.

கவின் மிகுந்த காட்டுக் கன்னி அந்தக் குன்றைக் கட்டித் தழுவியபடி படுத்திருந்தாள் பல நாளாய்.
குன்றின் மேல், இயற்கையோடு இணைந்ததாய், இருப்பதே தெரியாமல் நின்றது, அந்த மரக் கோட்டை.
கோட்டைக்குள்ளே கொல்லியூர்க் கிழாரும் அவரது குடிகளும் வசித்தனர்.
கோட்டையின் ஓர் பக்கம் குட்டை மரங்கள் அடர்ந்த ஒரு வெளி, ஒரு நீண்ட மலைத் தொடரிலே போய் முடிந்தது. பனிப் புகார் உடுத்தி நின்ற மலையின் சரிவுகளில் நரமாமிச உண்ணிகளான பழங்குடியினர் வாழ்வதாக வதந்தி உலாவியது. மூர்க்க குணம் கொண்ட அவர்கள் ஓநாய்த் தோல்களை ஆடையாக அணிவார்களென்றும் அந்தத் தோல்களின் தலைப் பகுதிகளைத் தமது தலைகள் மேல் போர்த்துக் கொள்வதால் இரண்டு கால் ஓநாய்கள் போலத் தோற்றம் அளிப்பார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் யாரும் அவர்களைக் கண்டதில்லை.
மலைத் தொடருக்கு இன்னும் பின்னால், தொடுவானத்தின் எல்லையில், தன்னந்தனியாக, நடு நாயகமாக, நின்றது நெடிய எரிமலை ஒன்று.
சிற்சில நேரங்களில், மலையை மூடியிருக்கும் கரு மேகங்களைக் கிழித்துக் கொண்டு சிவந்த நெருப்பின் சுவாலை ஒன்று மேலெழும். சுற்றியிருக்கும் மேகத் திரள்களுக்கு ஒரு கண நேரம் செங்குருதி நிறம் பூசி விட்டு மறையும். நிலம் நடுங்கும் படியான உறுமலொன்று புல்வெளிகளின் மேல் உருண்டு வரும். மற்ற நேரங்களில் கரிய கனவுகளுடன் மலை துயின்றது.
கொல்லியூர்க் கிழாருக்கு இரண்டு ஆண்மக்கள். மூத்தவன் ஓரி, வீரமும் தயாளமும் நீதியும் உடையவன். தந்தைக்குப் பிறகு ஆள வேண்டியவன். தன்னைப் பற்றியும் தன் வம்சத்தைப் பற்றியும் பெருமை மிகவுடையவன். இளையவன் காரி, அண்ணனுக்குச் சளைக்காத வீரன். ஆனால் அடக்கமானவன்.
தினையும் வரகும் மாவும் மலைத்தேனும் காட்டுக் கரும்பும் கதலியும் குங்குமப் பூவும் அள்ளித் தந்த குறிஞ்சி நிலத்தின் வளத்தினை அனுபவித்து அமைதியுடன் வாழ்ந்தனர் கொல்லியூர்க் கிழாரின் குடிகள்.
மலைச் சரிவில் உருண்டு வரும் பெரும் பாறைகளைப் போல வருடங்கள் உருண்டன நிற்காமல்.
தூரத்து எரிமலையிலிருந்து கரும்புகை கிளம்பத் தொடங்கிற்று ஒருநாள். புகை மண்டலங்கள் பெரிய யானைக் கூட்டங்கள் போலத் திரண்டு சம வெளியின் மேலாக நீல வானத்தை மறைத்துக் கொண்டு மேலேறி வந்தன. சூரியன் முகத்தைப் புகைத் திரள்கள் மறைத்துக் கொள்ளப் பகலும் பாதி இரவாயிற்று. மப்பும் மந்தாரமுமாக வானம் பல நாள் இருக்கவே மனங்களும் சலிக்கலாயின.
கரும்புகைத் திரள்களுடன் சேர்ந்து வந்தது இன்னொரு பேரபாயம்.
கோட்டைச் சுவரின் மேல் நின்று பார்த்த காரி அதை முதலிற் கண்டான். கருமுகில்களால் இன்னும் கறுத்துக் கிடந்த மலைச் சரிவுகளில் நூற்றுக் கணக்கான வெளிச்சப் புள்ளிகள் தோன்றின. கொஞ்சம் கொஞ்சமாகச் சமவெளியை நோக்கி அவை இறங்கி வந்தன. பூம் பூம் என்ற காட்டுக் கொம்புகளின் ஒலி மெல்லிதாகக் கேட்டது. மலைகளில் வாழ்ந்த பயங்கரமான பழங்குடியினர் கிராமத்தை நோக்கித் திரண்டு வருகிறார்கள் என்று காரி புரிந்து கொண்டான். கோட்டைச் சுவரில் இருந்த யுத்த முரசை முழக்கினான்.
