மேலும் சில பக்கங்கள்

இன்று அன்று | 1931 பிப்ரவரி 27: ஆசாதின் வீரமரணம்

.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாதின் ஆல்பிரெட் பூங்கா, 84 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் துப்பாக்கிகளின் முழக்கத்தால் அதிர்ந்துகொண்டிருந்தது. அந்தப் பூங்காவைச் சுற்றிவளைத்த போலீஸார் 25 வயதுகூட நிரம்பாத அந்த இளைஞனைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார்கள். “ஆங்கிலேயக் காவல் துறையிடம் ஒருபோதும் கைதாகவே மாட்டேன். சுதந்திர மனிதனாகவே மரிப்பேன்” என்று சூளுரைத்திருந்த அந்த மாவீரன், கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் அமெரிக்கத் தயாரிப்பான ‘கோல்ட்’ கைத்துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தான். இனி தப்பிக்க வழியில்லை எனும் நிலை வந்தபோது, தன்னைத் தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தான். அந்த இளைஞனின் பெயர் சந்திரசேகர் ஆசாத்.
மத்தியப் பிரதேசத்தின் பாவ்ரா கிராமத்தில், 1903 ஜூலை 23-ல் பிறந்தவர் சந்திரசேகர் திவாரி. 1921-ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் அவர் ஈர்க்கப்பட்டார். தனது 15 வயதில் கைதுசெய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனது பெயரை ‘ஆசாத்’ என்று தெரிவித்தார் (விடுதலை என்று அர்த்தம்). சிறைதான் தனது முகவரி என்றார். எனினும் வயதைக் காரணம் காட்டி அவருக்குச் சிறைத் தண்டனை தராமல், கசையடி வழங்க உத்தரவிட்டார் நீதிபதி. ஒவ்வொரு கசையடிக்கும், ‘பாரத மாதா வாழ்க!’ என்று அவர் முழங்கியதாகக் கூறப்படுகிறது. அன்று முதல் அவர் பெயருடன் ‘ஆசாத்’ எனும் சொல் ஒட்டிக்கொண்டது.


அந்தக் காலகட்டத்தில் தீவிரமாக இயங்கிவந்த ‘இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன்’ இயக்கத்தில் சேர்ந்து அரசு பணத்தைக் கைப்பற்ற ரயில் கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டார். அதன் தலைவர்கள் பலர் கொல்லப்பட்ட பின்னர், ‘இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்’ எனும் பெயரில், சந்திரசேகர் ஆசாத், பகத் சிங், சுக்தேவ் ஆகியோர் அந்த இயக்கத்தைப் புதுப்பித்தார்கள். 1928-ல் சைமன் கமிஷனுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய லாலா லஜ்பத் ராய், போலீஸாரின் தடியடிக்குப் பலியானதற்குப் பழிவாங்கும் விதத்தில், ஆங்கிலேய போலீஸ் அதிகாரி ஜேபி சாண்டர்ஸை அந்த இயக்கம் சுட்டுக்கொன்றது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சந்திரசேகர் ஆசாத், கடைசியாகத் தனது புரட்சிகர நண்பர்களை அலகாபாதின் ஆல்பிரெட் பூங்காவில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தபோது, நண்பர் ஒருவரால் போலீஸாருக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டுத் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
கடந்த ஆண்டு சூரத் நகரில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட பிரிட்டனின் வாவ்ரிக் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் ஹர்டிமன், பகத் சிங்கையும், சந்திரசேகர் ஆசாதையும் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டார். கூட்டத்தில் பங்கேற்ற, வீர் நர்மாத் சவுத் குஜராத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேஜர் உன்மேஷ் பாண்டியா இப்படிப் பதிலளித்தார்.
“பயங்கரவாதி என்பவர் மக்களை அச்சுறுத்துபவர். பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் போன்றவர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள். ஒருவர் ஆயுதம் ஏந்திப் போராடுவது பயங்கரவாத நடவடிக்கை என்றால், பிரிட்டிஷ் ராஜ்யம், விக்டோரியா மகாராணியின் நடவடிக்கை களையும் பயங்கரவாதம் என்று குறிப்பிடலாம்.”

No comments:

Post a Comment