் வெளியிட்டு வந்ததால் இவர் பல ஆண்டுகளாக்க தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வந்திருந்தார்.
இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தெஹிவளை, அத்திட்டய பேக்கரி சந்தியில் வைத்து லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலை இடம்பெற்று 8 வருடங்கள் கடந்த பின்னர், இவ்வாறானதொரு ஒலிப்பதிவு அம்பலமாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த உரையாடல் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக இருவருக்கும் இடையிலான உரையாடல் மூலம் தெரியவருகின்றது.
லசந்த விக்கிரமதுங்க - மஹிந்த ராஜபக்ஷ இடையிலான தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு பின்வருமாறு,
மஹிந்த : ஹலோ
லசந்த : ஹலோ… ஆ எப்படி..? என்ன நடக்குது.?
மஹிந்த : ஒன்றும் இல்லை… இப்போ பிரச்சினை முடிந்து விட்டது தானே..?
லசந்த : இதற்கு பின்னார் என்ன நடக்கும்.?
மஹிந்த : இப்போது இது இவ்வாறே முன்னோக்கி செயற்படும். இதன் பின்னர் என்ன நடக்கும் என்பதே இனி தான் பார்க்க வேண்டும்.
லசந்த : வடமத்திய மாகாணத்துக்கான தேர்தல் எப்போது நடக்கும்?
மஹிந்த : இன்னும் முடிவு செய்யவில்லை. பணமும் தேவை தானே. பணமும் தேடி கொடுக்க வேண்டும் தானே.
லசந்த : நாட்டில் பொருளாதார பிரச்சினை தலை தூக்கியுள்ளது. அதற்கு தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும். இன்று எண்ணெயின் விலை 120க்கு போய் உள்ளது. இன்னும் ஒரிரு மாதங்களில் 150 ஆக அதிகரிக்கும்.
மஹிந்த : இது 200க்கு செல்லும். இதனால் வரி அறவிட முடியாது உள்ளது.
லசந்த : கிராம புறங்களில் மக்கள் விவசாயத்தில் ஈடுப்படுவதனால் பரவாயில்லை. நகரங்களில் வாழும் மக்களின் பொருளாதார நிலை பாதிக்கக்கூடும். இதேவேளை தொழிற்சாலைகளின் நிலை மேலும் பாதிக்கக்கூடும். எண்ணெய் விலை அதிகரிக்கும் போது மின்சாரம் என்பனவற்றின் விலை அதிகரிக்கும் தானே
மஹிந்த : ம்ம்ம்…
லசந்த : இன்னொரு பக்கத்தை சொல்ல வேண்டும். அது உங்களுக்கு பிடிக்குமோ தெரியவில்லை. அடிமட்ட பிரதேசங்களையும் கொஞ்சம் கவனியுங்கள். உங்களுக்கு உதவிய ஒருவருக்கு அவர் சாகும் வரை நீங்கள் பாதுகாப்பு கொடுப்பீர்கள். அது உங்களுடைய ஒரு நல்ல குணம். ஆனால், ஜனாதிபதி என்ற வகையில் அவர்களை விலகி இருக்க சொல்லுங்கள்.
மஹிந்த : எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. நான் சிலரை வெளிப்படையாக சொல்வதும் உண்டு. ஆனால் அவர்கள் கேட்பதில்லை.
லசந்த : அவர்களின் பதவியை அவ்வாறே வைத்துக் கொண்டு ஒதுங்கியிருக்குமாறு சொல்லலாம் தானே.?
மஹிந்த : இது தொடர்பாக முறைப்பாடு செய்ய வேண்டாம்.
லசந்த : நாங்கள் கேள்வி தொடுத்து இருந்தோம். ஒரு வருடத்துக்கு முன்னர், அது குறித்து எழுதியிருந்தேன்
மஹிந்த : அவர் எல்லா வேளையும் தெரியாமல் முடித்துள்ளார்.
லசந்த : லலிதா
மஹிந்த : இருக்கலாம். இல்லை வேறு யாராவது… இன்னும் அவர் வெளிநாட்டில்
லசந்த : எல்லாத்தையும் எழுதினால் பிரச்சினை. பல்வேறு வழிகளில் செய்தி அனுப்பினோம் ஆனால் அவர் கண்டுக்கொள்ளவில்லை. இதை சொல்ல வேண்டாம். அவர் இதனை வேறு விதமாக நினைத்துள்ளார்.
மேலும், சரத் பொன்சேகா, தவறான பிரசாரமொன்றை மேற்கொண்டு வருகின்றார். எனக்கு பெயர் குறிப்பிடாத நபரொருவர் தகவல் அனுப்பியிருந்தார். எனினும் தகவல் வழங்கியது, இராணுவத்தினர் அல்ல
மஹிந்த : நான் கேட்டும் அவர் சொல்லவில்லை.