சில மணி நேரங்களில், ஊரிலிருந்த ஆயுதம் எடுக்கத் தெரிந்த ஆண்மக்கள் யாவரும், ஓரியின் தலைமையில் கோட்டை வாசலுக்கு முன்னால் இருந்த வெளியில் அணி வகுத்து நின்றனர். அவர்களில் பலர் மிக அதிகமான அல்லது மிகக் குறைவான பிறைகளைக் கண்டவர்களாய் இருந்தனர். கோட்டைக்குள் தற்காப்பு நிலையில் இருப்போம் என்ற காரியின் யோசனையை ஓரி ஏற்க மறுத்து மறுத்து விட்டான். வந்தவர்களை நேருக்கு நேர் நின்று அடித்துத் துரத்த வேண்டும் என்பது அவன் கொள்கை. முனைமுகத்தில் உருவிய வாளோடு அவன் நின்றான். அவன் நிலையில் திடம் இருந்தது. அவன் பின்னால் நின்ற பலரின் கைகள் நடுங்கின.
கறுத்துக் கிடந்த வானத்தின் கீழ் பல ஆயிரம் பந்தங்கள் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து முன்னேறி வந்தன. ஓநாய்த் தோல்களைக் கவசமாக அணிந்த காட்டு மனிதர்கள் பயங்கரமாக உறுமிய படி குதிரைகளில் ஏறியும் ஓடியும் மிகவேகமாக முன்னேறி வந்தார்கள். நிரைக்கு மேல் நிரையாக அவர்கள் வந்து ஓரியின் படையின் மேல் விழுந்தார்கள். பந்தங்களின் ஒளியில் அவர்கள் கைகளில் இருந்த விஷம் தடவிய கத்திகள் மின்னின. ஆயுதங்கள் மோதும்போது எழுகிற 'ஜணஜண ஜணார்' ஒலி எங்கும் நிறைந்தது.
ஓரியின் வாளும் காரியின் வாளும் பல ஓநாய்த் தலைகளை வெட்டி வீழ்த்தின. இருந்தும் சில மணி நேரங்களுக்கு மேல் எதிர்த்து நிற்க முடியவில்லை. மலைத் தொடரின் பக்கமிருந்து முடிவற்ற காட்டாற்று வெள்ளம் சமவெளியை மூழ்கடிக்கப் பாய்ந்து வருவதென மென்மேலும் காட்டு மனிதர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். வந்தவர்கள் சற்றும் தயங்காது களத்தில் புகுந்து மூர்க்கமாகத் தாக்கினார்கள். எதிர்த்து நின்று வீழ்ந்தவர்களைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்தார்கள். அவர்களது கர்ஜனை ரோமத்தைச் சிலிர்க்கச் செய்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஓரியின் சேனை பின்வாங்கியது. தப்ப முடிந்தவர்கள் எல்லாம் கோட்டைக்குள் புகுந்ததும் கோட்டைக்கதவு அடித்துச் சாத்தப் பட்டது.
கோட்டை வாசலின் மேல் மாடத்தில் நின்று, எதிரிகளை ஓரி கண்ணால் அளவிட்டான். அருகே காரி.
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பயங்கரக் காட்டு மனிதர்கள். இன்னும் சில நிமிடங்களில் கோட்டையைத் தாக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.
ஓரியின் பக்கத்திலோ, மிஞ்சிக் கோட்டைக்குள் வந்து சேர்ந்தவர்கள், சுமார் ஆயிரம் வீரர்கள் தான்.
ஓரியின் கண்களின் முன் கோட்டையின் முடிவு தெரிந்தது. யதார்த்தம் அவன் முகத்தில் அறைந்தது.
"தம்பி! இத்தனை ஆட்பலத்திற்கும், காட்டு மிராண்டித் தனத்திற்கும், உயிர்ப் பயமற்ற போர் வெறிக்கும் எதிராக மனிதன் என்ன செய்ய முடியும்?"
உறையிலிருந்து உருவப்பட்ட ஓரியின் வாள் தீப்பந்த ஒளியில் மின்னியது. ஒரு கண நேரத்தில் ஓரி அதைத் தன் வயிற்றிலே சொருகி இழுத்துக் கொள்ள...
"அண்ணா!! வேண்டாம்!!!" என்ற காரியின் குரல் தொண்டையைத் தாண்ட முதலே சுருண்டு விழுந்தான் ஓரி.
காரியும் தன் வாளை எடுத்தான், தொடர்வதற்கு.
விண்ணை நிமிர்ந்து பார்த்தான்.
மேகக் கூட்டங்கள் தற்செயலாக விலகிக் கொள்ள, ஒற்றை நட்சத்திரம் ஒன்று உயரத்தே ஒளிர்ந்தது.
"இதோ, ஒரு விண்மீன் வந்துவிட்டது" என்று நினைத்தான்.
இல்லை.
விண்மீன் எப்போதும் அங்கே தான் இருக்கிறது.
என்னால் சிலவேளை பார்க்க முடியாமல் இருக்கலாம்; அதற்காக விண்மீன் இல்லாமல் போய் விடாது.
விண்மீன் என்பது உயரத்தில் இருப்பது. கரு மேகம் ஒருநாளும் அதை எட்ட முடியாது.
கரு மேகங்கள் தற்காலிகமானவை. அவற்றால் விண்மீன்களை ஒரு பொழுதுக்கு மறைக்க முடியுமே தவிர, இல்லாமல் செய்ய முடியாது.
காட்டு மிராண்டித் தனம் மனிதத்தை நிரந்தரமாக வெல்ல முடியாது.
காரி தன் வாளை உறையில் போட்டான்.
"வீரர்களே, முடிந்த வரை எதிர்த்து நில்லுங்கள். நாளை என்னத்தைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது. " என்று கூவினான்.
இருண்ட வானம் பிளவுபடும் படி ஒரு மின்னல் மின்னியது. மின்னல் வெளிச்சத்தில் சமவெளியெங்கும் ஓநாய்த் தலைகள் தெரிந்தன. இடி முழங்கியது. கறுப்பு மழை ஒன்று ஆயிரம் சவுக்கடிகள் எனத் தரையை அறைந்தது.
மழைத் துளிகளுடன் போட்டியிட்டுக் கொண்டு ஆயிரக் கணக்கான அம்புகள் கோட்டைச் சுவரின் மேல் சீறி வந்தன. ஒரு பெரிய சமுத்திரம் புயலில் ஆஹ்லாதித்துப் பொங்கித் தரையை அறைவதென ஓநாய் மனிதர்கள் கோட்டையை நோக்கிப் பாய்ந்து வந்தனர்.
கோட்டைச் சுவரில் மறைந்திருந்த காரியின் வீரர்கள் தங்கள் அம்புகள் முழுவதையும் பிரயோகித்தனர். அவர்கள் அம்புகளால் தாக்கப் பட்டு ஆயிரக் கணக்கான ஓநாய் மனிதர்கள் மாண்டு விழுந்தனர். ஆனால், அவர்கள் இறந்த உடல்களின் மேல் ஏறிச், சற்றும் தயங்காமல், பைத்திய வெறியினால் உந்தப் பட்டவர்கள் போல, மற்றவர்கள் இன்னும் இன்னும் மேலே வந்தனர்.
இதோ! கோட்டை இன்னும் சற்று நேரத்தில் விழுந்து விடும். கோட்டை வீரர்களின் அம்புகள் தீர்ந்து விட்டன. பல இடங்களில் ஓநாய் மனிதர்கள் எதிர்ப்பை மீறி மதில் ஏறிக் குதிக்கத் தொடங்கி விட்டார்கள். கோட்டை வாசல் கதவைப் பெரிய மரக் குற்றிகளைக் கொண்டு வந்து உடைத்துத் தள்ளத் தொடங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் தான், அது நடந்தது.
ஓநாய் மனிதர்களின் தலைவன், தனது பெரிய சண்டைக் குதிரையில் ஏறிக் கோட்டை வாசலுக்கு வந்து, தனது வீரர்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தான். வாசல் மேல் மாடத்தில் நின்ற காரி தனது கடைசி அம்பை அவன்மேல் பிரயோகித்தான். அம்பு பாய்ந்தவன் குதிரையிலிருந்து சுருண்டு விழ, ஒரு கணநேரம் போர்க்களம் நிசப்தமாயிற்று.
"முன்னேறுங்கள், முன்னேறுங்கள்" என்று வலது புறமிருந்து கூவினான் ஒரு ஓநாய்த் தலையன்.
"நுழையுங்கள், நுழையுங்கள், கோட்டை நம் வசம்" என்று இடது புறமிருந்து கத்தினான் இன்னொரு ஓநாய்த் தலையன்.
ஆனால், ஓநாய் மனிதர்கள் முன்னேறவில்லை. பின்வாங்கினார்கள்! சமவெளியில் சற்றுத் தூரத்தில் சென்று வட்டமாகக் கூடினார்கள்.
காரிக்கு விடயம் புரியச் சற்று நேரமாயிற்று.
தலைமைத்துவப் போட்டி! தலைவன் விழுந்து விட்டதால், அடுத்ததாக யார் தலைவன் என்பதில் இருவருக்கிடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது!
ஓநாய் மனிதர்களின் வட்டத்தின் நடுவே இரு நிமிர்ந்த உருவங்கள் நின்றன. சற்று நேரம் தர்க்கித்தன. பிறகு வாள்களை உருவின!
இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம், ஓநாய் மனிதர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து சண்டையிடத் தொடங்கினார்கள்.
அவர்களின் சண்டையைப் பார்த்துக் கொண்டு நின்ற தன் வீரர்களை நோக்கிக் காரி கூவினான்.
"வீரர்களே! இந்த நேரத்தைப் பாவியுங்கள். உங்கள் அம்பறாத் துணிகளை நிரப்புங்கள். போருக்குத் தயாராகுங்கள். நமது இறுதிச் சந்தர்ப்பம் இது!!"
ஓநாய் மனிதர்களின் சண்டை முடிந்த போது , சண்டையைத் தொடங்கியவர்களில் பாதிப் பேர் கூட மிஞ்சி இருக்கவில்லை.
மிஞ்சி இருந்தவர்கள், புதிய தலைவனின் கீழ் வெறி கொண்டு ஓடி வந்தார்கள் கோட்டையை நோக்கி.
சுமார் மூவாயிரம் பேர் இருக்கலாம் என்று காரி கணித்தான்.
இவன் பக்கத்தில் எண்ணூறு பேருக்கு மேல் இல்லை.
வந்தவர்கள் மீது அம்பு மழை பெய்தான்.
ஒரு ஆயிரம் பேர் வீழ்ந்தார்கள்.
மிஞ்சியவர்கள் கோட்டைச் சுவர் மீது தாவி ஏறவும், வாசலைத் தகர்க்கவும் முயன்றார்கள்.
சற்று நேரத்தில் காரியின் வீரர்களில் மிஞ்சிய ஒரு ஐநூறு பேர், கோட்டைச் சுவர்களில் இருந்து பின்வாங்க வேண்டியதாயிற்று.
ஓநாய் மனிதர்கள் அவர்களைத் துரத்திக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.
காரியின் வீரர்கள் ஒவ்வொரு மரத்தின் பின்னிருந்தும் அம்பு விட்டார்கள். ஒவ்வொரு மூலையிலும் மடக்கி வெட்டி வீழ்த்தினார்கள். ஒவ்வொரு வீட்டுக் கூரையிலிருந்தும் உருட்டி விட்டார்கள். இருளையும் தங்களுக்குத் தெரிந்த மறைவிடங்களையும் முடிந்தவரை பயன்படுத்தித் தாக்கினார்கள்.
கடைசியில், கோட்டையின் உச்சியில், கொள்ளியூர்க் கிழாரின் வீட்டுக்கு முன்னால் இருந்த சிறிய வெளியில், காரியின் மிஞ்சிய வீரர்கள் முன்னூறு பேரும், ஓநாய் மனிதர்களில் மிஞ்சிய ஐநூறு பேரும் நேருக்கு நேர் சந்தித்தார்கள்.
மேகக் கூட்டங்கள் சற்றே விலகக், கிழக்கே எழுந்த சூரியனின் செங்கதிர்கள் அந்த வெளியில் விழுந்தன.
கதிரொளியில் மின்னிப் பிரகாசித்தது காரியின் வாள்.
ஒவ்வொரு வீச்சுக்கும் ஒவ்வொரு தலை உருண்டது.
காரியின் வீரர்கள் தங்கள் இறுதிப் பலத்தை உபயோகித்துப் போர் செய்தார்கள்.
ஓநாய்த் தலையர்களோ, சற்றும் எதிர் பாராத கடும் எதிர்ப்பாலும் களைப்பாலும் தளர்ந்தார்கள்.
பச்சைப் புல் வெளி ரத்தக் கடலாகவும் பின் பிணக் காடாகவும் மாறிய போது, போர்க்களத்தில் பத்துப் பேர் தான் மிஞ்சி நின்றார்கள். அவர்களில் ஓநாய்த் தலையன் எவனுமில்லை!
மிஞ்சி நின்றவர்களின் முன்னணியில், தன் வாளில் சாய்ந்து கொண்டு, களைப்பும், துயரமும், வெற்றிப் பெருமிதமும் முகத்தில் விளங்க, காரி நின்றான்.
வானத்தை நிமிர்ந்து பார்த்தான்.
கரு மேகங்கள் விலகிக் கொண்டிருந்தன.
விலகி வந்த மேகங்களுக்கு நடுவே அவன் மூத்தவனான ஓரியின் முகம் தெரிந்தது.
காரி நினைத்தான்.
"விலக்க முடியாத இருள் உலகத்தில் எதுவுமில்லை - மனதின் இருளைத் தவிர! அணையக் கூடாத விளக்கும் எதுவுமில்லை - நம்பிக்கை விளக்கைத் தவிர!"