மேலும் சில பக்கங்கள்

முடிவுறாத முகாரி வெளியீட்டு விழா - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

கடந்த 17 ம் திகதி (17.10.2015) சனிக்கிழமை செ.பாஸ்கரனின் “முடிவுறாத முகாரி என்ற கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா Homebush பாடசாலை மண்டபத்தில் நடை பெற்றது. இந்த விழாவிற்கு எமக்கெல்லாம் பழக்கப்பட்ட இளைஞன் கிருஷ்ணா சத்தியமூர்த்தி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வந்து வரவேற்றார். வழமையாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரும் கிருஷ்ணா அன்று தனது சித்தப்பா செ.பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழாவிற்கு தொகுப்பாளராக கடமையாற்றினார்.

விஜயாள் விஜேய், அபிஷா பூபாலசிங்கம், மகிஷா பூபாலசிங்கம் ஆகிய மூன்று பெண் பிள்ளைகள் அழகாக தமிழ்மொழி வாழ்த்தும் அவுஸ்ரேலிய தேசிய கீதமும் இசைத்தார்கள் 

திரு திருநந்தகுமார் தலைமையில் அரங்கம் ஆரம்பமானது மண்டபம் நிறைந்த கூட்டம். மேடைப் பேச்சாளரான திருநந்தகுமார் தனகிட்ட பணியை அழகாக திறமையாக கையாள்பவர். அன்றும் தனக்கும் திரு செ.பாஸ்கரனுக்கும் உள்ள உறவைக் கூறி பன்முகம் கொண்ட பாஸ்கரன் ஒரு கவிஞர் நாடக இயக்குனர் நடிகர் பத்திரிகையாளர் வானொலி தயாரிப்பாளர் அறிவிப்பாளர் என்று பாஸ்கரனைப் பற்றி கூறி விழாவை ஆரம்பித்தார்.



 அபிஷா பூபாலசிங்கம், மகிஷா பூபாலசிங்கம் விஜயாள் விஜேய்,


திரு.கிருஷ்ணா சத்தியமூர்த்தி 
வாழ்த்துரை வழங்க வந்திருந்தவர் ஈழத்து பிரபல கவிஞரான அம்பி என அழை க்கப்படும் திரு அம்பிகைபாலன் அவர்கள். குரல் சற்று வெளிவர மறுத்தாலும் சக்கர நாற்காலியில் மிடுக்காக அமர்ந்திருந்தார் அம்பி அவர்கள். அவர் வழங்கிய ஆசிஉரையை கேட்டபோது பாஸ்கரனில் அவர் எவ்வளவு பாசமும் மதிப்பும் கொண்டுள்ளார் என அறியக்கூடியதாக இருந்தது.

ஆழியாள் என்ற பிரபலமான கவிஞர் மதுபாஷினி அவர்கள் கவிதை நூலினை அறிமுகம் செய்ய வந்திருந்தார். பெரிய கவிஞரான அவர் பிறிதொரு கவிஞரை எவ்வாறு நோக்குகிறார் என அவரது உரையைக் கேட்க ஆர்வமானேன். அவர் ஆழமாக அழகு சொற்களால் குறுக கருத்தைக் கூறும் கவிதை பற்றியும் பாஸ்கரனின் கவிதைகள் என்னென்ன சிறப்போடு அமைந்துள்ளது என்ற ஆழ்ந்த ஞானத்துடன் பல விடயங்களைக் கூறினார்.


கவிஞர் ஆழியாள் 

ஆழியாளைப் பற்றி  திருநந்தகுமார் கூறும்போது ஆங்கில இலக்கியம் கற்றவர் பேசும்போது அவர்கள் பார்வை மற்றவரில் இருந்து தனிப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.


நூலை வெளியிட்டு வைக்க திருமதி மதுரா மகாதேவ் அவர்கள் வந்திருந்தார். இந்நூலை வெளியிட்டிருக்கும் தமிமுரசுஅவுஸ்ரேலியா வாராந்த பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான மதுரா மகாதேவ் முதல் பிரதியை வெளியிட்டு வைக்க அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

“கவிதைகள் நூல்உருப் பெற்றால்தான் கவிஞன் என்ற அங்கீகாரம் பெறலாம் ஆகவே கவிதை நூலை வெளியிடுங்கள் என பாஸ்கரனை அடிக்கடி தூண்டிய முதியவரும் கவிஞரும் எழுத்தாளருமான அம்பி அவர்களுக்கு கவிஞர் செ.பாஸ்கரன் முதல் பிரதியை வழங்க அம்பி அதைப் பெற்றுக்கொண்டார்.


பாஸ்கரன் ,கவிஞர் அம்பி, மதுரா 




















சிறப்புப் பிரதியை வழங்க இருவர் அழைக்கப்பட்டார்கள் ஒருவர் திரு மு.கோவிந்தராஜன் அவர்கள் இவரை பாஸ்கரன் தன் கூடப்பிறக்காத அண்ணன் நல்ல விமர்சகன் என்றுஅறிமுகப்படுத்தினார். பிரதியை அவர் பெற்றுக்கொண்ட போது அவர் கூறினார் பாஸ்கரனின் கவிதைகளை அப்பப்போ விமர்சித்து வந்த தன்னால் நட்பின் இறுக்கத்தால் இங்கு விமர்சகனாக முடியவில்லை என்றார். ஆனால் பாஸ்கரன் கவிதையில் தான் எதிர் பார்த்த மாதிரி யாரையும் ஓங்கி அறையவில்லை என குறைப்பட்டார். உதாரணத்திற்கு ஜெயகாந்தனையும் கவிஞர் ஆழியாளையும் குறிப்பிட்டார்.
















அடுத்த சிறப்புப் பிரதியை பெற வந்தவர் திரு செ.சத்தியமூர்த்தி அவர்கள், இவரை பாஸ்கரன் தன் கூடப்பிறந்த அண்ணன் என்றுஅறிமுகப்படுத்தினார். தம்பியை தொட்டில் பிள்ளையாக பார்த்து இந்த வளர்ச்சியை பார்க்கின்றேன் என்று அவர் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு விட்டார். இருந்தும் சுருக்கமாகவும் நகைச்சுவை ஆகவும் பேசி மகிழ்வித்தார்.

அடுத்து நயப்புரை அரங்கு என்று அறிவிக்கப்பட்டது இதில் வழமைக்கு மாறாக விமர்சனம் செய்யப்பட உள்ளது என்று குறிப்பிட்டார்கள். இப்படி ஒரு அரங்கு வேண்டுமா என்ன இது என்பது போல சபையோர் இருந்தனர். சமூகமளிக்க வந்தசிலர் அகல இலக்கிய ஆர்வலர்கள் இருந்தார்கள். தலைமை ஏற்று நடாத்தியவர் இலக்கியத்தில் துறை தேர்ந்த அறிஞர் திரு ம.தனபாலசிங்கம் அவர்கள். தனக்கே உரிய பாணியில் தொடக்கி பல வருடங்களுக்கு முன்பு செ.பாஸ்கரனின் வேண்டுகோளின் பேரில் கவிஞர் சு.வில்வரெத்தினத்தின் காற்று வழிக் கிராமம் என்ற கவிதை நூல் வெளியீட்டிற்கு தலைமை தாங்கினேன் இப்போது அவரின் வழி வந்தவரான பாஸ்கரனின் கவிதை நூல் விழாவிற்கு தலைமை தாங்குகிறேன் என்றார்.

திரு ஈழலிங்கம் 


நயப்புரை வழங்க முதலில் வந்தவர் பாமதி ஒரு கவிஞர், பெண்ணிலைவாதி என அறியப்பட்டவர். கவிதை என்ற கலையை பல ஆங்கில கவிஞர்களின் கவிதையுடன் ஒப்பு நோக்கி கவிதா உலகை வலம் வந்தார். என்போன்ற கவிதை உலகம் அறியாதவர்க்கு சில விடயங்களை எடுத்துக் கூறினார். நாம் அறியாத விடயத்தை பிறர் கூறக்கேட்டு அறிவது இலகுவான விடயம். அந்த வகையில் சில விசயங்களை அறிந்தேன். தமிழில் கவிதை புனைபவருக்கு ஆங்கில கவிதை பற்றிய அறிவு வேண்டியதே. ஆங்கில மொழி உலகை எமக்கு காட்ட உதவும் ஊடகம் அல்லவா .



திருமதி மதுரா மகாதேவ் 




















அடுத்து யசோ பத்மநாதன், பாஸ்கரன் இரு பெண்களின் தந்தை மனைவியும் ஒரு பெண் இந்த மூன்று பெண்களுடன் வாழும் கவிஞர் பெண்களை எவ்வாறு பார்க்கிறார் என அவரின் கவிதை தொகுதியில் இருந்து “நேற்று இன்று நாளை என்ற ஒரு நீண்ட கவிதை தலை முறை தலை முறையாக பெண்ணுக்கு சமூகத்தால்  ஏற்படும் மாற்றத்தை விளக்கும் கவிதை. கவிதையை வாசிக்க தூண்டும் வகையில் நீண்ட கருத்தை கூறிச் சென்றார்.  

செ.பாஸ்கரன் , சாந்தி பாஸ்கரன் 


அடுத்து வந்தவர் அரங்க கலைகள் சக இலக்கிய பவரின் தலைவர் நாடக நடிகர் நெறியாளர் திரு குணசிங்கம் இவர் ஒரு ஓவியர் என்றது அன்று பலருக்கு தெரியவந்தது. சில நூல்களுக்கு அட்டைப்படம் வரைத்திருக்கிறார். இவர் நயப்புரை கூறவந்த கவிதை “ எழுத்து “ . இந்தக் கவிதை பற்றி அறிமுகம் செய்த கவிஞர் ஆழியாளும் கவிஞர் பாமதியும் குறிப்பிட்ட படியால் தான் நூலின் உள்ளே போகாது வடிவமைப்பை பற்றி பேசுவதாக கூறி ஓவியம் பற்றி சிலகருத்தைக் கூறி, முடிவுறாத முகாரியில் முகாரி என்ற எழுத்துக்கள் ராகத்தைக் குறிப்பதால் Musical notes வடிவில் அமைந்ததால் பொளிப்பாக புரியும்படி இல்லை என கூறினார். அட்டைப்பட வர்ணத்தை அழகாக அருமையாக கையாண்டுள்ளார் ஓவியர். போரிலே சிந்திய ரத்தம் மேலே கரும் புகாரா அல்லது துப்பாக்கியுடன் புகை மண்டலத்தில் தோன்றும் Tank கா வென பார்க்க பார்க்க கற்பனையை தூண்டி பல கதை பேசும் அட்டைப்படம் “முடிவுறாத முகாரிக்கு முற்று முழுதாக பொருந்துவதாக அமைந்துவிட்டது என்றார்.

செ.சத்தியமூர்த்தி , மு.கோவிந்தராஜன் ,செ.பாஸ்கரன் 

செ.சத்தியமூர்த்தி 


அடுத்து வந்தவர் Dr.கலா ஜீவகுமார் பாஸ்கரனின் கவிதைகளை அப்பப்போ வாசித்தும் வானொலியில் கேட்டு ரசித்தும் பாஸ்கரனுக்கு தனது கருத்தை கூறி வருபவர். மேடையில் கருத்தை கூற தன்னை அழைத்ததும் தனக்கு வயிற்ரை கலக்கியது என்றவர் தனது கருத்தை மிக அழகாகவும் நயம்படவும் எடுத்துக் கூறினார். “மெல்லிழையாள் நினைவு பதிகிறது என்ற கவிதையின் நயம் பற்றி பேசினார். வன்னி மண்ணையும் அதில் வாழ்ந்த காதல் ஜோடியையும் கண்முன்னால் நிறுத்தியிருக்கின்றார் கவிஞர். யதார்த்தமான மன உணர்வுகளை பதிந்தவர், அவர்களின் மனதில் உள்ள ஆசைகளையும் காதலையும் தியாகம் செய்து வாழவேண்டிய நிலை பற்றியும் பேசியிருக்கிறார் இது நாம் பார்த்த வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறது. அநேகமான கவிதைகள் காதலில் தொடங்கினாலும் மண்ணிலே முடிகின்றது. என்று ரசனையாக குறிப்பிட்டார்.

திரு திருநந்தகுமார் 



அடுத்து ஊடகவியலாளரான கானா பிரபா வானொலியில் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சியை நடாத்தி அனுபவப்பட்ட இளைஞன் இவர் தேர்ந்த சினிமா இசை ரசிகர் இளையராஜா இசைப்பிரியர் வானொலியில் இசை உலகு தொட்டு தொழில் நுட்பம் என பலதையும் கையாளும் திறமைசாலி இவர் “மனம் ஏங்குது என்ற கவிதையை எடுத்து நயம் கூறும்போது அருமையான பாடல் இசையில் பாடுவதற்கு பொருந்தி வருகின்றது. இதில் பல கவிதைகள் இசை அமைத்து பாடக்கூடியவைகள் அவை இசை வடிவு பெறவேண்டும் என தனது கருத்தைக் மிக மிக சுருக்கமாக கூறி அமர்ந்து விட்டார். வேறுசிலர் அதிக நேரத்தை எடுத்து விட்டதால் தனது நேரத்தைக் குறைத்து நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்தினார். நன்றாக பேசிய பிரபா சிலநிமிடம் அதிகமாக பேசவில்லையே என்பது எனது குறை மட்டுமல்ல பலரின் விருப்பமும் அப்படியே இருந்தது.

மு.கோவிந்தராஜன் ,செ.பாஸ்கரன்


என் எண்ணத்திலே “முடிவுறாத முகாரி கவிதைத் தொகுப்பில் பாஸ்கரனின் மென்மையான காதல் உணர்வுள்ள கவிதைகள் இன்பமான உணர்வுகளை இறுக அணைக்கும் மோகமூட்டும் கவிதைகள் பற்றி கானா பிரபா பேச நினைத்திருப்பார்  ஒரு சமயம் நேரம் பற்றாமையே காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அன்று பேசியவர்களில் பெண்களே அதிகமானோர் அவ்வாறிருந்தும் காதல் கவிதை பற்றி பேசாததற்கு காரணம் என்னவோ ? நாணமா? அல்லது ஒரு பெண் ஆண் எழுதிய காதல் கவிதையை மேடையில் பேச மற்றவர் என்ன நினைப்பார்கள் என்ற அச்சமா?

அடுத்துப் பேசிய கொன்சிலா ஜெரோம் அழகாக பேசும் வல்லமை படைத்தவர் அவர் “நெருப்பின் கனல் என்ற கவிதையை நயம்பட உரைத்தார். பெண்ணின் உள்ளக் குமுறலை ஒரு ஆண் கவிஞரால் இவ்வளவு உணர்வோடு படைக்க முடியுமென்றால் அது பாஸ்கரனாகத்தான் இருக்கும். பெண்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகள், அவர்களுக்கு ஏற்படும் வலிகள் அதிலும் துணை இல்லாத பெண்கள் என்றால் அவர்களுக்கு நடக்கும் துயரம் என்பதை எப்படி எப்படி எல்லாம் வடித்திருக்கிறார் இந்தக்கவிஞன் என்று பல உதாரணங்களோடு மிக அழகாக எடுத்துரைத்தார்.

திரு.ம.தனபாலசிங்கம் 


அவரை நிகழ்ச்சி முடிந்தபின் சந்தித்து பேசியபோது அழகாக பேசினீர்கள் என்றேன் அதற்கு அவர் தனது தந்தையார் கடற்கரையில் தன்னை நிறுத்தி கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டு பேசு என பயிற்சி அழளித்ததாக கூறினார். எப்பொழுது மேடை ஏறும் போதும் தனக்கு அந்த ஞாபகம் வரும் என்றார். தந்தையின் நம்பிக்கை வீண்போகவில்லை.

இறுதியாக பிரபல எழுத்தாளர் ரஞ்சகுமார் நீண்ட பெரிய விமர்சனத்தை வழங்கினார். இரண்டாவது வரியில் அமர்ந்திருந்த எனக்கு எதுவும் கேட்கவில்லை. இடையிடையே கேட்கும் பின் கேட்காது.  ஒலிபெருக்கியை குறை கூறுவதா அல்லது அதை சரியாக பாவிக்காத ரஞ்சகுமாரை குறை கூறுவதா. முன்னால் இருந்தவர்களும் மேடையில் இருந்தவர்களும் பின்பு கூறியது ஒரு ஆழமான விமர்சனத்தை ரஞ்சகுமார் முவைத்தார் என்று . சபைக்கு கேட்காமல் போனது கவலைக்குரியதே.

நயப்புரை அரங்கு 


கவிஞர் பாஸ்கரன் ஏற்புரை வழங்கும்போது எல்லோருக்கும் நன்றி கூறியதுடன் குறிப்பாக முன்னுரை தந்த ஈழத்துக் கவிஞர் மு.பொ அவர்களுக்கும் கவிஞர் அம்பி அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றி என்றார். ரஞ்சகுமார் குறிப்பிட்ட “ புத்தக வெளியீட்டின் போது ஒரு பெரிய சபையில் விமர்சனம் செய்வது பொருந்தாது என்ற கருத்தில் தான் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளதாகவும் நூல்கள் வெளியிடும் போது அங்கேயே விமர்சிக்கப்பட வேண்டும் அதுதான் இலக்கியம் சிறக்க சரியான வழி என்றும். எழுத்தாளன் தான் காண்கின்ற அநீதிகளை விருப்பு வெறுப்பின்றி சொல்லவேண்டும் என்றும் மற்றவர்களுக்கு தலை ஆட்டி எழுதுகின்ற எழுத்தில் உண்மை இருக்காது அது யாருக்கும் உதவாததாகத்தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டார். 
“தமிழ்முரசுஅவுஸ்ரேலியாவின் முதல் வெளியீடு இது என்றும் இன்னும் பல வெளியீடுகள் இதன் மூலம் இடம்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கவிஞர் பாமதி 


அருமையான ஒரு நூல் வெளியீடு பல கவிதைகள் இளமை தொட்டு பாஸ்கரனின் வாழ்வு ஓட்டத்திலே எழுதப்பட்டவை. விடுதலையோடு இணைந்த செயற்பாடு அதனால் ஏற்பட்ட அனுபவம் அத்தனையும் கவிதையாக உருப்பெற்றுள்ளது. பல மறக்கமுடியாத வடுக்கள் கவிஞனைப் பாதித்துள்ளது. வரும்கால சந்ததிக்கு எமது நாட்டிலே எம்மவருக்கு நடந்த கொடுமைகளை ஆவணப் படுத்தும் நூலாகவும் “முடிவுறாத முகாரி அமைந்துள்ளது.

இந்தக் கவிதைகள் நூலுருப்பெறவேண்டும் என உழைத்தவர் பாஸ்கரனின் மனைவி சாந்தி “There is always a women behind the man” என்பது வாழ்க்கையின் வெற்றிக்கு வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது. வாழ்க்கைத் துணையே தோழியாக ரசிகையாக கிடைக்கப்பெற்ற பாக்கியசாலி செ.பாஸ்கரன் மேலும் பலவற்றையும் சாதித்து வெற்றி நடை போடுவார் என எதிர் பார்க்கலாம்.

 
Dr.கலா ஜீவன் 


கவிஞர் சக்தி ( யசோ பத்மநாதன் )

திரு குணசிங்கம் 


திரு.கானா பிரபா 


திருமதி தர்மா சந்திரதாஸ் 

திருமதி கொன்சிலா ஜெரோம் 

எழுத்தாளர் ரஞ்சகுமார் 

கவிஞர் செ.பாஸ்கரன் 








7 comments:

  1. கவிஞர் பாஸ்கரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    முருகபூபதி - மெல்பன்

    ReplyDelete
  2. கார்த்திகா அக்கா!
    அருமையான தொகுப்பு.
    வாழ்த்துகள் பல......

    ReplyDelete
  3. க‌விஞருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி புத்தன்
      நிகழ்ச்சிக்கு வந்திருந்தீர்களா

      Delete
  4. க‌விஞருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. முதலில் கவிஞருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    நிகழ்ச்சியில் சம்பிருதாயங்களைத் தவிர்த்து மூன்று முக்கியமான விடயங்களைக் குறிப்பிட வேண்டும். அது, கவிதாயினிகள் ஆழியாழ், பாமதி, மற்றும் எழுத்தாளர் ரஞ்சகுமார் பற்றியது. நிகழ்ச்சியை இன்னொரு தளத்துக்கு உயர்த்தியதில் இம்மூவருக்கும் பெரும் பங்குண்டு.

    ஆழியாழ் தன் அச்சொட்டான பேச்சில் புலம்பெயர்ந்த பல்வேறு தேசத்துப் புத்திஜீவிகளின் சமூகப் பார்வையைச்; சிக்கலை, வாழ்வியல் யதார்த்தத்தை உதாரணங்களோடு பதிவு செய்து முரண்பாடுகள் எவ்வாறு சமூகத்தையும் இலக்கியத்தையும் வளம் செய்கின்றன என்றும்; அவை எவ்வாறு ஆரோக்கியமான அடித்தளத்தை அம் மொழிக்கு வழங்குகின்றன என்பதையும் சொன்னார்.

    பாமதி ஆங்கிலேய இலக்கிய உலகின் வளர்ச்சியை, பார்வையை, கோட்பாடுகளைத் தமிழுக்கு தமிழில் தந்து நம் பார்வைகளின் விரிவாக்கத் தேவைகளை நாமாக சிந்திக்கத் தந்த வகையில் ஒரு பேருலகை விரித்துக் காட்டிவிட்டு வந்தமர்ந்தார்.

    எழுத்தாளர் ரஞ்சகுமார், தமிழக ஈழ இலக்கியங்களின் தனித்துவ வேறுபாடுகளைக் காட்டி கவிஞர்கள் தமிழ் தொன்மங்களில் இருந்து சொற்களைக் கையாள வேண்டியதன் அவசியத்தை இலக்கிய நேர்மையோடு சொல்லி அமர்ந்தார்.

    புத்தக அறிமுகம் வெளியீடு என்பதற்கெல்லாம் அப்பால் வேறொரு அறிவியல் தளத்தில் இந் நிகழ்ச்சி பயனுற அமைந்திருந்தது. இவ்வாறானவர்களை நமக்கு அறிமுகம் செய்ததற்கு ஏற்பாட்டாளர்களுக்கு குறிப்பாக பாஸ்கரனுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்!!

    இவ்வாறானவர்களை நாம் தொடர்ந்து பயன் படுத்த வேண்டும்.

    ReplyDelete