லசந்த : நான் இதற்கு முன்னர் எழுதியுள்ளேன்.
மஹிந்த : ஒலி தடை செய்யப்பட்டுள்ளது
லசந்த : ஒலி தடை செய்யப்பட்டுள்ளது
மஹிந்த : எமக்கு ஒவ்வொரு நிறுவனத்திற்கும்
லசந்த : எழுத முன்னர் சொல்லும் போது எதுவும் சொல்ல வில்லை. ஆனால் எழுதிய பின்னர் பல கேள்வியை எழுப்பினர். எல்லா வேளைகளிலும் என்னால் அவரோடு தொடர்பு கொண்டு கேட்க முடியாது. சில வேளைகளில் மற்றைய ஊடகவியாலலரை தொடர்பு கொள்ள சொல்வேன்.
மஹிந்த : நீங்கள் பேசினால் பதில் சொல்வார். இவ்வாறு சொல்வதால் எமக்கும் நன்று.
லசந்த : ஒலி தடை செய்யப்பட்டுள்ளது
மஹிந்த : சபாபதி பெரிய வர்த்தகர் ஆச்சே
லசந்த : ரணில் ஆட்சியில் இருந்த போதிலும் நாம் எழுதினோம். ஒருவரை உதாரணமாக சொன்னால் மற்றவர்கள் திருந்துவார்கள் தானே.
மஹிந்த : முதலில் ஒரு சின்ன நபரை பிடித்து தாங்க. இதனை எழுத வேண்டாம். நாம் சந்தித்து கலந்துரையாடுவோமா.?
லசந்த : ஆம். சந்திந்து கலந்துரையாடுவோம்.
மஹிந்த : அது சிறைச்சாலை மாதிரி தான்
லசந்த : அரசியலை ஒரு பக்கமாக வைத்து விட்டு இதை செய்து முடியுங்கள்.
மஹிந்த : நான் தயார். இதை முடிஞ்ச பிறகு…. சந்திரிக்கா மாதிரி தொங்கிக் கொண்டு இருக்க மாட்டேன்.
லசந்த : நாட்டுக்கு எந்த வகையிலாவது நல்லது செய்யவேண்டும். இரு தரப்பும் இணைந்து அரசியல் கோபதாபங்களைவிட்டு இணைந்து செயற்பட வேண்டும்.
மஹிந்த : ம்ம்
லசந்த : நன்றி. இரவு வணக்கம்
மஹிந்த : நன்றி.
மேலும், இந்த ஒலிநாடாவில் மஹிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்ததாக கூறுவதும் பதிவாகியுள்ளது.
இவ்விருவரின் கலந்துரையாடலை, யார் பதிவு செய்தார்கள் என்பது தெரியாதுள்ள நிலையில், அதைப் பதிவு செய்தவர், அந்த ஒலிப்பதிவை செம்மைப்படுத்தியுள்ளமை தெளிவாகிறது.
இதேவேளை, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவுத் தலைவர் ரொஹான் வெலிவிட்ட, இந்த ஒலிப்பதிவு தொடர்பான உண்மைத்தன்மை குறித்து கண்டறிவது அவசியம் என தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
வவுனியா பொதுப்பூங்கா புதுப்பொலிவுடன் இன்று திறந்துவைப்பு.!

நீண்டகாலமாக இப்புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வந்ததுடன் அனைத்து வேலைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு இன்று பிற்பகல் 3 மணிக்கு பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. வவுனியா நகரசபைச் செயலாளர் தலைமையில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரும் நெல்சிப் திட்டப்பணிப்பாளருமான பொ. குகநாதன் மற்றும் உலக வங்கி உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
வவுனியா நகரசபை, நெல்சிப் திட்டம் என்பன இணைந்து சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் பொதுப் பூங்கா புனர் நிர்மானம் செய்துவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது நன்றி வீரகேசரி
பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு.!
28/12/2016 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன் முன்னிலையில் இன்று இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை : 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.!
30/12/2016 யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று (16) பிறப்பித்துள்ளது.

குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனம் பாதையை விட்டு விலகியமை காரணமாகவே மாணவர்கள் உயிரிழந்தார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னர், மரணமடைந்த மாணவர்களின் பிரேத பரிசோதனைகளில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து, குறித்த 5 பொலிஸ் அதிகாரிகளினதும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த படுகொலை சம்பவம் கடந்த மாதம் 20 ஆம் திகதி யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment